Published:Updated:

நியாயமான விலை வேண்டும்... கொதிக்கும் கோழிப் பண்ணையாளர்கள்!

கோழிப் பண்ணை
பிரீமியம் ஸ்டோரி
கோழிப் பண்ணை

பிரச்னை

நியாயமான விலை வேண்டும்... கொதிக்கும் கோழிப் பண்ணையாளர்கள்!

பிரச்னை

Published:Updated:
கோழிப் பண்ணை
பிரீமியம் ஸ்டோரி
கோழிப் பண்ணை

சேலம் மாவட்ட கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் நலச்சங்கம் சார்பாகக் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநரிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில், ‘ஒப்பந்தம் மற்றும் வளர்ப்புத் தொகை அடிப்படையில் விவசாய நிலங்களில் அமைக்கப் பட்ட கொட்டகை மூலம் விவசாயிகள், கறிக் கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கோழி வளர்ப்புக்குப் பயன்படுத்தப்படும் தேங்காய் மஞ்சு, கரிமூட்டை போன்ற இடுபொருள்கள் விலை மிகவும் அதிகரித்துள்ளது. எங்களுக்குப் போதிய வருவாய் கிடைத்தால் மட்டுமே இதை ஈடுகட்ட முடியும். ஆனால், ஒப்பந்தம் செய்திருக்கும் தனியார் நிறுவனங்களின் முறைப்படுத்தப்படாத குறைந்தபட்ச வளர்ப்புத் தொகை, தரமற்ற தீவனம் போன்ற காரணங்களால் விவசாயிகள் பெரும் இன்னல் களைச் சந்தித்து வருகிறோம். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு விவசாயி களுக்கான உரிய தொகையைப் பெற்றுத் தர வேண்டும்’ என வலியுறுத்தியிருந்தனர்.

இதுதொடர்பாக, சேலம் மாவட்ட கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் நலச்சங்கத் தலைவர் ஜெயக்குமாரிடம் பேசினோம். “கறிக்கோழி வளர்ப்பில் ஒப்பந்த நிறுவனங்களைவிட விவசாயிகளுக்குத் தான் பெரிய நஷ்டமாகுது. ஒப்பந்த நிறுவனங்கள், கோழிக் குஞ்சுகளை வளர்க்க கொடுக்குறதோட சரி. அவங்க பங்களிப்பு முடிஞ்சுடுச்சு. குஞ்சுகளை வளர்க்கத் தேவையான தென்னை மஞ்சு, கரி மூட்டை, தீவனம், மருத்துவச் செலவு எல்லாமே விவசாயிங்க தலையிலதான் விழுகுது.

கோழிக் குஞ்சுகளைக் கொடுக்கும் போது தரமில்லாத குஞ்சுகளைக் கொடுத்துட்டுப் போயிடுறாங்க. ஏதாவது, நோய்வாய்பட்டு இறந்தாலோ, நாய், கீரி பிடிச்சுட்டுப் போனாலோ அதுக்கான இழப்பீட்டுத் தொகையை எங்க கிட்டயிருந்து வாங்கிக் கிறாங்க. அதுவும் ரெண்டு வருஷமா விலைவாசி கடுமையா உயர்ந்திருக்கு. ஒரு விவசாயி இதைச் சமாளிக்க, போதுமான வளர்ப்புத்தொகையை ஒப்பந்த நிறுவனங்கள் கொடுத்தா மட்டுமே முடியும். ஆனா, எந்தவொரு தனியார் ஒப்பந்த நிறுவனங்களும் இதுக்கு முன் வர்றதில்ல. கோழிக்குஞ்சுகளை மட்டும் கொடுத்துட்டு எங்க வருமானத்தையும் சேர்த்து கொள்ளையடிக்குற விதமா கோழிவளர்ப்பு நிறுவனங்கள் செயல்படுது. இது சம்பந்தமா தமிழகக் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர், கலெக்டர், கால்நடைத்துறை அதிகாரிகள் கிட்ட மனு கொடுத்திருக்கோம். பேச்சுவார்த்தைக்குக் கூப்பிடுறோம்னு சொல்லியிருக்காங்க’’ என்றார்.

கோழிப் பண்ணை
கோழிப் பண்ணை

இந்நிலையில் கறிக்கோழி ஒப்பந்ததாரர்கள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்தனர். அதில், ‘‘ஒருங்கிணைப்புத் தொழில்முறையாளர்கள் என்பவர்களும் விவசாயிகள்தான். தொழில் தொடங்க தங்களது சொத்துக்களை அடமானமாக வைத்து வங்கியில் கடன் பெற்று தாய் கோழிப் பண்ணைகள், குஞ்சு பொரிப்பகம், தீவன ஆலை, போக்குவரத்து வாகனங்கள், ஊழியர்கள் சம்பளம் இவை அனைத்தையும் தங்களின் சொந்த செலவிலேயே செய்து வருகின்றனர். இதில் கோழி வளர்க்கும் விவசாயிகளுக்கு எந்தச் செலவினமும் கிடையாது. நிறுவனங்களே குஞ்சுகள், தீவனங்களை அளித்து, தேவையான நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் கால்நடை மருத்துவர்களின் உதவி ஆகிய அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொள்கிறது. வளர்க்கும் விவசாயி ஒருமுறை செலவு செய்து பண்ணை குடில் அமைத்துத் தண்ணீர் வசதி மட்டுமே செய்ய வேண்டும். இதைத் தவிர்த்து வளர்க்கக்கூடிய விவசாயிகளுக்கு வேற எந்தச் செலவுகளும் இல்லை.

மேலும், கோழி வளர்ப்பாளர் களுக்குக் கட்டாயம் ஒப்பந்த முறையில்தான் கோழி வளர்க்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. அவர்கள் கோழிக் குஞ்சுகளை விலைக்கு வாங்கித் தாங்களே வளர்த்து, சந்தைப்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், சட்டபூர்வமாக ஒப்பந்தத்தின் அடிப்படையில் வளர்ப்புத் தொழிலில் இணைந்துவிட்டுத் தற்போது கோழிகளை எடுக்கக் கூடாது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. அது சட்டத்துக்குப் புறம்பான செயலாகும்.

ஜெயக்குமார், அனிதா ராதாகிருஷ்ணன்
ஜெயக்குமார், அனிதா ராதாகிருஷ்ணன்

இது போன்ற நடவடிக்கைகளைத் தூண்டிவிடும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கும் விதத்தில் தகுந்த தகவல் அறிக்கை அளிக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கு கடந்த ஏப்ரல் 29-ம் தேதி நீதிபதி இளந்திரையன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதைப் பரிசீலனை செய்த நீதிபதி மனுவைத் தள்ளுபடி செய்தார்.

இது குறித்து சேலம் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் புருஷோத்தமனிடம் பேசினோம். “கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் அளித்த மனுவை அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம்’’ என்றார்.

இதுதொடர்பாகக் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். “சட்டமன்றம் நடைபெறு வதால் பேச்சுவார்த்தை நடத்த முடியாத சூழல் இருந்து வருகிறது. மே 10-ம் தேதிக்கு மேல் இருதரப்பினரையும் வைத்துப் பேச முடிவு செய்துள்ளேன்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism