Published:Updated:

விவசாயப் பணிகளில் கல்லாக் கட்டும் புரோக்கர்கள்... கதறும் விவசாயிகள்! #MyVikatan

சரியான நேரத்தில் பெய்த மழையால் நேரடி விதைப்பு செய்த அனைத்து நெல் விதைகளும் நல்ல நிலையில் முளைத்து பயிர்களாகிவிட்டன.

விவசாயப்பணி
விவசாயப்பணி

சிவகங்கை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் சமீபத்தில் பெய்து வரும் கடுமையான வடகிழக்குப் பருவமழையால் விவசாயப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், இதற்குப் போதுமான கூலித் தொழிலாளர்கள் கிடைக்கவில்லை. இதனைப் பயன்படுத்தி புரோக்கர்கள் தினசரி பெரும் தொகை சம்பாதித்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக சிவகங்கை. புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் போதுமான வடகிழக்குப் பருவமழை பொழியவில்லை. இதனால் விவசாயம் பொய்த்துப்போனது. விவசாயிகளும் விரக்தியுடன் காணப்பட்டனர். இந்நிலையில் இந்த வருடமாவது நல்ல மழை பொழியுமா? என்ற நம்பிக்கையுடன் மேற்கண்ட மூன்று மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டனர். அப்போது சரியான நேரத்தில் பெய்த மழையால் நேரடி விதைப்பு செய்த அனைத்து நெல் விதைகளும் நல்ல நிலையில் முளைத்து பயிர்களாகிவிட்டன.

விவசாயப்பணி
விவசாயப்பணி

இச்சூழலில் கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் இம்மாவட்டங்களின் பல ஊர்களில் உள்ள நீர்நிலைகள் வேகமாய் நிரம்பத் தொடங்கி வருகின்றன. பல கிராமங்களுக்கு இனிமேல் மழையே தேவை இல்லை என்ற சூழ்நிலையும் உருவாகி உள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆவுடையார்கோவில், ஏம்பல்,மீமிசல்,கரூர் வட்டாரம் சிவகங்கை மாவட்டத்தில் கண்ணங்குடி,தேவகோட்டை, காரைக்குடி,கல்லல் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடனை,தொண்டி, கமுதி,ராமேஸ்வரம் பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வயல்களில் இறங்கி வேலை செய்து வருகின்றனர்.

ஆனால் இப்பகுதியில் ஒரே சமயத்தில் மழை பெய்ததால் விவசாயப்பணிகளுக்கான கூலித் தொழிலாளர்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எவ்வளவளவு சம்பளம் கொடுத்தாலும் பரவாய் இல்லை. தங்கள் வயல்களில் வேலை செய்ய ஆட்கள் கிடைக்கமாட்டார்களா? என அப்பகுதி விவசாயிகள் ஊர் ஊராக அலைந்து திரிகின்றனர். விவசாய வேலைக்கு ஆட்கள் தேவை என்று சமூக ஊடகங்களில்கூட இப்பகுதி விவசாயிகள் சிலர் விளம்பரங்கள் செய்து வருகின்றனர்.

விவசாயிகளின் இந்த தேவையை அறிந்து கொண்ட புரோக்கர்கள் சிலர் ஆள் பிடிக்கும் பணிகளில் இறங்கி உள்ளனர். அதாவது களை எடுப்பு, நாற்று நடுதல் போன்ற பணிகளில் பெண் தொழிலாளர்களே பெரும்பாலும் ஈடுபடுகின்றனர். எனவே இவர்களை குறிவைக்கும் புரோக்கர்கள் அவர்களிடம் நைஸாகப் பேசி வேன்களில் குறைந்த சம்பளத்துக்கு ஏற்றி அழைத்து வருகின்றனர். அப்படி அழைத்து வரும் பெண் தொழிலார்களுக்கு ரூ.200 முதல் 230 ரூபாய் மட்டுமே ஒரு நாள் ஊதியமாக புரோக்கர்கள் கொடுக்கின்றனர். ஆனால் விவசாயிகளிடமிருந்து புரோக்கர்கள் ரூ.450 முதல் 550 வரை ஒரு நாள் சம்பளமாக வசூல் செய்து விடுகின்றனர். இதில் வேன் வாடகை தலா ஒருவருக்கு நூறு ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும்கூட குறைந்த பட்சம் ஒரு தொழிலாளியின் சம்பளத்தில் இருந்து 200 முதல் 250 ரூபாய் வரை இடைத்தரகர்கள் உழைப்பே இல்லாமல் உட்கார்ந்த இடத்தில் இருந்தே சம்பாதித்து வருகின்றனர்.

விவசாயி சிங்காரம்
விவசாயி சிங்காரம்

பல இடங்களில் வேன் உரிமையாளர்களே இந்த புரோக்கர்களாக மாறி கல்லா கட்டி வருகின்றனர். வேலைக்கு ஆட்கள் கிடைக்காததால் விவசாயிகளும் சம்பளத்தை அதிகமாய் கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் விவசாயிகள் தங்க நகைகளை அடகு வைத்தும், வட்டிக்கு வாங்கியும் செலவு செய்து வருகின்றனர். அதற்கும் வழி இல்லாத விவசாயிகள் சிலர் வயல்களில் உள்ள களைகளை அகற்றாமல் அப்படியே போட்டுவிட்டு உரங்களை இட்டு வருகின்றனர்.

விவசாய வேலை ஆட்கள் பற்றாக்குறைக்கு நூறு நாள் வேலைத் திட்டமும் ஒரு முக்கியக் காரணம் என விவசாயிகள் பலரும் புகார் கூறுகின்றனர். கண்ணங்குடி வட்டாரம் கேசனி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிங்காரம், “ கிராமப்புற ஏழை எளிய மக்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்குப்பின் விவசாயப் பணியாட்களின் சம்பளமும் உயர்ந்தது. ஆனால் அதேவேளை விவசாய வேலைக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறையும் ஏற்பட்டது. இதனால் விவசாய காலகட்டங்களில் இந்த நூறு நாள் வேலைத் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் .அப்போதுதான் ஆள் பற்றாக்குறையை சரி செய்ய முடியும். அல்லது நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரிபவர்களை சிறு,குறு விவசாயிகளின் நிலங்களில் விவசாயப் பணிகளில் ஈடுபட அனுமதிக்கும் வகையில் இத்திட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும்.

விவசாயப் பணிகளில் கல்லாக் கட்டும் புரோக்கர்கள்... கதறும் விவசாயிகள்! #MyVikatan

நாங்கள் கொடுக்கும் சம்பளம் உழைக்கும் பெண்களுக்கு முழுவதும் சென்று சேராமல் பாதிக்குமேல் புரோக்கர்களுக்கே செல்வது வருத்தமளிக்கிறது. இவ்வளவு சம்பளம் கொடுப்பது எங்களுக்கும் மிகுந்த கஷ்டமாக இருக்கிறது..” என்கிறார்.

விவசாயம் என்றாலே விவசாயிகளுக்கும் இழப்புதான்..! விவசாயத் தொழிலாளிகளுக்கும் இழப்புதான்போல..!

- பழ.அசோக்குமார்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/