Published:Updated:

உழவர்களின் உன்னத தோழன் விளைச்சலைக் கூட்டும் வவ்வால்கள்!

வவ்வால்
பிரீமியம் ஸ்டோரி
News
வவ்வால்

சூழல்

கொரோனா வைரஸ் பரவலுக்குக் காரணம் விலங்குகள்தான் என்ற செய்தியால் அதிகம் பாதிக்கப்பட்ட உயிரினங்களில் வவ்வால்கள் முதன்மையானவை.

இத்தனைக்கும் வவ்வால்கள் மூலம் நேரடியாகப் பரவவில்லை என்ற உண்மைகள் வெளிவந்தபோதிலும் மக்கள் மனதிலிருந்து வவ்வால்கள் பற்றிய தவறான எண்ணத்தை மாற்ற முடியவில்லை. ஆனால், அந்த வவ்வால்கள் ஆற்றி வரும் விவசாயம் மற்றும் சூழலியல் பணிகளை ஆராய்ந்தால், இந்த விலங்கைப் பற்றியா தவறாகப் பேசினோம் என எண்ணத் தோன்றும்.

மதிவாணன்
மதிவாணன்

பறக்கும் திறனுள்ள ஒரே பாலூட்டி வவ்வால்கள் மட்டுமே. சுமார் 5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வவ்வால்கள் தோன்றியுள்ளன. உலகில் சுமார் 1,421 வவ்வால் இனங்கள் உள்ளன. இந்தியாவில் சுமார் 128 வவ்வால் இனங்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன. வவ்வால்களைப் பொதுவாக அவை உண்ணும் உணவின் அடிப்படையில் பழந்திண்ணி மற்றும் பூச்சித்திண்ணி வவ்வால்கள் என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். இந்தியத் துணைக் கண்டத்தில் 14 வகையான பழந்திண்ணி வவ்வால்களும் 100-க்கும் மேற்பட்ட பூச்சியுண்ணும் வவ்வால் இனங்களும் உள்ளன. மிகவும் உயர்ந்த மரங்கள், பனை, தென்னை ஓலைகள், வாழை இலைகள், பாறை புடவுகள், குகைகள், பழைய பாழடைந்த கட்டடங்கள், பழங்காலக் கோயில்கள், பாலங்கள், கிணறுகள் போன்றவை வவ்வால்களின் வசிப்பிடங்கள். பெரும்பாலான வவ்வால்கள் கூட்டமாக வசிக்கும். அமெரிக்காவில் உள்ள பிராக்கன் குகை (Bracken Cave) உலகில் அதிக வவ்வால்கள் வசிக்கும் குகை. அங்கு மட்டும் 2 கோடி வவ்வால்கள் வசிக்கின்றன. வவ்வால்கள் குறித்த கணக்கில்லாத கட்டுக்கதைகளின் பதிவுகளை ஒப்பிடுகையில் வவ்வால்கள் வழங்கும் சேவைகள் குறித்துப் பதிவுகள் மிகக்குறைவு. வவ்வால்கள் ஓர் இரவாடி. இரவு நேரங்களில் இவை மேற்கொள்ளும் சூழலியல் பணிகளால்தான் காடுகள் மட்டுமன்றி விவசாயமும் செழிப்பாக உள்ளது. வவ்வால்கள் மூலம் கிடைக்கப்பெறும் அளப்பரிய சூழலியல் சேவைகளைப் பற்றித் பார்ப்போம்.

பூச்சித்திண்ணி வவ்வால்கள்
பூச்சித்திண்ணி வவ்வால்கள்

பழந்திண்ணி வவ்வால்கள்

பழந்திண்ணி வவ்வால்கள் ஊர்ப்புறங்களில் மரங்களில் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கும். இலுப்பை, நாவல், அத்தி, ஆல், வாதாங்கொட்டை, முந்திரி போன்ற மரங்களில் உள்ள பழங்கள், தளிர்கள், பூந்தேன் போன்றவற்றை உணவாக உட்கொள்கின்றன. நெடுந்தொலைவு பறக்கும் சக்தி வவ்வால்களுக்கு உள்ளதால் பழங்களைத் தின்று அதன் விதைகளைப் பல இடங்களில் பரப்பித் தாவர மறு உற்பத்திக்கு உதவுகின்றன. மேலும் பழந்திண்ணி வவ்வால்கள் இரவு நேரங்களில் மலர்கின்ற பூக்களின் அயல் மகரந்தச் சேர்க்கைக்கும், வாழை மரங்கள், இலவம் பஞ்சு போன்ற மரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கும் மிக முக்கியக் காரணியாகும். காட்டின் பன்முகத் தன்மையைச் சீராக வைத்துக் கொள்வதில் பழந்திண்ணி வவ்வால்களின் பணி முக்கியமானது. பல பூக்கும் தாவரங்களின் மரபணு நிலைப்பாட்டிற்கும் இவை அவசியம். இவை இல்லையென்றால் இலுப்பை மரங்கள் காணாமல் போய்விடும். வவ்வால்கள் தின்று போடும் விதைகள் வீரியமிக்கவை. முளைப்புத் திறன் அதிகமாக இருக்கும். முந்திரித் தோப்புகள் பகுதியில் தங்கியுள்ள பழந்திண்ணி வவ்வால்களின் வசிப்பிடத்திற்குச் சென்று நல்ல தரமான முந்திரி விதைகளைச் சேகரிக்கலாம். இந்தியாவில் உள்ள 3 வகையான பழந்திண்ணி வவ்வால்களால் மட்டும் சுமார் 114 தாவர இனங்கள் மகரந்தச் சேர்க்கை மற்றும் விதைப்பரவல் போன்ற பயன்களைப் பெறுகின்றன. கடல் பகுதிகளில் அமைந்திருக்கும் அலையாத்திக் காடுகளின் நிலைத்த தன்மைக்கும் பழந்திண்ணி வவ்வால்கள் அவசியம்.

பூச்சித்திண்ணி வவ்வால்
பூச்சித்திண்ணி வவ்வால்

பூச்சித்திண்ணி வவ்வால்கள்

விவசாயத்தில் பெரிய பிரச்னை பூச்சிகள். இவற்றைக் கட்டுப்படுத்த அளவுக்கதிகமான பூச்சிக்கொல்லி மருந்துகள் உபயோகப்படுத்தப்படுகிறன. உலக வள ஆதார நிறுவனம் (World Resource Institute) அளித்துள்ள தகவலின்படி சுமார் 400 இனங்களைச் சார்ந்த பூச்சியினங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளின் எதிர்ப்பாற்றலைப் பெற்றுள்ளன. அதனால் அவற்றைத் தெளிப்பதால் பயனில்லை. அதே நேரத்தில், விளைநிலங்களில் உள்ள பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் இரவாடியான வவ்வால்களின் பங்கு அளப்பரியது. வெட்டுக்கிளிகள், கம்பளிப்பூச்சிகள், வண்டுகள், இலை தத்துப்பூச்சிகள், அந்திப் பூச்சிகள் என அனைத்து வகையான பூச்சிகளையும் வேட்டையாடி அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைக்க உதவுகின்றன.

பழந்திண்ணி வவ்வால்கள்
பழந்திண்ணி வவ்வால்கள்

வட அமெரிக்க நாட்டில் காணப்படும் தலா 12 கிராம் அளவே எடையுள்ள 10 லட்சம் மெக்சிக்கன் ஃப்ரீ டெயில்டு வவ்வால்கள், ஓர் இரவில் மட்டும் சுமார் 8.4 மெட்ரிக் டன் (8,400 கிலோ) பூச்சிகளை உட்கொள்வதாகக் கணக்கிட்டுள்ளனர். உங்கள் விளைநிலங்களில் வவ்வால்கள் அதிகளவு சுற்றித்திரிந்தால், அங்கு பூச்சிகள் அதிகம் உள்ளது என்று அர்த்தம். இரவு நேரங்களில் நமது குடியிருப்பிற்கருகில் பூச்சித்திண்ணி வவ்வால்கள் அங்குமிங்கும் வேகமாகப் பறப்பதைக் காணலாம். அவை நோய் பரப்பும் கொசுக்களை வேட்டையாட வருகின்றன. இதனால் மனித நலத்திற்கும் வவ்வால்கள் பங்காற்றுகின்றன. தாய்லாந்து நாட்டில் வவ்வால்களை விளைநிலங்களில் கவர்வதற்காக அவைகளுக்கு ஏற்ற வகையில் இருட்டான மரப்பலகை வீடுகள் அமைக்கப்படுகின்றன. அவ்வீடுகளை வவ்வால்கள் பயன்படுத்துவதன் மூலம் விளைநிலங்களில் பூச்சிகள் பெருமளவில் கட்டுப்படுவதாக அங்குள்ள விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தாய்லாந்து நாட்டில் ‘ரின்க்கில் லிப்டு ஃப்ரீ டெயில்டு பேட்’ எனப்படும் வவ்வால்களால் மட்டும் வருடத்துக்கு 26,152 பேர்களின் உணவுத் தானியங்கள் பாதுகாக்கப்படுவதாக 2014-ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள ஆராய்ச்சிக் கட்டுரை தெரிவிக்கிறது. தற்போது நிகழ்ந்துவரும் வெட்டுக்கிளிகளின் கொடூர தாக்குதல்களுக்குப் பயிர்கள் இரையாகி வருகின்றன. பழங்காலத்தில் இவ்வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த கன்னியாகுமரி பகுதியில் வசித்து வந்த பில்லுக்கட்டி நாயக்கர் சமூகத்தினர், விளை நிலங்களில் பரண்களை அமைத்து வவ்வால்களை வளர்த்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. நாமும் நமது விளைநிலங்களில் வவ்வால்கள் தங்குவதற்குப் பரண்கள் அமைத்துப் பூச்சிக்கட்டுப்பாட்டை மேற்கொள்ளலாம்.

வவ்வால்களின் எச்சங்கள் சிறந்த உரம்

பூச்சித்திண்ணி வவ்வால்களின் எச்சங்கள் பயிர்களுக்குச் சிறந்த உரமாகவும் பயன்படுகிறது. மேலை நாடுகளில் வவ்வால்களின் எச்சங்கள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு வர்த்தக ரீதியாக விற்பனை செய்யப்படுகின்றன. நமது பகுதிகளிலும் வவ்வால்களின் எச்சங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் சில இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் சத்துகள் நிறைந்தது பூச்சியுண்ணி வவ்வால்களின் எச்சங்கள். இந்தக் கழிவுகளைக் காய்கறிப் பயிர்களுக்குப் பயன்படுத்துவதன் மூலம் நல்ல விளைச்சலைப் பெற முடியும்.

இந்திய பழந்திண்ணி வவ்வால்கள்
இந்திய பழந்திண்ணி வவ்வால்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எனது சொந்த ஊரான ஜமீன் சிங்கம்பட்டியில் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு வரை வவ்வால்களின் எச்சங்கள் மிளகாய் மற்றும் காய்கறிப் பயிர்களுக்கு உரமாகப் பயன்படுத்தப்பட்டன. திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் விவசாயிகள் தங்கள் கிணறுகளில் வசிக்கும் வவ்வால்களை இன்றளவும் பாதுகாத்து வருகின்றனர். வவ்வால்களின் எச்சம் கிணற்று நீரைச் சத்தாக்கி அவற்றைப் பயிர்களுக்குப் பாய்ச்சும்போது நல்ல வளர்ச்சி உள்ளதாக விவசாயிகள் சொல்கிறார்கள். கோயில்களில் தங்கும் வவ்வால்களின் எச்சங்கள் சேகரிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டுள்ளது. நம் முன்னோர்கள் வவ்வால்களின் எச்சங்களை உரமாகப் பயன்படுத்திச் சிறந்த முறையில் விவசாயத்தை மேற்கொண்டு வந்துள்ளனர். நாமும் விளைநிலங்களில் வவ்வால் தங்கும் வீடுகள் அல்லது பரண்களை அமைத்துப் பூச்சிக்கட்டுப்பாடு மட்டுமன்றி பயிர்களுக்குத் தேவையான உரத்தையும் பெற முடியும். இது தற்சார்பு வேளாண்மைக்கு வழிவகுக்கும்.

வவ்வால்கள் சந்திக்கும் பிரச்னைகள்

ஆரம்பக் காலத்திலிருந்தே வவ்வால்கள் ஆபத்தின் குறியீடு, கெட்ட சகுனம் என்ற கருத்துச் சமூகத்தில் நிலவி வருகிறது. திரைப்படங்கள் மற்றும் செய்திகளில் தவறாகச் சித்திரிக்கப்படுவதால் மனிதர்கள் இதனை வெறுத்து ஒதுக்குகிறார்கள். அத்துடன் அவற்றின் வாழ்விடங்களான மரங்கள், பாறை புடவுகள், காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் அத்தி, நாவல், இலுப்பை போன்ற மரங்களின் அழிவு, உணவு ஆதாரத்தையும் சிதைக்கிறது. பெருமளவில் வவ்வால்கள் வேட்டையாடப்படுகின்றன. மேலும் வவ்வால்களால் பல நோய்கள் பரவுகின்றன என்ற தவறான செய்திகளும் வவ்வால்களின் வாழ்வைக் கேள்விக்குறியாக்குகின்றன. வவ்வால்கள் மூலம் எந்த வைரஸும் மனிதர்களுக்கு நேரடியாகப் பரவாது என்பதே உண்மை. பொருளாதார ரீதியாகவும், சூழலியல் ரீதியாகவும் வவ்வால்களின் பங்கு மிக முக்கியமானது என்பதை உணர்ந்து அவற்றைப் பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும்.

மு.மதிவாணன்