Published:Updated:

`தினமும் 3 கிலோ காய்கறிகள் கிடைக்க நான் செய்தது..!' - மாடித்தோட்டத்தில் அசத்தும் மைத்ரேயன்

terrace garden
terrace garden

``வீட்டுத் தேவைக்கான காய்கறிகளில் 80 சதவிகிதம் மாடித்தோட்டத்தின் மூலமே பூர்த்திசெய்துகிறோம். இதற்காக, பெரிசா செலவு செய்றதுமில்லை. ரசாயன உரங்கள் எதுவும் சேர்ப்பதில்லை."

இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளுக்காகவும் நிலமில்லாதபோதும் தங்கள் விவசாய ஆசையை நிறைவேற்றிக்கொள்ளவும், பலரின் தேர்வாக இருப்பது மாடித்தோட்டம். இதன்படி, சென்னையில் மாடித்தோட்டம் அமைப்பவர்கள் அதிகரித்துவருகின்றனர். அத்தகையோரில் ஒருவர்தான் மைத்ரேயன். இவர், கார் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே மாடித்தோட்டத்தையும் சிறப்பாகக் கவனித்துவருகிறார். 

terrace garden
terrace garden

இவரது மாடித்தோட்டத்தில் தற்போது காய்கறிகளின் விளைச்சல் அபாரமாக இருக்கிறது. இதுகுறித்து அவரிடம் பேசுகையில், ``என்னுடைய மாடித்தோட்டத்துல பருவத்துக்கு ஏற்ப நூற்றுக்கணக்கான செடிகளையும் மரங்களையும் வளர்க்கிறேன். இயற்கை முறையில் வீட்டிலேயே பூச்சிவிரட்டிகளைத் தயாரிச்சு, பூச்சித்தாக்குதல்களைக் கட்டுப்படுத்தறேன்.

terrace garden
terrace garden

பஞ்சகவ்யா உள்ளிட்ட இயற்கை கரைசல்கள் சிலவற்றையும் தொடர்ந்து தெளிக்கிறேன். நிழல்வலையை அமைத்திருப்பதுடன், சரியான முறையில் போதுமான அளவில் தண்ணீர் ஊத்திகிட்டிருக்கேன்.

1,200 சதுர அடியில் செழிக்கும் காய்கறிகள்... மகிழ்ச்சி தரும் மாடித்தோட்டம்!

குறிப்பா, இயற்கையாகவே தேனீக்களை அதிகளவில் வரவழைக்கத் திட்டமிட்டேன். சில மாதங்களுக்கு முன்பு சாமந்திப் பூவை மாடித்தோட்டம் முழுக்கவே பரவலா நட்டுவெச்சிருக்கேன். இந்தச் சாமந்திப்பூ தற்சமயம் பூத்துக்குலுங்குது. இதிலிருக்கும் தேனைச் சேகரிக்க, தேனீக்களும் பட்டாம்பூச்சிகளும் அதிகளவில் வருது.

terrace garden
terrace garden

இதனால், மகரந்தச்சேர்க்கை எளிதாக நடந்து, அதிகளவில் காய்கறிகள் உற்பத்தியாகுது. எனவே, தேனீக்களை வரவழைக்க, மாடித்தோட்டத்துல தேனீ பெட்டிகளை நான் வைப்பதில்லை" என்பவர், மகசூல் விவரங்கள் குறித்துப் பேசினார்.

terrace garden
terrace garden

``காய்கறிச் செடிகள், பழ வகை மரங்கள் மற்றும் கீரைகள்ல எப்போதுமே சராசரியான மகசூல் கிடைக்கும். இப்போ, காராமணி, அவரை, கத்திரிக்காய், குடைமிளகாய், பீர்க்கன்காய், கீரைகள், தக்காளி, பச்சைமிளகாய், அத்தி, எலுமிச்சை ஆகியவற்றில் எதிர்பார்த்ததைவிடவும் அபரிமிதமான மகசூல் கிடைக்குது.

terrace garden
terrace garden

என் மாடித்தோட்டத்துல இருந்து தினமும் 3 கிலோ காய்கறிகள் கிடைச்சுடுது. எங்க வீட்டுத் தேவைக்குப் போக, மீதமுள்ள காய்கறிகளை அக்கம் பக்கத்தினருக்குக் கொடுத்திடுவோம்.

வீட்டுத் தேவைக்கான காய்கறிகளில் 80 சதவிகிதம் மாடித்தோட்டத்தின் மூலமே பூர்த்திசெய்கிறோம். இதற்காக, பெரிசா செலவு செய்றதுமில்லை. ரசாயன உரங்கள் எதுவும் சேர்ப்பதில்லை.

terrace garden
terrace garden

எங்க மாடித்தோட்டம் குறித்து தெரிஞ்சுகிட்டு, நிறைய இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பலரும் அடிக்கடி நேரில் வந்து மாடித்தோட்டத்தைப் பார்வையிடுறாங்க" என்கிறார் மைத்ரேயன் உற்சாகமாக.

அடுத்த கட்டுரைக்கு