Published:Updated:

ஆண்டுக்கு ரூ.90,000... ஊடுபயிரில் மணக்கும் கொல்லிமலை ஏலக்காய்...

ஏலக்காய் செடிக்கு அருகில் ரமேஷ்
பிரீமியம் ஸ்டோரி
ஏலக்காய் செடிக்கு அருகில் ரமேஷ்

மகசூல்

ஆண்டுக்கு ரூ.90,000... ஊடுபயிரில் மணக்கும் கொல்லிமலை ஏலக்காய்...

மகசூல்

Published:Updated:
ஏலக்காய் செடிக்கு அருகில் ரமேஷ்
பிரீமியம் ஸ்டோரி
ஏலக்காய் செடிக்கு அருகில் ரமேஷ்

நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள மலைப்பிரதேசமான கொல்லிமலையில் ஒருகாலத்தில் சிறுதானியங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. காலப்போக்கில் இப்பகுதி விவசாயிகள் காபி மற்றும் மிளகு சாகுபடிக்கு மாறினார்கள்.

இந்நிலையில்தான் தற்போது இங்கு ஏலக் காயும் அதிக பரப்பில் மணம் வீசத் தொடங்கி யுள்ளது. முன்பு 5 சென்ட், 10 சென்ட் என மிகவும் குறைந்த பரப்பில் தங்களுடைய வீட்டுத்தேவைக்காக மட்டுமே இப்பகுதி விவசாயிகள் ஏலக்காய் சாகுபடி செய்து வந்தார்கள். ஆனால், தற்போது தங்களுடைய மிளகு தோட்டங்களில் அதிக பரப்பில் ஊடுபயிராக ஏலக்காய் சாகுபடி செய்து நிறைவான வருமானம் பார்த்து வருகிறார்கள்.

கொல்லிமலையின் முக்கிய அடையாள மாகத் திகழும் மாசிலா அருவிக்கு அருகில் அமைந்துள்ளது, குண்டூர்நாடு ஊராட்சி. இங்குள்ள இளங்கியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், இயற்கை முறையில் ஏலக்காய் பயிரிட்டு கணிசமான லாபம் பார்த்து வருகிறார்.

ஏலக்காயுடன் ரமேஷ்
ஏலக்காயுடன் ரமேஷ்

ஒரு பகல்பொழுதில் ரமேஷின் தோட்டத் துக்குச் சென்றோம். இங்குள்ள ஏலக்காய் செடிகளும், மிளகு கொடிகளும் ஒருசேர காற்றில் மணம் வீசி, நம்மை உற்சாகத்தில் ஆழ்த்தியது. மிகுந்த மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்ற ரமேஷ், ‘‘என் தாத்தா காலத்துல சிறுதானியங்கள்தான் அதிகமா சாகுபடி செய்யப்பட்டுச்சு. அதுக்குப் பிறகு எங்கப்பா மரவள்ளியை பிரதான பயிரா செஞ்சார். மரவள்ளிக்கிழங்கை மலை அடிவாரத்துல இருக்கிற சந்தைக்குக் கொண்டுபோய் விற்பனை செய்றதுல ஏகப்பட்ட சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருந்துச்சு. இடைத்தரகர்களோட ஆதிக்கமும் அதிகரிக்க ஆரம்பிச்சுது. அதனால வெறுத்துப் போயி, மரவள்ளி சாகுபடியை கைவிட்டுட்டு மிளகு, காபி பயிருக்கு மாறினோம்’’ என்று சொன்னவர், ஏலக்காய் சாகுபடி அனுபவம் குறித்து விவரிக்கத் தொடங்கினார்.

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகளோட வழிகாட்டுதலோடு 2019-ம் வருஷம், ஏலக்காய் சாகுபடியில இறங்கினேன். கேரளாவுல இருந்து நல்லாணி ரகத்தைச் சேர்ந்த 30 ஏலக்காய் செடிகளை வாங்கிக்கிட்டு வந்தேன். அப்ப, ஒரு செடியோட விலை 100 ரூபாய். மிளகுத் தோட்டத்துல ஊடுபயிரா ஏலக்காய் செடிகளை நடவு செஞ்சேன். அந்தச் செடிங்க நல்லா செழிப்பா வளர்ந்து வந்துச்சு. கண்டிப்பா இதுல லாபம் பார்க்க முடியும்ங்கற நம்பிக்கை ஏற்பட்டதால, ஏலக்காய் செடிகளோட எண்ணிக்கையைப் படிபடியா அதிகப்படுத்தினேன். ஒன்றரை ஏக்கர்ல 600 ஏலக்காய் செடிகள் ஊடுபயிரா இருக்கு. அதுல 400 செடிகள் இப்ப காய்ப்புல இருக்கு. பொதுவா ஏலக்காய் செடிகள் நடவு செஞ்சதுல இருந்து மூணாவது வருஷம் காய்ப்புக்கு வர்றது வழக்கம். இங்கவுள்ள ஏலக்காய் செடிகளுக்கு இப்ப மூணு வருஷமாகுது. இதுவரைக்கும் 205 கிலோ ஏலக்காய்ப் பறிச்சிருக்கேன். ஒரு வருஷத்துக்கு சராசரியா 450 கிலோ ஏலக்காய் மகசூல் கிடைக்கும். அதைப் பதப் படுத்தினா, 90 கிலோ உலர் ஏலக்காய் கிடைக் கும். ஒரு கிலோவுக்குக் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் வீதம், 90 கிலோ உலர் ஏலக்காய்க்கு 90,000 வருமானம் கிடைக்கும். அதுல எல்லாச் செலவுகளும் போக 70,000 ரூபாய் லாபம் கிடைக்கும். அடுத்த வருஷம் இதைவிட கூடுதல் மகசூல் கிடைக்கும்.

ஏலக்காய்கள்
ஏலக்காய்கள்

ஏலக்காயைப் பிரதான பயிரா சாகுபடி பண்ண முடியுமா... இயற்கை முறையில நல்ல விளைச்சல் கிடைக்குமான்னு இந்தப் பகுதி விவசாயிகள் பலர் ஆரம்பத்துல கேள்வி எழுப்பிக்கிட்டே இருந்தாங்க. ஆனா, இப்ப என்னோட ஏலக்காய் செடிகளோட விளைச்சலை பார்த்து ஆச்சர்யப்படுறாங்க. எக்காரணம் கொண்டும் ரசாயன உரம் பயன்படுத்த கூடாதுங்கிறதுல உறுதியா இருக்கேன். எரு, மீன் அமிலம், பஞ்சகவ்யா, தேமோர் கரைசல், மண்புழு உரம் பயன் படுத்திக்கிட்டு இருக்கேன்’’ என்றார்.

இதே ஊரில் சந்திரக்குமார் என்ற விவசாயியும் மிளகு தோட்டத்தில் ஊடுபயிராக ஏலக்காய் சாகுபடி செய்து வருகிறார். இவருடைய தோட்டத்துக்கும் சென்றோம். “நான் சின்ன புள்ளையா இருந்தப்ப, எங்களோட நிலத்துல சிறுதானியங்களையும் நெல்லையும் உணவுத் தேவைக்காகப் பயிர் செஞ்சாங்க. ஆனா, இன்னிக்கு நிலைமை தலைகீழா மாறிடுச்சு. நாங்களே சிறுதானியங்களை விலைக்குதான் வாங்குறோம். காபியும் மிளகும்தான் கொல்லிமலையில பிரதானமா வளருது. இந்த ரெண்டு பயிர்கள்லயுமே வருஷத்துக்கு ஒருமுறைதான் வருமானம் கிடைக்கும்.

ஏலக்காய்த் தோட்டத்தில் சந்திரகுமார்
ஏலக்காய்த் தோட்டத்தில் சந்திரகுமார்

இப்படிப்பட்ட சூழ்நிலையில தான் இந்தப் பகுதி விவசாயிங்க ஏலக்காய் சாகுபடியில ஈடுபட ஆரம்பிச்சோம். இது ரொம்பவே கை கொடுக்குது. ஏலக்காய் சாகுபடியைப் பொறுத்தவரைக்கும் வருஷத்துக்கு 5-6 முறை அறுவடை செய்ய முடியுறதால, மாதாந்தர செலவுக்கு இந்தப் பயிர் உதவியா இருக்கு.

என்னோட மிளகு தோட்டத்துல 2019-ம் வருஷம், ஒரு ஏக்கர்ல மலபார், நல்லாணி ரக ஏலக்காய் பயிர் பண்ணேன். பொதுவா ஏலக்காய் சாகுபடியைப் பொறுத்தவரைக்கும் பக்கக் கன்றோடு சேர்ந்திருக்குற செடியை நடவு செய்றதுதான் வழக்கம். மொத்தமா 130 செடிகள்தான் நடவு செஞ்சேன். பக்க கன்றுகள் வளர்ந்து, இப்ப ஒரு ஏக்கர்ல 500 ஏலக்காய் செடிகள் இருக்கு.

என்கிட்ட ரெண்டு மாடுகள் இருக்கு. மண்புழு உரம் ஜீவாமிர்தம் தயாரிச்சு இடுபொருளா பயன்படுத்துறேன். விளைச்சல் நல்லா இருக்கு” என்றவர், ஏலக்காய் விற்பனை வாய்ப்புகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

‘‘இங்க உற்பத்தி செய்யக்கூடிய ஏலக்காயை, மொத்த வியாபாரிகள் என்னோட வீட்டுக்கே வந்து, கொள்முதல் பண்ணிட்டுப் போயிடு வாங்க. அதேசமயம் மொத்த வியாபாரிங் களைதான் முழுமையா நம்பி இருக்கணும்னுங் கற அவசியம் இல்லை. கொல்லிமலை அடிவாரத்துல சேந்தமங்கலம் பக்கத்துல இருக்கிற பேளுக்குறிச்சி வார சந்தையில விவசாயிங்க தங்களோட ஏலக்காயை விற்பனை செஞ்சுக்கலாம்.

ஆடுகள்
ஆடுகள்

சூழ்நிலையைப் பொறுத்து, சில சமயங்கள்ல அங்காடிகளுக்கு நேரடி விற்பனையும் செய்வோம். அப்போ கிலோவுக்கு 2,000 ரூபாய் வரையும் விலை கிடைக்கும். இங்க கொல்லிமலையில விளைவிக்கப்படுற ஏலக்காய், அடர்பச்சை நிறத்துல நல்லா வாசனையா இருக்குறதுனால, வெளியூர் மக்கள்கிட்ட இதுக்கு நல்ல வரவேற்பு இருக்கு. கேரளாவுல உற்பத்தி செய்யப்படுற ஏலக்காய்க்கு இணையான தரம் இருக்கு. வெளிமாநில வியாபாரிகள்கூட கொல்லி மலைக்கு வந்து ஏலக்காய் கொள்முதல் பண்ணிட்டுப் போறாங்க” எனப் பெருமிதத்தோடு தெரிவித்தார்.

தொடர்புக்கு, ரமேஷ்,

செல்போன்: 90254 51907

சந்திரகுமார்,

செல்போன்: 84891 70792

மிளகு தூசி நீக்கும் இயந்திரம்
மிளகு தூசி நீக்கும் இயந்திரம்

மதிப்புக்கூட்டுதல்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், அவர்கள் தங்களின் விளைபொருள்களை மதிப்புக்கூட்டிக் கூடுதலாக வருமானம் ஈட்டுவதற்காக, பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தின் சார்பில் ஐந்து வகையான இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மையத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கும் ரமேஷ், இம்மையத்துக்கு நம்மை அழைத்துச் சென்று இதன் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.

“கொல்லிமலையில விளையுற பெரும்பாலான உணவுப் பொருள்களை இந்த மையத்துல மதிப்புக்கூட்டல் செஞ்சுக்கலாம். சிறுதானியங்களை இங்க அரைச்சுக் கொடுக்குறோம். எந்தத் தானியமா இருந்தாலும், அரவைக்கூலியா ஒரு கிலோவுக்குப் பத்து ரூபாய்தான் கட்டணம் நிர்ணயிச்சிருக்கோம். காபி பழத்திலிருந்து காபிக்கொட்டையைப் பிரிச்செடுக்க, ஒரு கிலோ பழத்துக்கு 2 ரூபாய் கட்டணம் வாங்குறோம். காய்ந்த மிளகுல இருக்கிற தூசி மற்றும் அதன் சருகுகளைப் பிரிச்சுக் கொடுக்கிறதோடு தூசி நீக்கப்பட்ட மிளகைத் தரம் பிரிச்சுக் கொடுக்கிறோம். ஒரு கிலோ மிளகுக்கு 2 ரூபாய் கட்டணம் வாங்குறோம்.

மதிப்புக்கூட்டும் கூடம்
மதிப்புக்கூட்டும் கூடம்

இந்த மையத்துல ஏலக்காய் மதிப்புக்கூட்டல் செயல்பாடுதான் முக்கியமானது. ஏலக்காயைப் பறிச்சதுமே தண்ணீர்ல கழுவி விவசாயிகள் இந்த யூனிட்டுக்குக் கொண்டு வருவாங்க. அதை ட்ரையர் மெஷின்ல கொட்டி பதப்படுத்துவோம். ஒவ்வொரு தடவையும் 50 - 200 கிலோ வரையிலான ஏலக்காயை ட்ரையர்ல பதப்படுத்தலாம். தொடக்கத்துல 48 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில 4 மணி நேரம் ஏலக்காய் சூடாகணும். அப்புறமா ரெண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை ட்ரையர்ல வெப்பநிலையைக் கூட்டணும். 18 மணி நேரம் கழிச்சு, கடைசியா 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில அரை மணி நேரம் வெச்சிருந்ததும் ட்ரையர்ல இருந்து ஏலக்காயை எடுத்துடலாம். பிறகு, பிளாஸ்டிக் பையில காத்துப் புகாத வகையில பத்திரப்படுத்தி வெச்சுக்கலாம். உலர வைக்கப்படாத பச்சையான ஏலக்காய்க்கு கிலோ 30 ரூபாய் கட்டணம் வாங்குறோம்.

இந்த மதிப்புக்கூட்டல் மையத்தின் மூலமா சுற்றுவட்டார கிராம விவசாயிகள் அதிக அளவுல பயன் அடையுறாங்க’’ என்றார்.

இப்படித்தான் ஏலக்காய் சாகுபடி செய்யணும்!

இயற்கை முறையில் ஏலக்காய் சாகுபடி செய்து வரும் ரமேஷ் மற்றும் சந்திரகுமார் இருவருமே ஒரே விதமான செயல்முறையைத்தான் கடைப்பிடித்து வருகிறார்கள். இவர்கள் சொன்ன தொழில்நுட்பம், இங்கு பாடமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

ஏலக்காய் செடிக்கு அருகில் ரமேஷ்
ஏலக்காய் செடிக்கு அருகில் ரமேஷ்


50 சதவிகிதம் நிழல் அவசியம்

செம்மண் பாங்கான நிலம், ஏலக்காய் சாகுபடிக்கு உகந்தது. கோடைக்காலத்தின் முடிவில் ஜூன் அல்லது ஜூலையில் ஏலக்காய் சாகுபடியை மேற்கொள்ளலாம். இந்தப் பயிரின் வளர்ச்சிக்கு 50 சதவிகிதத்துக்குக் குறையாமல் நிழல் தேவை. எனவே, கொல்லிமலை விவசாயிகள் பலரும் மிளகுக்கொடிகள் படரவிடப்பட்ட சில்வர் ஓக் மரங்களுக்கு இடையே ஊடுபயிராக, ஏலக்காய் சாகுபடி செய்து வருகிறார்கள்.

மிதமான ஈரப்பதத்துடன் இருக்கும் நிலத்தில் 8 - 10 அடி இடைவெளியில் 3 அடி சுற்றளவு, 2 அடி ஆழத்தில் குழி எடுத்து, ஒரு மாதத்துக்கு ஆறவிட வேண்டும். அதன் பிறகு தலா ஒரு கைப்பிடி அளவு மாட்டு எரு, மண்புழு உரம், வேப்பம்பிண்ணாக்கு, காய்ந்த இலைதழைகள்... இவற்றை ஒன்றாகக் கலந்து குழியில் போட வேண்டும். குழியின் மையப் பகுதியில் 5 அடி உயரமுள்ள குச்சி அல்லது கம்பு ஒன்றை ஊன்றி மண்ணைக் கொண்டு குழியை நிரப்ப வேண்டும். அந்தக் குச்சியின் அருகிலேயே ஆள்காட்டி விரலால் குழியில் இரண்டு அங்குல ஆழம் மற்றும் 5 செ.மீ சுற்றளவுக்குச் சிறிய துவாரத்தை உருவாக்கி, அதில் ஏலக்காய் செடியை நடவு செய்ய வேண்டும். பக்கக் கன்றுடன்கூடிய தாய் செடியை நடவு செய்வது அவசியம். குச்சியுடன் செடியை இணைத்து கயிற்றால் கட்டி விட வேண்டும். இதனால், செடி சாயாமல் சீக்கிரமே வேர்பிடித்து வளரும். மண்ணின் தன்மைக்கு ஏற்ப அவ்வப்போது தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அடுத்த மூன்று மாதங்களில் ஏலக்காய் செடி நன்கு வேரூன்றி வளரத் தொடங்கும். அதன் அருகில் ஏற்கெனவே நட்டு வைக்கப்பட்டிருந்த குச்சியை அப்புறப்படுத்திவிடலாம்.

மாடுகள்
மாடுகள்

இடுபொருள்கள்

செடிகள் நடவு செய்த ஒரு வாரம் கழித்து, ஒவ்வொரு செடியின் வேர் பகுதியிலும் ஒரு கைப்பிடி அளவுக்குக் கடலைப்பிண்ணாக்கு தூள் தூவி, மண் அணைக்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, 70 சதவிகிதம் எரு, 30 சதவிகிதம் வேப்பம்பிண்ணாக்கு கலந்து தலா 50 கிராம் வீதம் ஒவ்வொரு செடியின் வேர்ப்பகுதியிலும் கொடுத்து, மண் அணைத்து நீர் பாய்ச்ச வேண்டும். ஓராண்டுக்குப் பிறகு, இந்த அளவை 200 கிராம் ஆக அதிகப்படுத்திக் கொடுக்க வேண்டும்.

ஆண்டுதோறும் ஜூன் மற்றும் அக்டோபர் மாத தொடக்கத்தில்... 5 லிட்டர் தண்ணீரில் 500 மி.லி ஜீவாமிர்தம் கலந்து (ஒரு குத்துக்கான அளவு) வேர் பகுதியில் ஊற்ற வேண்டும். ஜூலை மற்றும் செப்டம்பர் மாதத்தில்... 5 லிட்டர் தண்ணீருக்கு 500 மி.லி வீதம் பஞ்சகவ்யா கலந்து ஒவ்வொரு குத்துக்கும் வேர்வழித் தெளிப்பாகக் கொடுக்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு குத்துக்கும் அரைக்கிலோ வீதம் மண்புழுவுரம் இட்டு மண் அணைக்க வேண்டும். ஏலக்காய் செடிகளைச் சுற்றி களைகள் இல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

கோழிகள்
கோழிகள்

முதலாம் ஆண்டு முடிவில் ஏலக்காய் செடிகளில் பூக்கள் பூக்கும். அவற்றை நறுக்கி அப்புறப்படுத்த வேண்டும். இரண்டாம் ஆண்டு முடிவில், மீண்டும் பூக்கள் பூக்கத் தொடங்கும். அப்போது பூக்கள் மற்றும் இலைகள் நன்கு நனையும் அளவுக்குத் தேமோர் கரைசல் தெளிக்க வேண்டும். 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் வீதம் தேமோர் கரைசல் கலந்து தெளிக்கலாம். இதனால், பூக்கள் உதிர்வது தடுக்கப்படுவதுடன், காய்களின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும். மூன்றாம் ஆண்டுத் தொடக்கத்தில் முதல் அறுவடையை மேற்கொள்ளலாம். அதிலிருந்து 40 - 50 நாள்கள் இடைவெளியில் ஆண்டுக்கு 5 – 6 முறை ஏலக்காய் அறுவடை செய்யலாம். பறித்த ஏலக்காயை தண்ணீரில் கழுவி ஓரிரு மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும். அதன் பிறகு, டிரையர் யூனிட்டில் வைத்து உலர வைக்க வேண்டும். அதைத் தொடர்ந்து, காற்றுப் புகாத பையில் அடைத்து, 4 – 5 மாதங்களுக்குள் ஏலக்காயை விற்பனை செய்து விட வேண்டும். அதன்பிறகு நிறம் மாறி தரம் இழக்கத் தொடங்கும். அதற்கு முன்னதாக விற்பனை செய்வது அவசியம்.

தாய்ச் செடியை அப்புறப்படுத்த வேண்டும்

ஏலக்காய் செடிகள் இரண்டு ஆண்டுகளுக்கு மகசூல் கொடுக்கும். அதன்பிறகு, அந்தத் தாய்ச்செடியை அப்புறப்படுத்தி விட வேண்டும். ஏற்கெனவே உள்ள பக்கக் கன்றுகள் செடிகளாக வளர்ந்து மகசூல் கொடுக்கும். புதிதாக வளரும் ஒவ்வொரு செடியின் ஆயுட்காலமும் நான்கு ஆண்டுகள்தான். ஆரம்பகால நடவிலிருந்து சராசரியாக 15 ஆண்டுகளுக்குப் பிறகு, குத்துச் செடிகள் அனைத்தையும் அப்புறப்படுத்திவிட்டு, புதிய செடிகளை நடவு செய்ய வேண்டும்.

கொடைக்கானலுக்கு அடுத்து கொல்லிமலைதான்!

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவர் மற்றும் உதவிப் பேராசிரியர் (தோட்டக்கலை) ஷர்மிளா பாரதியிடம் பேசினோம். “கொல்லிமலையில் இயற்கை விவசாயம் செய்யும் 21 விவசாயிகளைத் தேர்வு செய்து, ‘மாசிலா பாரம்பர்ய வேளாண்மை வளர்ச்சித் திட்டம்’ என்ற பெயரில், அங்கக வேளாண்மைக்கான பயிற்சிகள் மற்றும் அடிப்படை உதவிகளைச் செய்து கொடுத்துள்ளோம். தங்களுக்கு விருப்பமான மலைப் பயிர்களைச் சாகுபடி செய்யும் அந்த விவசாயிகள், நேரடி விற்பனையில் கூடுதல் வருமானம் ஈட்டவும் வழிவகை செய்துகொடுக்கிறோம்.

ஷர்மிளா பாரதி
ஷர்மிளா பாரதி

கொல்லிமலையில் முந்தைய காலத்தில் சாதாரண ரக ஏலக்காய்தான் பயிரிடப்பட்டிருக்கிறது. அப்போது விறகடுப்பிலேயே விவசாயிகள் ஏலக்காயை உலர்த்தியிருக்கின்றனர். இதனால், ஏலக்காயின் நிறம் வெளிர் மஞ்சள் நிறத்துக்கு மாறியதுடன், காய்கள் வெடித்துச் சேதாரமாகி இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்தச் சிக்கல்களைத் தவிர்க்க, அதிக மகசூல் கிடைக்கும் ரகங் களைச் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு நாங்கள் ஆலோசனை கொடுக்கிறோம். அறுவடை செய்த ஏலக்காயைச் சேதாரமின்றியும், நிறம் மாறாமலும் உலர்த்திக்கொள்ள, மதிப்புக்கூட்டல் யூனிட்டில் குறைந்த கட்டணம் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏலக்காய் வளர்ச்சிக்கான சீதோஷ்ண நிலை கொல்லிமலையில் நிலவுவதால், கொடைக்கானலுக்கு அடுத்தபடியாக, கொல்லிமலையிலும் ஏலக்காய் சாகுபடி அதிகரித்துள்ளது. நல்லாணி, மலபார், மலபார் எக்ஸல் ஆகிய ரகங்கள் கொல்லிமலையில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றன. மார்க்கெட் நிலவரத்தைப் பொறுத்து தரமான ஏலக்காயை ஒரு கிலோவுக்கு 1,500 முதல் 5,000 ரூபாய் வரை நேரடியாக விற்பனை செய்து அதிக வருமானம் ஈட்டவும் வாய்ப்புகள் உள்ளன. மிளகு, காபி போன்ற பிரதான பயிர்களுக்கு இணையாக, அவற்றுடன் வளரும் ஊடுபயிரான ஏலக்காயிலும் சிறப்பான வருமானம் ஈட்டலாம்” எனத் தெரிவித்தார்.

தண்டு துளைப்பானுக்கு மூலிகைப் பூச்சிவிரட்டி!

ஏலக்காயைப் பொறுத்தவரை தண்டு துளைப்பான் பாதிப்புதான் பெரிய சவால். நிலம் வறண்டுபோனால், ஏலக்காய் செடிகளின் தண்டுப்பகுதி காய ஆரம்பிக்கும். அப்போது தண்டுத் துளைப்பான் பாதிப்புகள் ஏற்படும். எனவே, நிலம் வறண்டு போகாத வகையில முறையாகப் பாசனம் செய்ய வேண்டும். நிலத்தில் ஈரப்பதத்தைத் தக்க வைக்க, செடிகளின் வேர்ப்பகுதியைச் சுற்றிலும் காய்ந்த இலை சருகுகளைக் கொண்டு மூடாக்குப் போடலாம்.

தண்டு துளைப்பான்

தண்டு துளைப்பான் பாதிப்பு ஏற்பட்டால் 15 லிட்டர் தண்ணீருக்கு 30 மி.லி மூலிகை பூச்சி விரட்டி கரைசல் கலந்து தெளிக்கலாம். 40 நாள்களுக்கு ஒருமுறை இதுபோல் மூலிகை பூச்சிவிரட்டி தெளித்து வந்தால், தண்டுதுளைப்பான் பாதிப்பை முழுமையாகக் கட்டுப்படுத்தலாம்.

நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறை

மண்ணில் நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறை ஏற்பட்டால், ஏலக்காய்களில் சொறி போன்ற புள்ளிகள் ஏற்படும். இதைக் கட்டுப்படுத்த, ஒரு பிளாஸ்டிக் கேனில் 50 லிட்டர் தண்ணீரில் 10 கிராம் வேஸ்ட் டீ கம்போஸர் 1 கிலோ நாட்டுச் சர்க்கரை கலந்து, காற்றுப்புகாதவாறு மூடி வைக்க வேண்டும். தினமும் கரைசலை நன்கு கலக்கி விட வேண்டும். பத்து நாள்கள் கழித்து, இக்கரைசலை செடிகளின் வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும். 5 லிட்டர் தண்ணீரில் 500 மி.லி கரைசல் கலந்து ஊற்றலாம். இது ஒரு செடிக்கான அளவு.