Published:Updated:

கீழ்பவானி வாய்க்கால் உடைப்பு; தண்ணீரின்றி காயும் 50,000 ஏக்கர் விவசாய நிலங்கள்; கவலையில் விவசாயிகள்!

வாய்க்கால் உடைப்பு அகற்றப்பட்டு சீரமைக்கும் பணி தீவிரம்.

பவானிசாகர் அணையிருந்து, தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டு வாய்க்கால் சீரமைப்புப் பணியில் கடந்த இரு தினங்களாக பகல், இரவு நேரத்திலும் தொடர்ந்து பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கீழ்பவானி வாய்க்கால் உடைப்பு; தண்ணீரின்றி காயும் 50,000 ஏக்கர் விவசாய நிலங்கள்; கவலையில் விவசாயிகள்!

பவானிசாகர் அணையிருந்து, தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டு வாய்க்கால் சீரமைப்புப் பணியில் கடந்த இரு தினங்களாக பகல், இரவு நேரத்திலும் தொடர்ந்து பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Published:Updated:
வாய்க்கால் உடைப்பு அகற்றப்பட்டு சீரமைக்கும் பணி தீவிரம்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்குள்பட்ட 1,03,500 ஏக்கர் நன்செய் நிலங்களின் பாசனத்துக்காக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு டிசம்பர் இறுதியில் நிறுத்தப்படும். நடப்பாண்டில் அணையில் நீர் இருப்பு கூடுதலாக இருந்ததால் முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயப் பணிகள் சுறுசுறுப்படைந்தன. டெல்டா பாசனத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அதிக நெல் விளையக்கூடிய மாவட்டமாக கீழ்பவானி பாசனம் விளங்குகிறது.

தண்ணீர் திறப்பில்லாததால் வறண்டுபோன வாய்க்கால்.
தண்ணீர் திறப்பில்லாததால் வறண்டுபோன வாய்க்கால்.

ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயனடையும் கீழ்பவானி வாய்க்காலில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. அக்டோபர் 31-ம் தேதி கீழ்பவானி வாய்க்காலின் 6-வது மைல் பகுதியான செண்பகபுதூர் அருகே மாரனூர், தங்க நகரம் பகுதியில் இருந்து செல்லும் கிளைவாய்க்காலின் மதகு உடைந்ததால் கிளை வாய்க்காலின் வழியே தண்ணீர் வீணாக வெளியேறியது.

மேலும் கீழ்பவானி பிரதான பாலத்திலும் பெரிய ஓட்டை ஏற்பட்டதால் பவானிசாகர் அணையிலிருந்து, வாய்க்காலில் தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டு வாய்க்கால் சீரமைப்புப் பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட்டன. கடந்த இரு தினங்களாக பகல், இரவு நேரத்திலும் தொடர்ந்து வாய்க்கால் உடைப்பை சீரமைக்கும் பணியில் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பணிகளை பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் கௌதமன், மேற்பார்வை பொறியாளர் கண்ணன் முன்னிலையில் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதால் கீழ்பவானி பாசனப் பகுதிகளில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.

கே.சி.ரத்தினசாமி
கே.சி.ரத்தினசாமி

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.சி.ரத்தினசாமி கூறியது, ``கீழ்பவானி பாசனப் பகுதியில் நடப்பாண்டில் சுமார் 50,000 ஏக்கர் நிலங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் நாற்று நடவு இப்போதுதான் முடிந்துள்ளது. கடைமடைப் பகுதிகளான மங்களப்பட்டி, முத்தூர், அரவக்குறிச்சி போன்ற பகுதிகளில் நடவு முடிந்து ஒரு சில நாள்கள்தான் ஆகிறது. நாற்று விட்ட 1 மாதத்துக்கு கட்டாயம் வயலில் தண்ணீர் தேங்கி நின்றாக வேண்டும். இந்தச் சமயத்தில் வாய்க்கால் உடைந்திருப்பது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பொதுப்பணித்துறையினர் வாய்க்கால் உடைப்பை விரைந்து சீரமைத்துத் தர வேண்டும்" என்றார்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது,
``கிளை வாய்க்காலுக்குச் செல்லும் மதகு உடைந்ததால் உடனடியாக அணையிலிருந்து தண்ணீரை நிறுத்திவிட்டு மதகுகளையும் பாலத்தையும் சீரமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளோம்.

கீழ்பவானி வாய்க்கால் கரையில் ஏற்பட்ட உடைப்பு
கீழ்பவானி வாய்க்கால் கரையில் ஏற்பட்ட உடைப்பு

பாலம் அமைக்கும் பணியும், மதகு சீரமைக்கும் பணியும் பொதுப்பணித் துறையின் அவசர நிதியிலிருந்து செய்து வருகிறோம். பாசனத்துக்கு விரைவாகத் தண்ணீர் தர வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு பொக்லைன் இயந்திரம், 25-க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் இரவும், பகலும் வாய்க்கால் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இன்னும் 1 வாரத்தில் இப்பணிகளை முடிக்கத் திட்டமிட்டு பணிகளை வேகமாகச் செய்து வருகிறோம்.
பாசனத்துக்கு விரைவில் தண்ணீர் திறக்க வேண்டும் என்பதற்காக அவசரகதியில் பணியை முடிக்க முடியாது. பாலத்தின் கட்டுமானப் பணியையும், மதகுகளின் சீரமைப்புப் பணியையும் தரமாகச் செய்வது அவசியமாகிறது. எனவே, அதற்கான கால அவகாசம் தேவைப்படுகிறது. முடிந்த வரையிலும் விரைவாகப் பணிகளை முடித்துவிடுவோம்" என்றனர்.