நாட்டு நடப்பு
Published:Updated:

கிராமங்களுக்குத் தேவை வெறுங்கால் மருத்துவர்கள்!

மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு

மாத்தியோசி

‘‘கிராமப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்கள், மக்களுக்கு மருத்துவ சேவை யாற்றுவதில் மிகவும் பின்தங்கியுள்ளன. கர்நாடக மாநிலம், மங்களூரு அருகில் உள்ள என் சொந்த ஊரான ஹரிசக்தா இதற்கு ஓர் உதாரணம்...’’ என மேற்கோள்காட்டி மக்கள் மருத்துவர் பி.எம்.ஹெக்டே பேசியதை, கடந்த இதழில் பார்த்தோம்.

அதன் தொடர்ச்சியாக அவர் என்ன சொல்கிறார் என்று கேட்போம். ‘‘என்னுடைய சொந்த ஊரான ஹரிசக்தா, அரசு மருத்துவ மனையிலிருந்து 5 மைல் தொலைவில் உள்ளது. தலைவலி, காய்ச்சல் வந்தால் மக்கள் நடந்தோ, பேருந்திலோ சென்று சிகிச்சை பெறுவார்கள். இந்த ஊரில் உள்ள பெரிய வருக்கு உடல் நிலை சரியில்லையென்றால் தன் மகனுடன் நகரில் உள்ள மருத்துவ மனைக்குச் செல்வார். நீண்டநேரம் காத்திருந்து மருத்துவரைப் பார்ப்பார். அவர் 6 ஆஸ்பிரின் மாத்திரை தருவார். அதன் விலை 5 ரூபாய்தான். ஆனால், இதற்காக அந்தப் பெரியவர் தன்னுடைய அன்றைய ஒருநாள் கூலி சுமார் 500 ரூபாயை இழந்து, பேருந்தில் பயணச் செலவு செய்து மருத்துவ மனைக்கு செல்ல வேண்டும். எனவே 5 ரூபாய் மாத்திரை 500 ரூபாய்க்கு மேலாகி விடுகிறது.

பி.எம்.ஹெக்டே
பி.எம்.ஹெக்டே

மருத்துவம் மக்களை நோக்கிச் செல்லு மானால், கிராமப்புற மக்களின் பொருளாதாரம் சேமிக்கப்படும். இந்த ஆஸ்பிரின் மாத்திரையை ஒரு நர்ஸ் தந்திருக்க முடியும். நமது கிராமப்புற மருத்துவமனைகள் பெரும்பாலும் நர்ஸுகள் தரும் சேவையாகவே உள்ளன. ஆனால், பல கோடி ரூபாய் புரளும் இன்றைய மருத்துவத்துறையில் இதை அவ்வளவு எளிதாக விட்டு விட அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இடம் தரமாட்டார்கள். நாம் மக்கள் நலனைப் பற்றிக் கவலைப்படாமல் எதிலும் சுயலாபம் பார்க்கும் ஊழல் சமூகத்தில் சிக்கியுள்ளோம்.

நம் கிராமங்களில் முதல் பலியாகிக் கொண்டிருப்பது நல்வாழ்வே. நாட்டின் 60 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழும் கிராமங்களில், அடிப்படை மருத்துவ வசதிகள்கூடக் கிடைப்பதில்லை. நகரங்களில் கூட மக்களின் அடிப்படைச் சுகாதார வசதிகள் முழுமையாக இல்லை.

நவீன மருத்துவம் உடனடித் தீர்வுக்குத் தான் சிந்திக்கிறது. அடிப்படை ஆரோக்கியம் பற்றிக் கவலைப்படுவதில்லை. நோய்த் தடுப்பு முறையில் அது அதிகம் கவனம் செலுத்து வதில்லை. மேலை நாட்டு நோய்த்தடுப்பு மருத்துவ முறைகளோ, மிகவும் செலவு பிடிக்கும் ஸ்கேன் போன்ற உயர் தொழில் நுட்பங்களுக்கு முக்கியத்துவம் தருகின்றன. ஆனால், மக்களின் ஆரோக்கிய நல்வாழ்வின் அடிப்படை அவையல்ல; தூய குடிநீர், சத்தான உணவு, கழிப்பிடம், ஆரோக்கியமான வாழ்வுச் சூழல் ஆகியனவே.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு

இந்த அடிப்படைச் சுகாதாரத் தேவைகள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதே நம் கவலை. நோய் வந்தபின் குணமாக்கச் செய்யும் செலவைவிட, அடிப்படை சுகாதார வசதிகள் தருவதற்கான செலவு மிகவும் குறைவே. முதலில் நம் கிராம மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தச் சிந்திப்போம். அவர்களை நலமாக வாழ வைத்தால் நாட்டின் உற்பத்தி பன்மடங்கு பெருகும்.

மருத்துவர்கள் கிராமங்களுக்குச் செல்வதில்லை என்று குறை கூறுகின்றனர். இதற்கான அடிப்படையான காரணங்கள் என்ன என்பதை நாம் முதலில் சிந்திக்க வேண்டும். மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவர்களில் பெரும்பாலானோர் நகரத்தில் வாழ்பவர்கள்தான். கிராமப்புறங்களிலிருந்து மருத்துவக் கல்லூரிக்குச் செல்லும் சிலரும் படிப்பு முடிக்கையில் தீவிர நகரவாசியாக மாறியிருப்பார். இதனால், கிராமத்தை நேசிக்க முடியாதவராக, கிராமப்புற வாழ்வுக்கு அந்நியராகி நிற்கிறார்.

கிராமப்புறங்களில் பணியாற்ற முன்வரும் இளம் மருத்துவர்களுக்கு எந்தச ஒரு சிறப்புச் சலுகையையும் அரசு செய்து தருவதில்லை. அடிப்படை வசதிகள்கூட இந்த மருத்துவர் களுக்குச் செய்து கொடுப்பதில்லை. மேலும், இளம் மருத்துவர்கள் கிராமத்தைப் புறக்கணிக்க மருத்துவக் கல்லூரியின் பயிற்சி முறையும்கூட ஒரு காரணம். உயர் தொழில் நுட்பம் சார்ந்த கல்விக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. ஒவ்வொரு நோய் பற்றியும் அதைக் குணப்படுத்தும் தொழில்நுட்ப விவரங்களே பாடப்புத்தகங்களில் பரவிக்கிடக்கின்றன.

சீனா
சீனா

எனவே தொழில்நுட்ப கருவி இன்றி நோயை அறியவோ, குணப் படுத்தவோ முடியாது என மாணவர் முடிவு செய்துவிடுகிறார். நோயாளியின் படுக்கை அருகேயான மருத்துவப் பயிற்சி என்பது முற்றாக நீக்கப்பட்டுவிட்டது. தொழில்நுட்ப கருவிகள் இல்லாமல், மருத்துவம் செய்ய முடியாது என்று பாடம் சொல்லிக் கொடுக்கும் பேராசிரியர்களும் கூட நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இதனால், கிராமப்புறங்களுக்கு ஆர்வமாகச் செல்லும் இளைய மருத்துவர்கள், உயர் தொழில்நுட்ப கருவிகள் இல்லாத கிராமத்தில் மருத்துவம் பார்க்க முடியாது என்று நம்பிக்கை இழந்து நகரத்துக்குத் திரும்பிவிடுகிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் ஆபத்தற்ற சிறு சிறு நோய்களுக்குச் சிகிச்சை அளித்து, மோசமாக நோயுற்றவர்களை நகர்ப்புற மருத்துவமனைக்கு அனுப்ப நர்ஸ்கள் போதும். தகுதியற்ற நர்ஸுகளைக் கொண்டு, மருந்து கொடுப்பதா? என என் கருத்துக்கு எதிர்ப்பும் வருகின்றன. நர்ஸ் என்பவர் மருத்துவர் இல்லையே தவிர, மருத்துவப் பயிற்சி பெற்றவர் என்பதை நாம் மறந்து விடுகிறோம்.

நம் அண்டை நாடான சீனாவே இதற்கு உதாரணம். நர்ஸ் போன்ற ஆரம்பகட்ட மருத்துவர்களை உருவாக்கிய, மக்களின் அடிப்படைத் தேவையை ஈடு செய்த வரலாறு அங்கு உண்டு. 1949-ம் ஆண்டு வாக்கில் சீனாவில் பத்தாயிரம் நபர்களுக்கு ஒரு மருத்துவரே இருந்தார். நகரங்களிலேயே போதுமான மருத்துவர்கள் இல்லை.

மாவோ
மாவோ

இதனால், சீன கிராமங்களுக்கு எந்த மருத்துவரும் செல்லவில்லை. இதனால், மக்களின் நல்வாழ்வு சீர்கெட ஆரம்பித்தது. அந்தச் சமயத்தில் சீனத் தலைவர் மாவோ, பள்ளிப் படிப்பை முடித்த இளைஞர்களுக்கு ஆறு மாத கால மருத்துவப் பயிற்சி தந்து கிராமங்களுக்கு அனுப்பி வைக்க ஒரு திட்டத்தை உருவாக்கினார். இது ‘வெறுங்கால் மருத்துவர் (Barefoot Doctors) திட்டம்’ என அழைக்கப்பட்டது.

இந்தச் செருப்பு அணியாத, எளிய ‘மக்கள் மருத்துவர்கள்’ கிராமங்களில் தங்கி, சிகிச்சை வழங்கினார்கள். கூடவே சாதனை யும் செய்தார்கள். நத்தைப் புழுக்கள் அப்போது சீனாவுக்குப் பெரும் தொல்லையாக இருந்தன. தண்ணீர் வழியே பரவும் இந்தப் புழுக்கள் வயிற்றுக்குள் பெருகியதால், சீன மக்கள் தொந்தியும் தொப்பையுமாக நோயாளிகளாகத் திரிந்தனர். சுத்தமற்ற நீரும், கழிப்பிட வசதிகளற்ற, ஆரோக்கியக் குறைவான சூழலுமே இதற்குக் காரணம் என்பதைக் கண்டறிந்தனர் வெறுங்கால் மருத்துவர்கள்.

அசுத்த நீர் தேங்கிக் கிடந்த நீர் நிலைகளை மக்களுடன் கூடி தூய்மைப் படுத்தினார்கள். மூன்று ஆண்டுகளில் 1 கோடி கழிப்பறைகள் கட்டி முடிக்கப் பட்டன. ‘கடவுள் செய்ய முடியாததை மக்கள் சக்தி செய்து முடித்தது’ என்று பெருமையுடன் மாவோ குறிப்பிட்டார். உலகின் ஆரோக்கியம் மிக்க நாடுகள் பட்டியலில் நான்காவது இடத்தை 20 ஆண்டுகளில் சீனா எட்டிப் பிடித்தது.

‘‘பள்ளிப் படிப்பை முடித்த இளைஞர்களுக்கு ஆறு மாத கால மருத்துவப் பயிற்சி தந்து கிராமங்களுக்கு அனுப்பி வைக்க ஒரு திட்டத்தை உருவாக்கினார். இது ‘வெறுங்கால் மருத்துவர் (Barefoot Doctors) திட்டம்’ என அழைக்கப்பட்டது.’’

ஆனால், நம் இந்திய அரசு, இப்படி எதையும் மாற்றி யோசிக்கவில்லை. தகுதி எதுவுமற்ற போலி மருத்துவர்களைத்தான் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி, கிராமப் புறங்களில் மருத்துவம் செய்ய அனுமதித்து வருகிறது. போலி மருத்துவர்கள் ஆபத்தான ஸ்டீராய்ட் மருந்துகளை. சாதாரண நோய் களுக்குப் பயன்படுத்துகின்றனர். இதன் பின்விளைவுகள் மிகவும் அபாயகரமானவை. சரியான மருத்துவ உதவி பெற முடியாத சூழலே, இத்தகைய போலிகள் மலியக் காரணமாகிறது. வேறு வழியின்றிக் கிராம மக்கள் போலிகளை நாடி உடல்நலனைக் கெடுத்துக்கொள்கிறார்கள்.

மருத்துவமனைகளும் மருத்துவர்களும்தான் கிராமப்புற மக்களின் நல்வாழ்வுக்கு அவசியம் என்பது சரியானதல்ல. ஐரோப்பாவில் ஐந்து நாடுகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி அதிக மருத்துவர்கள் உள்ள பகுதியில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஏற்பட்ட மரணங்கள், பாதிப்புகள் அளவே, குறைவான மருத்து வர்கள் பணியாற்றும் பகுதியிலும் நடந் துள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. உயர் தொழில்நுட்பப் பயிற்சி பெற்ற மருத்து வர்கள் மக்களின் அடிப்படை ஆரோக்கிய வாழ்வுக்கு உதவ முடியாதவர்களாகவே உள்ளார்கள்.

கிராமப்புற மக்களின் அடிப்படை சுகாதாரத் தேவையை நிறைவு செய்வதற்கான வழியைக் கண்டுபிடிக்கத் திறந்த மனம் கொண்ட விவாதம் தேசிய அளவில் நடத்தப்பட வேண்டும். நான் முன் வைத்து வரும் கருத்துக்கள்தான் சிறந்தது என்று கூற முடியாது. இதைவிட நல்ல கருத்துகள் வருமானால் அரசு அதை ஏற்றுக்கொள்ள முன் வர வேண்டும். வசதி வாய்ந்த மேலை நாடுகள் செலவு அதிகமாகும் உயர் தொழில் நுட்ப மருத்துவத்துக்கு மாற்றுக் காணும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

சீனாவில்
சீனாவில்

நம்மைப் போன்ற மக்கள் தொகையும், பொருளாதார, சமூக நிலையும் கொண்ட சீனா ‘வெறுங்கால் மருத்துவர் திட்டம்’ எனும் எளிய, மலிவான, வலிமையான முறையை வெற்றிகரமாகச் செயல்படுத்தி பல நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருந்ததை மீண்டும் சுட்டிக் காட்டுகிறேன். கூடவே, இன்னொரு தகவலையும் சொல் கிறேன். சீனா இந்த நல்ல திட்டத்தை கைவிட்டதால், இப்போது சீனா மருத்துவ நெருக்கடியில் உள்ளதை உலகம் அறியும்.

நல்வாழ்வை மனதில் கொண்டு... மக்களைச் சென்றடையும் மக்களுக்கான மருத்துவம் பற்றி, நாம் மாற்றிச் சிந்திப்போம். ‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமே!’ என்பதுதான் என் வேண்டுதல்; நன்றி!’’ எனச் சொல்லி முடிக்கிறார் ‘மக்கள் மருத்துவர்’ பி.எம்.ஹெக்டே.