Published:Updated:

1,350 கோழிகள், மாதம் ₹ 5 லட்சம் லாபம்... நாட்டுக்கோழி வளர்ப்பில் அசத்தும் பிசினஸ்மேன்!

ராஜசேகர்
ராஜசேகர்

``படிச்சது பத்தாவது. இன்று 250 பேருக்கு முதலாளி. இயற்கை விவசாயத்துடன் கோழி வளர்ப்பிலும் பல லட்சம் வருமானம் ஈட்டுகிறேன்."

விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு கணிசமான வருமானம் ஈட்டுவோர் பலர் உண்டு. தவிர, கால்நடை வளர்ப்பில் மட்டுமே ஈடுபட்டு, விவசாயிகளைவிடவும் அதிக வருமானம் ஈட்டுவோரும் உண்டு. அந்த வகையில், நாட்டுக்கோழி வளர்ப்பில் அசத்திவருகிறார் ராஜசேகர். 

கோழிப் பண்ணை
கோழிப் பண்ணை

ராஜசேகர் பத்தாம் வகுப்புவரை மட்டுமே படித்தவர். 25 ஆண்டுகளுக்கு முன்பு வேலைதேடி சென்னை வந்திருக்கிறார். உழைப்பால் படிப்படியாக உயர்ந்து, இன்று ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்திவருகிறார். 250 பேருக்கு வேலைவாய்ப்பும் கொடுத்துவருகிறார். இந்த நிலையில், இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டு, விவசாயம் செய்து வருவதுடன் நாட்டுக்கோழி வளர்ப்பிலும் இறங்கியிருக்கிறார். மாதத்துக்கு 1,000-க்கும் மேற்பட்ட கோழிகளை விற்பனை செய்து, பல லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறார்.

சென்னையை அடுத்த வண்டலூர் அருகேயுள்ள புங்கேரி கிராமத்தில் இருக்கிறது இவரின் கோழிப்பண்ணை. ஒரு காலைப் பொழுதில், பண்ணையில் கோழிகளுக்குத் தீவனமிட்டுக்கொண்டிருந்த ராஜசேகரைச் சந்தித்துப் பேசினோம். விவசாய ஆர்வம் முதல் கோழிப் பண்ணை வெற்றிவரை விரிவாகப் பேசினார். 

கோழிப் பண்ணை
கோழிப் பண்ணை

``விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு, காலதாமதமாகவே இயற்கை ஆர்வம் ஏற்பட்டுச்சு. ரசாயன உணவுகளின் உற்பத்தி அதிகரிக்கும் இன்றைய சூழலில், அந்த உணவுகளைச் சாப்பிட்டு நோய் பாதிப்பால் அவதிப்படும் மக்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவது வருத்தத்தை உண்டாக்குச்சு. எனவே, இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன். மேலும், பிராய்லர் கோழிகளுக்கு மாற்றாக ஆரோக்கியமான நாட்டுக்கோழிகளை வளர்த்து விற்பனை செய்ய முடிவெடுத்தேன். முறையான அனுபவத்துடன் இந்தப் பண்ணையைத் தொடங்கினேன்.

தர்மபுரி, சத்தியமங்கலம், மரக்காணம் பகுதிகளில் அனுபவமிக்க நபர்களிடமிருந்து முட்டையிடும் பருவத்திலிருந்த கடக்நாத் மற்றும் சிறுவிடை ரகத்தில் 250 கோழிகளை வாங்கிட்டுவந்தேன். மேலும், ஒரு மாதக் குஞ்சுப் பருவத்தில் 100 பெருவிடைக் கோழிகளையும் வாங்கிட்டு வந்தேன். இந்த ஐந்து ஏக்கர் வாடகை நிலத்தில் 1,800 சதுர அடியில் உள்ள கொட்டகையில் 13 அறைகள் இருக்கின்றன.

கோழிப் பண்ணை
கோழிப் பண்ணை

அதில், முட்டையிடும் கோழிகள் முதல் வளர்ந்த கோழிகள் வரை இனம் மற்றும் பருவம் வாரியாகத் தனித்தனியாக வளர்கின்றன. இதேபோல மேய்ச்சல் நிலத்துலயும் தனித்தனியே வலைகள் கட்டியிருக்கிறேன். இதனால, கோழிகள் சண்டைபோட்டுக்காமலும், இனக்கலப்பு ஏற்படாமலும் வளருது.

மஞ்சள்தூள் கலந்த வெந்தீரை எல்லாக் கோழிகளுக்கும் குடிக்கக் கொடுத்த பிறகே, தினமும் கோழிகளை மேய்ச்சலுக்கு விடுவோம். எனவே, நோய் எதிர்ப்பு சக்தியுடன் எல்லாக் கோழிகளும் திடகாத்திரமா வளருது. கம்பு, சோளம், மக்காச்சோளம் உள்ளிட்ட அடர் தீவனங்களுடன் முருங்கைக்கீரை உள்ளிட்ட பல்வகை கீரைகள் மற்றும் அசோலா உள்ளிட்ட ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே கோழிகளுக்குக் கொடுக்கிறோம்.

கோழிப் பண்ணை
கோழிப் பண்ணை

தவிர, அவை மேய்ச்சலில் பூச்சிப் புழுக்களையும் சாப்பிட்டு ஆரோக்கியமா வளருது. இதனால, நாங்களே பிடிக்க முடியாதபடி உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் நடமாடும் கோழிகள், சமயத்துல எங்களையே கொத்தவரும். அந்த அளவுக்குக் கோழிகள் திடகாத்திரமா இருக்குது" என்றவர், விற்பனை மற்றும் வருமானம் குறித்துப் பேசினார்.

``நல்லா வளர்ந்த 7 - 8 மாதப் பருவத்திலுள்ள கோழிகளை மட்டுமே விற்பனை செய்கிறேன். சராசரியாக 750 கடக்நாத் கோழிகள், சிறுவிடை மற்றும் பெருவிடை ரகத்தில் மொத்தம் 600 கோழிகள்னு மாதத்துக்கு 1,350 கோழிகளை விற்பனை செய்றேன். கடக்நாத் கோழி கிலோ 600 ரூபாய்க்கும் சிறுவிடை, பெருவிடை கோழிகள் கிலோ 450 ரூபாய்க்கும் விற்கிறேன். இதற்காக, சென்னை மதுரவாயலில் விற்பனைக் கூடம் வெச்சிருக்கேன். அங்க மக்களே கோழிகளைத் தேர்வு செஞ்சு வாங்கிட்டுப்போறாங்க.

தீவனமிடும் ராஜசேகர்
தீவனமிடும் ராஜசேகர்

பண்ணை, விற்பனை கூடத்துக்கான வாடகை, பராமரிப்பாளர் செலவு, தீவனம், போக்குவரத்துச் செலவு, மின்சார செலவுகளைச் சேர்த்தால், ஒரு கோழிக்கான உற்பத்திக்குச் சராசரியா 160 ரூபாய் செலவாகும். அந்த வகையில 1,350 கோழிகளுக்கான உற்பத்திச் செலவு 2,16,000 ரூபாய். செலவினங்கள் போக, மாதம் 5,04,000 ரூபாய் லாபம் கிடைக்கும். மருத்துவக் குணம் நிறைந்த கடக்நாத் உள்ளிட்ட நாட்டுக்கோழிகளுக்குத் தட்டுப்பாடு அதிகம் இருக்கிறதால, மாதம் 5,000 கோழிகளை விற்பனை செய்ய இலக்கு வெச்சிருக்கேன்" என்கிறார் மகிழ்ச்சி பொங்க.

தொடர்ந்து பேசிய ராஜசேகர், ``சாஃப்ட்வேர் உட்பட பல்வேறு வேலைகளில் லட்சங்களில் சம்பாதிச்சாலும், ஆரோக்கியமான உணவை இயற்கை விவசாயியாலதான் உற்பத்தி செய்ய முடியும். பணம் சம்பாதிக்க நிறைய வழிகள் இருந்தாலும், ஆரோக்கியமாக வாழ இயற்கை உணவுப் பொருள்களைச் சாப்பிடுவது மட்டுமே ஒரே வழி. எனவேதான், பிசினஸ் வேலைகளுக்கும் நடுவே சரியான பராமரிப்பாளர்களைக் கொண்டு கோழிப் பண்ணையை ஒன்றரை வருஷமா நடத்திகிட்டிருக்கேன். 

ராஜசேகர்
ராஜசேகர்
`50 கோழிகள்... மாதம் 20 ஆயிரம் லாபம்!'- மொட்டைமாடி கோழி வளர்ப்பில் அசத்தும் சினிமா ஒளிப்பதிவாளரின் மனைவி

நிறைய அனுபவங்கள், தோல்விப் படிப்பினைகளுக்குப் பிறகு இப்போ கோழிப் பண்ணையை லாபகரமா நடத்த முடியுது. வரும் காலங்கள்ல கோழிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, விற்பனை வாய்ப்புகளையும் அதிகரிக்க முறையான திட்டமிடலுடன் செயல்படுறேன்" என்கிறார் புன்னகையுடன்.

அடுத்த கட்டுரைக்கு