Published:Updated:

பட்டு வளர்ப்பில் தமிழக அளவில் இரண்டாவது இடம்... சாதித்த தேனி!

பட்டுப்புழு
பட்டுப்புழு

பட்டுக் கூடு வளர்ப்பில் தமிழகத்தில் தேனி மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

நிலையான வருமானம் கிடைப்பதால், விவசாயிகள் பலர் பட்டு வளர்ப்பில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, தேனி மாவட்டத்தின் சீதோஷ்ணநிலை பட்டு வளர்ப்புக்கு ஏற்றதாக இருப்பதால், தேனி மாவட்ட விவசாயிகள் பலரும் பட்டு வளர்ப்புக்கு மாறிவருகின்றனர். இதனால், மாவட்டத்தின் பட்டுக் கூடு உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும் தமிழகத்தில் பட்டு வளர்ப்பில் தேனி மாவட்டம் இரண்டாம் இடம் பிடித்திருப்பதாகவும் பட்டுவளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பட்டுக்கூடு
பட்டுக்கூடு

இது ஒருபுறம் என்றால், பட்டு வளர்ப்பை மேலும் அதிகப்படுத்த, மத்திய அரசின் `ஒரு உற்பத்தி… ஒரு மாவட்டம்…’ என்ற திட்டம் தேனி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாகப் பட்டு வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். அவர், ``தேனி மாவட்டத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் விவசாயிகள் பலரும் பட்டு வளர்ப்புக்கு மாறியுள்ளனர். மத்திய அரசின் இத்திட்டத்துக்கு, தமிழ்நாட்டில் தேனி, புதுக்கோட்டை மாவட்டங்கள் தேர்வாகியுள்ளன.

`அன்று ஊசி ஈ.. இன்று குருத்துப்புழு..!’- வேதனையில் தேனி பட்டு விவசாயிகள்

தற்போது உள்ள பட்டு உற்பத்தியை அதிகப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம். அதற்கான சிறப்பு மானியம் இருக்கும். அதாவது மானியத் தொகை கூடுதலாகக் கிடைக்கும். தேனி மாவட்டத்தில் இன்னும் திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. தற்போது திட்டமிடலில் மட்டுமே உள்ளது. மாவட்டம் முழுவதும் சுமார் 170 விவசாயிகளைப் பட்டுவளர்ப்பில் ஈடுபடுத்துவதே இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்குள் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துவிடும்” என்று கூறினார்.

பட்டு வளர்ச்சித்துறை
பட்டு வளர்ச்சித்துறை

தேனி மாவட்டத்தில் சுமார் 500 ஏக்கருக்கு மேல் மல்பெரி சாகுபடி செய்து பட்டு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர் விவசாயிகள். வெண்பட்டுக் கூடு கிலோ ரூ. 250 முதல் ரூ. 300 வரை விலை போகிறது. மாதமாதம் நிலையான வருமானம் கிடைப்பதால் விவசாயிகள் பலரும் பட்டுவளர்ப்பில் ஆர்வமுடன் பட்டு வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். மத்திய அரசின் ஒரு உற்பத்தி… ஒரு மாவட்டம் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, சிறப்பு மானியம் உள்ளிட்ட சலுகைகளால் மாவட்டத்தின் பட்டு வளர்ப்பு மேலும், அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

”வாங்குன கடனுக்கு வட்டி கட்ட வேண்டாமா?!” -விலை குறைவால் வேதனையில் தேனி பட்டு விவசாயிகள்
அடுத்த கட்டுரைக்கு