Published:Updated:

கொரோனா... தற்பாதுகாப்பு கொடுக்குமா நிலவேம்புக் குடிநீர்?

ஆலோசனை

பிரீமியம் ஸ்டோரி
கொரோனா வைரஸ் பீதியில் நாடு முழுவதும் வீடுகளில் முடங்கியுள்ளனர் மக்கள்.

கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இதிலிருந்து மக்களைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. `கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளும் வழிகள் குறித்து சித்த மருத்துவத்தில் கூறப்பட்டிருக்கிறது’ என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.

கொரோனா... தற்பாதுகாப்பு கொடுக்குமா நிலவேம்புக் குடிநீர்?

``இதற்கு வாய்ப்பிருக்கிறதா?’’ என்று சித்த மருத்துவரும், உலகத் தமிழ் மருத்துவக் கழகத்தின் தலைவருமான மைக்கேல் செயராசுவிடம் கேட்டோம்.

“கொரானாவுக்கு எதிராக இன்று உலக நாடுகள் அனைத்தும் ஒரு பெரும் போரை நிகழ்த்திவருகின்றன. இந்தக் கொடிய கொள்ளை நோயின் பிடியிலிருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்வதற்காக, அரசு அறிவுறுத்தும் தற்காப்பு செயல்களான அடிக்கடி கைகளைச் சோப்பு போட்டுக் கழுவுதல், முகக்கவசம் அணிதல், பிற மனிதர்களிடமிருந்து ஒரு மீட்டர் தொலைவில் விலகியிருத்தல், கூட்டம் கூடுவதைத் தவிர்த்தல் ஆகிய அனைத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். இந்த வைரஸ் தாக்குதலால் நோய் எதிர்ப்பு ஆற்றலும், மருந்துகளும் வலுவிழந்து மக்களை மரண பயத்துக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில், கடந்த 10 ஆண்டுகளாகப் பல்வேறு விதமான புதுப்புது நச்சுக் காய்ச்சல்களையும், சுவாசப்பாதைத் தொற்றுகளையும் கட்டுப்படுத்திய நிலவேம்புக் குடிநீரைத் தற்காப்புக்காகக் கையில் எடுக்க வேண்டிய முக்கியமான தருணம் இது. ‘இந்த சித்த மருத்துவர்களுக்கு வேற வேலையே இல்லை. ஏதாவது ஒண்ணுன்னாக்கூட, `கஷாயத்தைக் குடி’னு பேச ஆரம்பிச்சுடுவாங்க’ என்று சிலர் முணுமுணுக்கலாம்.

‘நிலவேம்புக் குடிநீர்’ என்றால் என்னவென்றே தெரியாமலேயே, ‘இதெல்லாம் எப்படி வைரஸ் நோய்களைக் குணமாக்கும்?’ என்று சிலர் கேள்வி கேட்கிறார்கள். ஐம்பூதங்கள், அறுசுவைக் கோட்பாடுகளின்படி கட்டமைக்கப்பட்டுள்ள நமது சித்த மருத்துவம், `கசப்புச்சுவையுள்ள மருந்துகள் மற்றும் உணவுகளையே நோய்க்கிருமிகளுக்கு எதிரானவை’ என்று கூறியுள்ளது. இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக வேம்பைக் கூறலாம். இன்றுவரை அனைத்து கிருமிகளையும் அழிக்கக்கூடிய சக்தி வேம்புக்கு இருப்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம்.

நிலவேம்பு கஷாயப்பொடி
நிலவேம்பு கஷாயப்பொடி

வேம்பு என்று முடியக்கூடிய பெயர்களுடைய பிற மூலிகை இனங்களான மலைவேம்பு, சிவனார் வேம்பு, நிலவேம்பு, கறிவேம்பு, சர்க்கரை வேம்பு, நாய் வேம்பு என இதன் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். இவற்றில் வேம்பைவிட மிகவும் அதிகமான கசப்புத்தன்மையுடையதாக நிலவேம்பைத்தான் நமது தமிழ் சித்த மருத்துவம் நச்சுக்காய்ச்சல்களுக்கு எதிராகப் பரிந்துரை செய்கிறது.

2009-ல் சிக்குன்குன்யா, 2010-ல் பன்றிக்காய்ச்சல், 2011-ல் பறவைக் காய்ச்சல், 2012-ல் டெங்கு எனத் தமிழகத்தைக் காய்ச்சல்கள் வரிசையாகப் புரட்டிப்போட்ட போது இந்த நிலவேம்புக் குடிநீர்தான் நமக்கு மிகவும் கைகொடுத்தது என்பதை மறந்துவிடக் கூடாது.

நிலவேம்பு குடிநீர்
நிலவேம்பு குடிநீர்

2012-ம் ஆண்டு தமிழக அரசே நிலவேம்புக் குடிநீரை டெங்கு முதலான வைரஸ் காய்ச்சல்களைக் கட்டுப் படுத்தும் மருந்தாக அறிவித்ததைத் தொடர்ந்து, சென்னை கிங்ஸ் ஆய்வு நிறுவனம் நிலவேம்புக் குடிநீருக்கு வைரஸ்களுக்கு எதிராகச் செயல்படும் தன்மை இருப்பதை அதன் முதற்கட்ட ஆய்வறிக்கையில் உறுதி செய்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிறுவனத்தின் இயக்குநர், பேராசிரியர் மற்றும் மருத்துவர் குணசேகரன் சென்னையில் நடைபெற்ற ஒரு நூல் வெளியீட்டு விழாவில், `‘ஒவ்வோர் ஆண்டும் மழைக்காலங்களான நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் சுவாசப்பாதை தொற்று நோய்கள் அதிகரித்துக் காணப்படும். புதுடெல்லியில் இது குறித்து மாநிலவாரியாகத் தொடர்ந்து அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும். 2012, 2013-ம் ஆண்டுகளில் இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் சுவாசப்பாதை தொற்றுநோய்கள் மிகவும் குறைந்து காணப்பட்டன. இதற்கு முக்கியக் காரணம், அந்தக் காலகட்டங்களில் தமிழகம் முழுவதும் நிலவேம்புக் குடிநீர் மக்களுக்கு அதிகமாக வழங்கப்பட்டது’’ என்று சொன்னதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

கொரோனா... தற்பாதுகாப்பு கொடுக்குமா நிலவேம்புக் குடிநீர்?

இந்த இரண்டு ஆய்வுத் தகவல்களுமே நிலவேம்புக் குடிநீரிலுள்ள வைரஸ் நோய்களுக்கு எதிரான மருத்துவ குணங்களை உறுதிசெய்கின்றன. எனவே, நிலவேம்புக் குடிநீர் சுவாசப்பாதை தொற்றுநோய்களுக்கு எதிராகச் செயல்படுவது உறுதியாகிறது. சுவாசப்பாதை தொற்றுநோயான கொரோனாவை நிலவேம்பு சேர்ந்த நிலவேம்புக்குடிநீர், கபசுரக்குடிநீர், சர்வசுரக்குடிநீர், தொந்தசுரக்குடிநீர் முதலான அனைத்துக் குடிநீர்களுமே கட்டுப்படுத்தும் என்று கருதலாம். இந்தக் குடிநீர் தயாரிப்பு முறைகளெல்லாம் கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த சித்த மருத்துவரான கண்ணுசாமிப் பிள்ளை எழுதிய நூல்களில் அதிகமாகக் கூறப்பட்டுள்ளன.

நிலவேம்புக் குடிநீர் சரக்குகளுடன் கூடுதலாக ஆடாதோடை இலை, துளசியிலை சேர்த்து இக்குடிநீர் தயாரித்து, கடந்த 20 ஆண்டுகளாக வழங்கிய எனது அனுபவத்தைச் சான்றாக முன்வைக்கிறேன். இவையெல்லாம் வைரஸ் நோய்களிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளும் முயற்சிதான். `கொரோனா வைரஸ் மனித உடலில் நுழைந்த முதல் ஆறு நாள்களுக்குத் தாக்குதலை வெளிப்படுத்தாமல் அமைதியாக இருக்கும்’ என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.

‘‘சித்த மருத்துவத்தையும் நவீன மருத்துவத்தையும் ஒருங்கிணைத்து பயன்படுத்தினால், இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்.’’

இந்தக் காலகட்டத்தில் நிலவேம்பு கலந்த இந்தக் குடிநீர் வகைகளில் ஏதாவது ஒன்றை மூன்று முதல் ஐந்து நாள்களுக்கு ஒரு முறை குடித்துவந்தால் நல்லது நடக்கும் என்று கருதுகிறேன். 2012-ல் டெங்குவால் பச்சிளம் குழந்தைகள் படபடவென இறந்து விழுந்தபோது, அப்போதைய தமிழக முதல்வர் மறைந்த ஜெயலலிதா நிலவேம்புக் குடிநீரை அறிவித்ததுபோல, தற்போதும் ரேஷன்கடைகள் மூலமாகவோ, வீதி வீதியாகவோ இந்தக் குடிநீர் பொட்டலங்களை மக்களுக்கு வழங்கலாம். இந்தக் குடிநீர் தயாரிக்கும் முறையும், குடிக்கும் அளவும் மிகமிக முக்கியம். குறைந்தபட்சம் 30 கிராம் கஷாயப்பொடியுடன் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து அடுப்பிலேற்றி, கால் லிட்டராக வற்றவைத்து வடிகட்டி ஃபிளாஸ்க்கில் வைத்துக்கொண்டு, 50 மி.லி-யாக ஒருவேளை உணவுக்குப் பிறகு குடித்து வரலாம். இவையெல்லாம் தங்களுக்குக் கிடைக்கவில்லையென்றால், துளசியிலை 50 கிராம், மிளகு 50 கிராம் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து, துவையல் பக்குவத்தில் எடுத்து, பாசிப்பயறு அளவு மாத்திரையாக உருட்டி நிழலில் காயவைத்துக்கொள்ள வேண்டும். மூன்று வேளையும் உணவுக்குப் பிறகு, அதில் ஒரு மாத்திரையை வாயில் போட்டு வெந்நீர் குடிக்கவும். வேப்பம் பட்டை 10 கிராம், துளசி 10 கிராம், மிளகு ஐந்து கிராம், வெற்றிலை ஐந்து கிராம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக அரைத்து ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து, அடுப்பிலேற்றி கால் லிட்டராக வற்றவைத்து வடிகட்டி, தினமும் 50 மி.லி எடுத்து உணவுக்குப் பிறகு ஒருவேளை வீட்டிலுள்ள அனைவருமே குடித்துவரவும்.

இந்தக் குடிநீர் வகைகளைத் தயாரிப்பதற்கு கேஸ் அடுப்பைத் தவிர்த்து, மின்சார அடுப்பைப் பயன்படுத்துவது நல்லது. நோய்க்கான அறிகுறிகள் தோன்றிவிட்டால், சித்த மருத்துவரின் கண்காணிப்பில் லிங்கம் அதிகமாகச் சேர்க்கின்ற வஜ்ஜிரகண்டி மாத்திரை, வெட்டுமாரன் மாத்திரை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளலாம். நவீன மருத்துவக் கருவிகள், உயிர்காக்கும் மருந்துகளுடன் இந்தச் சித்த மருந்துகளையும் வேளைக்கு ஒன்று என்ற அளவில் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று வேளை தொடர்ந்து மூன்று நாள்கள் கொடுத்துவர நன்மை பயக்கும் என நம்புகிறேன். எந்தக் காரணம் கொண்டும் மருத்துவமனைக்குச் செல்வதை தவிர்க்க வேண்டாம். சித்த மருத்துவத்தையும் நவீன மருத்துவத்தையும் ஒருங்கிணைத்து பயன்படுத்தினால், இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்.

மேலே குறிப்பிட்ட அனைத்து மருந்துகளையுமே மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களின் அதிதீவிர நிலையில் நான் நோயாளிகளுக்கு வழங்கி நல்ல பலனைக் கண்டிருக்கிறேன். இப்போதும்கூட `மலேரியாவுக்கு வழங்கும் மருந்துகளையே இந்த கொரோனாவுக்கு வழங்கலாம்’ என்று ஐரோப்பிய நாடுகள் பரிந்துரை செய்துள்ளன. எனவே, அனைத்து வைரஸ் காய்ச்சல்களுக்கும் சித்த மருத்துவ நூல்களில் மருத்துவம் கூறப்பட்டிருப்பதால், அவற்றை இன்றைய அறிவியல் கண்ணோட்டத்துடன் உறுதி செய்து வழங்கினால் கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளலாம்” என்றார் அக்கறையுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு