Published:Updated:

`ரேஷனில் பனைவெல்லம்; கூடவே இதையும் செய்யுங்கள் முதல்வரே!' - விவசாயிகள் கோரிக்கை

``காவிரி டெல்டா மாவட்டங்களில் பனை மரங்களை பாதுகாக்கவும், இதன் எண்ணிக்கையை பல மடங்கு அதிகப்படுத்தவும், பனை சார்ந்த தொழில்களை ஊக்கப்படுத்த வேண்டும். இது, டெல்டா விவசாயிகளுக்கு, உப தொழில்களாக அமைந்து, கூடுதல் வருமானமும் கிடைக்கும்."

பனை மரங்களை பாதுகாக்கவும், பனை சார்ந்த தொழில்களை ஊக்கப்படுத்துவதற்காகவும் தமிழ்நாட்டில் உள்ள நியாய விலை கடைகளில் பனை வெல்லம் விற்பனை செய்ய தமிழக அரசு முடிவெடுத்து அதை தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் பனை வெல்லம் மற்றும் பனை சார்ந்த பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி மையத்தை திறந்து வைத்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நியாய விலை கடைகளில் பனை வெல்லம் வழங்கும் திட்டத்தையும் துவக்கி வைத்தார்.

இது சமூக நலனில் அக்கறை கொண்டவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக பனை விதைப்பு மற்றும் பனை பாதுகாப்பில் தீவிரமாக ஈடுபடக்கூடிவர்கள், இத்திட்டத்திற்கு நெகிழ்ச்சியான பாராட்டுகளை தெரிவிக்கிறார்கள். இந்நிலையில்தான் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள பனை மரங்கள் அழியாமல் பாதுகாக்கவும் அதிக எண்ணிக்கையில் பனை மரங்களை வளர்த்தெடுக்கவும் இப்பகுதிகளிலும் பனை சார்ந்த தொழில்களை தமிழக அரசு ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் இதற்கான சிறப்பு திட்டங்களை வகுத்து விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள்.

கருப்பட்டி
கருப்பட்டி
`இதைச் செய்யாமல் ரேசன் கடைகளில் கருப்பட்டி விற்பனை சாத்தியமில்லை!' - கருப்பட்டி உற்பத்தியாளர்கள்

தமிழக சட்டசபையில் வேளாண் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது, பனை வெல்லம் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, தற்போது ரேஷன் கடைகளில் பனை வெல்லம் விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்கியுள்ளது. 100 கிராம், 250 கிராம், 500 கிராம், ஒரு கிலோ வரையிலான அளவுகளில் விற்கப்படும் எனவும் விருப்பம் உள்ளவர்கள் வாங்கிக்கொள்ளலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் துணைச் செயலாளர் சுகுமாறன், ``பனை மரங்களை பாதுகாக்க இது நல்ல முயற்சி. தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் இருந்த லட்சக்கணக்கான பனை மரங்களில் பெரும்பாலானவை செங்கல் சூளைகளுக்காக அழிக்கப்பட்டன. பனை மரங்கள் காற்று தடுப்பு அரண்களாக பயன்படக்கூடியவை. பனை மரங்கள் அழிக்கப்பட்டதால்தான், 2018-ம் ஆண்டு கஜா புயலினால் டெல்டா மாவட்டங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டது. ஒப்பிட்டளவில் பார்த்தால், தற்போது தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில்தான் பனை மரங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளன.

சுகுமாறன்
சுகுமாறன்

அங்குதான் பனை வெல்ல, கருப்பட்டி தயாரிப்பு உள்ளிட்ட பனை சார்ந்த தொழில்கள் அதிகமாக நடைபெறுகின்றன. காவிரி டெல்டா மாவட்டங்களில் பனை மரங்களை பாதுகாக்கவும், இதன் எண்ணிக்கையை பல மடங்கு அதிகப்படுத்தவும், பனை சார்ந்த தொழில்களை ஊக்கப்படுத்த வேண்டும். இது, டெல்டா விவசாயிகளுக்கு, உப தொழில்களாக அமைந்து, கூடுதல் வருமானமும் கிடைக்கும். இதற்கான சிறப்பு திட்டங்களை வகுத்து விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பனை விதைப்பு மற்றும் ஏற்கெனவே உள்ள பனை மரங்களை பாதுகாக்கக்கூடிய நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் கிரின் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு, ``தமிழக அரசின் வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தபடி உடனடியாக பனை வெல்லம் விற்பனையை ரேஷன் கடைகளில் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. இதனால் தமிழகத்தில் பனை தொழில் பன்மடங்காக பெருகி வளர்ச்சி பெறும். இந்திய துணைக்கண்டத்தில் சுமார் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக தொன்றுதொட்டு பனை வெல்லம் உட்கொள்ளப்பட்டு வருகிறது.

ராஜவேலு
ராஜவேலு

பல்வேறு மருத்துவ குணங்களைக்கொண்ட பனை வெல்லத்தை ஏழை, எளிய மக்களும் வாங்கி பயன்படுத்தி நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கில் தமிழக முதல்வர் தொடங்கியுள்ளது சிறப்பானது. தற்போது தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ள பனை வெல்லம் விற்பனை திட்டத்தால் பனை தொழில் பன்மடங்காக பெறுகிட பொதுமக்கள் ரேஷன் கடைகளில் பனை வெல்லத்தை வாங்க ஆர்வம் காட்ட வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு