Published:Updated:

2018-ல் மழை... 2019-ல் வெயில்... இப்போது கொரோனா...

ஏலக்காய்
பிரீமியம் ஸ்டோரி
ஏலக்காய்

கண்ணீரில் ஏலக்காய் விவசாயிகள்!

2018-ல் மழை... 2019-ல் வெயில்... இப்போது கொரோனா...

கண்ணீரில் ஏலக்காய் விவசாயிகள்!

Published:Updated:
ஏலக்காய்
பிரீமியம் ஸ்டோரி
ஏலக்காய்

மாநில எல்லைகள் இன்னும் திறக்கப்படவில்லை. ஒவ்வொருவரையும் பரிசோதித்து உள்ளே - வெளியே அனுப்ப வேண்டிய நிலை நீடிக்கிறது. `இது எத்தனை மாதங்கள் தொடரும்...’ என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. இப்படியான சூழலில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில், ஏலக்காய்ச் சாகுபடி செய்துவரும் தமிழக விவசாயிகள் தங்கள் தோட்டங்களுக்குச் செல்ல முடியாமல் தவித்துவருகின்றனர்.

இடுக்கியில் சுமார் ஒன்றேகால் லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய்ச் சாகுபடி செய்யப்பட்டுவருகிறது. அவற்றில் கணிசமானவை தமிழக விவசாயிகளுக்குச் சொந்தமானவை. தவிர, தமிழக விவசாயிகள் பலரும் ஏலக்காய்த் தோட்டங்களைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்கிறார்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக இரு மாநில எல்லைகள் மூடப்பட்டதால், கடந்த மார்ச் மாதம் முதல் விவசாயிகளாலும் தொழிலாளர் களாலும் ஏலக்காய்த் தோட்டங்களுக்குச் செல்ல முடியவில்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது தொடர்பாக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஏலக்காய் விவசாயி மணிகண்டன் நம்மிடம், ‘‘இடுக்கி மாவட்டத்தில் நான்கு ஏக்கர் ஏலக்காய்த் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து இரு வருடங்களாக விவசாயம் செய்கிறேன். முதல் ஊரடங்கு உத்தரவு வந்ததும், தமிழகத்திலிருந்து தினக்கூலிகளாக தோட்டங்களுக்கு வரும் 20,000 தோட்டத் தொழிலாளர்களுக்கு தடை விதித்தது கேரள அரசு. விவசாயிகளான எங்களை எல்லையில் தடுத்து திருப்பி அனுப்பிவிட்டார்கள். வேறு வழியில்லாமல் தோட்டங்களுக்கு அருகே வசிப்பவர்களைத் தொடர்புகொண்டு, செடிகளுக்குத் தண்ணீர்விடுமாறு உதவிக் கேட்டுக்கொண்டோம். ஆனால், தண்ணீர்விடுவது மட்டும் வேலை இல்லை. வேர்ப்புழு, காய்ப்புழு, காய்சொறி, பூச்சி, பூஞ்சணம் தாக்குதல் இல்லாமலிருக்க குறிப்பிட்ட இடைவெளியில் மருந்தடிக்க வேண்டும். களையெடுப்பு பணிபோல காய்ந்த சருகு எடுக்க வேண்டும். வேர் அழுகல் நோயிலிருந்து காக்க துத்தநாகம் போட வேண்டும். இப்படி மற்ற பயிர்களைவிட ஏலக்காய்ச் செடியில் பராமரிப்பு மிக அதிகம்.

 மணிகண்டன் - ராமகிருஷ்ணன் - வெங்கடேசன்
மணிகண்டன் - ராமகிருஷ்ணன் - வெங்கடேசன்

ஏலக்காய் விவசாயத்துக்கு மே, ஜூன் மாதங்கள் மிக முக்கியமானவை. ஜூன் மாத தென்மேற்குப் பருவமழைக்கு முன்னர் தோட்டங்களைப் பராமரித்து, மழைக்குத் தயார்செய்து வைப்போம். அப்போதுதான் பருவகால காய் எடுப்பு நன்றாக இருக்கும்; நல்ல விளைச்சலும் கிடைக்கும். தற்போது எங்களால் இவை எதையுமே செய்ய முடியவில்லை. ஜூன் மாதப் பருவமழையில் செடிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த 2018-ம் ஆண்டு, மேக பெருவெடிப்பு காரணமாக ஏற்பட்ட மழையால் ஏலக்காய் தோட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. 2019-ம் ஆண்டு கடுமையான வெயில் காரணமாக செடிகள் கருகின. 2020-ம் ஆண்டு, கொரோனா ஊரடங்கு எங்களை வாட்டுகிறது. நான்காம் கட்ட ஊரடங்கு முடிந்த பிறகேனும் எங்களுக்குத் தளர்வு கொடுங்கள். விவசாயிகளையும் தொழிலாளர்க ளையும் தோட்டங்களுக்குச் செல்ல அனுமதி கொடுங்கள். இல்லையென்றால் எங்கள் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்” என்றார் கண்ணீரோடு.

2018-ல் மழை... 2019-ல் வெயில்... இப்போது கொரோனா...

‘‘இடுக்கி மாவட்டம் புத்தடி மற்றும் தேனி மாவட்டம் போடி ஆகிய இரு இடங்களில் மத்திய நறுமணப் பொருள்கள் வாரியத்தின்கீழ் செயல்படும் ஏலக்காய் ஏலம்விடும் மையம் உள்ளது. இவை இரண்டு மார்ச் மாதத்திலிருந்தே மூடப்பட்டுள்ளன. இதனால், சுமார் 2,500 டன் ஏலக்காய் தேக்கமடைந்திருக்கிறது. உலக நாடுகளில் விளையும் ஏலக்காய்களில், நமது ஏலக்காய்க்குத்தான் மவுசு அதிகம். ஆனால், இரு மாதங்கள் ஏலக்காய்களை இருப்பு வைப்பதால், காய்கள் சுருங்கவும் நிறம் மங்கி, தரம் குறையவும் வாய்ப்புள்ளது. இதைக் கருத்தில்கொண்டு புத்தடி ஏல மையத்தை கேரள அரசு சமீபத்தில் திறந்துவிட்டது. அதேபோல, போடி ஏல மையத்தைத் திறக்க கலெக்டர் முன்வர வேண்டும்’’ என்று விவசாயிகளும் வியாபாரிகளும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

தேனி மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன், “இது தொடர்பாக கேரள அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நாங்கள் பலமுறை அறிவுறுத்தினோம். தேனி மாவட்ட கலெக்டரிடம் மனுவும் கொடுத்தோம். இதுவரை எந்தப் பதிலும் இல்லை’’ என்றார்.

2018-ல் மழை... 2019-ல் வெயில்... இப்போது கொரோனா...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் வெங்கடேசன், ‘‘20 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்திருக் கிறார்கள். ரேஷன் அரிசியை வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டு, வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தவிக்கிறார்கள் தொழிலாளர்கள். கேரளாவில் இடுக்கி மாவட்டம் சிவப்பு மண்டலத்தில் இல்லை. தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தினால், இதற்கு ஒரு முடிவு கிடைக்கும். ஆனால், தேனி கலெக்டருக்கு அதைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை’’ என்றார்.

இது தொடர்பாக தேனி மாவட்ட கலெக்டர் மரியம் பல்லவி பல்தேவிடம் விளக்கம் கேட்டோம். ‘‘பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன. விரைவில் அனைத்தும் சரிசெய்யப்படும்.’’ என்றார் சுருக்கமாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism