`உலகின் விலையுயர்ந்த காய்; ஒரு கிலோ ₹85,000..!' - அப்படி என்ன இதில் சிறப்பு?

''மற்றப் பயிர்களைவிட, இதில் பத்து மடங்கு அதிகமான லாபத்தை இரண்டே வருடங்களில் பெற முடியும்.''
அந்தக் காய் ஒரு கிலோ ₹85,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அப்படியென்ன சிறப்பு அந்த காயில் என்கிறீர்களா? ஹாப் ஷுட்ஸ் (hop-shoots) என்று டைப் செய்து இணையத்தில் தேடினீர்களென்றால், செரிமானப் பிரச்னையை சரி செய்வதில் ஆரம்பித்து புற்றுநோய் செல்களைக் கொல்வதற்கான சிகிச்சையில் பயன்படுவது வரை பத்திப் பத்தியாக இதன் புகழைப் பாடுகிறது கூகுள். ஹாப் ஷுட்ஸின் தாயகம் ஐரோப்பா. இதன் அறிவியல் பெயர் ஹுமுலஸ் லுபுலஸ் (Humulus lupulus) பத்து மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய கொடி வகையைச் சேர்ந்த இந்த ஹாப், 20 வருடங்கள் வரை வாழக்கூடியது. பச்சை நிறப் பூக்களைக் கொண்ட ஹாப்பில், ஏழெட்டு இதழ் அடுக்குகள் கொண்ட மலர்கள் தரையை நோக்கிய வண்ணம் தொங்கிக் கொண்டிருக்கும். பெண் பூக்களின் உள்ளே அதனுடைய காய் இருக்கிறது. ஹாப் தாவரத்தின் பூ, காய், பழம், தண்டு என எல்லாமே மருத்துவ குணம் கொண்டது என்பதால்தான், ஒரு கிலோ 85,000 ரூபாயிலிருந்து ஒரு லட்சம் வரை விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.
ஹாப்பின் தண்டுகள் காசநோயைக் குணப்படுத்துவதில் பெரும்பங்கு வகிப்பதாக நம்பப்படுகிறது. இதிலிருந்து ஜீரண சக்தியை அதிகரிப்பதற்கும், ரத்த சோகையைக் கட்டுக்குள் வைப்பதற்கும் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. ஆன்டி ஆன்ஸிடென்ட் அதிகமிருப்பதால் தோல் பராமரிப்பு க்ரீம்களிலும் ஹாப் பயன்படுகிறது. தவிர, இதன் பூக்களும் பழங்களும் பீர் தயாரிப்பில் சுவையூட்டும் பொருளாக அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.
11-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட இந்தத் தாவரம் உலகின் பல நாடுகளில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்தியாவில் முதல் முறையாக இந்தத் தாவரத்தைப் பயிரிட்டவர் பீகாரைச் சேர்ந்த அமரேஷ் சிங். ''ஆறு வருடங்களுக்கு முன்னாடியே, ஒரு கிலோ ஹாப் கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கு விலைபோனது. இது மிகவும் அரிதான தாவரம் என்பதால், ஸ்பெஷல் ஆர்டரின் பேரில்தான் விற்பனை செய்ய முடியும். மற்றப் பயிர்களைவிட , இதில் பத்து மடங்கு அதிகமான லாபத்தை இரண்டே வருடங்களில் பெற முடியும். இந்த பயிரின் பூக்கள், காய்கள், பழங்கள், தண்டுகளெல்லாம் மருந்துப்பொருள்கள் தயாரிப்பிலும் பீர் உற்பத்தியிலும் பயன்படுகிறது. மீதமுள்ள இதன் கிளைகளை உணவுப்பொருளாக விற்பனை செய்யலாம்'' என்கிறார் அவர்.
அமரேஷின் இந்த முயற்சி சமூக வலைதளங்களில் பாராட்டுக்களைப் பெற்றுவர, சுப்ரியா சாஹு ஐ.ஏ.எஸ் 'இவருடைய இந்த முயற்சி மற்ற விவசாயிகளுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும். இவர் ஒரு கேம் சேன்ஜர்' என்று தன்னுடைய ட்விட்டரில் பாராட்டியிருக்கிறார்.
Update:
பீகாரைச் சேர்ந்த அம்ரேஷ் சிங் என்பவர் தன்னுடைய நிலத்தில் ஹாப் ஷூட் தாவரத்தை பயிர் செய்துள்ளதாக இருக்கும் இந்தச் செய்தியில் இடம்பெற்றிருக்கும் சில தகவல்கள் நம்பகமற்றவை எனத் தெரியவந்துள்ளது. எனவே முழு விவரங்களுக்கு கீழே உள்ள கட்டுரையைப் படிக்கவும். தவறுக்கு வருந்துகிறோம்!