Published:Updated:

விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடு... வெங்காய ஏற்றுமதிக்கு தடைவிதித்த மத்திய அரசு!

வெங்காயம்
வெங்காயம்

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே இருக்கிறது. இதனால் வெங்காய விலையைக் கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து வகை வெங்காயம் ஏற்றுமதிக்கும் மத்திய அரசு தடைவிதித்துள்ளது.

இந்தியாவில் வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், கிழக்கு ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் அதிக அளவில் வெங்காயம் பயிரிடும் மாநிலங்களாகும். கடந்த சில வாரங்களாக அதிக அளவில் பெய்த மழையால் வெங்காயம் விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

வெங்காயம் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கும்போது, தட்டுப்பாடு இருப்பதைத் தெரிந்து கொள்ளும் வியாபாரிகள் அதைப் பதுக்கி வைக்க அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன.
விவசாயச் சங்க செயற்பாட்டாளர்கள்

இதன் காரணமாக வெங்காயத்துக்கு ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாட்டால் சந்தைகளில் வெங்காயத்தின் வரத்து குறைந்தது. சந்தையில் இதன் காரணமாக வர்த்தகத்தில் வெங்காயத்துக்குத் தட்டுப்பாடு உருவாகி, கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

இந்த விலையேற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவரும் விதமாக, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என அனைத்து வகை வெங்காய ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அத்துடன், இந்தத் தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த வெங்காய உற்பத்தியில் 28 சதவிகிதம், மகாராஷ்டிரா மாநிலத்தில் உற்பத்தியாகிறது. இந்தியாவில் சராசரியாக 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை வெங்காயம் விற்பனையாகிறது.

வெங்காயம்
வெங்காயம்

வழக்கமாக மழைக்காலங்களில் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்படும்போது மத்திய அரசு வெங்காயம் ஏற்றுமதிக்குத் தடை விதிப்பது இயல்பான ஒன்றுதான். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமும் இதேபோல வெங்காய ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. "வெங்காயம் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கும்போது, தட்டுப்பாடு இருப்பதைத் தெரிந்து கொள்ளும் வியாபாரிகள் அதைப் பதுக்கி வைக்க அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் விவசாயிக்கு எந்தவிதமான நன்மையும் கிடைக்கப்போவது இல்லை" என்கிறார்கள், விவசாயச் சங்க செயற்பாட்டாளர்கள்.

அடுத்த கட்டுரைக்கு