Published:Updated:

வேம்பு கசக்கும்... அதன் வருமானம் இனிக்கும்... எப்படி?

வேம்பின் மரம் உறுதியானதால் தச்சு வேலைகளுக்கும், தீக்குச்சி போன்றவற்றுக்கும் பயன்படும். மலைவேம்பைவிடவும் மிக நல்ல விலைக்குப் போய்விடும்.

வேம்பு
வேம்பு

கடந்த ஆண்டு வேப்பங்கொட்டைகள் கிலோ ரூ.38 விலையாக இருந்தது. இந்த ஆண்டு கிலோ ரூ.7 உயர்ந்திருக்கிறது. வேம்புவின் தேவை அதிகமாக இருப்பதால் வேப்பங்கொட்டைகள் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.

வேப்பமரம் ஒரு விவசாயப் பயிர் கிடையாது. ஒரே இடத்தில் விளைவிக்கப்படுவதில்லை. முன்புபோல வேப்பங்கொட்டைகளைச் சேகரிக்கும் மக்களும், வீடுகளுக்கு சென்று சேகரிக்கும் சிறு வணிகர்களும் தொடர்ந்து குறைந்து வருவதாலும், வேப்பெண்ணெய் மற்றும் வேப்பம் புண்ணாக்கு தேவைகள் அதிகரித்து வருவதாலும் விலை உயர்ந்து வருகிறது.

வேம்பு
வேம்பு

வேப்பமரம் ஏக்கருக்கு 60 - 90 மரங்கள் 15X15 அடி விகிதத்தில் நடவு செய்யலாம் என வேளாண்மைத்துறை அதிகாரிகள் சொல்கிறார்கள். ஐந்து ஆண்டுகளில் பலன் தர ஆரம்பித்துவிடும். மரத்துக்கு குறைந்தபட்சம் 30 முதல் 50 கிலோ விளைச்சல் இருக்கும்.

100 - 150 கிலோ விளைச்சல் எடுப்பவர்களும் இருக்கிறார்கள். நல்ல விளைச்சல் உள்ள மரங்களின் விதைகளைத் தேர்ந்தெடுத்து விதைத்தால் விளைச்சல் அதிகமிருக்கும். வேறு பக்கம் முளைத்துவரும் வளர்ந்த செடிகளையும் பிடுங்கி நடலாம். அல்லது மரத்தின் கிளையை வெட்டி அப்படியே நட்டு மரம் வளரும் காலத்தைக் குறைக்கலாம்.

மரத்துக்காக வளர்ப்பவர்கள் ஏக்கருக்கு 440 மரங்கள் நடுகிறார்கள். ஆறு ஆண்டுகளில் மரமொன்று 1,500 ரூபாயும், பத்தாம் ஆண்டில் 7,500 ரூபாயும், பதினைந்தாம் ஆண்டில் 10,000 ரூபாயும் விலைபோகிறது. ஆறாம் ஆண்டில் ஒன்றுவிட்டு ஒன்றாக சுமார் 220 மரங்களை வெட்டிவிடுகிறார்கள். அதன்பின் பத்து பதினைந்து ஆண்டுகள் வரை வேப்பங்கொட்டை வருமானமும் உபரியாகக் கிடைக்கிறது.

ஆண்டில் இரண்டு மாதங்கள்தான் வேலை இருக்கும். நீர் தேவை மிக மிகக் குறைவு. ஆரம்பத்தில் உயிர்நீர் தேவை, பின்னர் மழை நீரே போதுமானது. மிக வறட்சி வரும் காலத்தில் மட்டும் பார்த்துக் கொண்டால் போதும். வறட்சி மாவட்டங்களுக்கு ஏற்ற பயிர் இது. அமிலத்தன்மை ஏறிய நிலங்களை சீராக்க வேம்பு சாகுபடி நல்ல பலனளிக்கும்.

வேம்பு
வேம்பு

வேப்பங்கொட்டை மட்டுமன்றி, தோப்பாக வளர்க்கும்போது வேப்பம் இலைப் பொடியும் தயார் செய்யலாம், நல்ல தேவை உள்ளது. மருத்துவ குணம் உள்ள வேப்பம்பூ தேனுக்கு நல்ல வரவேற்பு உலகெங்கும் உண்டு. தேன் பெட்டி வைப்பதால் விதை மகசூலும் அதிகரிக்கும். தோப்பாக வளரும்போது அந்தப் பகுதியே குளுமையடையும், மழை ஈர்ப்பு மிக நன்றாக இருக்கும். மண்வளம் உயரும்.

வேம்பின் மரம் உறுதியானதால் தச்சு வேலைகளுக்கும், தீக்குச்சி போன்றவற்றுக்கும் பயன்படும். மலைவேம்பைவிடவும் மிக நல்ல விலைக்குப் போய்விடும்.

மொத்தமாக இருக்கும் வேப்பங்கொட்டைகளை வணிகர்களோ, வேம்பு எண்ணெய் உற்பத்தியாளர்கள் வீடுதேடி வந்து வாங்கிக் கொள்வார்கள். அவ்வளவு கிராக்கி உள்ளது.

எப்படிப் பார்த்தாலும் வேப்பங்கொட்டையில் ஆண்டுக்கு, ஏக்கருக்கு 70,000 முதல் 2 லட்சம் வரை வருமானம் எடுக்க முடியும் என்கிறார்கள். வேப்ப மரத்தில் 15 ஆண்டு முடிவில் ஏக்கருக்கு ரூ. 22 லட்சம் வரை பெற முடியும். வேப்ப மரத்தின் ஆயுள் 100 ஆண்டுகள்.

வேம்பு வளர்க்கலாம். வருமானம் பெருக்கலாம்!