சமூகம்
Published:Updated:

டெல்டா... பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்தானா? - காவிரி காப்பாளரே... கதைதானா எல்லாம்?

டெல்டா
பிரீமியம் ஸ்டோரி
News
டெல்டா

காவிரி டெல்டாவை ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக’ அறிவித்தார் தமிழக முதல்வர்.

கடந்த பிப்ரவரி 9-ம் தேதி, காவிரி டெல்டா மக்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள். தமிழ்நாட்டில் இதுவரை வேறு எந்த முதலமைச்சரும் செய்யத் துணியாத ஒரு சரித்திரச் சாதனையை எடப்பாடி பழனிசாமி நிகழ்த்தியிருப்பதாகப் பலரும் வியந்துபோனார்கள்.

காவிரி டெல்டாவை ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக’ அறிவித்தார் தமிழக முதல்வர். இது டெல்டா மக்களின் நீண்டகாலக் கோரிக்கை. இங்கு ஏற்கெனவே செயல்பட்டுவரும் பெட்ரோல்-கேஸ் கிணறுகளால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. மேலும் மீத்தேன், ஷெல் கேஸ், ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் பெரும் ஆபத்து தொடர்கிறது(!). இது போன்ற பாதிப்புகளிலிருந்து டெல்டாவை நிரந்தரமாகப் பாதுகாக்க, ‘வேளாண் மண்டலமாக’ அறிவித்து, சட்டபூர்வமான பாதுகாப்பு வழங்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தினார்கள். மத்திய அரசின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதாலேயே, கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஆளுமைகளே இதைச் செய்யத் துணியவில்லை. ஆனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதைச் சாதித்திருப்பதாக நெகிழ்ந்து போனார்கள். விவசாய சங்கத் தலைவர்களான மன்னார்குடி ரங்கநாதன், பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டவர்களின் சார்பில் தமிழக முதல்வருக்கு திருவாரூரில் பிரமாண்டமான பாராட்டு விழா நடத்தப்பட்டு ‘காவிரி காப்பாளர்’ என்ற பட்டமும் சூட்டப்பட்டது.

பாராட்டு விழா
பாராட்டு விழா

அதேசமயம் இது ஒரு கண்துடைப்பு என்றும், இதன் சட்ட முன்வடிவில் நிறைய குறைபாடுகளும் ஓட்டைகளும் இருப்பதாக விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில்தான் தற்போது கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதைபோல ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. `காவிரி டெல்டா, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதால், இங்கு மணல் குவாரிகளுக்குத் தடை விதிக்க வேண்டும்’ எனத் தஞ்சையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜீவக்குமார், மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆக்ஸ்ட் 5-ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்கான விதிமுறைகள் இன்னும் வகுக்கப்படவில்லை” எனத் தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இது பொதுமக்கள் மற்றும் சூழலியலாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து நம்மிடம் பேசிய வழக்கறிஞர் ஜீவக்குமார், “விவசாய உற்பத்தியை பாதிக்கக்கூடிய எந்த ஒரு நடவடிக்கையையும் அனுமதிக்கக் கூடாது என்பதுதான் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்தின் முதன்மை நோக்கம். மணல் குவாரிகளால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே, இதற்குத் தடை கோரினேன். ‘வேளாண் மண்டலச் சட்ட முன்வடிவு’ அரசாணையில் வெளியிடப்பட்டுப் பல மாதங்கள் ஆன நிலையில், இன்னும் அதற்கான விதிமுறைகள் வகுக்கப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. இச்சட்டம் கருவுற்ற நிலையில்தான் இருக்கிறது. ஆனால், இவர்கள் குழந்தை பிறப்பதற்கு முன்பே, பிரமாண்டமாகப் பிறந்தநாள் விழா கொண்டாடிவிட்டார்கள். எந்த ஒரு சட்டமும் விதிமுறைகள் வகுக்கப்பட்டால்தான் அது நடைமுறைக்கு வரும். வேளாண் மண்டலச் சட்டத்துக்கான விதிமுறைகள் வகுக்கப் படாததால்தான், புதிய எண்ணெய்க் கிணறுகள் மற்றும் குழாய் அமைக்கும் பணிகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இதே நிலை நீடித்தால் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற ஆபத்துகள் மீண்டும் முளைக்கும். அதற்கான சமிக்ஞைகள் தென்படுகின்றன’’ என்றார்.

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன், ‘‘தமிழக அரசு முழு மனதுடன் இந்தச் சட்டத்தைக் கொண்டுவரவில்லை என நாங்கள் ஆரம்பத்திலிருந்தே சொல்லிவந்தோம். இதில் நிறைய குறைபாடுகள் இருப்பதையும் சுட்டிக்காட்டினோம். `இந்த அளவுக்காவது ஒரு சட்டப் பாதுகாப்பு கிடைக்கிறதே’ என ஆறுதல் அடைந்தோம். ஆனால், இதிலும்கூட தமிழக அரசு அரைகுறை மனதோடும், உறுதியற்ற நிலையிலும் இருப்பது வேதனைக்குரியது. எந்தெந்தத் திட்டங்களுக்கு அனுமதி கிடையாது, எவையெல்லாம் அனுமதிக்கப்படும் என விதிமுறைகள் வகுக்கப்பட்டால்தான் இச்சட்டம் உயிர்பெறும். காலதாமதத்துக்கு கொரோனாவைக் காரணம் காட்டக் கூடாது. தமிழக அரசின் பல செயல்பாடுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன’’ என்றார்.

டெல்டா... பாதுகாக்கப்பட்ட 
வேளாண் மண்டலம்தானா? - காவிரி காப்பாளரே... கதைதானா எல்லாம்?

முதலமைச்சருக்கு விழா நடத்திய பி.ஆர்.பாண்டியன், “எங்கள் கோரிக்கை நிறைவேறியதால் முதலமைச்சருக்குப் பாராட்டு விழா நடத்தினோம். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டம் குறித்து இரண்டு முறை அரசாணை வெளியிடப்பட்டது. `விவசாய உற்பத்தியை பாதிக்கக்கூடிய மாற்றுத் திட்டங்களுக்கு அனுமதி கிடையாது’ என வேளாண்மைத்துறையின் சார்பில் அரசாணை வெளியிடப் பட்டது. இதன் மூலம் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற ஆபத்துகள் தடுக்கப்பட்டுள்ளன. மணல் கொள்ளையால் விவசாயம் பாதிக்கப்படுவது உண்மைதான். இது தடுக்கப்பட வேண்டுமென்றால் பொதுப்பணித்துறை, கனிமவளத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட வேண்டும். அதேசமயம், தமிழக மக்கள் தங்களது சொந்தத் தேவைகளுக்கு மணல் எடுக்க அனுமதிக்கப்பட வேண்டும்” என்றார்.

தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு “சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, இதற்கான விதிமுறைகளை முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார்’’ எனத் தெரிவித்தார்.

விதிமுறைகள் வகுக்கப்படாத ஒரு சட்டத்தை யார் எப்படிப் பின்பற்றுவார்கள் முதல்வரே?!