Published:Updated:

திருச்சி: `விவசாயிகள் போராட்டத்தை திசை திருப்புகிறது பா.ஜ.க!' - திடீர் ரயில் மறியலால் பரபரப்பு

விவசாயிகளுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய கட்சியினர்
விவசாயிகளுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய கட்சியினர்

`விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தினால் மத்திய அரசு கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்’ - மனித நேய மக்கள் கட்சியினர்.

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மூன்று வேளாண் சட்டங்களும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமானவை என்றும், இதைக் கண்டித்துப் போராடும் விவசாயிகளின் போராட்டத்தைத் திசை திருப்பும் வேலையில் ஆளும் பா.ஜ.க அரசு இறங்கியிருப்பதாகவும் ஒரு பக்கம் கடுமையான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இந்தச் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, திருச்சியில் ரயில் மறியலில் மனிதநேய மக்கள் கட்சி ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ரயில் மறியல்
ரயில் மறியல்

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக, தமிழ்நாட்டில் பல போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக, நேற்று மாலை திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என மனித நேய மக்கள் கட்சியினர் அறிவித்தனர். அதன் காரணமாக நேற்று மதியம் முதலே கோட்டை ரயில் நிலையம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினரும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி, ரயில் நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவிலிருந்து மாற்றுப் பாதை வழியாக அந்தக் கட்சியினர் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் ரயில் தண்டவாளத்தில் புகுந்து, முழக்கங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காவல்துறையினர், அவர்களைக் கைது செய்வதற்காக நடைமேடையில் ஏற்றி அழைத்து வந்தனர். அவர்கள் நடைமேடையில் நடந்து வந்து கொண்டிருந்தபோது மயிலாடுதுறையிலிருந்து திருச்சி வழியாக, கோவை செல்லும் ஜன சதாப்தி விரைவு ரயில் கோட்டை ரயில் நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்தது.

திருச்சியில் ரயில் மறியல்
திருச்சியில் ரயில் மறியல்

அப்போது நடைமேடையில் நடந்து சென்றுகொண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கண் இமைக்கும் நேரத்துக்குள் தண்டவாளத்தில் குதித்து ரயிலை மறித்தனர். அதையடுத்து சுமார் 10 நிமிடங்கள் அந்த ரயிலை மறித்து, முழக்கங்களை எழுப்பினர். காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, அவர்கள் ரயில் மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர். அதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ரயில் மறியல் காரணமாக சுமார் இருபது நிமிடங்கள் ரயில் தாமதமாகப் புறப்பட்டது. போராட்டத்தால் ரயில் நிலையத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட மனித நேய மக்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளிடம் பேசினோம். ``மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மூன்று சட்டங்களும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமானவை. இதனால் விவசாயிகளுக்குக் கடுமையான பாதிப்புகள் ஏற்படும். நாடு முழுவதும் விவசாயிகள் போராடிவருகிறார்கள். இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்திவருகிறார்கள். மத்திய அரசு உண்மைக்குப் புறம்பான செய்திகளைச் சொல்லி, டெல்லியில் போராடிவரும் விவசாயிகள்மீது அவதூறுகளைத் தூற்றுகிறது.

திருச்சி ரயில் மறியல்
திருச்சி ரயில் மறியல்

விவசாயிகளைப் பிளவுபடுத்தவும் முயல்கிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். 'விவசாயிகள் போர்வையில் போராட்டக்களத்தில் நக்சலைட்டுகள் உள்ளே நுழைந்திருக்கிறார்கள்' என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அப்பட்டமான பொய்யைச் சொல்லியிருக்கிறார். இது உண்மைக்குப் புறம்பானது. இதை அவர் திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்று, இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறுவதற்குப் பிரதமர் மோடி விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். விவசாயிகளைப் பார்த்தால் தீவிரவாதிகளைப் பார்ப்பதுபோல் வேண்டா வெறுப்பாகப் பார்க்கிறது மத்திய அரசு. விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தினால், மத்திய அரசு கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்கவேண்டியிருக்கும்’’ என்று எச்சரித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு