Published:Updated:

நாகை: `கடைமடை பகுதிகளுக்கு வராத காவிரி நீர்’ - குறுவை சாகுபடி விவசாயிகள் வேதனை

கடைமடை
கடைமடை

கடந்த 8 வருடங்களாகக் காவிரி நீர் கிடைக்காமல் குறுவை சாகுபடி செய்ய முடியாத நாங்கள், தற்போது உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால்...

நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா முழுவதும் உள்ள கடைமடை பகுதிகளில் காவிரி நீர் இதுவரை வந்து சேராததால் குறுவை சாகுபடிக்குத் தயாராக இருந்த விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். பொதுப்பணித்துறையின் அலட்சியமே இதற்குக் காரணம் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பொதுப்பணித்துறையின் அலட்சியம்
பொதுப்பணித்துறையின் அலட்சியம்

கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு டெல்டா மாவட்டங்களில் உள்ள விளைநிலங்களில் குறுவை சாகுபடி செய்ய காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், கடைமடை பகுதிகளில் உள்ள ஆறுகளில் ஆங்காங்கே குடிமராமத்துப் பணிகள் அவசர கோலத்தில் நடப்பதால் விவசாயத்துகுத் தண்ணீர் வந்து சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குடிமராமத்துப் பணிகளை முன்கூட்டியே செய்யாமல் காலம் தாழ்ந்து அவசர அவசரமாகக் கட்டும் அணைகள், பாலங்கள் தரமற்றதாக உள்ளது. மேலும், இந்தக் குடிமராமத்துப் பணி ஒப்பந்தங்களை ஆளும்கட்சியினர் எடுத்துச் செய்து வருவதால் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை. சில இடங்களில் ஆறுகளில் அவசரக்கதியில் கட்டப்பட்ட தடுப்புச் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுபற்றி சீர்காழிப் பகுதி விவசாயிகள் சிலரிடம் பேசினோம். "கடந்த 8 வருடங்களாகக் காவிரி நீர் கிடைக்காமல் குறுவை சாகுபடி செய்ய முடியாத நாங்கள், தற்போது உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால், இன்றுவரை எங்கள் கடைமடை பகுதிகளுக்குப் பொதுப்பணித் துறையினரின் அலட்சியத்தால் தண்ணீர் வந்து சேரவில்லை.

கடைமடை
கடைமடை

இன்னும் 20 நாள்கள் கழித்து கடைமடை பகுதிகளுக்குத் தண்ணீர் விட்டால், விதை விதைத்து நடவுப் பணிகள் செய்யும் நேரத்தில் மழைக்காலம் தொடங்கிவிடும். அப்போது நாங்கள் பெரும் சேதத்தை சந்திக்க வேண்டிவரும். எனவே, அரசு போர்க்கால அடிப்படையில் குடிமராமத்துப் பணிகளைத் துரிதப்படுத்தி கடைமடை பகுதிகளுக்குத் தண்ணீர் வந்து சேர்வதை உறுதிப்படுத்த வேண்டும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு