Published:Updated:

தண்ணீர் நின்றாலும் சாயாது... கை நிறைய வருமானம் தரும் கறுப்புக் கவுனி!

வயலில் சாலோமன் ரெத்தினதாஸ்
பிரீமியம் ஸ்டோரி
வயலில் சாலோமன் ரெத்தினதாஸ்

முன்னாள் விவசாய ஆசிரியரின் அனுபவம்

தண்ணீர் நின்றாலும் சாயாது... கை நிறைய வருமானம் தரும் கறுப்புக் கவுனி!

முன்னாள் விவசாய ஆசிரியரின் அனுபவம்

Published:Updated:
வயலில் சாலோமன் ரெத்தினதாஸ்
பிரீமியம் ஸ்டோரி
வயலில் சாலோமன் ரெத்தினதாஸ்

ன்னியாகுமரி மாவட்டம், புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சாலோமன் ரெத்தினதாஸ். இவர் கறுப்புக் கவுனி நெல் ரகத்தை நடவு செய்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார். கடந்த ஆண்டு 30 சென்டில் கறுப்புக் கவுனி பயிர் செய்தவர், இந்த ஆண்டு மூன்றரை ஏக்கரில் கறுப்புக் கவுனி பயிரிட்டிருக்கிறார். பால்குளத்து பத்து (புரவு) பகுதியில் அறுவடைக்குத் தயாராக இருந்த கறுப்புக் கவுனி நெற்பயிரை பார்வையிட்டுக்கொண்டிருந்த விவசாயி சாலோமன் ரெத்தினதாஸை சந்தித்துப் பேசினோம்.

“எனக்கு இப்ப 68 வயசு ஆகுது. எங்க அப்பா காலத்தில இருந்தே நெல் விவசாயம் செய்துகிட்டு வர்றோம். நான் புத்தளம் எல்.எம்.பி.சி மேல்நிலைப் பள்ளியில் வேளாண்மைப் பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியரா வேலை பார்த்தேன். அதனால இடையில சில நாள்கள் விவசாயத்தை விட்டிருந்தேன். எங்க நிலத்துல வேற ஆள் விவசாயம் செஞ்சுகிட்டு இருந்தாங்க. சாப்பாட்டுக்கு மட்டும் கொஞ்சம் இடத்தில நாங்க பயிர் செஞ்சுகிட்டு இருந்தோம்.

2011 ஏப்ரல் மாசம் பணி ஓய்வு. அதுக்குப் பிறகு, மூத்த மகன் சாலமன் ஜீவா உதவியோடு விவசாயத்தைத் திரும்பவும் தொடங்கினோம். இப்ப முழுநேரமா விவசாயத்தைக் கவனிக்கிறேன்” என முன்னுரை கொடுத்தவர், வயலை சுற்றிக் காட்டியபடியே கறுப்புக் கவுனி ரகத்தைத் தேர்வு செய்ததைப் பற்றி விவரித்தார்.

வயலில் சாலோமன் ரெத்தினதாஸ்
வயலில் சாலோமன் ரெத்தினதாஸ்

“பால்குளத்து பத்துல ஶ்ரீகிருஷ்ண பெருமாள்ங்கிறவருதான் மொதல்ல கறுப்புக் கவுனி பயிர் செய்தார். அந்தப் பயிர் நல்லா வந்ததைப் பார்த்துதான் நாங்க கழிஞ்ச தடவ (கடந்த முறை) 30 சென்ட்ல 5 மரக்கா (22 கிலோ) வெதப்பாடு கறுப்புக் கவுனி போட்டிருந்தோம். அதில 500 கிலோ நெல்லு கிடைச்சது. அதை மதிப்புக்கூட்டினதுல 300 கிலோ அரிசி கிடைச்சது. ஒரு கிலோ அரிசி 80 ரூபாய்க்கு கொடுத்தோம். அதுல எங்களுக்கு 24,000 ரூபாய் கிடைச்சது. ரொம்பச் செலவு இல்லாததுனால நல்ல லாபமா இருந்தது.

அதுல கிடைச்ச மகசூலைப் பார்த்துதான் இப்பவும் கறுப்புக் கவுனி போட்டிருக்கோம். இந்த நெல்லுக்கு நல்ல வரவேற்பு இருக்குது. அதனால மொத்தம் மூன்றரை ஏக்கர்ல கறுப்புக் கவுனி போட்டிருக் கேன். இந்தத் தடவ நட்ட உடனே 5 நாள்கள் நல்ல மழை பெய்ஞ்சதுனால வயல் தண்ணியில முங்கிட்டுது. பயிரு எல்லாம் அழிஞ்சிற்றுன்னு (அழிந்துபோனது என) நினச்சேன். ஆனா, ஒவ்வொரு பயிரும் நின்னுது. அதுல இருந்து இப்ப நிறைய பிள்ள (தூர்) கட்டியிருக்கு. தண்ணில அதிகமா இருந்தாலும் கெடாத பயிரு கறுப்புக் கவுனி.

இந்த ரகத்தைப் பொறுத்தவரை கூடுதல் செலவே இல்ல. நாம களை வராம மட்டும் பாத்துகிட்டாப் போதும். எல்லாரும் களைக்கொல்லி போட்டு பயிரை நாசம் ஆக்குறாங்க. ஆனா, நான் இயற்கை முறையிலேயே களை வராம தடுக்குற நடவடிக்கையைக் கடைப்பிடிக்கிறேன்” என்றவர், தனது விவசாய அனுபவங்களைப் பற்றிப் பேசினார்.

“பால்குளத்து பத்திலயும், பறக்கை பத்திலயும் ரெண்டு போக விளைச்சல். முதல் பயிரை வால்சிறை மீண்டான்னு சொல்வோம். அடுத்தது சம்பா பூ. ரெண்டு தடவையும் அடி உரமா சாணி உரம் வெச்சிருவோம். ஒரு ஏக்கருக்கு எப்பவும் 3 டிராக்டர் சாணி உரம் வெச்சிருவோம். ஒரு டிராக்டர் 3,700 ரூபாய். விவசாயக் குழு மூலமா கிடைச்ச ‘ட்ரில்லர்’ மூலமா வயலை உழுதோம். அதுக்கு டீசலுக்கான பணம் கொடுத்தா போதும்.

கறுப்புக் கவுனி நெல் மணிகள்
கறுப்புக் கவுனி நெல் மணிகள்

ரெண்டு உழவு அடிச்ச பிறவு முச்சால் வைக்கறதுக்கு முன்னாடி (மூன்றாம் உழவுக்கு முன்) ஒரு பத்து நாள் தெவர (காய) போட்டுடணும். களையே இல்லாம போயிரும். அதையும் மீறி லேசா களை இருந்தா, நாத்து நட்டு லேசா தளுத்த ஒடனே 15 நாளுக்கு ஒரு ‘இன்ச்’ தண்ணி வயல்ல நிக்கிற மாதிரி பாத்துக்கணும். ஒருநாள்கூடத் தண்ணி குறையாம பாத்துக்கணும். அப்ப களை வரவே வராது.

நாங்க பொன்னம்பலம் ஐயாவோட கிரியேட் அமைப்பு மூலமா கறுப்புக் கவுனி நெல் விதை வாங்கினோம். ஒரு ஏக்கருக்கு 20 கிலோ விதை நெல் தேவைப்படும். மேல் உரமா ஒரு ஏக்கருக்கு 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு போட்டோம். கடையில வாங்குற வேப்பம் புண்ணாக்குல சத்து இல்ல. எண்ணெய் எடுத்தா சத்து போயிடும்ங் கிறதுனால நாங்களே வேப்பம் கொட்டையை வாங்கி இடிச்சு போடுவோம். தேங்காய்ப் புண்ணாக்கு கிலோ 15 ரூபாய்க்கு கிடைக்குது. அதுவும் பயிருக்கு நல்லது. புண்ணாக்கு போடாம வேப்பங் கொட்டையும் போடலாம்.

எங்க நிலத்துல நாலஞ்சு வேம்பு மரம் நிக்குது. வயல்ல பயிரு நடவு வரக்கூடிய சமயத்தில வேப்பங்காய் காய்ச்சு பழுக்கும். நாங்க அதைச் சேகரிச்சு வயல்ல போட்டு சமுண்டி (மிதித்து) விடுவோம். அந்த இடத்தில உள்ள பயிரு மணி மாதிரி இருக்கும்.

நாகர்கோவில் மீன் சந்தையில உள்ள மீன் கழிவையும் வயலுக்குப் போடுவோம். அதுவும் நல்ல உரம்தான். மீன் கழிவுக்குக் காசு கொடுக்காம சும்மாதான் எடுத்துகிட்டு வந்தோம். மொத்தத்தில இயற்கை உரம் போட்டா தொளி (சேறு) நல்லா இருக்கும், விளைச்சலும் நல்லா இருக்கும். கறுப்புக் கவுனி 145 நாள்கள் பயிர். இயற்கையாவே கறுப்புக் கவுனி நல்லா வரும். அரிசி கறுப்பு நிறத்துல இருக்கும். உடம்புக்கு நல்லதுன்னு உபயோகபடுத்துறாங்க” என்றவர், வருமானம் பற்றிப் பேசினார்.

“அறுவடைக்கு முன்னாடியே இந்த நெல்லுக்கு கிலோ 50 ரூபாய்க்கு விலை பேசி நாகர்கோவில் வரபிரசாதம் இயற்கை அங்காடிகாரங்க 50,000 ரூபாய் ‘அட்வான்ஸ்’ தந்திட்டாங்க. போன தடவ கிடைச்ச அளவுக்கு வந்ததுன்னா செலவு எல்லாம் போக ஒரு ஏக்கருக்கு 60,000 ரூபாய் லாபம் கிடைக்கும்.

கறுப்புக் கவுனி நெல் வயல்
கறுப்புக் கவுனி நெல் வயல்

கறுப்புக் கவுனி உயரமா வளர்ந்திருக் கிறதுனால தாராளமா வைக்கோல் கிடைக்கும். எங்ககிட்ட 8 மாடுகள் இருக்கு. அதனால வைக்கோலை விக்கிறது இல்ல. நான் பார்த்த அளவுல மத்த எல்லா நெல்லைவிடக் கறுப்புகவுனி போடுறது விவசாயிகளுக்கு நல்ல லாபமா இருக்கும். மக்களும் வாங்கிச் சாப்பிட விரும்புறாங்க. பச்சை நெல்லா அடிச்சு வெச்சு விக்கிறாங்க. மத்த நெல்லு மாதிரி இல்லாம இந்த நெல்லுக்குத் தோட்டை (உமி) மட்டும் எடுக்குறதுக்கு ‘மிஷின்’ இருக்கு. அதுமூலமா தோட்டை எடுத்துட்டு அரிசியை விக்கிறாங்க. புழுங்க வைக்க வேண்டாம்ங் கிறதுனால வேலையும் கம்மிதான்” என்றவர் நிறைவாக,

“பால் குளத்து பத்து வயலு அறுத்த உடனே உளுந்து போடுவோம். நாங்க கொட்டாரஞ்சம்பா நெல்ல அவலா இடிச்சுக் கொடுத்தா கிலோ 80 ரூபாயில இருந்து 100 ரூபாய் வரைக்கும் கிடைக்கும். அப்படி யாரும் மதிப்புக்கூட்டுறது இல்ல. அதனால தான் சிலருக்கு நஷ்டம் வருது” என்றார்.

தொடர்புக்கு, சாலோமன் ரெத்தினதாஸ்

செல்போன்: 80121 03513

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism