Published:Updated:

ஒரு ஏக்கர்... ரூ. 1 லட்சம் ... செம்மையான வருமானம் தரும் செங்கல்பட்டு சிறுமணி!

நெல் வயலில் ராஜா
News
நெல் வயலில் ராஜா

மகசூல்

ஒரு வருஷமாவே செங்கல்பட்டு சிறுமணி ரகத்தைத் தேடிக்கிட்டிருந்தேன். `குதிரைவாலி சிறுமணி’ என்று ஒரு ரகம் இருக்கிறது. அது சன்ன ரகம். செங்கல்பட்டு சிறுமணி ஆறு மாதப் பயிர்.

“பாரம்பர்ய ரகங்களில் முக்கியமானது, செங்கல்பட்டு சிறுமணி நெல் ரகம். இந்த ரகத்தை எங்கெங்கேயோ தேடி அலைஞ்சேன். ஒருவழியாக வாங்கி விதைச்சேன். இப்போ அறுவடையும் செஞ்சுட்டேன். இனி விதையைப் பரவலாக்கப்போறேன்’’ என்று மகிழ்ச்சியாகச் சொல்கிறார் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் வசித்துவரும் ராஜா, அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிங்கிலிமேடு என்ற கிராமத்தில் விவசாயம் செய்துவருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னரே பசுமை விகடன் வாசகர்களுக்கு ராஜா அறிமுகமானவர்தான். செங்கல்பட்டு சிறுமணி நெல் ரகத்துக்காக அவரைச் சந்தித்துப் பேசினோம்.

நெல்
நெல்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“நாங்க பரம்பரை விவசாயக் குடும்பம். அப்பாவுக்கு 40 ஏக்கர் நிலமும் ரைஸ்மில்லும் இருந்தது. எங்க பகுதி நெல் சாகுபடிக்குப் பெயர் பெற்றது. முப்போகமும் நெல் விளையும். `பொன்னேர் கட்டி உழுத பகுதிங்கறதாலதான் பொன்னேரி’ங்கற பேர் வந்தது’னு பெரியவங்க சொல்வாங்க. தமிழ்நாட்டுல முக்கியமான நெல் சந்தை இருக்கும் செங்குன்றமும் பக்கத்துலதான் இருக்கு. பொதுவா எங்க பகுதியில ‘பாபட்லா’ங்கற ‘பி.பி.டி’ ரக நெல்லைத்தான் அதிகம் சாகுபடி செய்யறாங்க.

இப்போ என்கிட்ட இருக்கிற மொத்த நிலத்துலயும் நெல் சாகுபடிதான் செய்யறேன். அப்பப்போ காய்கறிகள் பயிர் செய்வேன். இப்போ செங்கல்பட்டு சிறுமணி போட்டிருக்கிற நிலம் மணல் கலந்த களிமண்கொண்டது. ‘போர்வெல்’ பாசனம். பக்கத்துல சிங்கிலிமேடு ஏரி இருக்கறதால போர்வெல்ல எப்பவும் தண்ணி கிடைக்கும். நாலு வருஷத்துக்கு முன்னாடி பசுமை விகடன் படிக்க ஆரம்பிச்சேன். அதுலதான் இயற்கை விவசாய முறைகள் பத்தித் தெரிஞ்சுகிட்டேன். தொடர்ந்து படிக்கப் படிக்க இயற்கை விவசாயம்மேல ஆர்வம் அதிகமாகிடுச்சு. மொத்த நிலத்தையும் ஒரேயடியா மாத்த முடியலைங்கறதால, படிப்படியா ரசாயன உரங்களைக் குறைச்சுக்கிட்டே வந்தேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னால, ஒரு ஏக்கர் நிலத்துல இயற்கை முறையில அறுபதாம் குறுவை நெல் ரகத்தைச் சாகுபடி செஞ்சேன். அதுல நல்ல விளைச்சல் கிடைச்சுது. பசுமை விகடன் மூலமா விற்பனையும் சுலபமா இருந்துச்சு. அந்த தைரியத்துல அடுத்து அஞ்சு ஏக்கர் நிலத்துல ஆத்தூர் கிச்சலிச் சம்பா ரக நெல்லைச் சாகுபடி செய்தேன்” என்ற ராஜா, தொடர்ந்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“ஒரு வருஷமாவே செங்கல்பட்டு சிறுமணி ரகத்தைத் தேடிக்கிட்டிருந்தேன். சில இடங்கள்ல காட்சிக்கு மட்டும்வெச்சிருந்தாங்க. விழுப்புரம் பக்கத்துல ஒரு பெரியவர் வெச்சிருக்கறதா கேள்விப்பட்டு அவர்கிட்ட விதைநெல் கேட்டேன். அவர் கொடுக்க மறுத்துட்டார். கடைசி முயற்சியா பசுமை விகடன்ல வர்ற பசுமைச் சந்தைப் பக்கத்துல விளம்பரம் கொடுத்தேன். ஆந்திர மாநிலம், தடாவுல இருந்து ஓர் அழைப்பு வந்துச்சு. அப்போ பேசின விவசாயி, ‘என்கிட்ட கொஞ்சம் விதைநெல் இருக்கு. உங்களுக்குத் தர்றேன்’னு சொன்னார்.

நெல் வயலில் ராஜா
நெல் வயலில் ராஜா

நானும் போய் வாங்கிட்டு வந்தேன். ஆற்காடு பகுதியைச் சேர்ந்த முன்னோடி நெல் விவசாயி உதயசங்கர்கிட்ட கொடுத்து சோதனை செஞ்சு கொடுக்கச் சொன்னேன். அவரும் பல விவசாயிகள்கிட்ட காட்டி, சோதனை செஞ்சு உறுதி செஞ்சாரு. அதுக்கு அப்புறமாத்தான் இந்த நெல்லை விதைச்சேன். இந்த ரக அரிசி சோறா சமைச்சு சாப்பிடறதுக்கும், இட்லி, தோசைக்கும், கஞ்சிக்கும் ரொம்பவே நல்லாருக்கும். ரெண்டு கிலோ விதை நெல்லைவெச்சு பெருக்கி, இப்போ ஒரு ஏக்கருக்கு விதைச்சிருக்கேன். நெல்லுக்கு மண்புழு உரம், எருதான் பயன்படுத்தியிருக்கேன்.

ஒரு ஏக்கர்... ரூ. 1 லட்சம் ...  செம்மையான வருமானம் தரும் செங்கல்பட்டு சிறுமணி!

என்கிட்ட மாடுகள் இருக்கறதால தொழுவுரத்துக்குப் பஞ்சமில்லை. மாடுகளின் சாணம், மூத்திரத்தை எடுத்து ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா, மூலிகைப் பூச்சிவிரட்டினு தயார் பண்ணிக்கிறேன். அதோடு மீன் அமிலத்தையும் தயாரிச்சு பயிருக்குக் கொடுக்கிறேன். எல்லாத்தையும் பசுமை விகடன் மூலமாத்தான் தெரிஞ்சுகிட்டேன். செங்கல்பட்டு சிறுமணி ரக நாற்றுகளை நடவு செஞ்சு 182 நாள்ல அறுவடை செஞ்சேன். ஒரு ஏக்கருக்கு 25 மூட்டை கிடைக்கும்னு எதிர்பார்த்தேன். ஆனா, 22 மூட்டைதான் (78 கிலோ)கிடைச்சிருக்கு.

நண்பர்களெல்லாம் விதைநெல்லா கேட்டிருக்காங்க. அதனால ஒரு கிலோ நெல் 70 ரூபாய்னு விற்பனை செய்யலாம்னு இருக்கேன். 22 மூட்டைக்கு 1,716‬ கிலோ விதைநெல் கிடைக்கும். கிலோ 70 ரூபாய்னு விற்பனை செஞ்சா 1,20,120 ரூபாய் கிடைக்கும். அதுல நிலத்தைத் தயார் செய்யறதுல இருந்து அறுவடை வரைக்கும் 20,000 ரூபாய் வரை செலவாகியிருக்கு. ஒரு ஏக்கர் நிலத்துல 1,00,120 ரூபாய் லாபமாகக் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். இதை அரிசியா மாத்தி நேரடியா விற்பனை செய்யறப்போ இந்த லாபம் இன்னும் அதிகமாகும்” என்ற ராஜா நிறைவாக,

“அறுவடையான நெல்லை அரிசியாக்கி விற்பனை செய்ய முடியும். ஆனா, விதைப்பரவல் நடக்காது. நான் அலைஞ்சு திரிஞ்சது மாதிரி யாரும் அலையக் கூடாதுனு நினைக்கிறேன்.” என்கிறார்.

தொடர்புக்கு, ராஜா, செல்போன்: 96000 00376.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்படித்தான் சாகுபடி

ரு ஏக்கர் நிலத்தில் செங்கல்பட்டு சிறுமணி நெல் சாகுபடி செய்யும் தொழில்நுட்பம் குறித்து ராஜா சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே...

ஒரு ஏக்கர் விதைப்புக்கு 15 சென்ட் நாற்றங்கால்

ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு 15 சென்ட் நிலத்தில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். நாற்றங்கால் நிலத்தில் 100 கிலோ மேம்படுத்தப்பட்ட எரு மற்றும் 100 கிலோ மண்புழு உரம் ஆகியவற்றைப் போட்டு மூன்று முறை உழுது சமப்படுத்த வேண்டும். பிறகு, விதை நேர்த்தி செய்யப்பட்ட 18 கிலோ விதைநெல்லை நாற்றங்காலில் பரவலாகத் தூவ வேண்டும். 15-ம் நாள் நான்கு லிட்டர் தண்ணீரில் 500 மி.லி அமுதக்கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். 27-ம் நாளில் ஓரடி உயரத்துக்கு நாற்றுகள் வளர்ந்து நடவுக்குத் தயாராகிவிடும்.

நாற்றுத் தயாராகும்போதே நடவு வயலையும் தயார் செய்வது அவசியம். மூன்று டன் மாட்டு எரு கொட்டி, மூன்று சால் உழவு ஓட்ட வேண்டும். மூன்றாவது சால் ஓட்டும்போது நிலத்தைச் சமன் செய்ய வேண்டும். உழவு ஓட்டும்போதே மண்புழு உரத்தையும், ஐந்து கிலோ பாஸ்போ பாக்டீரியாவையும் தூவினால் விளைச்சலை அள்ளிக்கொடுக்கும். பிறகு, வளர்ந்த நாற்றுகளை எடுத்து நட வேண்டும். சரியாக வாரம் இரு முறை அல்லது மூன்று முறை தண்ணீர் கொடுக்கலாம். நடவு செய்த 15-ம் நாள் பாசன நீருடன் ஜீவாமிர்தம் கலந்து கொடுக்க வேண்டும். மேலும், அடுத்த 35-ம் நாள் கைக்களை எடுக்க வேண்டும். களையெடுத்த பிறகு பாசன நீருடன் பஞ்சகவ்யா கலந்துவிடலாம். இது பயிரின் வளர்ச்சியை அதிகரிக்கும். பிறகு, அசோஸ்பைரில்லம், வேப்பம் பிண்ணாக்கு, சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா விரிடி ஆகியவற்றில் தலா இரண்டு கிலோ வீதம் எடுத்து அடியுரமாகக் கொடுக்கலாம்.

40, 55 மற்றும் 80-ம் நாள்களில் ஜீவாமிர்தம் தெளிக்க வேண்டும். தேவைப்பட்டால் இரண்டாம் களை எடுக்கலாம். நெற்கதிர் பால் பிடிக்கப் போகும் முன்பு, பூச்சிவிரட்டித் தெளித்துவிட வேண்டும்.

கதிர் முற்றத் தொடங்கும்போது நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்த வேண்டும். சரியான முறையில் இயற்கைத் தொழில்நுட்பங்களைக் கையாண்டால் 180-ம் நாள் அறுவடைக்கு வந்துவிடும்.

தொண்டை மண்டல ரகம்

செங்கல்பட்டு சிறுமணி நெல் ரகம் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்ட முன்னோடி இயற்கை விவசாயி ‘அரியனூர்’ ஜெயச்சந்திரன், “செங்கல்பட்டு சிறுமணி நெல் ரகம், தொண்டை மண்டலத்துக்கே உரித்தானது. நாற்றுவிட்டு 75 நாள்கள் வரை நடலாம். உயரமாக வளரும். பூச்சி நோய்த்தாக்குதல் அண்டாத நெல் ரகம். இதில் குதிரைவாலி சிறுமணி என்று ஒரு ரகம் இருக்கிறது. அது சன்ன ரகம்.

ஒரு ஏக்கர்... ரூ. 1 லட்சம் ...  செம்மையான வருமானம் தரும் செங்கல்பட்டு சிறுமணி!

செங்கல்பட்டு சிறுமணி ஆறு மாதப் பயிர். சாப்பாடு மற்றும் இட்லி, தோசைக்கு ஏற்ற ரகம். முதல் போகத்தில் ஆகஸ்ட், செப்டம்பரில் நாற்று விட்டு நடவு செய்யலாம். ஈரப்பதத்தைவைத்தே அதிக விளைச்சல் கொடுக்கக்கூடியது. தண்ணீர்ப் பிரச்னையுள்ள இடங்களில் இந்த நெல்லை விதைக்கலாம்” என்றார்.