சிட்ரஸ் பழங்கள் என்று அறியப்படும் எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி பற்றி நாம் அதிகம் கேள்விபட்டிருப்போம். ஆனால், இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பப்ளிமாஸ் பழங்கள் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இந்த பப்ளிமாஸ் பழங்களின் சாகுபடியை அதிகரிக்கும் நோக்கில் பெங்களூருவில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் புதிய ரகங்களை வெளியிட்டு பரப்பி வருகிறது.
இதுகுறித்து இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி மைய முதன்மை விஞ்ஞானி சங்கரனிடம் பேசியபோது, ``வைட்டமின் சி சத்து நிறைந்த சிட்ரஸ் பழங்களில் எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடிக்கு அடுத்து பப்ளிமாஸ் (Pummelo) பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பொதுவாக, பப்ளிமாஸ் பழங்கள் அதிக புளிப்பு மற்றும் கசப்புத்தன்மை காரணமாக இந்தியாவில் பிரபலமாகவில்லை. இதன் பூர்வீகமான மலேசியாவிலும் இதன் பயன்பாடு குறைவுதான். ஆனால், தாய்லாந்தில் பப்ளிமாஸ் பழங்களின் தன்மையை மேம்படுத்தி இனிப்பு பப்ளிமாஸ் பழங்கள் பரவலாகி அங்கே அதிகம் சாப்பிட பயன்படுத்துகின்றனர்.
அதேபோன்று இந்தியாவிலும் இனிப்புச் சுவையுள்ள பப்ளி மாஸ் ரகங்களை உருவாக்க வேண்டும் எண்ணி 2020-ம் ஆண்டு `அர்கா சந்திரா,’ `அர்கா ஆனந்தா’ என்ற இரண்டு இனிப்புச் சுவையுள்ள பப்ளிமாஸ் ரகங்கள் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி மையத்தால் வெளியிடப்பட்டன. தென்னிந்தியாவில் எலுமிச்சை சாகுபடிதான் அதிகம் நடைபெறுகிறது. தென்னிந்தியாவின் ஒருசில பகுதிகளில் ஆரஞ்சு, சாத்துக்குடி சாகுபடி செய்யப்பட்டாலும் வட இந்தியாவிலிருந்துதான் அவை அதிகம் வருகின்றன. ஆனால், இந்த பப்ளிமாஸ் ரகங்களை எலுமிச்சை சாகுபடி செய்யப்படும் அனைத்து இடங்களிலும் சாகுபடி செய்யலாம்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSதோல் கடினத்தன்மை கொண்ட நம்ம ஊர் கிச்சிலி பழங்களின் சகோதரன் என்றே இந்த பப்ளிமாஸ் பழங்களைச் சொல்லலாம். இதன் தோலும் கடினமானதுதான். நம்ம ஊர் கிச்சிலிப் பழங்களை நாம் கண்டுகொள்வதில்லை. ஆனால், அமெரிக்காவில் காலை உணவுக்குப் பிறகு, அருந்தும் பழச்சாறாக கிச்சலி சாறு இருந்து வருகிறது. சிட்ரஸ் பழ குடும்பங்களிலேயே வைட்டமின் சி, வைட்டமின் பி அதிகம் நிறைந்தது பப்ளிமாஸ் பழங்களில்தான்.
அதோடு பீட்டா கரோட்டின், போலிக் அமிலம் ஆகியவை அதிக அளவு நிறைந்திருப்பதால் கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் ஏற்றது. பொட்டாசியமும் நிறைந்திருப்பது. இதோடு வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, பி2 உள்ளிட்ட சத்துகள் நிறைந்துள்ளன.

இப்படி பல நன்மைகள் கொண்ட பப்ளிமாஸ் பழங்களைத் தோட்டமாக வளர்த்து சாகுபடி செய்பவர்கள் மிகவும் குறைவு. வீட்டுத்தோட்டங்களிலும் பண்ணையிலும் ஒன்றிரண்டு மரங்களை வளர்ப்பவர்களே அதிகம். இதைச் சாகுபடி செய்தால் நல்ல வருமானம் பெறலாம்.
மர வகையைச் சேர்ந்த பப்ளிமாஸை ஒருமுறை நடவு செய்துவிட்டால் 25 ஆண்டுகளுக்கு மேல் அறுவடை செய்யலாம். குட்டை மர வகைகயைச் சேர்ந்த இந்த ரகங்களை 15-க்கு 15 அடி இடைவெளியில் நடவு செய்யலாம். நடவு செய்து தேவையான உரங்களை இட்டு வளர்த்து வந்தால் 3 ஆண்டுகளில் வளர்ந்துவிடும். நான்காவது ஆண்டிலிருந்து மகசூல் கொடுக்கும். ஒரு மரத்திலிருந்து 80 - 100 பழங்கள் கிடைக்கும். `அர்கா சந்திரா’ (Arka Chandra) என்ற ரகத்தில் சதைப்பகுதிகள் வெண்மை நிறத்தில் இருக்கும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அறுவடையாகும் நான்காவது ஆண்டிலிருந்து ஒரு மரத்திலிருந்து 35 - 40 கிலோ பழங்கள் கிடைக்கும். ஒரு பழம் 800 கிராமிலிருந்து 1 கிலோ வரை எடை இருக்கும். ̀அர்கா ஆனந்தா' (Arka Anantha) ரகத்தில் பழத்துக்குள் இருக்கும் சதைப்பகுதிகள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். நான்காவது ஆண்டிலிருந்து ஒரு மரத்திலிருந்து 45 - 50 கிலோ பழங்கள் கிடைக்கும். ஒரு பழம் 900 கிராமிலிருந்து 1.2 கிலோ வரை எடை இருக்கும்.

இதற்கு விற்பனை வாய்ப்பென்று பார்த்தால் பீகார், உத்தரப் பிரதேசம், வடகிழக்கு மாநிலங்களில் அதிகம் சாப்பிட இதைப் பயன்படுத்துகின்றனர். அதேபோன்று வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யலாம். இதற்குத் தேவையுள்ள இடங்களை அறிந்து அங்கே விற்பனை செய்தால் நல்ல வருமானம் பெறலாம். பெரிய பராமரிப்பு தேவையிருக்காது. அறுவடை செய்வதும் எளிது. பூச்சித்தாக்குதலும் அவ்வளவாக இருக்காது. பெங்களூரு அடுத்த ஹெசரகட்டாவில் இருக்கும் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி மையத்தில் ஒரு கன்று 100 ரூபாய் விலையில் கிடைக்கிறது. தேவைப்படுவோர் வாங்கிக் கொள்ளலாம். அதற்கான தொழில்நுட்பமும் இங்கே கிடைக்கும்” என்றார்.
தொடர்புக்கு,
முனைவர் சங்கரன், இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி மையம், ஹெசரகட்டா, பெங்களூரு. செல்போன்: 96207 73809