Published:Updated:

மாதம் ₹1,50,000 வருமானம், கார்ஷெட்டுக்குள் ஒரு மாட்டுப்பண்ணை... கலக்கும் சென்னை தம்பதி!

``நாட்டு மாடுகள்ல கிடைக்குற பால், சாணத்தை வச்சி நெய், வறட்டி, பஞ்சகவ்யா, தொழுவுரம், ஜீவாமிர்தம், பூச்சிவிரட்டி, விபூதி, கோ அர்க், சாம்பிராணி, தைலம், அகர்பத்தி, இயற்கை ஃப்ளோர் கிளினர், சோப்புனு 25 பொருள்களுக்கு மேல தயாரிக்கிறோம்." - மணிகண்டன் - ப்ரீதா தம்பதியினர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``எங்க வீட்டைச் சுத்தி இருக்குற 600 சதுர அடி நிலத்துல முதல்ல கார் ஷெட் இருந்தது. என் குழந்தைக்கு பால் வேணும்னு யோசிச்சப்போ எங்க கிடைக்கும்னு தேடிட்டிருந்தேன். அந்த நேரம் ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்துகிட்டிருந்தது. அப்போதான் எனக்கு நாட்டு மாடுகளைப் பத்தி தெரிய ஆரம்பிச்சது. அதனால நாம் ஏன் மாடு வளர்க்கக் கூடாதுங்குற எண்ணம் வந்தது. அதனால முதல் மாடு வாங்கிட்டு வந்தேன். அப்புறம் காரை நிரந்தரமா வெளிய விட்டுட்டேன். இப்போ கார் நிறுத்துற இடத்துல மூணு மாடுகளைக் கட்டியிருக்கேன்" என்று முன்னுரை கொடுத்த மணிகண்டனைத் தொடர்ந்து பேச ஆரம்பித்தார் ப்ரீதா.

மணிகண்டன் - ப்ரீதா
மணிகண்டன் - ப்ரீதா
kalimuthu.p

``ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்தவரைக்கும் எங்களுக்கு நாட்டு மாடுகள் பத்தின விஷயங்கள் எதுவுமே தெரியாது. அந்தப் போராட்டம் நடந்ததுக்கு அப்புறமாத்தான் இது நம்முடைய பாரம்பர்யத்தைக் காக்க நடக்கிற போராட்டம்னு புரிஞ்சது. உடனே, நான் கிளம்பி கரூர் மாவட்டத்துல இருக்குற `வானகம்’ பண்ணைக்குப் போனேன். என் கணவரும் பக்கத்துல இருக்குற மூணு கோசாலைகளுக்குப் போய் பயிற்சி எடுத்துகிட்டு வந்தார். ரெண்டுபேரும் இயற்கை வழியில நாட்டு மாடு வளர்க்குற முறைகளைக் கத்துக்கிட்டு, வீட்டுத் தேவைக்காக ஒரு மாட்டை வாங்கி வளர்க்க ஆரம்பிச்சோம்.

அதுதான் இப்போ இவ்ளோ நாட்டு மாடுகளா பெருகி இருக்குது. முதல் முதலா நாட்டு மாடுகள் வாங்கி வளர்த்துகிட்டிருந்தோம். ஒரு கட்டத்துல பசு சினைக்கு நின்னுடுச்சு. அதனால பால் குறைய ஆரம்பிச்சது. அடுத்ததா போய் கடைகள்ல பால் வாங்கி குடிக்கத் தோணலை. அதனால ரெண்டாவதா ஒரு நாட்டு மாடு வாங்கினோம். ஒரு நாட்டு மாடு வளர்த்தப்போ பெரிசா எங்களுக்கு எதுவும் கஷ்டம் தெரியலை. ரெண்டாவதா ஒரு மாடு வளர்ந்தப்போ பார்த்துக்குறதுக்கு கஷ்டமா இருந்தது. அதனால வேலைக்கு ஆள் வைக்குறதுனு நானும் கணவரும் முடிவு பண்ணினோம். வேலைக்கு ஆள் வைக்குறதுனு ஆயிடுச்சு, அதனால இருந்த இன்னும் கொஞ்சம் இடத்துல அதிகமான நாட்டுமாடுகள் வளர்க்கலாம்னு முடிவு பண்ணினோம். அதனால மொத்தமா 5 மாடுகளை வளர்க்க ஆரம்பிச்சோம். எல்லாமே வட நாட்டு மாடுகளான காங்கிரேஜ், கிர்னு நாட்டுமாடுகளா வாங்கினோம். இப்படித்தான் ஆரம்பிச்சது எங்களோட பயணம்" என்றவரை இடைமறித்துப் பேசினார் மணிகண்டன்.

``என்னுடைய குழந்தைக்கு நல்ல பால் கிடைக்கணும்கிற எண்ணத்துலதான் இதை ஆரம்பிச்சோம். முதல்ல அக்கம்பக்கத்துல இருந்து எதிர்ப்பு வரும்னு நினைச்சேன். ஆனா, எங்க ஏரியாவிலேயே வந்து பால், எரு எல்லாம் வாங்கிட்டுப் போறாங்க. நாங்க பாலைக் கறக்க இன்னும் பழகலை. பக்கத்துல இருக்குற பால்காரர் ஒருவர்தான் வந்து கறந்து கொடுத்துட்டு போவாரு. எங்க பாலை சொசைட்டிக்கோ, கடைகளுக்கோ கொடுக்க எங்களுக்கு விருப்பமே இல்லை. இது மக்களுக்கு போய்ச் சேரணும்னு நினைச்சேன். அதனாலதான் மக்களுக்கு நேரடியாக் கொடுத்துகிட்டு வர்றேன். சந்தையில கிடைக்குற பாலை விட நாங்க விற்பனை செய்யுற பால் விலை அதிகம்தான். ஆனா, சுத்தமான நாட்டு மாட்டுப் பால்ங்குறதால கிட்டத்தட்ட 30 வீடுகளுக்கும் மேல எங்ககிட்ட இருந்து வாங்கிட்டுப் போறாங்க. முதல்முதலா இதை வாங்கிட்டுப் போனவங்க அடுத்தமுறை இன்னும் ஆர்வமா வந்து வாங்கிட்டுப் போனாங்க. அதுதான் சுத்தமான நாட்டுப்பாலோட சுவை. நான் சிறுசேரில இருக்குற ஒரு நிறுவனத்துல வேலை செய்றேன். நாட்டு மாடுகள் மேல அதிக ஆர்வம் இருக்குறதாலதான் இந்தச் சிட்டிக்குள்ளேயே எங்களால வளர்க்க முடியுது.

நாட்டு மாடுகள்
நாட்டு மாடுகள்

எங்க வீட்டுல கார் ஷெட்டுக்காக ஒதுக்குன குறைஞ்ச அளவான இடத்துலதான் மாடுகளை வளர்க்க ஆரம்பிச்சோம். இப்போ மாடுகள் அதிகமானதால பக்கத்திலேயே கொஞ்சம் விரிவாக்கம் செய்திருக்கோம். ஒரு மாட்டுல ஆரம்பிச்சோம். இப்போ, காங்கிரேஜ், கிர், ஹரியானினு 6 மாடுகளும் 4 கன்னுக்குட்டிகளும் இருக்கு. ஒருகட்டத்துல மாடுகள் அதிகமாகிடுச்சு. இதை விடவும் தோணல. அதனால செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கத்துல எங்களுக்கு ரெண்டு ஏக்கர் நிலமிருக்கு. அங்க 25 மாடுகள், 10 கன்னுக்குட்டிகள் இருக்கு. என்கிட்ட இருக்கிறதை மொத்தமா சேர்த்தா 45 உருப்படி இருக்கும். நாட்டுமாட்டுப் பால் விற்பனையோடு, மாடுகள்ல இருந்து கிடைக்கிற சாணத்தைப் பயன்படுத்தி மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களையும் தயாரிச்சு விற்பனை செய்றோம். இந்தப் பொருள்களைத் தயாரிக்கிறதுக்கு மனைவி பயிற்சி எடுத்துருக்காங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாடுகளுக்குத் தேவையான புல்லை காஞ்சிபுரம், செங்கல்பட்டு பக்கத்துல இருந்து வாங்கிக்கிறோம். தேவையான அளவு வைக்கோல், உளுந்துபொட்டு, அரிசித் தவிடு, தீவனங்கள்னு வாங்கி வெச்சுக்குவோம். தவிடு எல்லாம் ஆலந்தூர் மார்க்கெட் பகுதியிலயே கிடைக்குது. மாடுகளைப் பராமரிக்க நிரந்தரமா ஆட்களை வச்சிருக்கோம். மாடுகள் சினையானவுடனே அச்சரப்பாக்கத்துக்குத்தான் கொண்டு போயிடுவோம். கன்று போட்டவுடன் திரும்பவும் இங்கே அழைச்சிட்டு வந்திடுவோம். நாட்டு மாடுகள் பத்தி எல்லோருக்கும் தெரியணும். அதோட பாலை எல்லோரும் சுவைச்சுப் பார்க்கணும்னுதான் இங்க வெச்சு மாடுகளைப் பராமரிச்சிட்டுருக்கோம்” என்றவரைத் தொடர்ந்து பேசினார் ப்ரீதா.

மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள்
மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள்

``நாட்டு மாடுகள்ல கிடைக்குற பால், சாணத்தை வச்சி நெய், வறட்டி, பஞ்சகவ்யா, தொழுவுரம், ஜீவாமிர்தம், பூச்சிவிரட்டி, விபூதி, கோ அர்க், சாம்பிராணி, தைலம், அகர்பத்தி, இயற்கை ஃப்ளோர் கிளினர், சோப்புனு 25 பொருள்களுக்கு மேல தயாரிக்கிறோம். மாடித்தோட்டம் வெச்சிருகிறவங்க இயற்கை இடுபொருள்களை வாங்கிக்கிறாங்க. விபூதி, கோ அர்க், சோப்பு பத்தின விவரம் தெரிஞ்சவங்களும் தேடி வந்து பொருள்களை வாங்கறாங்க. கிராமங்கள்லதான் சந்தையைத் தேடி அலைய வேண்டியிருக்கும். மாநகரப் பகுதிங்கறதால விற்பனைக்குப் பிரச்னையேயில்ல. இப்போ எங்க பொருள்கள் எல்லாம் அமெரிக்கா வரைக்கும் போய்கிட்டிருக்கு. ஒரு நாளைக்கு மொத்தமா 5 மாடுகள்ல இருந்து 35 லிட்டர் பால் கிடைச்சிடும். ஒரு லிட்டர் பால் 100 ரூபாய்க்கு விற்பனை செய்றேன். இதுமூலமா ஒரு நாளைக்கு 3,500 ரூபாய் வருமானமா கிடைக்கும். எப்படிப் பார்த்தாலும் இங்க இருக்குற மாடுகள் கொடுக்குற எல்லா பொருள்களை வச்சு மாசம் ரூ.1,50,000 வரைக்கும் வருமானம் பார்த்திடுவேன். கடைசியா ஒரு விஷயம். மாடுகள் சினைக்கு நின்னுட்டா எல்லோருக்கும் அது பாலைக் கொடுக்க மாட்டேங்குதேனு கஷ்டமா இருக்கும். ஆனா, அது கொடுக்குற சாணம், கோமியத்தை வச்சு என்னவெல்லாம் பொருள்கள் செய்யலாம்னு யோசிச்சா, நல்ல வருமானம் பார்க்கலாம்" என்றபடி விடைகொடுத்தனர் மணிகண்டன் - ப்ரீதா தம்பதியினர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு