Published:Updated:

மறுதாம்பிலும் வருமானம் கொடுக்கும் வாழை! - 5 ஏக்கர்... ரூ.7.5 லட்சம்...

 செழித்து வளர்ந்திருக்கும் வாழை மரங்களுடன்
பிரசன்னா ரெட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
செழித்து வளர்ந்திருக்கும் வாழை மரங்களுடன் பிரசன்னா ரெட்டி

மகசூல்

‘வெட்ட வெட்ட வாழை... அது அள்ளித்தரும் வாழ்வை’ - உண்மைதான். இலை, காய் என ஓர் அறுவடையோடு முடிந்துவிடாமல், மறுதாம்பு மூலமும் வருமானம் கொடுக்கும் பயிர், வாழை. அதனால்தான் அது விவசாயிகளின் விருப்பப் பயிராக இருக்கிறது. அந்த வகையில், 10 ஏக்கரில் வாழை பயிரிட்டு நல்ல லாபம் பார்த்து வருகிறார் இயற்கை விவசாயி பிரசன்னா ரெட்டி. காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரிலிருந்து 8 கி.மீ தொலைவிலுள்ள அம்மையப்பநல்லூரில் இருக்கிறது, அவரது தோட்டம். ஒரு காலை வேளையில் தோட்டத்தில் இருந்தவரைச் சந்தித்துப் பேசினோம்.

‘‘ஒரு முறைகூடத் தேவையில்லாம இயற்கை இடுபொருள்கள் உபயோகப்படுத்தினது இல்லை. பயிர் நல்லா இருக்கும்போது நாம ஏன் வீணா எல்லாத்தையும் கொடுக்கணும்.’’
 வாழைத்தோப்புக்குள்
வாழைத்தோப்புக்குள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“சின்ன வயசுல வீட்டுப் பக்கத்துல இருந்த கொஞ்ச நிலத்துல நெல் மட்டும் விதைப்பாங்க. வெறும் நெல் விவசாயத்தை மட்டுமே பார்த்த நான் படிப்பை முடிச்சிட்டு உத்திரமேரூர்லயே ஒரு ஆட்டோமொபைல் கடைவெச்சேன். சின்ன வயசுல இருந்தே தோட்டத்துலதான் இருப்பேன். அதனால விவசாயத்துல ஈடுபாடு அதிகம். ஆரம்பத்துல அப்பா ரசாயன விவசாயம்தான் செஞ்சுகிட்டிருந்தார். அதிக உரம் போட்டாதான் மகசூல் கிடைக்கும்னு நினைச்சிட்டிருந்தார். நானும் அப்படித்தான் நினைச்சேன். அப்பா விவசாயம் செஞ்சப்போ செலவுதான் கூடிக்கிட்டு இருந்ததே தவிர, வருமானம் உயரலை. அந்தச் சமயத்துலதான் பக்கத்துல இயற்கை விவசாயி தணிகைவேலன் மூலமா இயற்கை விவசாயமும் ‘பசுமை விகடனும்’ எனக்கு அறிமுகமாச்சு. அதுக்குப் பின்னாலதான் இயற்கை விவசாய முறைகளைப் பத்தித் தெரிஞ்சுகிட்டேன். தொடர்ந்து வளர்ச்சியூக்கிகள், மூலிகைப் பூச்சிவிரட்டினு எல்லாத்தையும் தயாரிக்கிற முறைகளைத் தெரிஞ்சுகிட்டேன். கடந்த நாலு வருஷமா இயற்கை விவசாயம் செஞ்சுகிட்டிருக்கேன். ஆரம்பத்துல பல தானியங்களை விதைச்சு, இயற்கை முறையில நெல் சாகுபடி செஞ்சேன். முதல் இயற்கை விவசாயம்கிறதால மகசூல் சொல்லிக்கிற மாதிரி இல்லை. அடுத்து ஜி.9., கற்பூரவள்ளி, மொந்தன் வாழை ரகங்களைச் சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன். இயற்கை முறையில இப்போ வாழை நல்லா விளைஞ்சுகிட்டிருக்கு” என்று, தான் இயற்கை விவசாயத்துக்கு வந்த கதையைச் சொன்ன பிரசன்னா ரெட்டி தொடர்ந்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“மொத்தம் 30 ஏக்கர் நிலம் இருக்கு. இது மணல் கலந்த வண்டல் மண் நிலம். ஒரு ஏக்கர் நிலத்துல ஜி.9 வாழையும், நாலு ஏக்கர்ல கற்பூரவள்ளியும், அஞ்சு ஏக்கர்ல மொந்தன் வாழையும் இருக்கு. 20 ஏக்கர் நிலத்துல எப்பவுமே நெல்தான். ஆரம்பத்துல குத்தகைக்கு எடுத்துதான் விவசாயம் செஞ்சேன். இப்போதான் சொந்தமா நிலம் வாங்கி விவசாயம் செய்யறேன். இப்போ நெல் அறுவடை முடிஞ்சிருக்கு. மழை பெய்ஞ்சிருக்கறதால, வயலைத் தயார் செஞ்சுகிட்டிருக்கேன்.

5 ஏக்கர் வாழை இன்னும் சில மாசங்கள்ல அறுவடைக்கு வந்துடும். அப்போ வருமானம் இன்னும் அதிகமாகும்.
 செழித்து வளர்ந்திருக்கும் வாழை மரங்களுடன்
பிரசன்னா ரெட்டி
செழித்து வளர்ந்திருக்கும் வாழை மரங்களுடன் பிரசன்னா ரெட்டி

வாழையில் மூடாக்கும் அமுதக்கரைசலும் பயன்படுத்துறேன். கடந்த மூணு வருஷமா நெல், வாழைனு பயிர் செஞ்சிகிட்டிருக்கேன். ஆனா, ஒரு முறைகூடத் தேவையில்லாம இயற்கை இடுபொருள்கள் உபயோகப்படுத்தினது இல்லை. பயிர் நல்லா இருக்கும்போது நாம ஏன் வீணா எல்லாத்தையும் கொடுக்கணும். பயிர்களுக்கு நோய் வர்ற அறிகுறி தெரியுறப்போ நாட்டு மாட்டு கோமியத்தையும், பூச்சிவிரட்டியும் தெளிச்சாலே சரியாகிடும். அடியுரமா எப்பவுமே நாட்டு மாட்டு எருதான். விவசாயப் பயிர்களுக்கு இயற்கை உரமா இருந்தாலும் அதையும் அளவோடுதான் கொடுக்கணும்.

 ஜீவாமிர்தம் கலக்கும் பணியில்...
ஜீவாமிர்தம் கலக்கும் பணியில்...

என்கிட்ட 45 மாடுகள் இருக்கு. அதுல அஞ்சு மட்டும்தான் கறவையில இருக்கு. ஓங்கோல், கிர், திருவண்ணாமலை குட்டை, உள்ளூர் ரகம்னு எல்லாமே நாட்டு மாடுகள்தான். இதை வெச்சுதான் ஜீவாமிர்தம், பஞ்சகவ்யானு இடுபொருள்களைத் தயார் செய்யறேன்’’ என்றவர் வாழைச் சாகுபடி பற்றிப் பேசத் தொடங்கினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘ஏழு அடி இடைவெளியில், ஒரு ஏக்கர்ல 900 கற்பூரவள்ளி வாழைக்கன்றுகளை நடவு செஞ்சேன். அதுல 800 கன்றுகள் மட்டும்தான் சரியா வளர்ந்தது. அறுவடை முடிஞ்சதும் மறுதாம்பு விட்டேன். அது குலைதள்ள ஆரம்பிச்சிருக்கு. மறுதாம்பு வாழையில, குலை கொஞ்சம் பெருசா இருக்கு. அந்த ஒரு ஏக்கர் அறுவடைக்கு முன்னே கூடுதலா நாலு ஏக்கர்ல வாழையை நடவு செஞ்சேன். அதுல ஒரு ஏக்கர் கற்பூரவள்ளி, ரெண்டு ஏக்கர் மொந்தன் வாழை. ஒரு ஏக்கர்ல ஜி.9 நடவு செஞ்சிருக்கேன். அந்த நாலு ஏக்கர் வாழையும் அறுவடைக்கு வந்திடுச்சு. இப்போ மொத்தம் அஞ்சு ஏக்கர்லயும் அறுவடை நடக்குது. வாழைக்குலைகளைப் பக்கத்துல இருக்கிற கடைக்காரங்க வாங்கிட்டுப் போறாங்க. மீதம் இருக்கிறதை உத்திரமேரூர் மார்க்கெட்ல கொண்டுபோய் விற்பனை செய்யறேன். ஜி.9 வாழைக் கன்று நட்ட நாலாவது மாசத்துலயே கடுமையான வறட்சி. ஆனாலும், தொடர்ந்து ஜீவாமிர்தம் கொடுத்துட்டே இருந்ததால, மரங்கள் காய்ஞ்சு போகாம தாக்குப்பிடிச்சிடுச்சு. ஆனா, தண்ணி இல்லாததால குலைகள் சரியான அளவுக்குப் பெருசாகலை” என்ற பிரசன்னா ரெட்டி நிறைவாக வருமானம் குறித்துப் பேசினார்.

 ஒய்யாரமாகக் காற்று வாங்கும் நாட்டு மாடுகள்
ஒய்யாரமாகக் காற்று வாங்கும் நாட்டு மாடுகள்
ஆரம்பத்துல குத்தகைக்கு எடுத்துதான் விவசாயம் செஞ்சேன். இப்போதான் சொந்தமா நிலம் வாங்கி விவசாயம் செய்யறேன்.

“10 ஏக்கர் தோப்புல அஞ்சு ஏக்கர்ல மட்டும்தான் குலைகள் வருது. மீதம் இருக்கிற அஞ்சு ஏக்கர் மரங்கள் இன்னும் காய்ப்புக்கு வரலை. அதுல இருந்து இலைகளை மட்டும் அப்பப்போ விற்பனை செய்வேன். ஒரு குலை சராசரியாக 250 ரூபாய்னு கொடுக்கிறேன். திருமணம் மாதிரியான விசேஷங்களுக்கு ஜோடி 600 ரூபாய்னு மரங்களைக் கொடுக்கிறேன். ஒரு ஏக்கர்ல இருக்கிற குலைகள், மரங்கள், இலைகள் விற்பனை செஞ்சா மொத்தமா ஏக்கருக்கு 2,50,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். மொத்தமா அஞ்சு ஏக்கருக்கு 12,50,000 வருமானம் கிடைக்கும். அதுல உழவுல இருந்து பறிப்பு, விற்பனை வரைக்கும் ஏக்கருக்கு 1,00,000 ரூபாய் வீதம் செலவாகிடும். மொத்தமா அஞ்சு ஏக்கர்ல செலவு போக 7,50,000 ரூபாய் லாபம் கிடைக்கும். மீதமிருக்கிற அஞ்சு ஏக்கர் வாழை இன்னும் சில மாசங்கள்ல அறுவடைக்கு வந்துடும். அப்போ வருமானம் இன்னும் அதிகமாகும்” என்று சொல்லி மகிழ்ச்சியாக விடைகொடுத்தார்.

தொடர்புக்கு,

பிரசன்னா ரெட்டி,

செல்போன்: 90803 09030.

வாழைச் சாகுபடிப் பாடம்!

ஒரு ஏக்கர் நிலத்தில் வாழைச் சாகுபடி செய்யும் விதம் குறித்து, பிரசன்னா ரெட்டி சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே...

வாழைச் சாகுபடி செய்ய ஐப்பசி, கார்த்திகை, மாசி, வைகாசி ஆகிய பட்டங்கள் ஏற்றவை. தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தைக் கொக்கிக் கலப்பையால் உழுது, ஒரு வாரம் காயவிட வேண்டும். மீண்டும் ஓர் உழவு செய்து, 10 டன் தொழுவுரத்தைக் கொட்டிப் பரப்பி, மீண்டும் ஓர் உழவு செய்து நான்கு நாள்கள் காயவிட வேண்டும். பிறகு, ஏழடி இடைவெளியில் சிறிய குழிகள் எடுத்து விதைக்கன்றை நடவு செய்ய வேண்டும். இந்த இடைவெளியில் 900 குழிகளுக்கு மேல் எடுக்கலாம்.

வாழைச் சாகுபடிப் பாடம்!
வாழைச் சாகுபடிப் பாடம்!

தேர்ந்தெடுக்கும் விதைக்கிழங்குகள் ஒவ்வொன்றும் ஒன்றரை கிலோவுக்கு மேல் எடைகொண்ட தரமான கிழங்காக இருக்க வேண்டும். விதைக்கன்றுகளை அமுதக்கரைசலில் மூழ்கச் செய்து, 15 நிமிடங்கள் நிழலில் உலர்த்தி நடவு செய்ய வேண்டும். இப்படி விதைநேர்த்தி செய்து நடவுசெய்தால், வேர் தொடர்பான நோய்கள் அண்டாது. நடவு செய்த மறுநாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஒரு வாரம் கழித்து நடவு செய்த கன்றுகளைச் சுற்றி இறுக்கமாக மண் அணைக்க வேண்டும். தொடர்ந்து மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். கன்றுகளைச் சுற்றி அதிக தண்ணீர் தேங்கினால், பூஞ்சண நோய்கள் வர வாய்ப்பிருக்கிறது. எனவே, தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நடவுசெய்த 20-ம் நாளிலிருந்து அடுத்த 20 நாள்களுக்கு ஒரு முறை ஏக்கருக்கு ஒரு டிரம் (200 லிட்டர்) அமுதக்கரைசலைப் பாசன நீரில் கலந்துவிட வேண்டும். 20-ம் நாள் களைகளை அகற்றி, மண் அணைக்க வேண்டும். 25 முதல் 30 நாள்களுக்குள் குருத்துகள் முளைக்கும்.

30-ம் நாளிலிருந்து 15 நாள்களுக்கு ஒரு முறை, வாழைக்கன்றுகள் மீது, மீன் அமினோ அமிலத்தையும், பஞ்சகவ்யாவையும் சுழற்சி முறையில் கைத்தெளிப்பான் மூலம் தெளித்து வர வேண்டும். (10 லிட்டர் தண்ணீருக்கு 50 மி.லி மீன் அமினோ அமிலம் என்ற விகிதத்திலும், 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மி.லி பஞ்சகவ்யா என்ற விகிதத்திலும் கலந்து தெளிக்க வேண்டும்). 40-ம் நாளுக்கு மேல் இலைகள் முளைத்து வளரும். 55-ம் நாளில் ஒரு கன்றுக்கு 100 கிராம் வேப்பம்பிண்ணாக்கு என்ற விகிதத்தில் தூர்ப்பகுதியில் வைத்து மண் அணைக்க வேண்டும். நடவு செய்த 200-ம் நாள், ஒரு கன்றுக்கு 100 கிராம் கடலைப் பிண்ணாக்கு என்ற விகிதத்தில் தூர்ப்பகுதியில் வைத்து மண் அணைக்க வேண்டும். வாழை, ரகத்தைப் பொறுத்து 10-ம் மாதத்துக்கு மேல் குலைதள்ள ஆரம்பிக்கும். 10-ம் மாதத்துக்கு மேல் தேவையைப் பொறுத்து மொத்தமாகவோ, பகுதி பகுதியாகவோ அறுவடை செய்யலாம்.

30 மாதங்களுக்கு மகசூல் எடுக்கலாம்!

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் கே.வி.கேவைச் சேர்ந்த மண்ணியல்துறைப் பேராசிரியர் முனைவர் செல்வராஜ் வாழையைப் பற்றிய கூடுதல் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

மண் வகை!

‘‘தண்ணீர் தேங்கும் களிப்பு மண் வாழைச் சாகுபடிக்கு ஏற்றதல்ல. 30 முதல் 40 சதவிகிதம் மணல் கலந்த வண்டல் அல்லது செம்மண் வகைகள் மட்டுமே ஏற்றவை. உவர், களர் நிலங்களில் வாழைச் சாகுபடி செய்ய முடியாது. அப்படியே செய்தாலும் எதிர்பார்த்த மகசூல் கிடைக்காது.

மறுதாம்பிலும் வருமானம் கொடுக்கும் வாழை! - 5 ஏக்கர்... ரூ.7.5 லட்சம்...

தண்டு துளைப்பானுக்குத் தீர்வு!

இயற்கை விவசாயத்தைப் பொறுத்தவரை பூச்சி, நோய்த்தாக்குதல் குறைவுதான் என்றாலும், வாழையில் குலைதள்ளும் நேரத்தில் தண்டு துளைப்பான் தாக்குதல் இருக்கும். தண்டில் துளை ஏற்பட்டு அதில் பிசின் வடிவது தண்டு துளைப்பான் தாக்குதலின் முக்கிய அறிகுறி. அவ்வப்போது வாழைத் தோட்டத்திலுள்ள காய்ந்த இலைகளையும் சருகுகளையும் அப்புறப்படுத்தி, தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பக்கக் கன்றுகளை அதிகம் வளரவிடாமல் வெட்டி அகற்றிவிட வேண்டும். வண்டு தாக்கிய மரங்களைச் சிறு துண்டுகளாக வெட்டி, உலரவைத்துப் பின்னர் தீயிட்டு அழிக்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு

20 இனக்கவர்ச்சிப் பொறிகள்வைத்து, ஓரளவுக்கு பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். குலைதள்ளும் நேரத்தில் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மி.லி வேப்பங்கொட்டைக் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, ஒரு வார இடைவெளியில் மூன்று முறை தெளித்துவந்தால், தண்டு துளைப்பான் தாக்குதலைத் தவிர்க்கலாம். மூன்று கிலோ வேப்பங்கொட்டையை உரலில் இடித்து, துணியில் கட்டி, அதை 10 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரில் இரண்டு நாள்கள் வரை ஊறவைத்து வடிகட்டினால், வேப்பங்கொட்டைக் கரைசல் தயாராகிவிடும்.

நூற்புழுத் தாக்குதலைத் தவிர்க்க எளிய வழி!

வயலை மூன்று மாதங்கள் தரிசாக வைத்திருந்து, கோடை உழவு செய்து நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம். வாழைக் கன்றுகளை வேர் நீக்கி, மேல்தோல் சீவி 55 டிகிரி செல்சியஸ் வெந்நீரில் அரை மணி நேரம் மூழ்கவைத்து நடுவதன் மூலமும் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம். வேர் நீக்கிய விதைக்கன்றுகளை வேப்பங்கொட்டைக் கரைசல் அல்லது வேப்ப எண்ணெயைத் (லிட்டருக்கு 15 மி.லி) தண்ணீரில் கலந்து அரை மணி நேரம் மூழ்கவைத்தும் விதைக்கிழங்கை நடவு செய்யலாம். பிறகு, மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு ஒரு மரத்துக்கு 250 கிராம் வேப்பம்பிண்ணாக்கு இடுவதன் மூலமும் நூற்புழுக்களைத் தவிர்க்கலாம்.

களை மேலாண்மை!

வாழையில் அதிக மகசூலைப் பெற களைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையென்றால், இடுபொருள்களான தண்ணீர், உரங்கள் போன்றவற்றுக்காக களைகள் வாழையுடன் போட்டி போட்டு வாழையின் மகசூலை வெகுவாகக் குறைப்பது மட்டுமல்லாமல், காய்களின் தரத்தையும் குறைத்துவிடும். மேலும், நோய் மற்றும் பூச்சிகள் அதிகமாவதற்கும் களைகள் துணை நிற்கின்றன. களைகள் பூத்து, விதைகள் உருவாவதற்கு முன்னரே, களைகளின் தன்மையைப் பொறுத்து மண்வெட்டி கொண்டோ, கையால் பிடுங்கியோ களைகளை அழித்துவிட வேண்டும். களைகள் முளைப்பதைத் தவிர்க்க வாழையில் ஊடுபயிராகப் பலதானியங்களை விதைக்கலாம். இதனால் களை வராது, மண்ணுக்குத் தேவையான சத்துகளும் கிடைக்கும்.

30 மாதங்களுக்கு வாழை மகசூல்!

அவரை வகைக் காய்கறிகள், பீட்ரூட், சணல் போன்றவற்றை ஊடுபயிராகச் சாகுபடி செய்யலாம். பூசணிக் குடும்பக் காய்கறிப் பயிர்களைச் சாகுபடி செய்வதைத் தவிர்க்கவும்.

தாய்க் கிழங்கில் பூ மொட்டு உருவாகும்போது பக்க மொட்டுகளையும் உருவாக்கும். முதல் குலையின் அறுவடைக்கும், பக்கக் கன்றின் மூலம் கிடைக்கும் குலையின் அறுவடைக்கும் இடையே ஒன்பது மாதங்கள் இருக்கின்றன. மூன்றாவதாக முளைக்கும் பக்கக் கன்றின் மூலம் குலை பெற மீண்டும் ஒன்பது மாதங்கள் ஆகும். முதல் குலைக்கு 12 மாதங்கள், இரண்டாம் மற்றும் மூன்றாம் குலைகளுக்கு ஒன்பது மாதங்கள் என மொத்தம் 30 மாதங்கள் வரைக்கும் வாழையை வைத்திருக்கலாம். அதற்கு மேல் மகசூல் குறையும் வாய்ப்புகள் அதிகம்.

தொடர்புக்கு, முனைவர் செல்வராஜ், செல்போன்: 80561 68810

நடவு செய்யும் பருவமும் பயிரும்!

நன்செய் நிலங்கள்:

பிப்ரவரி-ஏப்ரல்: பூவன், ரஸ்தாளி,

மொந்தன் மற்றும் கற்பூரவள்ளி

ஏப்ரல்-மே: நேந்திரன் மற்றும் ரோபஸ்டா.

தோட்டக்கலை நிலங்கள்:

ஜனவரி-பிப்ரவரி மற்றும் நவம்பர்–டிசம்பர்

மலை வாழை

ஏப்ரல்-மே (கீழ்ப்பழநி மலைப்பகுதி)

ஜூன் – ஜூலை (சிறுமலை)

படுகை மற்றும் நீர்ப்பாசன வசதியுள்ள இடங்கள்

ஜனவரி-பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்கள் உகந்தவை.

ஆதாரம்

- தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்.