Published:Updated:

மாடுகளுக்கு `அங்கன்வாடி'; சத்தீஸ்கர் அரசின் அதிரடி திட்டம்... வரவேற்கும் விவசாயிகள்!

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது என்பார்களே, அதுபோன்ற ஒரு செயலைச் செய்திருக்கிறது சத்தீஸ்கர் அரசு. வைக்கோல் எரிப்பு, சாகுபடி பரப்பு குறைவு இரண்டையும் ஒரு திட்டத்தில் சரிசெய்திருக்கிறது.

மாடுகள்
மாடுகள்

வேளாண் கழிவுகளை எரிப்பது, மாடுகள் வயலில் புகுந்து பயிரைச் சேதப்படுத்துவது ஆகிய இரு காரணங்களால், இரண்டாவது பருவத்தில் சாகுபடி செய்வது கடும் பாதிப்புக்குள்ளாகிறது. இவை, மாநில அரசு சந்திக்கும் முக்கியமான பிரச்னை. தற்போது, இந்தப் பிரச்னையை ஒரு திட்டம் தீர்த்துவைத்திருக்கிறது. இதன்மூலம் கிராமப்புற பொருளாதாரத்திலும் முன்னேற்றம் ஏற்பட்டுவருவது கூடுதல் நன்மை என்பதால், பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது அந்தத் திட்டம்.

மாடுகள்
மாடுகள்

நமது ஊர்களைப் போல, சத்தீஸ்கர் மாநிலத்தில் மாடுகளை அநேகர் கட்டி வைப்பதில்லை. கயிறு இல்லாமல் மாடுகள் தானாக அலையும். ஒவ்வொரு கிராமத்திலும் ஊர் பொது இடத்தில் மாடுகள் தங்கும். காலையில் அவரவர்கள் மாடுகளில் பால் கறந்துகொள்வார்கள். அதன்பிறகு, மாடு மேய்ப்பவர்கள் மூலம் மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்லப்படும். அப்படிப் போகும் மாடுகள், பயிர்களை மேய்ந்துவிடுவது சர்வ சாதாரணமான நிகழ்வு. இதனால், முதல் போகம் அறுவடை முடிந்த பிறகு பெரும்பாலும் யாரும் சாகுபடி செய்வதில்லை. நிலத்தில் வேலி இருப்பவர்களுக்கு மட்டுமே இரண்டாம் சாகுபடி சாத்தியம். அங்கு, பெரும்பாலான நிலங்களில் வேலி இருக்காது. அதனால், இரண்டாவது சாகுபடி மிகவும் குறைவான பரப்பில் மட்டுமே செய்யப்படுகிறது.

மாநிலம் முழுவதும் முக்கியப் பயிராக இருப்பது நெல். அதனால் பார்க்கும் இடமெல்லாம் வைக்கோல் இருக்கும். பெரும்பாலான விவசாயிகள், மாடுகளுக்குத் தேவையான வைக்கோல் மட்டும் வைத்துக்கொண்டு, மீதமுள்ளதை தீ வைத்து எரித்து விடுகிறார்கள். இதனால் சூழல் மாசுபாடு ஏற்படுகிறது.

மாடுகள்
மாடுகள்
தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் 1,141 பேருக்கு வேலை! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

பயிர் செய்ய முடியாதது, சூழல் சிக்கல் இவை இரண்டும் முக்கியப் பிரச்னைகள். தற்போது, இதைத் தீர்த்து வைத்துள்ளது முதலமைச்சரின் சிறப்புத் திட்டமான நர்வா, கர்வா, குர்வா, பாடி என்ற திட்டம். நீர்நிலைகள் பாதுகாப்பு, கால்நடைகள் பராமரிப்பு, கிராமப்புற வருமானம் உயர்தல், வீட்டுத் தோட்டம் என்பதுதான் அந்தத் திட்டம்.

அதில், கால்நடைகள் பராமரிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது கோட்டான். அதாவது மாட்டுப் பட்டி. ஊரின் ஒதுக்குப்புறமான இடத்தில் மிகப்பெரும் பரப்பில் வேலி அமைத்து மாட்டுப்பட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம், மாடுகளை உரிமையாளர்கள் பராமரிக்கத் தேவையில்லை. அரசாங்கமே மாடுகளைப் பராமரித்துக்கொள்கிறது. அரசாங்கமே மாடுகளை மேய்க்கும் வேலையைச் செய்கிறது. காலையில் பால் கறந்தவுடன் மாடுகளை அனுப்பிவிட்டால் போதும். அவற்றை கோட்டானில் அடைத்துவைத்து, தீவனம் போட்டு, தண்ணீர் கொடுத்துப் பராமரித்து, மாலையில் வீட்டில் கொண்டுவந்து விட்டு விடுவார்கள். நமது ஊரில் குழந்தைகளைப் பால்வாடிக்கு (அங்கன்வாடி) அனுப்புவது போல், அங்கு மாடுகளைக் கோட்டானுக்கு அனுப்புகிறார்கள்.

Straw
Straw

மாநிலம் முழுவதும் முதல் கட்டமாக 2,000 இடங்களில் கோட்டான்கள் என அழைக்கப்படும் மாட்டுப்பட்டி அமைக்கப்பட்டுவருகின்றன. சராசரியாக 2 ஆயிரம் மாடுகள்வரை பராமரிக்கப்படுகின்றன. கொட்டானில் கிடைக்கும் சாணத்தை வைத்து மண்புழு உரம், இயற்கை இடுபொருள்கள் தயாரிக்கிறார்கள். அவற்றை விற்பனை செய்வதன்மூலம், பஞ்சாயத்துக்கு வருமானம் கிடைக்கிறது. ஒவ்வொரு கோட்டான் பராமரிப்புக்கும் மாதம் 10,000 ரூபாய் அரசு கொடுக்கிறது. விவசாயிகளிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தத் தயாராகிவருகிறது, மாநில அரசு.

திட்டம் தொடர்பாக, மாநில அரசின் சிறப்புச் செயலாளரும் கால்நடை பராமரிப்புத்துறை தலைவருமான பிரசன்னாவிடம் பேசினோம். "முதலமைச்சரின் சிறப்புத் திட்டம் இது. இதில், முதல்வர் அதிக கவனம் செலுத்துகிறார். கோட்டானில் (பட்டி) மாடுகளைப் பராமரிக்கும் திட்டம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

Prasanna
Prasanna

முதல்கட்டமாக, 1666 கோட்டான்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், 1626 கோட்டான்களுக்கான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் கிராமத்தின் அனுபவமுள்ள, அதிக வயதுள்ள நபர் தலைவராகவும், பஞ்சாயத்துத் தலைவர் செயலாளராகவும் இருப்பார்கள். ஐந்து இளைஞர்கள் உறுப்பினராக இருப்பார்கள். இந்தக் குழு, கோட்டான் செயல்பாடுகளைக் கண்காணிக்கும்.

கோட்டான் பராமரிப்புக்காக அரசு மூலம் மாதம் 10,000 ரூபாய் அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு குழுவுக்கும் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, அதன்மூலம் பணம் வரவு - செலவு செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 7,40,000 மாடுகள் கோட்டான்களுக்கு வருகின்றன. 800 டன் வைக்கோல் தானமாகக் கிடைத்திருக்கிறது. மாநிலம் முழுவதும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தும் பணி நடந்துவருகிறது. இதன் மூலம் கிராமப்புற பொருளாதாரமும் உயர்ந்துவருகிறது'' என்றார்.

Vermi compost
Vermi compost
`நாட்டு மாடு இனத்தை அழிக்க நினைக்கிறார்கள்!' - மலைமாடு வளர்ப்போர் வேதனை

நமது ஊரிலும் மாடுகளை அரசாங்கம் பார்த்துக்கொண்டால் எப்படியிருக்கும்? அப்படி நடந்தால், இந்தியாவில் அதிக மாடுகளுள்ள மாநிலமாக தமிழகம்தான் இருக்கும்.