Published:Updated:

2 ஏக்கர் ரூ. 6 லட்சம்! - மணக்கும் வருமானம் கொடுக்கும் ஏலக்காய்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஏலக்காய்த்தோட்டத்தில் இளையராஜா
ஏலக்காய்த்தோட்டத்தில் இளையராஜா

மகசூல்

பிரீமியம் ஸ்டோரி
லைப்பகுதிகளில் முக்கிய விவசாயம் ஏலக்காய். ஆனால் எல்லா மலையிலும் ஏலக்காய்ச் சாகுபடி செய்ய முடியாது.

அதற்கு ஏற்ற சூழ்நிலை இருக்கும் இடங்களில்தான் இதைச் சாகுபடி செய்ய முடியும். தேயிலைச் சாகுபடிபோல, காட்டை அழித்துச் செய்யும் விவசாயம் இல்லை. மர நிழலில் நடக்கும் சாகுபடி.

செடிகளுக்கிடையே நீரைச் சேமிக்கும் குழி
செடிகளுக்கிடையே நீரைச் சேமிக்கும் குழி

திண்டுக்கல் மாவட்டம் மலைப்பகுதிகள் நிறைந்த மாவட்டம். ஆனால், கேரளாவின் இடுக்கி மாவட்டம்போல, இங்கு அதிகளவு ஏலக்காய்ச் சாகுபடி இல்லை. ஒரு காலத்தில், சிறுமலை, பன்றிமலை, தாண்டிக்குடி பகுதியில் ஏலக்காய்ச் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. இதனால், தாண்டிக்குடி பகுதியில் ‘ஏலக்காய் ஆராய்ச்சி நிலையம்’ தொடங்கப்பட்டது. ஆனால், காலப்போக்கில் இங்கு ஏலக்காய்ச் சாகுபடி கைவிடப்பட்டது. ஆராய்ச்சி நிலையமும் தனது செயல்பாடுகளைக் குறைத்துக்கொண்டது. இந்நிலையில், சமீபகாலமாகக் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான ஆடலூர், பன்றிமலை பகுதிகளில் ஏலக்காய்ச் சாகுபடி அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணமாக இருப்பவர் இளையராஜா.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இசைஞானி இளையராஜா, தனது இசைமூலம் தமிழ் சினிமாவை மாற்றியதுபோல், இவர் தனது சாகுபடி மூலம் இந்தப் பகுதி முழுக்க ஏலக்காயை மணமணக்க வைத்துள்ளார். இந்தப் பகுதிக்கு ஏலக்காய்ச் சாகுபடி புதிதல்ல. ஏற்கெனவே சாகுபடி செய்து இடையில் நிறுத்திய நிலையில், இந்தப் பகுதியில் காபி விவசாயம் செய்ய வந்திருக்கிறார் இளையராஜா. அப்போது காபியில் எதிர்பார்த்த லாபம் இல்லை. அதனால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஏலக்காய்ச் சாகுபடியில் இறங்கி இருக்கிறார். இவருக்குக் கிடைத்த மகசூல், இப்பகுதி விவசாயிகளை மீண்டும் ஏலக்காய்ச் சாகுபடி செய்ய வைத்துள்ளது.

ஏலக்காய்த்தோட்டத்தில் இளையராஜா
ஏலக்காய்த்தோட்டத்தில் இளையராஜா

இந்தப் பகுதியில் ஒரு ஏக்கரில் இளையராஜா ஆரம்பித்த ஏலக்காய் விவசாயம், இன்று 1,000 ஏக்கருக்கும் மேல் பரவியிருக்கிறது. யாரும் ஏலக்காய்ப் பயிரிடாமல் இந்தப் பகுதியில் உள்ள ஏலக்காய் ஆராய்ச்சி மையமும் மூடப்படவிருந்த சூழலில், அதையும் காப்பாற்றி ஏலக்காய் விவசாயத்தையும் இப்பகுதிகளில் மீட்டெடுத்துள்ளார், இளையராஜா.

தனது தோட்டத்தில் ஏலக்காய் பறிப்பில் ஈடுபட்டிருந்த இளையராஜாவைச் சந்தித்துப் பேசினோம்.

நல்ல வருமானம் கொடுக்கும் நல்லானி

“தேனி மாவட்டம், சீலையம்பட்டி கிராமம்தான் சொந்த ஊர். எனக்கு மொத்தம் 15 ஏக்கர் இருக்கு. இங்க 17 வருஷமா காபி பயிர் பண்ணிகிட்டிருக்கேன். இடையில காபி பயிர்ல கொஞ்சம் நஷ்டமாகிடுச்சு. அதைச் சரிகட்டுறதுக்காக என்ன பண்ணலாம்னு யோசிச்சப்போ, எங்க ஊர்க்காரர் ‘ஏலக்காயை வையிப்பா’னு யோசனை சொன்னாரு. அதனால முதல்ல 2 ஏக்கர்ல நல்லானி ரகத்தைப் பயிர் செஞ்சேன். இதை நடவு செய்றதுக்கு முன்னால 4 தடவை கேரளாவுக்குப் போய் பயிற்சி எடுத்துகிட்டு வந்தேன். அதுல ஏலக்காய்க்குத் தண்ணி வசதி அதிகமா தேவைங்குறது நல்லா புரிஞ்சது. கரும்பு போலவே ஏலக்காய் தட்டைகளை வாங்கி நடவு செஞ்சு 18 மாசத்திலிருந்து காய் பிடிச்சது. 24 மாசத்துக்கு மேல மகசூல் எடுக்க ஆரம்பிச்சேன். அப்போ கிடைச்ச வருமானம் லாபமும் இல்லாம, நஷ்டமும் இல்லாம நடுநிலையா இருந்துச்சு. இப்ப, கூடுதலா 8 ஏக்கர்ல ஏலக்காய்ப் பயிர் செய்திருக்கேன்’’ என்றவர்

ஏலக்காய் சரம்
ஏலக்காய் சரம்

ஏலக்காய்ச் சாகுபடி பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். “ஒரு ஏலக்காய் தட்டையிலிருந்து 2, 3 சரம் ஏலக்காய் காய்க்கும். நல்ல பராமரிப்பு இருந்தா ஒரு சரத்துல 42 கண்ணி வரும். ஒவ்வொரு கண்ணியிலும் 32 ஏலக்காய்கள் வரை காய்க்கும். 32 காய்களில் 5 காய்கள் நம்ம கைக்கு வராது. காலநிலை மாற்றத்தால் மாறக்கூடிய வெப்பநிலையால் அது வீணாகிடும். இப்போ என் தோட்டத்துல விளைஞ்சிருக்குறது, மூணாவது வருஷத்துச் சரம். ஏலக்காயைப் பொறுத்தவரைக்கும் ஒரு தட்டை, ரெண்டு கிளைத்தட்டைகளை கொடுத்துவிட்டுத்தான் சரத்தைக் கொடுக்கும். அந்தக் கிளைத் தட்டைகளும், தலா இரண்டு தட்டைகளைக் கொடுத்துவிட்டுத்தான் சரத்தைக் கொடுக்கும். இப்படித்தான் ஏலக்காய்ச் செடிகள் பல்கிப் பெருகும். பக்கக் கிளைகள் பலன் கொடுக்க ஒரு வருஷமாகும்’’ என்றவர் ஏலக்காய்த் தோட்டத்திற்குள் அழைத்துச் சென்றார்.

“ஒரு ஏக்கருக்கு 400 ஏலக்காய்ச் செடிகளை வைக்கலாம். ரொம்ப கவனமா பராமரிச்சா ஒரு வருஷத்துல ஏக்கருக்கு 1 டன் வரைக்கும் மகசூல் எடுக்கலாம். பக்கத்துல தேனி சந்தையில கொண்டுபோயித்தான் கொடுத்துகிட்டு இருக்கேன். கொரோனோ காலம்ங்குறதால இப்போ அதிகமா விற்பனை ஆகுறது இல்ல. ஏலக்காயைப் பறிச்சு தோலை எடுத்து உலர வைத்துப் பையில் போட்டுக் காற்றுபுகாமல் வைத்துவிட்டால் எடை குறையாது. இப்போது கிலோ 1,500 ரூபாய் வரைக்கும் விற்பனையாகிறது. ஏக்கருக்கு முதற்கட்டமாக நடவு செய்ய ஒரு ஏக்கருக்கு 2 முதல் 3 லட்சம் ரூபாய் வரைக்கும் செலவாகும். இயற்கையும், ரசாயனமும் கலந்துதான் பண்ணிக்கிட்டிருக்கேன். 8 ஏக்கர்ல ஏலக்காய் நடவு செஞ்சாலும், இப்போ மகசூல் 2 ஏக்கர்லதான் கிடைக்குது. மொத்தமா 2 ஏக்கருக்கு 2 டன் ஏலக்காய் கிடைக்கும். 500 கிலோ பச்சை ஏலக்காயைக் காயவெச்சா, 100 கிலோதான் கிடைக்கும். 2 டன் காய வெச்சா 400 கிலோதான் கிடைக்கும். ஒரு கிலோ 1,500 ரூபாய்னு வெச்சுகிட்டா 400 கிலோவுக்கு 6,00,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். செலவு 2,00,000 போனாலும், 4,00,000 ரூபாய் லாபமா நிக்கும். நான் ஆரம்பிச்ச பின்னால இப்போ 1,000 ஏக்கருக்கும் மேல இந்தப் பக்கம் நடவு செஞ்சிட்டாங்க” என்றபடி விடைகொடுத்தார், இளையராஜா.

தொடர்புக்கு, இளையராஜா, செல்போன்: 94882 24601

இப்படித்தான் சாகுபடி

லக்காய் நடவு செய்யும் நிலத்தில் நிழல் முக்கியம். கோடைக்காலத்திலும் நிழல் இருக்க வேண்டும். நிழலுக்காக முள் முருங்கை, வேங்கை உள்ளிட்ட மரங்களை வளர்க்கலாம். நடவு செய்வதற்கு 8-க்கு 8 அடி இடைவெளியில், 3 அடி அகலம், ஒன்றரை அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். நடவு செய்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே குழியெடுத்து ஆறப்போட வேண்டும். குழியில் செடி, கொடி, குப்பைகளைப் போட்டு மட்க வைக்க வேண்டும். ஒரு தட்டு தொழுவுரம், மேல் மண் கலந்து குழியை மூட வேண்டும். அதில் நடுவில் கையால் குழியெடுத்து, ஏலக்குச்சியை ஊன்ற வேண்டும்.

நான்கு செடிகளுக்கு நடுவே மையத்தில் ஒரு அடி ஆழத்தில் மழைநீரைச் சேமிக்கக் குழிகள் எடுக்கலாம். மலைப்பகுதிகள் சரிவாக இருப்பதால் இதைத்தான் செய்ய வேண்டும். 24 மாதத்திற்கு மேல் மகசூல் எடுக்கலாம். காய்கள் வரும் சரத்துக்குச் சரியான முறையில் மருந்து தெளிக்க வேண்டும். இல்லையென்றால் பாதியில் சரம் அழுகி, காய்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். தண்டுத்துளைப்பான் தாக்குதல் இருக்கும். அதற்கும் சரியான முறையில் மருந்து தெளிக்க வேண்டும். அதேபோலத் தண்ணீரை அளவுக்கு அதிகமாக விட்டால் செடிகள் அழுகிவிடும்.

இங்குதான் ஏலக்காய் வளரும்!

லக்காய் கடல்மட்டத்திலிருந்து 600 முதல் 1,200 மீட்டர் உயரமான இடங்களில் ஏலக்காய் சிறப்பாக வளரும். இருமண்பாடு உள்ள நிலமாக இருக்க வேண்டும். நிலத்தின் கார அமிலத்தன்மை 4.2 முதல் 6.6-க்குள் இருக்க வேண்டும். இந்தச் சூழலுள்ள இடங்களில் ஏலக்காய்ச் சாகுபடி செய்யலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு