Published:Updated:

"ஏர் ஓட்டுறாங்க, களை எடுக்கிறாங்க, நாத்து நடுறாங்க!" சென்னையில் ஒரு பசுமைப் பள்ளி!

விவசாயம் செய்யும் பள்ளி மாணவர்கள்!

இந்த வருடம் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையான மாணவர்கள் விவசாயத்தைக் கருவாக எடுத்துக்கொண்டு, விவசாயிகள் சந்திக்கின்ற பிரச்னைகள், தீர்வுகள் குறித்து ஆராய்ச்சி செய்தார்கள்.

"ஏர் ஓட்டுறாங்க, களை எடுக்கிறாங்க, நாத்து நடுறாங்க!" சென்னையில் ஒரு பசுமைப் பள்ளி!

இந்த வருடம் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையான மாணவர்கள் விவசாயத்தைக் கருவாக எடுத்துக்கொண்டு, விவசாயிகள் சந்திக்கின்ற பிரச்னைகள், தீர்வுகள் குறித்து ஆராய்ச்சி செய்தார்கள்.

Published:Updated:
விவசாயம் செய்யும் பள்ளி மாணவர்கள்!

விவசாயத்தின் முக்கியத்துவத்தை, குறிப்பாக இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை இன்றைக்கு மனிதர்கள் அனைவரும் புரிந்துகொண்டு விட்டார்கள். பல்வேறு துறைகளில் கை நிறைய சம்பாதித்துக்கொண்டிருக்கும் பலரும், சொந்த ஊரில் இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்திருப்பதே இதற்கான பசுமை உதாரணம். சரி, வளர்ந்த மனிதர்களுக்கு மட்டும் இயற்கை விவசாயத்தின் அருமை தெரிந்தால் போதுமா? நிச்சயம் போதாது. வளர்ந்துகொண்டிருக்கும் இளம் தலைமுறையினருக்கும் விவசாயமே உலகத்தின் அடிப்படை. அதுவே நம் உயிர் நாடி என்பது தெரிய வேண்டுமல்லவா? இதைக் கனகச்சிதமாகச் செய்து வருகிறது சென்னை மறைமலை நகரையடுத்த கரம்பூர் கிராமத்திலிருக்கிற 'இலா க்ரீன் இன்டர்நேஷனல் பள்ளிக்கூடம்'. இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தில் இருக்கிறது. இதுபற்றி தெரிந்துகொள்வதற்காக அப்பள்ளியின் ஆசிரியரான நந்தினியிடம் பேசினோம்.

ஏர் உழும் மாணவர்கள்
ஏர் உழும் மாணவர்கள்

''இயற்கை விவசாயத்தின் அருமை, பெருமைகளைச் சொன்னால் மட்டும் போதாது என்பதற்காகவே, எங்கள் பள்ளிக்கூட மாணவர்களுக்கு வாரத்துக்கு ஒருமுறை இயற்கை விவசாயம் தொடர்பான வகுப்புகளை நடத்துகிறோம். ஒரு விதை எப்படி செடியாக வளர்கிறது என்பதை தினமும் கவனிக்க வைத்து அதன் வளர்ச்சி நிலைகளைத் தெரிந்துகொள்ள வைக்கிறோம். அதுமட்டுமல்லாமல், மாணவர்கள் விவசாயம் செய்வதற்காகத் தனியாக நிலமும் வைத்திருக்கிறோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வருடந்தோறும் ஒரு கான்செப்டை எடுத்துக்கொண்டு அது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வார்கள் மாணவர்கள். இந்த வருடம் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையான மாணவர்கள் விவசாயத்தைக் கருவாக எடுத்துக்கொண்டு, விவசாயிகள் சந்திக்கின்ற பிரச்னைகள், தீர்வுகள் குறித்து ஆராய்ச்சி செய்தார்கள்.

விவசாயிடம் பேசும் மாணவர்கள்
விவசாயிடம் பேசும் மாணவர்கள்

இதற்காக, சோழவரம் கிராமத்தில் இருக்கிற ஃபார்ம் குரு என்ற விவசாயப் பகுதிக்கு மாணவர்களை அழைத்துச் சென்றோம். அங்கு விவசாயம் செய்வதன் முதல் படியான ஏர் உழுதலில் ஆரம்பித்து விதை விதைத்தல், நடவு செய்தல், களையெடுத்தல் என்று பல விவசாயப்பணிகளை மாணவர்களே நிலத்தில் இறங்கிச் செய்தார்கள். விவசாயிகளிடம் பேட்டி எடுத்து அவர்களுடைய வாழ்க்கை எப்படியிருக்கிறது, விவசாயம் செய்வதில் அவர்கள் சந்திக்கின்ற பிரச்னைகள் என்னென்ன என்று தெரிந்துகொண்டார்கள். சில மாணவர்கள், உலகின் முக்கியமான தொழிலைச் செய்யும் விவசாயிகள் ஏன் ஏழ்மையாக இருக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்பியதோடு, அது குறித்து ஆராய்ச்சி செய்து முடிவுகளை ஒப்படைத்தார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்னும் சிலர், பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு, நாடகம் நடத்தி 'பணத்துக்காக விவசாய நிலத்தை விற்கக்கூடாது; விவசாய நிலங்களைத் தொழிற்சாலைகளாக மாற்றக்கூடாது' என்று வலியுறுத்தினார்கள். விவசாயம் தொடர்பான கண்காட்சியை நடத்திய மாணவர்கள், அந்த கிராம மக்களுக்காக மருத்துவ முகாமையும் நடத்தினார்கள்'' என்றவர், விவசாயத்துக்காகவும், விவசாயிகளுக்காகவும் மாணவர்கள் செய்தவற்றில் சிலவற்றை நம்மிடம் பெருமையுடன் பகிர ஆரம்பித்தார். விவசாயம் தொடர்பான இந்தக் காண்காட்சியை ஒருங்கிணைத்தவரும் ஆசிரியர் நந்தினிதான்.

வில்லுப்பாட்டும் மாணவர்களும்
வில்லுப்பாட்டும் மாணவர்களும்

''ஆகர்ஷன், பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை ஆராய்ந்து அதற்குத் தீர்வாக ஹைட்ரோபோனிக்ஸ் மாதிரியைக் கொண்டு வந்தார். விவசாயிகளின் சுகாதாரம் குறித்து ஆய்வு செய்ததோடு, காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து கருநிலம் கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்தினார் மாணவர் அலன்சோ. மாணவி திவ்யா தனது வரைபடங்கள் மூலம் விவசாயம் தொடர்பான கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

மாணவி தியா, நாட்டு விதைகளுக்குப் புத்துயிர் அளிப்பதோடு, கலப்பினத்திற்குப் பதிலாக நாட்டு விதைகளைப் பயன்படுத்த விவசாயிகளை வலியுறுத்த விரும்புகிறார். ஜெரால்டு விவசாய நிலங்களின் பிரச்னைகளை ஆய்வு செய்ததோடு, விவசாயிகளுக்குக் கல்வியும் கற்பித்தார். விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கவிதை ஒன்றை எழுதி, அதை ஆங்கிலம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் ராப் பாடல்களாகப் பாடினார் மாணவர் கவின். மரியா மிருதுளா என்ற மாணவி, வாட்ஸ்அப் மூலம் விவசாயிகள், வாடிக்கையாளர்கள் தொடர்பை இணைத்திருக்கிறார். இதன் மூலம் விவசாயிகளுக்கு லாபத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே அவருடைய யோசனை. நீனாஶ்ரீ என்ற மாணவி, பூச்சிக்கொல்லிகளுக்கு மாற்றாகக் கற்றாழையைப் பயன்படுத்தி பள்ளி வளாகத்திலேயே இயற்கை விவசாயத்தைத் தொடங்கினார். மாணவர் பவித்திரன் தண்ணீர் பிரச்னைகள் குறித்து சுவரொட்டிகளை உருவாக்கி, தனது சொந்த கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சிவஹரா என்ற மாணவர்,விவசாய நிலத்தை தொழில்மயமாக்கம் செய்வதினால் வரக்கூடிய விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பொம்மலாட்ட நிகழ்ச்சி நடத்தினார்.

பள்ளியின் இயக்குநர் சமிதாவுடன் ஆசிரியர்கள் சிந்துஜா, நந்தினி
பள்ளியின் இயக்குநர் சமிதாவுடன் ஆசிரியர்கள் சிந்துஜா, நந்தினி

பள்ளி காலத்திலேயே மாணவர்களுக்கு விவசாயத்தின் முக்கியத்துவத்தைப் புரிய வைத்துவிட வேண்டும். அதற்கான தொடர் முயற்சியில் எங்கள் பள்ளி ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. மற்றப் பள்ளிக்கூடங்களும் மாணவர்கள் மத்தியில் விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்காக, அவர்கள் பள்ளிக்கூடத்தில் வீட்டுத்தோட்டம் அல்லது மாடித்தோட்டமாவது போட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்'' என்கிறார் ஆசிரியர் நந்தினி கனிவுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism