Published:Updated:

ரூ.43,900 முருங்கையில் ஊடுபயிர்... நல்ல வருமானம் தரும் நாட்டுச் சுரைக்காய்!

அறுவடையான சுரைக்காயுடன் அற்புதராஜ்
பிரீமியம் ஸ்டோரி
அறுவடையான சுரைக்காயுடன் அற்புதராஜ்

மகசூல்

ரூ.43,900 முருங்கையில் ஊடுபயிர்... நல்ல வருமானம் தரும் நாட்டுச் சுரைக்காய்!

மகசூல்

Published:Updated:
அறுவடையான சுரைக்காயுடன் அற்புதராஜ்
பிரீமியம் ஸ்டோரி
அறுவடையான சுரைக்காயுடன் அற்புதராஜ்

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது புதியம்புத்தூர். அங்கிருந்து புதுக்கோட்டைச் செல்லும் சாலையில் உள்ளது அற்புதராஜின் முருங்கைத் தோட்டம். காலை வேளையில், சுரைக்காய்களைப் பறித்துக் கொண்டிருந்த அவரைச் சந்தித்து நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும், ``காலை யிலயே வெயிலைப் பார்த்தியளா? என்னா அடி அடிக்குதுன்னு? முதல்ல இந்த மோரைக் குடிங்க” என மோர் கொடுத்து வரவேற்றவர், ``வாங்க உள்ள போவோம்” என, முருங்கைத் தோட்டத்துக்குள் அழைத்துச் சென்றபடியே பேச ஆரம்பித்தார்.

‘‘விவசாயம்தான் பாரம்பர்யத் தொழில். தாத்தா காலத்துல மானாவாரியா பருத்தி, சோளம், கேழ்வரகு, குதிரைவாலி, மிளகாயை யும், இறவையில பாசிப்பயறு, உளுந்தையும் சாகுபடி செஞ்சாங்க. அப்போ ரசாயன உரப் பயன்பாடு கிடையாது. பசுமைப் புரட்சிக்குப் பிறகுதான் அப்பா, முழுக்க ரசாயன உரத்துக்கு மாறினாங்க. ‘எம்.ஏ.சோசியாலஜி’ முடிச்சும் வேற வேலைக்கு முயற்சி செய்யல. அப்பாவுடன் சேர்ந்து விவசாய வேலையைப் பார்க்க ஆரம்பிச்சேன். தினசரி வருமானம் கிடைக்குற மாதிரி செண்டுமல்லி, செவ்வந்தி, கனகாம்பரம், சம்பங்கி, அரளினு பூ வகைகளை ரசாயன உரத்தைப் போட்டுச் சாகுபடி செஞ்சோம். கிணத்துல நீர் மட்டம் குறைஞ்சதும் கறிவேப்பிலை சாகுபடிக்கு மாறினோம்.

கறிவேப்பிலைல அதிகமான பூச்சித் தாக்குதல் இருந்ததுனால, கையில கிடைச்ச ரசாயன உரத்தையும், ரசாயன பூச்சிக்கொல்லி மருந்தையும் பயன்படுத்த ஆரம்பிச்சோம். கறிவேப்பிலை போட்ட அடுத்த வருஷமே மண் இறுகலா மாறிடுச்சு. பெருசா வருமானமும் இல்ல. விவசாயத்தை விட்டுடக் கூடாதேன்னு பேருக்குச் செஞ்சுகிட்டு வந்தோம்.

அறுவடையான சுரைக்காயுடன் அற்புதராஜ்
அறுவடையான சுரைக்காயுடன் அற்புதராஜ்

2014-ம் வருஷம், நண்பர் ஒருவர் மூலமாத்தான் எனக்குப் பசுமை விகடன் அறிமுகமாச்சு. அதுல விவசாயிகளோட மகசூல் கட்டுரைகள்ல சாகுபடி நுட்பங்களை உன்னிப்பா கவனிச்சேன். தொடர்ந்து படிச்சப்போ அதுல, வருஷக் கணக்குல ரசாயன உரம் போட்டு விவசாயம் செஞ்ச மலட்டு மண்ணை எப்படி வளமா மாத்தலாங் கிறதைப் பத்தி ஒரு விவசாயியோட அனுபவத்தைப் படிச்சேன். அந்த விவசாயி சொன்ன மாதிரியே, பல தானிய விதைப்பு விதைச்சும், மட்கிய தொழுவுரத்தைப் போட்டும் மண்ணை வளப்படுத்தினேன். ரசாயன உரமே போடாம இயற்கை முறையில சாகுபடி செய்யலாங்கிறத படிச்சதும் எனக்கு நம்பிக்கை வந்துச்சு.

நாடான் ரக வாழையை ஒரு ஏக்கர்ல சாகுபடி செஞ்சேன். முதல் முறை காய்களோட திரட்சி சுமாராத்தான் இருந்துச்சு. ரெண்டாவது வருஷம் நல்ல மகசூல் கிடைச்சது. தொடர்ந்து நாட்டு ரகப் பப்பாளி, முருங்கைச் சாகுபடி செஞ்சேன். முருங்கையைக் கவாத்து செஞ்சா அடுத்ததா காய்ப்புக்கு வர குறைஞ்சது 5 மாசமாவது ஆகும். அந்த 5 மாசம் நிலத்தை அப்படியே போட்டா களைகள் வளர்ந்திடும். அதுமட்டுமல்லாம, அந்த நேரத்துல வருமானம் இல்லாம என்ன செய்யுறதுன்னு ஒரு கேள்வி எழுந்துச்சு. ஊடுபயிர் போட்டுட்டா களையும் வராது, உபரி வருமானமும் கிடைக்கும். ‘நெல்லுக்குப் பாயும் நீர் ஆங்கே புல்லுக்கும் பாயுமாம்’னு சொல்லுற மாதிரி, முருங்கைக்குப் பாய்ச்சுற தண்ணியே ஊடுபயிருக்கும் போதும். தனியா எந்தப் பராமரிப்பும் செய்ய வேண்டியதில்லன்னு எங்க ஊர், மரியராஜுங்கிற விவசாயி சொன்னார். அதை நான் கடைப்பிடிக்க ஆரம்பிச்சேன்.

சுரைக்காய் அறுவடையில்
சுரைக்காய் அறுவடையில்

தொடர்ந்து 6 வருஷமா சுரை, புடலை, பீர்க்கு, வெண் பூசணி, வெள்ளரியைச் சாகுபடி செஞ்சேன். அதுல நாட்டுச் சுரைக்கு நல்ல வரவேற்பும் தேவையும் இருந்ததுனால கடந்த 3 வருஷமா முருங்கைக்கு ஊடுபயிரா நாட்டுச் சுரையைச் சாகுபடி செஞ்சுட்டு வர்றேன். இது மொத்தம் 4 ஏக்கர் கரிசல் நிலம். இதுல 3 ஏக்கர்ல யாழ்ப்பாணம் முருங்கை கவாத்து செஞ்ச நிலையில இருக்கு. ஒரு ஏக்கர்ல தீவனச் சோளம் இருக்கு. முருங்கைக்கு ஊடுபயிரா ஒரு ஏக்கர் நாட்டுச்சுரை அறுவடையில இருக்கு” என்றவர், விற்பனை மற்றும் வருமானம் குறித்துப் பேசினார்.

‘‘நாட்டுச்சுரையைப் பொறுத்தவரைக்கும் நல்ல வரவேற்பு இருக்கு. நான் ஒருத்தனே எல்லா வேலையும் பார்க்குறதுனால ஒரு ஏக்கர்லதான் ஊடுபயிர் போட முடிஞ்சது. வெள்ளைப் பூசணி மாதிரி உருண்டையா இருக்குற சுரை, நீளச் சுரையையும் சாகுபடி செஞ்சிருக்கேன். போன வருஷத்தைவிட இந்த வருஷம் நல்ல காய்ப்பு இருக்கு. வாரத்துக்கு ரெண்டு தடவைப் பறிக்கிறேன். உள்ளூர்ல இருக்க ரெண்டு கடைகள்லயும், தூத்துக்குடியில இருக்க இயற்கை அங்காடியிலயும், தூத்துக்குடி புது ‘பஸ் ஸ்டாண்டு’ பக்கத்துல இருக்கக் கூட்டுறவுத் துறையின் பண்ணை பசுமைக் காய்கறி அங்காடியிலயும்தான் விற்பனை செய்யுறேன். விற்பனையைப் பொறுத்த வரைக்கும் எந்தப் பிரச்னையும் இல்ல.

சுரைக்காய்
சுரைக்காய்

போன வருஷம் 3,312 கிலோ காய் கிடைச்சது. குறைஞ்சபட்சம் 10 ரூபாய்ல இருந்து அதிகபட்சமா 21 ரூபாய் வரைக்கும் விலை போச்சு. செவ்வாய், வெள்ளிக் கிழமை, முக்கியமான நாள்கள்ல 15 ரூபாய்க்குக் குறையாம விலை போகும். 3,312 கிலோ விற்பனை மூலமா 43,944 ரூபாய் வருமானமாக் கிடைச்சது. இதுல குழி எடுத்ததுல இருந்து அறுவடை வரைக்கும் 8,700 வரை செலவாச்சது. மீதமுள்ள 35,244 லாபம்தான்.

அட்டவணை
அட்டவணை


ஒரு காய் குறைஞ்சபட்சம் ஒன்றரை கிலோவுல இருந்து அதிகபட்சம் 3 கிலோ வரைக்கும் எடை இருக்கும். 8 நாள்வரைக்கும் இருப்பு வைக்கலாம். இயற்கை முறையில விளைய வச்சதுங்கிறதுனால ஒரு கிலோ வுக்கு, சந்தை விலையைவிட 2 ரூபாய் கூடுதலாத் தருவாங்க. அந்த 2 ரூபாதான் என்னோட இயற்கை விவசாயத்துக்கான சின்ன அங்கீகாரம்” எனச் சிரித்தபடியே விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, அற்புதராஜ்,

செல்போன்: 94439 79721.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

ஒரு ஏக்கரில் முருங்கை மற்றும் ஊடுபயிராக நாட்டுச்சுரைக்காய் சாகுபடி செய்வது குறித்து அற்புதராஜ் கூறிய தகவல்கள் பாடமாக இங்கே...

முருங்கைச் சாகுபடிக்குச் செம்மண், கரிசல் மண் ஏற்றது. பட்டம் எதுவுமில்லை. மழைக்கு முன்பாக நடவு செய்ய வேண்டும். தேர்வு செய்த நிலத்தில், ஒரு வாரம் இடைவெளியில் இரண்டு முறை உழவு செய்ய வேண்டும். வரிசைக்கு வரிசை 20 அடி இடைவெளியில், ஒன்றரை அடி ஆழத்தில் குழிகள் எடுக்க வேண்டும். இந்தக் கணக்கில் ஒரு ஏக்கரில் 100 குழிகள் வரை எடுக்கலாம். குழிகளை 4 நாள்கள் ஆற விட்டு, ஒரு குழிக்கு 25 கிலோ மட்கியத் தொழுவுரத்தைப் போட்டு, முருங்கைப் போத்துகளைஅரை அடி ஆழத்தில் நடவு செய்ய வேண்டும்.

முருங்கையில் ஊடுபயிராக சுரைக்காய்ச் சாகுபடி
முருங்கையில் ஊடுபயிராக சுரைக்காய்ச் சாகுபடி

குழிக்குள் 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கு போட்டால் வேர்ப்பகுதியைப் பூச்சிகள் தாக்காமல் தடுக்கலாம். குச்சியை நட்டு, மண் அணைத்து அன்றே தண்ணீர் விட வேண்டும். நடவு செய்யப்படும் குச்சிகள் கை மணிக்கட்டு தடிமன் சுற்றளவில், இரண்டரை அடி உயரத்தில் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் வளர்ச்சி வேகமாக இருக்கும். அதிக காய்ப்பு, காய்கள் திரட்சியின் அடிப்படையில் தாய் மரத்தைத் தேர்வு செய்து குச்சிகளைச் சேகரித்துக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால், நடவுக்கு முன்பு குச்சியின் முனையை ஜீவாமிர்தத்தில் முக்கி எடுத்து நடலாம்.

குச்சிகளில் முளைத்த இலைகளில் இலைப்புழு தாக்குதல் இருக்கும். இதைத்தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10-ம் நாளில் 10 லிட்டர் தண்ணீரில் இஞ்சி, பூண்டு, மிளகாய்க்கரைசல் 150 மி.லி கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். இரண்டு நாள்கள் இடைவெளிவிட்டு, மூன்று முறை இப்படித் தெளிக்க வேண்டும். பிறகு, தாக்குதல் தெரிந்தால் இதைப் போன்று செய்யலாம். 20-ம் நாளிலிருந்து 15 நாள்களுக்கு ஒருமுறை ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசன நீருடன் கலந்து விடலாம்.

3-ம் மாதத்தில் தூர்ப்பகுதியில் 10 கிலோ மட்கிய தொழுவுரத்தை அடியுரமாக வைக்க வேண்டும். தொடர்ந்து 6 மாதத்துக்கு ஒரு முறை இவ்வாறு தொழுவுரத்தை அடியுரமாக வைக்க வேண்டும். 90-ம் நாளுக்கு மேல் பூ பூக்கத் தொடங்கும். 120 முதல் 130-ம் நாளில் காய் பறிக்கலாம். முருங்கையைப் பொறுத்தவரையில், பூ பூக்கும் நேரம், மழைக்காலம், மேகமூட்டம் ஆகிய காலத்தில் நூற்புழுக்களின் தாக்குதல் இருக்கும். இவை, இலை, பூ, காம்புகளைச் சாப்பிடும். இதைத் தவிர்க்க பூ பூப்பதற்கு முன்பாகவே 10 லிட்டர் தண்ணீரில் 150 மி.லி மூலிகைப் பூச்சிவிரட்டி அல்லது இஞ்சி, பூண்டு, மிளகாய்க்கரைசலை கலந்து கைத் தெளிப்பானால் தெளிக்கலாம். இரண்டாம் வருடத்திலிருந்துதான் காய்ப்பு அதிகரிக்கும். ஆண்டுக்கு 7 முதல் 8 மாதங்கள் வரை காய்கள் பறிக்கலாம். அதிகமாக மழை பெய்யும் நேரத்தில் காய்ப்பு இருக்காது. 3 மாதங்களுக்கு ஒருமுறை களை எடுக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறையில் கவாத்துச் செய்து வந்தால் காய்ப்பு தொடர்ந்து இருக்கும்.

சுரைக்காய்
சுரைக்காய்

கவாத்து செய்யும் நேரத்தில் ஊடுபயிர் சாகுபடி செய்யலாம். முருங்கைக்கு இடையில் ஒன்றரை அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். குழிகளை ஒருவாரம் காய விட வேண்டும். பிறகு, குழிக்குள் 20 கிலோ மட்கிய சாணத்தைப் போட வேண்டும். இரண்டு நாள்களுக்குப் பிறகு, சுரைக்காய் விதையை ஊன்றலாம். ஒரு குழியில் 8 விதைகள் ஊன்ற வேண்டும். ஊன்றுவதற்கு முன்பு பஞ்சகவ்யாவில் விதைநேர்த்தி செய்வது நல்லது. விதைத்த அன்று நீர் பாசனம் செய்ய வேண்டும். 5 முதல் 7 நாளில் முளைப்பு தெரியும். பிறகு, ஈரப்பதத்துக்குத் தகுந்தபடி தண்ணீர் பாய்ச்சி வந்தால் போதும்.

30-ம் நாளில் 5 லிட்டர் தண்ணீரில் 150 மி.லி பஞ்சகவ்யா கலந்து ஒவ்வொரு குழியிலும் கொடியின் தூரைச்சுற்றி ஊற்ற வேண்டும். 50-ம் நாளில் 100 லிட்டர் தண்ணீரில் 20 கிலோ கடலைப் பிண்ணாக்கு, 5 கிலோ வேப்பம் பிண்ணாக்கைக் கரைத்து, ஒரு செடிக்கு 2 லிட்டர் வீதம் தூரைச் சுற்றி ஊற்ற வேண்டும். 55 முதல் 60 நாளில் கொடி வீசத் தொடங்கும். 70 முதல் 75-ம் நாளில் பூ பூக்கும். அந்த நேரத்தில் 200 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் மீன் அமிலம் கலந்து பாசன நீருடன் கலந்து விட வேண்டும். 80-ம் நாளுக்கு மேல் காய் காய்க்கத் தொடங்கும்.

அப்போது காய்ப்புழு தாக்குதல் இருக்கும். அதைத் தவிர்க்க வசம்பு-வேப்ப எண்ணெய்க் கரைசலைக் கலந்து கைத் தெளிப்பானால் தெளிக்க வேண்டும். (10 லிட்டர் தண்ணீரில் 50 கிராம் வசம்புத்தூள், 25 மி.லி வேப்ப எண்ணெய், 5 மி.லி காதிசோப் கரைசல் கலந்தால் வசம்பு-வேப்ப எண்ணெய்க் கரைசல் தயார்) 90-ம் நாளுக்கு மேல் அறுவடையைத் தொடங்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism