Published:Updated:

`300 கன அடிக்கே தாங்கல!’ - கல்லணைக் கால்வாய் உடைப்பால் கலங்கும் புதுக்கோட்டை விவசாயிகள்

உடைப்பு ஏற்பட்ட கல்லணைக் கால்வாய்
உடைப்பு ஏற்பட்ட கல்லணைக் கால்வாய்

பேராவூரணி அருகே - பைங்கால் என்ற இடத்தில் காவிரியின் கிளை ஆறான கல்லணைக் கால்வாய் கரையில் சுமார் 30 அடி நீளத்துக்கு உடைப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூரிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு பகுதி எனக் கடைமடை வரை செல்கிறது கல்லணைக் கால்வாய். இதன் கரைகள் வலுவிழந்து பலவீனமாகக் காணப்படுவதால் தண்ணீர் வரும் நேரத்தில் அடிக்கடி கரைகளில் உடைப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்க கரைகளின் இரு புறங்களையும் புனரமைப்பு செய்து பலப்படுத்த வேண்டும் என விகடனில் ஏற்கெனவே எழுதியிருந்தோம். இந்நிலையில், பேராவூரணி அருகே உடைப்பு ஏற்பட்டதுடன் நூற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இது விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

காவிரியின் கிளை ஆறான கல்லணைக் கால்வாய்
காவிரியின் கிளை ஆறான கல்லணைக் கால்வாய்

டெல்டா மாவட்ட பாசனத்துக்காகக் கடந்த 12 -ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதையடுத்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களின் பாசனத்துக்காகக் கல்லணையிலிருந்து கடந்த 16-ம் தேதி கல்லணைக் கால்வாய், காவிரி, வெண்ணாறு,கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் திறக்கப்பட்டது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு உரிய நேரத்தில் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், கல்லணைக் கால்வாயில் திறந்து விடப்பட்ட தண்ணீர், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஆவணம் பகுதியைச் சென்றடைந்தது. மேலும், அதைக் கடந்து புதுக்கோட்டை மாவட்டம் கடைமடை பகுதிக்குத் தண்ணீர் செல்வது வழக்கம். ஆனால், இன்று பேராவூரணி அருகே பைங்கால் என்ற இடத்தில் காவிரியின் கிளை ஆறான கல்லணைக் கால்வாயின் கரையில் சுமார் 30 அடி நீளத்துக்கு உடைப்பு ஏற்பட்டதுடன், தண்ணீர் அருகிலிருந்த விளை நிலங்களிலும் புகுந்தது.

தண்ணீர்
தண்ணீர்

இதைக் கண்ட விவசாயிகள் உடனடியாகப் பேராவூரணி பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். உடனடியாக உடைப்பு ஏற்பட்ட பகுதிக்கு வந்த அதிகாரிகள் பணியாளர்கள் மூலம் சவுக்குக் கம்புகளைக் கொண்டு தடுப்புகள் அமைத்து, உடைப்பு ஏற்பட்ட இடத்தில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து உடைப்பை சரி செய்வதற்கான பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகளிடம் பேசினோம். ``கல்லணைக் கால்வாய் சுமார் 148 கி.மீ நீளமுடையது. இதன் மூலம் 2.21 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், 694 குளங்கள் மற்றும் ஏரிகள் பயனடைகின்றன. கல்லணைக் கால்வாயின் இரு கரைகளும் வலுவிழந்து காணப்படுகின்றன. இவற்றைப் புதுபிக்க வேண்டும் எனத் தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கை வைத்துக்கொண்டே வருகின்றனர். ஆனால், அதற்கான பணிகளைத் தொடங்கவில்லை. கல்லணைக் கால்வாயில் தொடக்கத்தில் சுமார் 4,000 கன அடி வரை தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

ஆறு
ஆறு

ஆனால், பல ஆண்டுகளாகவே கரைகள் பலவீனமாக இருப்பதால் முழு கொள்ளவு தண்ணீரை திறப்பது இல்லை. சுமார் 2,500 கன அடி தண்ணீரைத்தான் திறப்பார்கள். இதுபோன்ற காரணங்களால் கடைமடைக்குத் தண்ணீர் செல்லாத நிலையும் இருந்து வருகிறது. கடந்த ஆண்டுகளில் கல்விராயன்விடுதி மற்றும் மேலஉளூர் ஆகிய இடங்களில் கரைகளில் உடைப்பு ஏற்பட்டது.

அப்போதும் விவசாயிகள் வரும் காலத்திலாவது கரைகளைப் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள். இந்நிலையில் தற்போது சுமார் 1,500 கன அடி வரைதான் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. உடைப்பு ஏற்பட்ட இடத்தில் சுமார் 300 கன அடி தண்ணீர்தான் சென்று கொண்டிருந்தது. இதையே தாங்கக்கூடிய வகையில் இல்லாமல் கரை வலுவிழந்து காணப்படுவதால், உடைப்பு ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் வயலில் தண்ணீர்
விவசாயிகள் வயலில் தண்ணீர்

தண்ணீர் அருகிலிருந்த வயல்களுக்குள் புகுந்ததால், அப்பகுதி முழுவதும் வெள்ளகாடாகக் காட்சியளிக்கிறது. மேலும், நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாராக இருந்த எள், கரும்பு, உளுந்து உள்ளிட்ட பயிர்களும் சேதமடைந்தன. நடவு செய்வதற்குத் தயாரக இருந்த நாற்றுக் கட்டுகளும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற காரணங்களால் உரிய நேரத்தில் தண்ணீர் வந்தும் பயன்படுத்த முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளளோம்’’ எனத் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு