நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

30 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டெடுத்த வெண்சாமரச் சோளம்!

வெண்சாமரச் சோள வயலில் நல்லப்பன்
பிரீமியம் ஸ்டோரி
News
வெண்சாமரச் சோள வயலில் நல்லப்பன்

முத்தான சோளம்... சத்தான தட்டை!

மகசூல்

‘மானாவாரி விவசாயிகள் பணப் பயிர்களைக் கைவிட்டுட்டு, முன்னோர்கள் சாகுபடி செஞ்ச சிறுதானியங்களைக் கையில் எடுக்கணும்’ என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் தொடர்ந்து வலியுறுத்திவந்தார். அவைதான் விவசாயிகளைத் தற்சார்போடு வாழவைக்கும் எனச் சான்றுகளோடு வழிகாட்டினார். அவரின் கருத்துப்படி சிறுதானியங்களை மீட்டெடுத்து, பரவலாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலூகா, பேரளி கிராமத்தைச் சேர்ந்த இளம் விவசாயி நல்லப்பன்.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் பரவலாகச் சாகுபடி செய்யப்பட்டு, காலப்போக்கில் கைவிடப்பட்ட வெண்சாமரச் சோளத்தை மீண்டும் மீட்டெடுத்து சாகுபடி செய்திருக்கிறார். வெண்சாமரச் சோளத்தைப் பார்க்கும் ஆவலில் அவரைச் சந்திக்கச் சென்றோம்.

இருங்குச்சோள வயல்
இருங்குச்சோள வயல்

எட்டடிக்கு மேல் உயரமாக வளர்ந்திருந்த வெண்சாமரச் சோளப் பயிர்கள், காற்றில் அசைந்தாடி நம்மை வரவேற்றன. பயிர்களுக்குள் உலவிக்கொண்டிருந்த நல்லப்பன் உற்சாகமாக வரவேற்றார்.

“இந்தக் கதிர்களைப் பாருங்க. நல்லா வாளிப்பா சிலிர்த்துக்கிட்டு இருக்கு. முழுமையா பால் புடிச்சி, கதிர்கள் முற்ற ஆரம்பிச்சிருக்கு. இப்பவே கதிர்கள் வெள்ளை நிறத்துலதான் இருக்கு. இன்னும் முழுமையா முதிர்ச்சி அடைஞ்சு, அறுவடை நேரத்துல இன்னும் நல்லா வெள்ளை நிறத்துல மாறிடும். `மன்னர்களுக்கு வீசக்கூடிய வெண்சாமரம் மாதிரி இந்தக் கதிர்கள் இருக்குறதுனாலதான் இதுக்கு `வெண்சாமரச் சோளம்’னு பேர் வந்துச்சு’ன்னு பெரியவங்க சொல்றாங்க” என்று பெயர் விளக்கம் தந்தவர், தொடர்ந்து அவரைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

‘‘விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். எம்.சி.ஏ படிச்சிட்டு, பெங்களூருல மென்பொருள் நிறுவனத்துல வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். எங்க மாமா மூலமா பசுமை விகடனும், நம்மாழ்வார் கருத்துகளும் அறிமுகமாச்சு. அவை எனக்குள்ள தாக்கத்தை ஏற்படுத்த, ஒரு கட்டத்துல சொந்த ஊருக்கே வந்து இயற்கை விவசாயம் செய்ய முடிவெடுத்தேன். ‘சிறுதானியங்கள்தான் மானாவாரி விவசாயிகளை மகிழ்ச்சியா வாழவைக்கும். இதுக்கு தண்ணி அதிகம் தேவையில்லை. விதைக்காகவோ, விளைஞ்ச பொருள்களை விற்பனை செய்யவோ கம்பெனிக்காரங்களை நம்பியிருக்க வேண்டியதில்லை. வறட்சியா இருந்தாலும் சிறுதானியங்கள் தாக்குப்பிடிச்சு வளர்ந்துடும். ஒருவேளை கடுமையான வறட்சி ஏற்பட்டு, விளைச்சலே இல்லைன்னாக்கூட, சிறுதானியக் கதிரும் வைக்கோலும் கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படும். இதுக்கு இடுபொருள்கள் செலவு இல்லாததால, நஷ்டம்கிற பேச்சுக்கே இடமில்லை. விவசாயிகள் சத்தான உணவு சாப்பிட்டு ஆரோக்கியமா, தற்சார்போடு வாழ சிறுதானியங்கள் உறுதுணையா இருக்கும்’னு நம்மாழ்வார் ஐயா சொல்வாங்க. அது எப்பவும் எனக்குள்ள கேட்டுக்கிட்டே இருக்கும். நாலு வருஷமா வரகு, பனிவரகு, இருங்குச்சோளம் சாகுபடி செஞ்சிக்கிட்டு இருக்கேன். ஐயா, சொன்ன மகத்துவங்களைக் கண்கூடாகப் பார்த்துகிட்டு இருக்கேன்.

வரகுப் பயிர்
வரகுப் பயிர்

எங்களுக்கு அஞ்சு ஏக்கர் நிலம் இருக்கு. முழுசா இன்னும் சிறுதானியத்துக்கு மாற முடியலை. அப்பா, அம்மா தயங்குறாங்க. 2016-ம் வருஷம் ரெண்டு ஏக்கர்ல பனிவரகைச் சாகுபடி செஞ்சேன். அப்பா மூணு ஏக்கர்ல ரசாயன முறையில மக்காச்சோளம் பயிர் செஞ்சிருந்தார். அந்த வருஷம் கடுமையான வறட்சி. மழையே இல்லை. மக்காச்சோளம் காய ஆரம்பிச்சது. செலவு செஞ்சதுக்குக்கூட மகசூல் கிடைக்கலை. ஆனா பனிவரகு, பனி ஈரத்துலயே விளைஞ்சு ரெண்டு ஏக்கர்ல 600 கிலோ மகசூல் கொடுத்தது. அதை விதையா விற்பனை செஞ்சேன். கிலோவுக்கு 60 ரூபாய் வீதம் 36 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சது. ஒரு டன் வைக்கோல் கிடைச்சது. அதோட மதிப்பு 10 ஆயிரம் ரூபாய். மொத்தம் 46 ஆயிரம் ரூபாய் வருமானம். இடுபொருள்களுக்குனு தனியா எந்தச் செலவும் கிடையாது. உழவு, விதை, களையெடுப்புக்குனு மொத்தமே ஏழாயிரம் ரூபாய்தான் செலவு செஞ்சிருந்தேன். 39 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைச்சுது.

நாலு வருஷமா, வரகு, பனிவரகு, இருங்குச் சோளம் சாகுபடி செஞ்சிக்கிட்டு இருக்கேன். செந்துறையில் இருந்த ஒரு விவசாயி மூலமா 5 கிலோ வெண்சாமரச் சோள விதை கிடைச்சுது.

போன வருஷம் படைப்புழு தாக்கி மக்காச்சோளத்துல கடுமையான மகசூல் இழப்பு. ஏக்கருக்கு 7-8 மூட்டைதான் கிடைச்சுது. 15-20 மூட்டை மகசூல் கிடைச்சாதான் ஓரளவுக்காவது லாபம் கிடைக்கும். படைப்புழுவைக் கட்டுப்படுத்த, வழக்கத்தைவிடக் கூடுதலா பூச்சிமருந்துக்குச் செலவு செஞ்சதுனால மக்காச்சோளம் சாகுபடி செஞ்சிருந்த விவசாயிகள் எல்லாருக்குமே நஷ்டம்.

வெண்சாமரச் சோள வயலில் நல்லப்பன்
வெண்சாமரச் சோள வயலில் நல்லப்பன்

நான் 33 சென்ட்ல வரகுச் சாகுபடி செஞ்சிருந்தேன். அதுல நாவாய் பூச்சித்தாக்குதல் ஏற்பட்டது. ஆனா அடுத்த ரெண்டு நாள்கள்லயே ஓணான் அதைப் புடிச்சி சாப்பிட்டுக் கட்டுப்படுத்திடுச்சி. வேற எந்தப் பூச்சி நோய்த்தாக்குதலும் ஏற்படலை. 510 கிலோ மகசூல் கிடைச்சுது. கிலோ 26 ரூபாய்னு விற்பனை செஞ்சதுல 13 ஆயிரம் ரூபாய்க்கு மேல வருமானம் கிடைச்சது. 500 கிலோ வைக்கோல் மாட்டுக்குத் தீவனமாகக் கிடைச்சது. எங்ககிட்ட மூணு மாடுக இருக்கு. சிறுதானியத் தீவனம் கொடுத்தால், மாடுகள் அதிகமா பால் கொடுக்கும். நோய் நொடி இல்லாம ஆரோக்கியமா வளரும். இந்த வருஷம் தலா அரை ஏக்கர்ல வெண்சாமரச் சோளம், இருங்குச் சோளம், 60 சென்ட்ல பனிவரகு, 70 சென்ட்ல வரகுச் சாகுபடி செஞ்சிருக்கேன்” என்றவர், வெண்சாமரச் சோளச் சாகுபடி அனுபவம் குறித்து விவரிக்கத் தொடங்கினார்.

வீட்டிலேயே பொரி செய்யலாம்!

‘பசுமைப் புரட்சிக்கு முன்னாடி இங்கே சுற்றுவட்டாரம் முழுக்க வெண்சாமரச் சோளம் சாகுபடி செஞ்சிருக்காங்க. ஒவ்வொரு கதிர்ல இருந்தும் 1 கிலோ வரைக்கும் தானியம் கிடைச்சதா பெரியவங்க சொல்றாங்க. இது பொரிக்குப் பயன்படுத்த அருமையா இருக்கும். வீடுகள்லயே பொரி செஞ்சு சாப்பிட்டுருக்காங்க. `சட்டியைச் சூடேத்தி, கொஞ்சமா சோளம் போட்டாலே நிறைய பொரி கிடைக்கும்’னு சொல்றாங்க. கொழுக்கட்டை, புட்டு, தோசை, குழிப்பணியாரம், பொங்கல் எல்லாம் செஞ்சு சாப்பிட்டிருக்காங்க. இதுல சத்துகள் அதிகம். உடம்புக்கு நல்ல வலிமையைக் கொடுக்கக்கூடியது. இதைப் பத்தி நான் பல வருஷங்களுக்கு முன்னாடியே நிறைய கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, வெண்சாமரச் சோளப் பயிர்களை எங்கேயுமே பார்க்க முடியலை. இதை எப்படியாவது மறுபடியும் சாகுபடி செஞ்சே ஆகணும்னு தீவிரமான விதைத் தேடுதல்ல இறங்கினேன். ரெண்டு வருஷம் தேடினதுல செந்துறையில் இருந்த ஒரு விவசாயி மூலமா அஞ்சு கிலோ வெண்சாமரச் சோள விதை கிடைச்சது. விதை பரவலுக்காக ரெண்டு கிலோ விதையை மத்த விவசாயிகளுக்குக் கொடுத்துட்டு, மூணு கிலோ விதையை அரை ஏக்கர்ல விதைச்சேன்’’ என்றவர் சாகுபடி முறைகளைச் சொல்லத் தொடங்கினார்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டெடுத்த வெண்சாமரச் சோளம்!

பூச்சித்தாக்குதலே இல்லை!

அரை ஏக்கர்ல 120 ஆடுகளை 10 நாள்களுக்குக் கிடை போட்டு, உழவு ஓட்டி, விதைச்சேன். மழை ஈரத்துல பயிர் செழிப்பா வளர்ந்துச்சு. 30-ம் நாள் களையெடுத்தேன். எந்த ஒரு இடு்பொருளுமே கொடுக்கலை. வழக்கமா சோளத்துல வரக்கூடிய குருத்துப்பூச்சித் தாக்குதல்கூட இதுல இல்லை. சுற்றுவட்டார நிலங்கள்ல மக்காச்சோளத்துல படைப்புழு தாக்குதல் இருந்தது. ஆனா, என்னோட வயல்ல அது மாதிரியான பாதிப்பு கொஞ்சம்கூட ஏற்படலை. கதிர்கள்ல பால் பிடிக்கும் தறுவாயில தொடர்ந்து ஐந்து நாள்கள் மழை பெய்ஞ்சதுனால சில கதிர்கள்ல மட்டும் தேன் ஒழுகல் பாதிப்பு ஏற்பட்டுச்சு. பிறகு தானாகவே சரியாகிடுச்சு. தண்டுப்பகுதியில நீர்ச்சத்து அதிகமா இருக்கு. தண்டு நல்லா திடகாத்திரமா இருக்குறதுனால சூரைக்காற்று, கனமழைக்கும் தாக்குப்புடிச்சி வளருது. இப்ப 90 நாள்கள் ஆகுது. 110-120 நாள்கள்ல கதிர் முத்தி அறுவடைக்கு வந்துடும்.

சத்தான தட்டை

‘அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு’ங்குற பழமொழியை நம்மாழ்வார் அடிக்கடி சொல்வார். இது வெண்சாமரச் சோளத்துக்கு ரொம்பப் பொருத்தமா இருக்கு. சோளக்கதிர்களை அறுவடை செஞ்ச பிறகு, நடுப்பகுதித் தட்டையை மாட்டுக்குத் தீவனமாகக் கொடுத்துடலாம். எட்டடி உயரத்துக்குப் பயிர் வளர்ந்திருக்கறதுனால, 500-750 கிலோ தட்டை கிடைக்கும். இதுல கால்சியம், சிலிக்கான், புரதச்சத்து அதிகமா இருக்கு. இதைக் கொடுத்தா மாடுகள் அதிகமா பால் கொடுக்கும். நோய் நொடி இல்லாம ஆரோக்கியமா வளரும். அரை ஏக்கர்ல குறைந்தபட்சம் 250 கிலோ தானியம் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன்.

‘‘வெண்சாமரச் சோளக் கதிர்ல இருந்து 1 கிலோ வரைக்கும் தானியம் கிடைச்சதா பெரியவங்க சொல்றாங்க.’’

இப்பவே பல விவசாயிகள் விதைக்குச் சொல்லிவெச்சிருக்காங்க. கிலோ 60 ரூபாய்னு விற்பனை செஞ்சாலே 15 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். தட்டையோட விலை மதிப்பு குறைந்தபட்சம் 6 ஆயிரம் ரூபாய். மொத்தம் 21 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கு’’ என்றவர் நிறைவாக,

‘‘வெண்சாமரச் சோளம் விதைச்சப்பவே ஊடுபயிரா தட்டைப்பயறு விதைச்சிருக்கேன். அதுல 50 கிலோ மகசூல் கிடைக்கும். கிலோவுக்கு 80 ரூபாய் வீதம் நாலாயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுக்கு தனியா எந்தச் செலவும் கிடையாது. ஆக மொத்தம் இந்த அரை ஏக்கர்ல 25 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.

ஆட்டுக்கிடை, உழவு, களையெடுப்பு, அறுவடை, தானியம் பிரித்தெடுக்கும் செலவு போக, 18 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். இதுல எனக்கு வருமான நோக்கம் கிடையாது. வெண்சாமரச் சோளத்தை மீட்டெடுத்து பரவலாக்கணுங்கறதுதான் என் நோக்கம். அதே நேரத்துல இதைச் சும்மா கொடுத்தா மதிப்பு இருக்காது. ஓரளவுக்கு லாபகரமான விலைக்கு விற்பனை செஞ்சாதான், மற்ற விவசாயிகள் இதுமேல நம்பிக்கைவெச்சு சாகுபடி செய்வாங்க” என்று சொல்லி விடைகொடுத்தார் உற்சாகத்துடன்.

தொடர்புக்கு, நல்லப்பன், செல்போன்: 98802 02754.

பல்லுயிர்ப்பெருக்கம்

‘‘வரகுச் சாகுபடி செஞ்சோம்னா, அறுவடை நேரத்துல பறவைகள் தொல்லை இருக்காது. தானியத்தோட வெளிப்புறத்துல ஏழு அடுக்கு தோல் இருக்கும். உறுதியா இருக்குறதுனால பறவைகளால் சாப்பிட முடியாது. ஆனா, எலித் தொல்லை அதிகமா இருக்கும்.

போன வருஷம் அறுவடை நேரத்துல என்னோட வரகு நிலத்துல எலிகள் வந்துடுச்சு. அதையெல்லாம் பிடிச்சு சாப்பிடப் பாம்புகள் வந்துடுச்சு. எலிப் பொந்துக்குள்ள பாம்புத்தோல் இருந்ததைப் பார்த்துதான் அதை நாங்க உறுதிப்படுத்தினோம். பாம்புகளைப் பிடிக்க மயில்கள் வந்துச்சு. மொத்தத்துல பல்லுயிர்ப்பெருக்கம் சிக்கல் இல்லாமல் எங்க வயல்ல நடக்குது” என்கிறார் நல்லப்பன்.

இயற்கை உழவர் அங்காடி

‘‘விவசாயிகளுக்கு சந்தை வாய்ப்பு ரொம்ப அவசியம். அதை அவர்களே உருவாக்கிக்கணும்’ என்று நம்மாழ்வார் சொல்வார். இயற்கை விவசாயிகளுக்கு சந்தை வாய்ப்பை உருவாக்குறதுக்காகவும், சிறுதானியங்களை விவசாயிகளிடம் பரவலாகக் கொண்டு போறதுக்காகவும் பெரம்பலூர்ல, `தாய்மண் இயற்கை உழவர் அங்காடி’ங்கற பேர்ல ஒரு கடை வெச்சிருக்கோம்.

வெளியூர்கள்ல இருந்து மற்ற விவசாயிகள்கிட்ட சிறுதானியங்கள், விதைகளை வாங்கி எங்க பகுதி விவசாயிகளுக்குக் கொடுக்கிறோம். எங்க பகுதி விவசாயிகள் சாகுபடி செய்யக்கூடிய சிறுதானியங்களைக் கொள்முதல் செஞ்சு, மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் இடங்களுக்கு அனுப்புறோம். மதிப்புக்கூட்டப்பட்ட சிறுதானியங்களை விலைக்கு வாங்கி, எங்க பகுதியில விற்பனை செய்ய்றோம்” என்றார்.