Published:Updated:

தொடர் மழை; வடிகால் வசதி இல்லாததால் நீரில் மூழ்கும் 100 ஏக்கர் நெற்பயிர்கள்; வேதனையில் விவசாயிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வயலுக்குள் தேங்கியுள்ள மழை நீர்
வயலுக்குள் தேங்கியுள்ள மழை நீர்

தற்போது தொடர் மழை பெய்து வரும் நிலையில் மழையில் நீர் ஓடுவதற்கு வடிகால் இல்லாததால் தாழ்வாக உள்ள நடவு செய்யப்பட்ட நெல் வயலுக்குள் மழை நீர் புகுந்துவிட்டதில் பயிர்கள் மூழ்கிவிட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாகத் தொடர் மழை பெய்து வரும் நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை பகுதிகளில் மழை நீர் செல்வதற்கான வடிகால் வசதி இல்லாததால் நெல் பயிரிடப்பட்ட வயல்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் சுமார் 100 ஏக்கர் அளவில் நெல் பயிர்கள் சேதமடையும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மழை நீரில் மூழ்கிய பயிரை காட்டும் விவசாயிகள்
மழை நீரில் மூழ்கிய பயிரை காட்டும் விவசாயிகள்
பெட்ரோ கெமிக்கல் மண்டலம்: அச்சத்தில் 50,000 குடும்பங்கள்; போராட்டத்துக்கு ஆயத்தமாகும் விவசாயிகள்!

டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் தீபாவளி பண்டிகைக்கு முன்பிலிருந்தே மழை பெய்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் தேக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை பகுதியையொட்டியுள்ள கிராமங்களில் நடவு செய்யப்பட்ட நெல் வயல்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அத்துடன் அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிர்களும் சேதமடைந்து பொருளாதார இழப்பை ஏற்படுத்தியிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து விவசாயியும், சி.பி.ஐ கட்சியின் அம்மாப்பேட்டை ஒன்றியச் செயலாளரான செந்தில்குமார் என்பவரிடம் பேசினோம். ``தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. சில இடங்களில் குறுவை பயிர்களும் அறுவடைக்கு தயாராக இருக்கின்றனர். இந்நிலையில் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

மழை நீரில் மூழ்கியுள்ள நெல் பயிர்
மழை நீரில் மூழ்கியுள்ள நெல் பயிர்

இதனால் அம்மாப்பேட்டை, புத்தூர், உக்கடை, வடபாதி உள்ளிட்ட பல கிராமங்களில் நடவு செய்யப்பட்ட சுமார் 100 ஏக்கர் நெல் வயல்களில் சில தினங்களாக மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியே தண்ணீர் வடிந்து பயிர் பிழைத்தாலும் மகசூலில் பாதிப்பு உண்டாக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது. தஞ்சாவூர் - நாகை தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்றன. அப்போது சாலையின் இருபுறமும் இருந்த வடிகால் வாய்க்கால்கள் சேதமடைந்து தூர்ந்து போனது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வடிகால் வாய்க்கால்களைத் தூர்வாரி புனரமைக்க வேண்டும் என்றும் பல கிராமங்களில் வடிகால் வாய்க்கால்கள் புதர் மண்டிக் கிடக்கிறது அவற்றையும் தூர் வார வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதைக் கண்டு கொள்ளவில்லை. அதன் காரணமாகவே தற்போது பெய்து வரும் தொடர் மழையில் மழை நீர் ஓடுவதற்கு வடிகால் இல்லாததால் தாழ்வாக உள்ள வயல் பகுதிக்குள் மழை நீர் புகுந்துவிட்டது.

மழை நீரில் மூழ்கியுள்ள நெல் பயிர்
மழை நீரில் மூழ்கியுள்ள நெல் பயிர்
தொடர் மழை: தரைப்பாலத்தை மூழ்கடித்த காட்டாற்று வெள்ளம்! - தவிப்பில் கல்வராயன் மலைக்கிராம மக்கள்

இதனால் சம்பா, தாளடி நெல் பயிர்களும் அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை பயிர்களும் மழை நீரில் மூழ்கி விட்டன. ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ. 15,000 வரை செலவு செய்து பயிரிட்டுள்ள நிலையில், நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கியிருப்பதால் விவசாயிகள் வேதனையில் மூழ்கியுள்ளனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் வடிகால் வசதி ஏற்படுத்தி தந்தால் மட்டுமே ஓரளவுக்கு பயிர்களைக் காக்க முடியும். அத்துடன் மழை நீர் சூழ்ந்துள்ள கிராமங்களைக் கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் தரப்புக்கு உரிய இழப்பீடு தர வேண்டும்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு