Published:Updated:

`நெல்லும் போச்சு; உளுந்தும் போச்சு!' - தவிக்கும் கடைமடை விவசாயிகள்

உளுந்து வயலில் மழைநீர்

கடைமடைப் பகுதி விவசாயிகள், தங்களின் ஜீவனத்தைத் தக்க வைப்பதென்பது எப்போதுமே சவால் நிறைந்ததாக இருந்து வருகிறது. இதுபோன்ற தருணங்களில் மற்ற பகுதி விவசாயிகளைவிடவும் இவர்கள்தான் அதிக பாதிப்பை சந்திக்கிறார்கள்.

`நெல்லும் போச்சு; உளுந்தும் போச்சு!' - தவிக்கும் கடைமடை விவசாயிகள்

கடைமடைப் பகுதி விவசாயிகள், தங்களின் ஜீவனத்தைத் தக்க வைப்பதென்பது எப்போதுமே சவால் நிறைந்ததாக இருந்து வருகிறது. இதுபோன்ற தருணங்களில் மற்ற பகுதி விவசாயிகளைவிடவும் இவர்கள்தான் அதிக பாதிப்பை சந்திக்கிறார்கள்.

Published:Updated:
உளுந்து வயலில் மழைநீர்

காவிரி டெல்டா கடைமடைப் பகுதி விவசாயிகள் மிகுந்த மன வேதனையில் இருக்கிறார்கள்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகாவுக்கு உட்பட்ட, இளநாங்கூர், வக்கரமாரி, நந்திமங்கலம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களில், சம்பா பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்களில், இந்த ஆண்டு குறைவான மகசூல் கிடைத்ததாலும், தங்களது நெல்லை வியாபாரிகளிடம் குறைவான விலைக்கு விற்க வேண்டிய நிர்பந்தத்துக்குத் தள்ளப்பட்டதாலும் இப்பகுதி விவசாயிகள் நஷ்டத்தைச் சந்தித்திருந்தார்கள்.

இந்நிலையில், நெல் தரிசில் சாகுபடி செய்யப்பட்ட உளுந்து கண்டிப்பாக கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த விவசாயிகளுக்கு அதிலும் ஏமாற்றத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வயல்
வயல்

கடைமடைப் பகுதி விவசாயிகள், எப்போதும் கனமழை மற்றும் வறட்சியை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள். இதுபோன்ற தருணங்களில் மற்ற பகுதி விவசாயிகளைவிட இவர்கள்தாம் அதிக பாதிப்பை சந்திக்கிறார்கள். கடலூர் மாவட்டம், சிதம்பரம் தாலுகா, குமாராட்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் சம்பா பட்டத்தில் நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு, தொடர் மழை, கடும் பனிப்பொழிவால் குறைவான மகசூல்தான் கிடைத்தது. மேலும், தங்களுடைய நெல்லை, வியாபாரிகளிடம் குறைவான விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால், நஷ்டத்தைச் சந்தித்தார்கள். இந்நிலையில் இவர்கள் மிகுந்த நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்த உளுந்து சாகுபடியும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்து நம்மிடம் பேசிய வக்கரமாரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அசோக்குமார்,

``இது காவிரி டெல்டாவோட கடைமடைப் பகுதி. ஒரு போகம் சம்பாவுக்கு மட்டும்தான் தண்ணீர் கிடைக்கும். அதுவும்கூட உத்தரவாதமா சொல்ல முடியாது. பல தடவை, பாசனத்துக்கு தண்ணீர் வராம போயி, சம்பா நெற்பயிர்கள் கருகிப் போயிருக்கு. ஆனா, அதிர்ஷ்டவசமா இந்த வருஷம் சம்பாவுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைச்சு, பயிர் செழிப்பா வளர்ந்துச்சு. ஆனா, எங்களோட போதாத காலமோ என்னமோ தெரியலை... இந்தப் பகுதியில தொடர்ச்சியா மழை பேஞ்சுக்கிட்டே இருந்ததாலயும், கடும் பனிப்பொழிவாலயும், ஏக்கருக்கு 24 மூட்டைதான் மகசூல் கிடைச்சது. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் ரொம்ப தாமதமா திறந்ததுனால, தனியார் வியாபாரிகள்கிட்ட நெல்லை விற்க வேண்டியதா போயிடுச்சு.

அசோக்குமார்
அசோக்குமார்

அறுவடை சமயத்துல அடிக்கடி மழை பேஞ்சுகிட்டே இருந்துச்சு. எங்களோட நெல்லை பத்திரப்படுத்தி வச்சு, கொள்முதல் நிலையம் திறந்த பிறகு விக்கலாம்னா, அதுக்கான இட வசதி இல்லை. உடனடி பண தேவையும் இருந்ததுனால தனியார் வியாபாரிகள்கிட்ட விற்பனை செஞ்சோம். ஒரு மூட்டைக்கு (60 கிலோ) 1,050 ரூபாய்தான் விலை கொடுத்தாங்க. அதுல கிடைச்ச வருமானம்... உற்பத்தி செலவைக்கூட முழுமையா ஈடு கட்டல. இந்தப் பகுதியைப் பொறுத்தவரைக்கும் உளுந்து, ரொம்பவே நம்பிக்கையான பயிர். தண்ணீர் அதிகம் தேவைப்படாது. செலவும் அதிகம் கிடையாது.

சம்பா நெல் அறுவடைக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி உளுந்து தெளிப்போம். `மெஷின்'ல நெல் அறுவடை செய்யும்போது, விதைகள் மண்ணுக்குள்ள புதைஞ்சிடும். நெல் அறுத்த பிறகு வைக்கோலை, வயல்லயே போட்டு வச்சிடுவோம். அடுத்த 7 நாள் கழிச்சு, வைக்கோல் எடுத்தோம்னா, உளுந்து நல்லா ஆங்காரமா செழிப்பா வளர்ந்து வரும். இந்த வருஷமும் உளுந்து நல்லா செழிப்பாதான் வளர ஆரம்பிச்சது. ஆனா, கடந்த பிப்ரவரி மாசம் 11, 12 தேதிகள்ல தொடர்ச்சியா கனமழை பேஞ்சதுனால, வயல்ல, மழை தண்ணீர் தேங்கிடுச்சு. இது களிமண் பாங்கான நிலம். பத்து நாளைக்கு மேலாகியும் தண்ணீர் உறிஞ்சவே இல்ல.

இதனால உளுந்து செடிகள் வளர்ச்சி அடையாம, சுணங்கிப் போயிடுச்சு, கிட்டத்தட்ட 80 சதவிகிதம் பாதிப்பு. ஒழுங்கா விளைஞ்சா, ஏக்கருக்கு 6 - 7 மூட்டை மகசூல் கிடைக்கும். ஒரு குவிண்டாலுக்கு 7,000 ரூபாய் வீதம், 42,000 ரூபாய்க்கு மேல வருமானம் கிடைக்கும். செலவு போக 30,000 ரூபாய்க்கு மேல கையில லாபம் மிஞ்சும். ஆனா, இந்த வருஷம் உளுந்து சாகுபடியில கடுமையான நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கு. எங்களோட உளுந்து பயிர்களை, பயிர் காப்பீடு செஞ்சிருக்கோம். எங்களுக்கு ஏற்பட்டிருக்குற நஷ்டத்தை ஈடு கட்ட, சம்பந்தப்பட்ட பயிர் காப்பீடு நிறுவனத்துக்கிட்ட இருந்து இழப்பீடு பெற்றுத் தர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கணும். பாதிக்கப்பட்ட உளுந்து பயிருக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கணும்’’ என வலியுறுத்தினார்.