Published:Updated:

தென்னை, ஆடு, வாத்து, கோழி!மாதம் 71,000 ரூபாய் லாபம்!

பண்ணையில் தினேஷ் பெரியசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
பண்ணையில் தினேஷ் பெரியசாமி

பண்ணை

விவசாயத்தைப் பிரதான தொழிலாகச் செய்பவர்கள் மத்தியில், பிற தொழில் பார்த்துக்கொண்டே விவசாயத்தை ஆத்ம திருப்திக்காகச் செய்பவர்களும் இருக்கிறார்கள். கரூர் மாவட்டம், உப்பிடமங்கலத்தைச் சேர்ந்த தினேஷ் பெரியசாமியும் அந்த ரகம்தான். டிராவல் ஏஜென்சி தொழிலில் தீவிரமாக ஈடுபட்டு வரும் தினேஷ் பெரியசாமி, தனது சொந்த கிராமத்தில் 14 ஏக்கரில் தென்னை, கொல்லம் வாத்து, பெருவிடை கோழி, செம்மறி ஆடு வளர்ப்பு என விவசாயத்திலும் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார்.

மழை லேசாகத் தூறிக்கொண்டிருந்த ஒரு மழைநாளின் காலை நேரத்தில், கரூர்-மணப்பாறை சாலையில் உப்பிடமங்கலத்தில் இருக்கும் ரம்மியமான அந்தப் பண்ணையை வலம் வந்தபடியே தினேஷ் பெரியசாமியிடம் பேசினோம். “தொழில் நெருக்கடிகளை, மன அழுத்தங்களை இந்தப் பண்ணையில காலாற நடக்குறது மூலமா போக்கிக்கிறேன். இந்தப் பண்ணையைப் பணத்துக்காக மட்டும் நடத்தல. மனதிருப்திக்காகவும் நடத்துறேன்” என்றவர், பண்ணையைக் கட்டமைத்த விதம்பற்றி விவரித்தார்.

பண்ணையில் தினேஷ் பெரியசாமி
பண்ணையில் தினேஷ் பெரியசாமி

“நாலஞ்சு தலைமுறையா எங்க குடும்பம் விவசாயம் பார்த்துக்கிட்டு வருது. எங்களுக்கு 11 ஏக்கர், சித்தப்பாவுக்கு 10 ஏக்கர்னு மொத்தம் 21 ஏக்கர் நிலமிருக்கு. சித்தப்பா குடும்பம் ரொம்ப காலத்துக்கு முன்னாடியே தொழில் காரணமா கரூருக்குப் போயிட்டாங்க. அதனால, அவங்க நிலத்தையும் சேர்த்து நாங்கதான் வெள்ளாமை பண்ணிக்கிட்டு வந்தோம். இந்த நிலையில, எனக்கு 7 வயசு இருக்கும்போது, அப்பா தவறிட்டார். அதனால, அம்மா பரமேஸ்வரிதான் விவசாயம் பார்த்துக்கிட்டு இருந்தாங்க.

வேலையாள் பற்றாக்குறையால, 2000-ம் வருஷம், 14 ஏக்கர் நிலத்துல நாட்டுத் தென்னங்கன்றுகளை நட்டு, வளர்த்தாங்க. அதை ஆள் வச்சு கவனிச்சுக்கிட்டாங்க. ஒரு கட்டத்துல ‘ஒண்ணும் கட்டுப்படியாகல. தோப்பை குத்தகைக்கு விட்டுறலாம்’னு அம்மா சொன்னாங்க. அப்பதான், நான் பி.இ படிச்சு முடிச்சேன். உடனே, ‘பப்ளிக் லிமிடெட் கம்பெனி’ ஒண்ணு ஆரம்பிச்சேன். 2014-ம் வருஷத்துக்குப் பிறகு, ‘தோப்பை நாம கையிலெடுத்து, கவனிப்போம்’னு முடிவு பண்ணினேன். முதல்ல மொத்த தோட்டத்தையும் சுத்தி, வேலி அமைச்சேன். பிறகு, கன்னிவாடி சந்தைக்குப் போயி, 27 செம்மறி ஆடுகளையும், ஒரு கிடாவையும் வாங்கிட்டு வந்தேன். அதுல, சினை ஆடுகதான் அதிகமா இருந்துச்சு. அதைத் தோப்புல மேய்ச்சல் முறையில வளர்க்க ஆரம்பிச்சேன்.

வாத்துகள்
வாத்துகள்

2015-ம் வருஷத்துல இருந்து, ஆடுகள் மூலமா கிடைக்குற கிடாக்குட்டிகளை விற்க ஆரம்பிச்சேன். வியாபாரிகளே நேரடியா தோப்புக்கு வந்து, வாங்கிட்டுப் போக ஆரம்பிச்சாங்க. பிறகு, கொஞ்சம் கொஞ்சமா ஆடுகளைப் பெருக்கி, இப்போ 110 தாய் ஆடுங்களும், 4 கிடாக்களும், 30 குட்டிகளும் இருக்கு. அதேபோல, 2016-ம் வருஷம் கோழி வளர்க்கலாம்னு முடிவு பண்ணினேன். நண்பர்கிட்டயிருந்து, 10 நாள்கள் ஆன 100 பெருவிடை கோழிக் குஞ்சுகள வாங்கிட்டு வந்தேன். அந்தக் குஞ்சுகளை 10 நாள்கள் ‘ப்ரூடர்’ல வச்சேன். அதை வளர்க்க தனி அறைகளை அமைச்சோம். ஆரம்பத்துல வளர்க்கிற முறை தெரியாததால, நிறைய குஞ்சுகள் இறந்துடுச்சு. அதன்பிறகு கால்நடை மருத்துவர்களைச் சந்திச்சு பேசினேன். கோழி வளர்ப்பு சம்பந்தமா நிறைய படிச்சு தெரிஞ்சுகிட்டேன். பிறகுதான் கோழிக் குஞ்சுகள் இறப்பு குறைஞ்சது.

4 மாசம் கோழிகளை வளர்த்ததுல ஒன்றரை கிலோ எடை வந்தது. அதைக் கறிக்காக உள்ளூர் வியாபாரிகளுக்கு விற்பனை பண்ணினேன். ஒரு கட்டத்துல, மத்தவங்ககிட்ட கோழிக்குஞ்சுகளை வாங்கி வளர்க்குறதைவிட, நாமளே முட்டைகளைப் பொரிக்க வச்சு, கோழிக்குஞ்சுகளை உற்பத்தி பண்ணினா என்னனு தோணுச்சு. அதனால, கோழிகளைக் கறிக்கு விற்பனை செய்றதை குறைச்சுக்கிட்டு, முட்டைகளை ‘இன்கு பேட்டர்’ மூலமா பொரிச்சு, ஒரு நாள், ஒரு மாசக் கோழிக்குஞ்சுகளாக விற்பனை பண்ணினேன். கோழிக்குஞ்சுகளை வளர்க்க ‘ப்ரூடிங்’ அறை அமைச்சேன்.

தென்னந்தோட்டத்தில் செம்மறியாடுகள்
தென்னந்தோட்டத்தில் செம்மறியாடுகள்

கோழிக்குஞ்சுகளை முதல் 15 நாள்கள் ‘ப்ரூடிங்’ அறையில வச்சு பாதுகாத்துட்டு, பிறகு தோப்புல விட்டு மேய்ச்சல் முறையில வளர்க்க ஆரம்பிச்சிருவோம். அதேபோல, முட்டைகளை ‘இன்குபேட்டர்’ல வைப்போம். 21 நாள்கள்ல குஞ்சுகள் பொரிச்சுரும். கோழிக்குஞ்சுகளை அடைச்சு பாதுகாக்க, ‘ஹாலோபிளாக்’ வெச்சு, நாலு கோழி குடாப்புகளை அமைச்சேன். கோழிகளை ராத்திரி நேரத்தில அடைச்சு வைக்க, 30,000 ரூபாய் செலவு பண்ணி, 2 ‘ஷெட்’களை அமைச்சேன். இப்ப பண்ணையில 135 தாய்க்கோழிகளும், 15 சேவல்களும், 50 கோழிக்குஞ்சுகளும் இருக்கு. ஆனா, நான் கோழிகளைக் கறிக்காக விற்பனை செய்றதை குறைச்சுகிட்டதால, கறி, முட்டைக்காக வர்றவங்க எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாச்சு. அதனால, அவங்களுக்காக, கொல்லம் வாத்துகளை வளர்க்க முடிவு பண்ணினேன். அது வருஷத்துல 300 நாள்கள் முட்டையிடும். 2019- ம் வருஷம் திருச்சியில் ஒருத்தர்கிட்ட இருந்து 200 வாத்துகளை வாங்கிட்டு வந்தேன்.

வாத்துகளை அடைச்சு வச்சு வளர்க்க இரும்புல பட்டித்தரம்பு செஞ்சு வச்சோம். கறிக்காகவும் முட்டைக்காகவும் வாத்துகளை விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். இப்போ என்கிட்ட 200 வாத்துகள் இருக்கு” என்றவர், வருமானம் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

“மொத்தமா தென்னை, ஆடு, கோழி, வாத்து மூலமா மாசம் 1,58,600 ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல மாசம் 87,000 ரூபாய் செலவாகுது. அதுபோக 71,600 ரூபாய் லாபம் கிடைச்சிட்டு இருக்கு” என்றார்.


தொடர்புக்கு, தினேஷ் பெரியசாமி,

செல்போன்: 63847 40743

நாட்டுக் கோழிகள்
நாட்டுக் கோழிகள்

வருமானம்

தென்னை, ஆடு, கோழி, வாத்துகள் மூலம் கிடைக்கும் வருமானம் குறித்துப் பேசிய தினேஷ் பெரியசாமி,

தென்னை

“எங்க தோப்புல மொத்தம் 800 தென்னை மரங்கள் இருக்கு. வருஷத்துக்கு 4 வெட்டு இருக்கும். இது வறட்சியான பகுதி. அதனால காய்கள் குறைவாத்தான் கிடைக்கும். ஒரு மரத்துல இருந்து சராசரியா மாசத்துக்கு 6 காய்கள் கிடைக்கும். 800 மரங்களுக்கும், மொத்தமா 4,800 காய்கள் கிடைக்கும். ஒரு காயை 7 ரூபாய்னு விலை வச்சு வியாபாரிங்க எடுத்துக்கிறாங்க. அப்படிப் பார்த்தா, மாசம் 33,600 ரூபாய் வருமானம் கிடைக்கும். மாசத்துக்கு 10 ஆட்டுக்குட்டிகளை விற்பனை செய்றோம். ஒரு குட்டி 4,500 ரூபாய் கணக்குல 45,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். ஒருநாள் வயசுல மாசத்துக்கு 400 கோழிக்குஞ்சுகளை விற்பனை செய்றேன். ஒரு குஞ்சு 100 ரூபாய். அந்த வகையில மாசம் 40,000 ரூபாய் கிடைக்கும்.

வாத்துக் குஞ்சுகளுடன்
வாத்துக் குஞ்சுகளுடன்

வாத்து

கொல்லம் வாத்து விற்பனையில, ஒரு முட்டை 10 ரூபாய்னு விலை வச்சு, மாசம் 500 முட்டை, ஒரு வாத்துக் குஞ்சு 50 ரூபாய்னு, மாசம் 500 வாத்துக் குஞ்சுகளையும் விற்கிறேன். கறிக்காக ஒரு வாத்து 250 ரூபாய் வீதம், மாசம் 40 வாத்துகள் விற்பனை செய்றேன். இது மூலமா மாசம் 40,000 ரூபாய் வருமானம் வரும்.

மொத்தமா தென்னை, ஆடு, கோழி, வாத்து மூலமா மாசம் 1,58,600 ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல மாசம் 87,000 ரூபாய் செலவாகுது. அதுபோக 71,600 ரூபாய் லாபம் கிடைச்சிட்டு இருக்கு” என்றார்.

உரம், தீவன மேலாண்மை

தென்னைக்கான உரம், கால்நடைகளுக்கான தீவன மேலாண்மை குறித்துப் பேசிய தினேஷ் பெரியசாமி, “வருஷத்துக்கு ரெண்டு தடவை, தென்னைக்கு எரு கொடுப்போம். ஒவ்வொரு தென்னை மரத்துக்கும் தூர்ல இருந்து 4 அடி தள்ளி, குழி பறிச்சு தென்னை வேர்ல எருவை வச்சுருவோம். அதனால, தென்னை தெளிவா இருக்கும். தவிர, கோழி, ஆடு, வாத்துக்கழிவுகள் தென்னைமரங்களுக்கு இயற்கை உரமா கிடைக்குது. அதேபோல, ஒவ்வொரு தென்னை மரத்துல இருந்தும் கீழே விழுற தென்னை மட்டைகளை எடுத்து, ‘பல்வைசர் மெஷின்’ மூலமா அரைச்சு, தூளாக்கி, அதை ஒவ்வொரு தென்னமரத்தைச் சுத்தியும் தூவிவிடுவோம். இதனால, அது மரத்துக்கு உரமாகுறதோடு தண்ணியையும் தேக்கி வச்சு, மரத்துக்குக் கொடுக்கும். அதோட, கறையானும் உற்பத்தியாகும். அந்தக் கறையான்களை கோழிங்க உணவாக எடுத்துக்கும்.

பசுந்தீவனம்
பசுந்தீவனம்

கோழி, வாத்துகளுக்குக் கூடுதல் தீவனமாக் கொடுக்க, 500 சதுர அடியில அசோலா உற்பத்தி பண்றோம். அதுல இருந்து தினமும் 15 கிலோ அசோலா கிடைக்குது. இதைத்தவிர, மக்காச்சோளம், கம்பு உள்ளிட்ட தானியங்களை வாங்கிட்டு வந்து, அரைச்சு கொடுக்குறோம்.

ஆடுகளுக்காக, ஒரு ஏக்கர்ல ‘சூப்பர் நேப்பியர்’ புல்லை வளர்க்குறோம். அதை வெட்டிப் பசுந்தீவனமாக் கொடுக்குறோம். 3 ஏக்கர் நிலத்துல சோளம் பயிர் வெச்சு, அதை அறுவடை பண்ணி, காய வெச்சு தட்டையா மாத்தி வச்சுக்கிட்டு, ஆடுகளுக்குத் தீவன மாகக் கொடுப்போம்” என்றார்.

தென்னந்தோட்டத்தில்
தென்னந்தோட்டத்தில்

நோய் மேலாண்மை

தென்னை, ஆடு, வாத்து, கோழி ஆகியவற்றுக்கு ஏற்படும் பிரச்னைகள், நோய் தாக்குதல் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொண்ட தினேஷ் பெரியசாமி,

“தென்னந்தோப்புல பார்த்தீனியம் செடிகள் அடிக்கடி வளர்ந்துரும். அதைச் சமாளிக்க, 10 லிட்டர் தண்ணியில, 4 கிலோ கல்லு உப்பு, ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீர் கலந்து தெளிச்சாப் போதும். பார்த்தீனிய செடிகள் காய்ஞ்சுபோயிரும். ஆனா, ஆடுக மேயுற பசும்புல் இதனால காயாது. கோழி, ஆடுகள், வாத்து மேயும்போது, அதுங்களுக்கும் இந்த உப்புக்கரைசலால எந்தப் பாதிப்பும் வராது. அதே நேரம், இதைச் செடியின் மீது படுற மாதிரி தெளிக்கணும். தேவைக்கு மட்டுமே பயன்படுத்திட்டு வந்தால், நிலத்துல பெரிய அளவுல உப்புத் தன்மையும் பரவாது. தென்னை மரங்களுக்கு இந்த உப்புக் கரைசல் கூடுதல் ஊக்கியாகவும் இருக்கும். தென்னை மரங்கள்ல குரும்பை கொட்டுற பிரச்னையைத் தடுக்க, கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகத்துல ‘கோகோனட் டானிக்’ வாங்கிட்டு வந்து, தென்னையில வெள்ளை வேரைச் சீவி, அதுல கட்டினா, குரும்பை கொட்டுற பிரச்னை வராது. அதேபோல, வண்டு தோண்டி, அடி மரத்துல குழிகளை ஏற்படுத்தும். அந்த ஓட்டைகள்ல மண்ணை குழைச்சு பூசிவிட்டா தொடர்ந்து வண்டுகள் குடையாது.

தென்னந்தோட்டத்தில் செம்மறியாடுகள்
தென்னந்தோட்டத்தில் செம்மறியாடுகள்

3 மாசத்துக்கு ஒரு தடவை ஆடுகளுக்குக் குடற்புழு நீக்க மருந்தை வாய்வழியாகவோ, ஊசி மூலமாகவோ செலுத்தணும். மழைக்காலங்கள்ல ஆடுகளுக்குத் துள்ளுமாரி நோய் வரும். அதைத் தடுக்க மழைக்காலம் தொடங்குறதுக்கு முன்னாடியே, கால்நடை மருத்துவர் ஆலோசனைப்படி, தடுப்பூசி போட்டுடணும். வழக்கமான முறையில வளர்த்துட்டு வந்தபோது ஆடுகளுக்குச் சளி போன்ற நோய்கள் தாக்க ஆரம்பிச்சிடுச்சு. அதைத் தடுக்க நல்லா விஸ்தாரமா 4,00,000 ரூபாய் (இது நிரந்தரச் செலவு என்பதால் செலவு கணக்கில் சேர்க்கவில்லை) செலவு பண்ணி, பரண் அமைச்சுருக்கேன். பகல் முழுக்க தோட்டத்துல மேயுற ஆடுகளை ராத்திரி இந்த உயரமான பரண்ல ஏத்தி அடைச்சிடுவோம். இதனால, ஆடுகளின் சிறுநீர் கீழே போயிடும். படுக்குற இடத்துல ஈரம் இருக்காது. அதனால, இப்ப ஆடுகளுக்குச் சளித்தொல்லை வர்றதில்ல.

அரசு கால்நடை மருத்துவமனைகள்ல தாது உப்புகளை இலவசமா தர்றாங்க. அதை வாங்கிட்டு வந்து, தினமும் ஆடுகள் குடிக்குற தண்ணியில கொஞ்சமா கலந்து கொடுக்கலாம். அதனால, ஆடுகள் நல்லா வளரும். தெளிவா இருக்கும். ஆடுகளுக்கு வேறெந்த பிரச்னையும் வராது.

வாத்துக் குஞ்சுகள்
வாத்துக் குஞ்சுகள்

கோழிகளைப் பொறுத்தவரைக்கும், என்னுடைய அனுபவத்துல சொல்லணும்னா, வரும்முன் காப்பதே நல்லது. அதனால, கோழிகளுக்குச் சளிப்பிரச்னை வராம இருக்க, அதிமதுரம், தூதுவளை, சித்தரத்தை, திப்பிலியை சம அளவு எடுத்து அரைச்சுக்கணும். அதைத் தீவனத்துல கலந்து கொடுக்கணும். தீவனம் 3 பங்கு, அரைச்சு வெச்சிருக்க மூலிகை மருந்து ஒரு பங்கு வீதம் கலந்து கொடுக்கணும். மாசம் ஒரு தடவை கோழிகளுக்குக் கொடுத்தா, சளித்தொல்லை பெருசா வராது. அதேபோல, வெள்ளைக்கழிச்சல் வராம தடுக்க, வசம்பு, குப்பைமேனி, கருஞ்சீரகம் எல்லாத்தையும் சம அளவு எடுத்து அரைச்சு, அதைத் தீவனத்துல கலந்து, மாசத்துக்கு ஒருமுறை கொடுத்திருவேன். சளிக்குக் கொடுக்குற அதே அளவு கலந்து கொடுக்கணும். இப்படிச் செய்றதால, வெள்ளைக்கழிச்சலோ, ரத்தக்கழிச்சலோ வராது. வாத்தைப் பொறுத்தமட்டுல, அதுங்களுக்கு பெருசா எந்த நோய் தொந்தரவும் வர்றதில்ல” என்றார்.