பிரீமியம் ஸ்டோரி
குறுவைச் சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என அறிவித்திருக்கிறது தமிழக அரசு.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு மேல் இருந்தால்தான் டெல்டா பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்படும். தற்போது அணையில் 100 அடி தண்ணீர் உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் அணையைத் திறக்கச் சொல்லிப் போராட்டம் நடக்கும். இந்த முறை உரிய நேரத்தில் அணையைத் திறக்கவுள்ளதால் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் விவசாயிகள். அதே சமயத்தில் காவிரி நீர் கடைமடைக்கு வந்துசேர்வதில் உள்ள பிரச்னைகளையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஜூன் 12 ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? காவிரி டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டால்தான், குறுவைச் சாகுபடி வெற்றிகரமாக அமையும். ஜூன் மாதம் பணிகளைத் தொடங்கி, செப்டம்பர் கடைசி அல்லது அக்டோபர் முதல் வாரம் வடகிழக்குப் பருவ மழைக்கு முன்பாக, அறுவடை செய்யலாம். குறுவைப் பருவத்தில் கனமழையோ பனிப்பொழிவோ இருக்காது. இதனால் பூச்சி, நோய்த்தாக்குதல் உள்ளிட்ட பாதிப்புகளும் அதிகம் இருக்காது. கூடுதல் மகசூல் கிடைக்கும். ஆனால், ஒருசில ஆண்டுகள் மட்டுமே டெல்டா விவசாயிகளுக்குக் குறுவை கைகூடியுள்ளது.

இந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டால் தஞ்சையில் 1,07,500 ஏக்கர், திருவாரூரில் 77,500 ஏக்கர், நாகப்பட்டினத்தில் 1,30,000 ஏக்கர் என மொத்தம் 3,15,000 ஏக்கரில் குறுவைச் சாகுபடி நடைபெறும் என்பது வேளாண்மைத்துறையின் எதிர்பார்ப்பு. கடைசியாக 2011-ம் ஆண்டு, காவிரி டெல்டாவின் குறுவைப் பாசனத்துக்கு ஜூன் 12-ம் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் 1,00,707 ஏக்கர், திருவாரூரில் 97,250 ஏக்கர், நாகப்பட்டினத்தில் 1,07,120 ஏக்கர் என மூன்று மாவட்டங்களில் மொத்தம் 3,05,077 ஏக்கரில் குறுவைச் சாகுபடி நடைபெற்றது. ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாமல் தள்ளிப்போனால், இந்த மூன்று மாவட்டங்களிலும் சேர்த்து ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் ஏக்கரில் மட்டுமே போர்வெல்லை நம்பி குறுவை நெல் சாகுபடி நடைபெறும்.

இந்த முறை ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவதால், டெல்டா மாவட்டங்களுக்கு முழுப் பலன் கிடைக்குமா? அதற்கு முன், டெல்டா பாசனக் கட்டமைப்பைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் காவிரி நீர், கல்லணை வந்தடைகிறது. கல்லணையிலிருந்து காவிரி, கல்லணைக் கால்வாய், வெண்ணாறு, கொள்ளிடம் ஆகிய நான்கு ஆறுகளாகப் பிரிந்து தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை மற்றும் அரியலூர் மாவட்டத்தின் ஒரு பகுதி வரை சென்றடைகிறது. கல்லணைக் கால்வாய் தஞ்சாவூர் வழியாகப் புதுக்கோட்டை மாவட்டத்தை அடைகிறது. காவிரி ஆறு கும்பகோணம், மயிலாடுதுறை வழியாகப் பூம்புகார் வரையிலும், வெண்ணாறு மன்னார்குடி வழியாக வேதாரண்யம் பகுதி வரையிலும் செல்கிறது. கொள்ளிடம் ஆறு சீர்காழி, சிதம்பரம் இடையே கடலில் கலக்கிறது. இவை A பிரிவு ஆறுகள் என்று சொல்லப்படும்.

இதிலிருந்து B பிரிவு ஆறுகள், C பிரிவு, D பிரிவு வாய்க்கால்கள் என ஆயிரக்கணக்கில் பிரிகின்றன. குறிப்பாகக் கல்லணைக் கால்வாய் 148 கிலோமீட்டர் நீளம் கொண்டது. அதிலிருந்து கல்யாண ஓடை ஆறு, ராஜாமடம் வாய்க்கால், த.வடகாடு வாய்க்கால் என 17 ஆறுகளாகப் பிரிந்து செல்கிறது. இவற்றிலிருந்து C பிரிவு எனச் சொல்லப்படும் 100 கால்வாய்களும், அவற்றிலிருந்து D பிரிவு எனச் சொல்லப்படும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாய்க்கால்களும் பிரிகின்றன. இதனால்தான் டெல்டா பாசனப் பகுதியின் ரத்த ஓட்டமாகவும் உயிர்நாடியாகவும் விளங்குகிறது காவிரி.

காலத்தே திறக்கப்படும் காவிரி...

காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்போது தான் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப் படுவதால், இந்தப் பணிகள் 30 சதவிகிதம்கூட நிறைவடைய வாய்ப்பில்லை என்று வருத்தப்படுகின்றனர் விவசாயிகள்.

காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகிய பிரதான ஆறுகளிலும் இதன் கிளை ஆறுகளிலும் ஏராளமாகப் புதர்கள் மண்டிக்கிடக்கின்றன. இது மட்டுமல்லாமல், பிரதான வாய்க்கால்கள் மற்றும் கிளை வாய்க்கால்களும் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இவை முழுமையாகத் தூர்வாரப்படுவதற்கு வாய்ப்பில்லாததால், தங்கள் விளைநிலங்களுக்குத் தண்ணீர் வந்துசேர வாய்ப்பில்லை என்ற வருத்தம் கடைமடைப் பகுதி விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

கல்லணைக் கால்வாயில் பெரும்பாலான இடங்களில் கரைகள் பெயர்ந்து உடைப்பு ஏற்பட்டுள்ளது. அவற்றை மணல் மூட்டை களைக் கொண்டு தடுத்து தற்காலிகமாகக் கரைகள் அமைத்து சரிசெய்து வைத்திருக் கிறார்கள். பாசனப் பகுதிகளுக்குத் தண்ணீர் திறந்துவிடும் மதகுகளின் ஷட்டர்கள் சேதமடைந்துள்ளன. கிராமப் பகுதிகளுக்குச் செல்லக்கூடிய D பிரிவு வாய்க்கால்கள் தூர்ந்து காணப்படுகின்றன.

ஒவ்வோர் ஆண்டும் தூர்வார நிதி ஒதுக்கப்பட்டாலும், பணிகள் முறையாக நடைபெறுவதில்லை. குடிமராமத்துத் திட்டத்தின்கீழ் தூர்வாருவதற்கு, 2018-ம் ஆண்டு 14 கோடி ரூபாய், 2019-ம் ஆண்டு 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுப் பணிகள் நடைபெற்றுள்ளன. தற்போது 2020-ம் ஆண்டுக்கு 22 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் கல்லணைக் கால்வாயை மறுசீரமைப்பு செய்ய முதற்கட்டமாக 370 கோடி ரூபாய் ஒதுக்குவதாகக் கடந்த ஆண்டு அறிவித்தது தமிழக அரசு. ஆனால், பணிகள் தொடங்கப்பட்டதாகவே தெரியவில்லை.

கீழ்க் காவிரி வடிநிலைக் கோட்டமான தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் 35 இடங்களில் தூர்வாரும் பணிகள் நடைபெறுகின்றன. இதற்காக 65 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் தாமதமானது என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டு.

கடைமடை பாதிப்புக்கு ஒரு சோற்றுப் பதமாக மும்பாலையைச் சுட்டிக்காட்டுகின்றனர். கல்லணையிலிருந்து 109 கி.மீ தொலைவில் இருக்கும் மேற்பனைக்காடு அணைக்கட்டு வழியாகப் புதுக்கோட்டை மாவட்டத்தில் நுழையும் காவிரி நீர், ஆயிங்குடி, நாகுடி வழியாகச் சென்று மும்பாலையில் முடிவடைகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில், கந்தர்வக்கோட்டையில் 150 ஹெக்டேர், கறம்பக்குடியில் 1,399 ஹெக்டேர், அறந்தாங்கியில் 5,700 ஹெக்டேர், ஆலங்குடியில் 300 ஹெக்டேர், மணமேல்குடியில் 450 ஹெக்டேர், ஆவுடையார்கோவிலில் 860 ஹெக்டேர் என 8,859 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

காலத்தே திறக்கப்படும் காவிரி...

தண்ணீர் கடைமடைவரை கிடைத்தால், மாவட்டத்தில் உள்ள 168 ஏரிகளும் நிரம்பும். ஆனால், பெரும்பாலும் காவிரி நீர், கடைமடை வரையிலும் கிடைப்பதில்லை. இதுதொடர்பாகப் பேசிய புதுக்கோட்டை மாவட்ட கல்லணைக் கால்வாய் பாசனதாரர் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கத் தலைவர் அத்தாணி ராமசாமி, ‘‘கல்லணையிலிருந்து 148 கி.மீ தொலைவில் இருக்கும் மும்பாலைக்குத் தண்ணீர் வரவே 10 நாளுக்கு மேலாகிவிடும். அதுவும் மழை பெய்தால்தான் மழைநீருடன் சேர்ந்து காவிரி நீர் கடைமடைவரையிலும் சீராகக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கடைமடைவரை தண்ணீர் வருவதுடன் தண்ணீர் வரத்து தொடர்ந்து இருந்தால் மட்டுமே விவசாயிகள் பயன்பெற முடியும். அதே நேரத்தில் காவிரி நீர் வரும் கரைகள் எதுவும் பலப்படுத்தப்படவில்லை. கொரோனா பிரச்னையால் இந்த வருடம் குடிமராமத்துப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. எனவே, இந்த வருடம் குறுவைச் சாகுபடி நடக்க வாய்ப்பு குறைவாக இருக்கிறது’’ என்றார்.

தூர்வாரும் பணிகளை விரைந்து முடித்தால் மட்டுமே கடைமடைப் பகுதிகளுக்குக் காவிரி நீர் சென்று சேரும் என்பது நிதர்சனமான உண்மை. இதனை உணர்ந்துகொண்ட தமிழக அரசு, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கரூர், திருச்சி, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகளைப் பார்வையிட்டு அரசுக்கு அறிக்கை அளிக்க, சிறப்புக் கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்துள்ளது.

அதிகாரிகள் விரைந்து செயலாற்றி, கடைமடைப் பகுதிகளுக்குத் தண்ணீர் சென்று சேர உதவுவார்களா?

‘‘காவிரி நீரைப் பெறுவதில் அலட்சியம் கூடாது!’’

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் பொதுச்செயலாளர் சுவாமிமலை விமலநாதன், ‘‘புதிய பயிர்க்கடன் வழங்குவதற்கான கோப்புகள் அனுப்பியும் இன்னும் கூட்டுறவுத்துறை பயிர்க்கடன் வழங்குவதற்கான உத்தரவு பிறப்பிக்காமல் இருக்கிறது. கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி விவசாய இடுபொருள்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலையை உயர்த்திவிட்டார்கள். இதனால் விவசாயிகளுக்குக் கூடுதல் செலவு ஏற்படும். இந்தச் சமயத்தில் மத்திய, மாநில அரசுகள் பயிர்க் காப்பீட்டு நிறுவனங்கள் தரவேண்டிய சுமார் 1,600 கோடி ரூபாயைப் பெற்றுத்தர முன்வர வேண்டும். அதே நேரம் கர்நாடக அரசு தரவேண்டிய காவிரி நீரைப் பெறுவதில் அலட்சியம் கூடாது’’ என்றார்.

விமலநாதன் - ஆறுபாதி கல்யாணம்
விமலநாதன் - ஆறுபாதி கல்யாணம்

‘‘விவசாயிகளுக்கு உதவும் திட்டங்கள் வேண்டும்!’’

விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஆறுபாதி கல்யாணம், “கொரோனா ஊரடங்கால் முடங்கிக்கிடக்கும் விவசாயிகளுக்குத் தண்ணீர் தந்தால் மட்டும் போதாது. முன்பு ஜெயலலிதா அறிவித்த குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தையும் அமல்படுத்த வேண்டும். அது விவசாயிகளுக்கு உதவியாக இருந்தது. தெலங்கானாவில் ‘ரயத்து பந்து’ என்ற திட்டத்தைச் செயல்படுத்து கிறார்கள். ஒரு ஏக்கருக்கு 5,000 ரூபாய் வீதம் இரண்டு பருவத்துக்கு 10,000 ரூபாயை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கிறார்கள். கிட்டத்தட்ட 14,000 கோடி ரூபாய்க்கான திட்டம். அதுபோல் தமிழக விவசாயிகளுக்கு உதவும் திட்டம் கொண்டுவர வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவித்தால் மட்டும் போதாது. விவசாய வளர்ச்சிக்கு முழுமையாக மத்திய, மாநில அரசுகள் உதவிட வேண்டும்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு