Published:Updated:

சென்னையில் அசத்தும் அரண்மனைத் தோட்டம்... ஆற்காடு நவாப்பின் இயற்கை விவசாயம்!

அரண்மனையில் மனைவியுடன் நவாப்ஸதா முகம்மது ஆசிப் அலி
பிரீமியம் ஸ்டோரி
அரண்மனையில் மனைவியுடன் நவாப்ஸதா முகம்மது ஆசிப் அலி

அரண்மனை

சென்னையில் அசத்தும் அரண்மனைத் தோட்டம்... ஆற்காடு நவாப்பின் இயற்கை விவசாயம்!

அரண்மனை

Published:Updated:
அரண்மனையில் மனைவியுடன் நவாப்ஸதா முகம்மது ஆசிப் அலி
பிரீமியம் ஸ்டோரி
அரண்மனையில் மனைவியுடன் நவாப்ஸதா முகம்மது ஆசிப் அலி

மன்னர் ஆட்சி காலத்தைச் சேர்ந்த ‘ஆற்காடு’ நவாப் குடும்பத்தினர் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு, 1690 - 1801 காலகட்டம் வரை நவாப்கள் ஆட்சி செய்தனர். இந்த நவாப்களின் வம்ச வாரிசுகள், தற்போது சென்னையில் வசிக்கின்றனர்.

தலைநகரின் மையப்பகுதியான ராயப்பேட்டையில் பரந்து விரிந்து பிரமாண்டமாகக் காட்சியளிக்கிறது, நவாப் குடும்பத்தினரின் அமீர் மஹால். இதன் நுழைவுவாயிலிலிருந்து அரண்மனை வரையிலும் இருபுறமும் ஈச்ச மரங்கள் அணிவகுக்க, அலங்காரச் செடிகள் மற்றும் பழ மரங்களுடன் அரண்மனை வளாகம் பசுமை சூழ்ந்து இருக்கிறது. ஏராளமான குடியிருப்புகள், விளையாட்டு மைதானம், மசூதி உள்ளிட்ட பல வசதிகளுடன் கூடிய அமீர் மஹாலில் 500-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

அரண்மனையில் மனைவியுடன் நவாப்ஸதா முகம்மது ஆசிப் அலி
அரண்மனையில் மனைவியுடன் நவாப்ஸதா முகம்மது ஆசிப் அலி

நவாப் குடும்பத்தின் 8-வது இளவரசரும் நவாப் வம்சத்தின் திவானுமான நவாப்ஸதா முகம்மது ஆசிப் அலி, அரண்மனையின் நிர்வாகப் பணிகளைக் கவனித்து வருகிறார். இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்டவரான நவாப்ஸதா, அமீர் மஹாலில் இரண்டரை ஏக்கரில் தோட்டம் அமைத்திருக்கிறார். அதில், அறுவடை பணிகள் முடியும் தறுவாயில் நூற்றுக்கணக்கான மா மரங்கள் செழிப்பாய்க் காட்சியளித்தன. தவிர, பலா, வாழை, சப்போட்டா உள்ளிட்ட பலவிதமான பழ வகை மரங்களுடன் கூடிய இந்தத் தோட்டம் அமீர் மஹாலுக்குக் கூடுதல் சிறப்பு கூட்டுகிறது. அரண்மனை வேளாண்மையைப் பார்வையிடும் ஆவலுடன் அங்கு சென்றோம். இன்முகத்துடன் நம்மை வரவேற்ற நவாப்ஸதா, தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார்.

தோட்டத்தைப் பற்றி விளக்கும் நவாப்ஸதா
தோட்டத்தைப் பற்றி விளக்கும் நவாப்ஸதா

“குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர், முதல்வர், தேசிய தலைவர்கள் மாநிலத் தலைவர்கள்னு இன்னும் பல வி.வி.ஐ-பிக்கள் எங்க நவாப் குடும்பத்தோடு நட்பு பாராட்டுவாங்க. அவங்கள்ல பலரும் எங்க அரண்மனைக்கு வருகை தருவாங்க. அதனால, விருந்தினர்களைக் கவரும் வகையில அலங்காரச்செடி வளர்ப்புலதான் கவனம் செலுத்திக்கிட்டு இருந்தோம். இயற்கை விவசாயம் பத்தின விழிப்புணர்வு அதிகரிக்க ஆரம்பிச்ச பிறகுதான், இதுக்குனு ஒரு பிரத்யேகமான தோட்டம் அமைக்கும் ஆர்வம் ஏற்பட்டுச்சு. இதுக்கு முன்னாடி இந்த இடத்துல புளியமரங்கள் இருந்துச்சு. அதையெல்லாம் அப்புறப்படுத்திட்டு, செம்மண்ணும் எருவும் கொட்டி நிலத்தை வளப்படுத்தினோம்.

விருந்தினர்களுக்குப் பரிசளிக்க மாம்பழ சாகுபடி

எங்க குடும்பத்துல எல்லாருக்கும் மாம்பழம் ரொம்ப பிடிக்கும். எங்க அரண்மனைக்கு வரக்கூடிய விருந்தினர்களுக்குப் பரிசா கொடுக்குறதுக்கும் உதவுமேன்னு மா மரங்களை அதிக எண்ணிக்கையில வளர்க்க முடிவெடுத்தேன். சென்னையின் சீதோஷ்ண நிலைக்கு இமாம் பசந்த், பங்கனப்பள்ளி ரகங்கள் நல்லா வளரும்னு நண்பர்கள் சொன்னாங்க. அந்த ரெண்டு ரகங்களோடு பெங்களூரா ரகத்தையும் சாகுபடி செய்ய முடிவெடுத்தேன். ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து மாங்கன்றுகளை வாங்கிக்கிட்டு வந்தோம். ஆறு வருஷங்களுக்கு முன்பு நடவு செஞ்ச கன்றுகள், அடுத்த மூணாவது வருஷத்துல இருந்து பலன் கொடுக்க ஆரம்பிச்சது.

தோட்டத்தில் நாவாப்ஸதா
தோட்டத்தில் நாவாப்ஸதா

இங்கு முக்கனிகளும் சங்கமம்

இமாம் பசந்த், பங்கனப்பள்ளி ரகங்கள்ல மொத்தமா 160 மரங்களும், பெங்களூரா ரகத்துல 40 மரங்களும் இருக்குது. இந்த மரங்கள் ஒவ்வொண்ணும் தலா 20 X 20 அடி இடைவெளியில இருக்கு. இதுக்கு இடையில அங்கங்க சப்போட்டா, கொய்யா, சாத்துக்குடி, பப்பாளி, நெல்லி, எலுமிச்சை மரங்கள் வெச்சிருக்கோம். தோட்டத்தோட வேலி ஒரங்கள்ல 30 ரஸ்தாளி வாழைமரங்களும், மூணு பலா மரங்களும் வளர்க்குறோம். தோட்டத்தைச் சுத்தி நிறைய தென்னை மரங்கள் மரங்கள் வளர்க்குறோம். வருஷந்தோறும் ஆடிப்பட்டத்துல இங்க ஊடுப்பயிரா காய்கறிகள், பலவிதமான கீரைகளும் சாகுபடி செய்வோம்.

பெங்களூரா ரகம் கொஞ்சம் புளிப்புச்சுவையோடு இருக்கும். இமாம் பசந்த், பங்கனப்பள்ளி... இந்த ரெண்டு ரகங்களும் இனிப்பா இருக்கும். எங்க தோட்டத்துல விளையுற வாழை, கொய்யா, சப்போட்டா, பலா உள்பட எல்லாப் பழங்களுமே அதிக சுவையோடு இருக்கும்.

நுழைவாயில்
நுழைவாயில்

அறுவடை

வருஷந்தோறும் மே மாசத்துல மா அறுவடையை முடிச்சுடுவோம். போன வருஷம் மூணு ரகங்கள்லயுமே நல்ல விளைச்சல் இருந்ததோடு, ஒவ்வொரு மரத்துலயும் 100 காய்களுக்கு மேல கிடைச்சது. அதுக்குப் பிறகு சில மாசங்கள் கழிச்சி, மாமரங்கள்ல நிறையப் பூ வச்சிருந்துச்சு. பலமான காத்து வீசினதுனாலயும் வடகிழக்குப் பருவமழை இயல்புக்கு அதிகமா பெய்ஞ்சதுனாலயும் பூக்கள் நிறையவே கொட்டிப்போச்சு. இதனால, இந்த வருஷம் சீஸன் தள்ளிப்போனதோடு, ஒவ்வொரு மரத்துலயும் 50 சதவிகித அளவுக்கு விளைச்சல் குறைஞ்சுடுச்சு.

பகிர்ந்து உண்போம்

இந்த அமீர் மஹால்ல எங்க குடும்பத்தினர், பணியாளர்கள்னு நூத்துக்கணக்கானோர் வசிக்கிறோம். தோட்டத்து விளையுற எந்த விளைபொருளா இருந்தாலும், இங்க இங்கிருக்கிற எல்லா வீட்டுக்கும் கொடுப்போம்.

மாந்தோட்டம்
மாந்தோட்டம்


அளவு கடந்த சந்தோஷம்

என்னோட நண்பர்கள் பலரும் இயற்கை விவசாயம் பண்றாங்க. அவங்கங்க தோட்டத்துல விளையுற பொருள்களை மத்தவங்களுக்குப் பகிர்ந்துக்குவோம். எங்க அரண்மனைக்கு வரக்கூடிய விருந்தினர்களுக்கு, எங்க தோட்டத்துப் பழங்களை அன்பு பரிசா கொடுக்கிறதை வழக்கமா கடைப்பிடிக்கிறேன். எங்க அரண்மனைத் தோட்டத்துல விளையுற பொருள்களை விற்பனை செய்யக்கூடாதுங்கறதுல உறுதியா இருக்கேன். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நஞ்சில்லாத உணவு ரொம்பவே அவசியம். அப்படிப்பட்ட உணவுப் பொருள்கள் எங்களோட அரண்மனை தோட்டத்துலயே விளையுதுனு நினைக்குறப்பவே அளவுகடந்த சந்தோஷம். அரண்மனையிலயே இயற்கை விவசாயம்தான் செய்றாங்கனு மத்தவங்களையும் இது ஊக்கப்படுத்துது.

தோட்டம் காக்கும் முத்துக்குமார்

எனக்கு நேரம் கிடைக்குற தோட்டத்தைப் பார்வையிடுவேன், ஆலோசனைகள் சொல்லுவேன், அவ்வளவுதான். மத்தபடி, இவர்தான் இந்தத் தோட்டத்தைக் கண்ணும் கருத்துமா கவனிச்சுக்கிறார்” என்று சொன்ன நவாப்ஸதா, தனக்கு அருகில் இருந்த தோட்டப் பராமரிப்பாளர் முத்துக்குமாரை நமக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

தோட்டத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு முறைகள் குறித்துப் பேசிய முத்துக்குமார், “எந்த ரசாயனமும் உபயோகப்படுத்தாத மண் இது. வளமான இந்த நிலத்துல எந்தப் பயிரை போட்டாலும் நல்லா விளையும். அறுவடை முடிஞ்சதும் இங்கவுள்ள மரங்களை முறையா கவாத்து பண்ணுவோம். நாலஞ்சு மாசங்களுக்கு ஒரு தடவை களை எடுப்போம். ஆழ்த்துளைக்கிணத்துப் பாசனம்தான். தண்ணீருக்குப் பிரச்னையில்லை. ஆனாலும் கூட, காய்ச்சலும் பாய்ச்சலுமா சிக்கனமாதான் பாசனம் பண்றோம். மரங்கள்ல இருந்து உதிரக்கூடிய இலைத்தழைகளை மூடாக்காப் போடுவோம். அது மட்கி மண்ணுக்கு உரமாகுது.

அணிவகுக்கும் வாழைமரங்கள்
அணிவகுக்கும் வாழைமரங்கள்

இந்த ஏரியாவுல மாடு வளர்க்கிற ஒருத்தர்கிட்ட சாணம், சிறுநீர் வாங்கி, இடுபொருள்கள் தயாரிச்சிக்குறோம். பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், மீன் அமிலம், பூச்சிவிரட்டியைத் தயாரிச்சிப் பயன்படுத்துறோம். சுழற்சி முறையில ஆறு மாசத்துக்கு ஒருமுறை மாட்டு எருவும் ஆட்டு எருவும் கொடுப்போம். இயற்கை விவசாயத்துக்கான முன்மாதிரி தோட்டமா இதை உருவாக்கிக் காட்டணும்னு நவாப் சார் அடிக்கடி சொல்லுவார். அவர் ஆசைப்படுற மாதிரியே முழுக்க முழுக்க இயற்கை முறையில தோட்டத்தைப் பராமரிக்கிறதால, அணில்கள், பலவிதமான பறவைகள் இந்தத் தோட்டத்துக்கு விருந்தாளிங்களா வந்துட்டு போகுதுங்க. அதுங்க சாப்பிட்டது போக மீதியிருக்குற பழங்கள்தான் எங்க பயன்பாட்டுக்கு” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.