நாட்டு நடப்பு
Published:Updated:

பொன்னியின் செல்வர்களும் எட்டாவது அதிசயமும்!

மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு

மாத்தியோசி

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான அந்தப் பொன்னாளில் ரசிக சிகாமணிகள் திரையரங்குகளுக்குப் படையெடுத்தார்கள். அறிவுஜீவிகள் இணையத்தில் இறங்கி ‘பொன்னியின் செல்வன் வரலாறு கிடையாது. புனைகதை; இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்....’ என்று ஒரு தரப்பும், ‘அது அற்புதமான படைப்பு. தமிழர்களின் பெருமையைப் பேசும் படைப்பு’ என்று மற்றொரு தரப்பும் வார்த்தைப் போரில் ஈட்டுப்பட்டிருந்தார்கள்.

இப்படிச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தினத்தில் டி.வி. சதாசிவ பண்டாரத்தார் 1949-ம் ஆண்டு எழுதிய ‘பிற்காலச் சோழர் சரித்திரம்’ நூலை வாசித்துக் கொண்டிருந்தேன். 1942-60 காலகட்டங்களில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழாராய்ச்சித் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றிய இவரின் நூல், உண்மையான சோழர் கால வரலாற்றை அறிந்து கொள்ள விரும்புபவர்களின் முதல் தேர்வு.

இந்த நூலைப் படிக்கும்போது, ஒரு தகவல் மட்டும் உறுதியாகத் தெரிந்தது. சோழர்கள் சோறு முக்கியம் என்று நன்றாகவே அறிந்திருந்தார்கள். கூடவே, தமிழ்நாட்டின் நீர்வள, நிலவள விவரங்களில் கரைகண்டவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். இதனால்தான், பெரும்படைகளுக்குச் சோறு போட்டு, பல நாடுகளை வெற்றி கொண்டார்கள். அன்றைய சோழ நாடு என்பது குமரி முதல் கிருஷ்ணா நதியை தாண்டியும் விரிந்து கிடந்தது என்பது கவனிக்கத்தக்கது.

புத்தகம்
புத்தகம்

பிற்காலச் சோழர்களின் ஆட்சி பொற்காலம் என்று சொல்வதற்குப் பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமானது, நீர் நிலைகளைப் பாதுகாத்து சோழ வள நாட்டைச் சோறுடைத்ததாக மாற்றினார்கள். அதாவது, தஞ்சையை மட்டுமல்ல, அவர்கள் ஆட்சி செய்த அனைத்து பகுதிகளையும் செழிக்க வைக்கப் பேரார்வத்துடன் செயல்பட்டுள்ளார்கள். அந்த நூலில் ‘நீர் வளமும், நீர்ப்பாசனமும்’ என்ற தலைப்பில் டி.வி. சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிட்டுள்ள தகவல்களைப் படிக்கும்போது சோழர்கள் மீது மேலும் மேலும் மதிப்பும் மரியாதையும் கூடவே செய்கின்றது. இதோ, நெற்களஞ்சியத்தின் அருமையைச் சொல்லும், அந்தத் தகவல் களஞ்சியம்.

‘‘நிறைமொழி மாந்தராகிய இளங்கோவடிகள், ‘வாழியவன்றன் வளநாடு மகவாய் வளர்க்குந் தாயாகி, ஊழியுய்க்கும் பேருதவி யொழியாய் வாழி காவேரி’ என்று வாழ்த்துவார். அத்தகைய காவேரிக்கு, கி.மு. முதலாம் நூற்றுண்டிலிருந்த சோழன் கரிகாலப் பெருவளத்தானே, காவிரியாற்றிற்கு முதலில் கரை அமைத்துச் சோழமண்டலத்தை வளப்படுத்தியவன். இவ்வளவர் பெருமான், ‘நாடாக்காக்-குளந்தொட்டு வளம்பெருக்கி’னான் என்று கடியலூர் உருத்திரங்கண்ணனார் தம் பட்டினப்பாலையில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடைச்சங்க காலத்தில் காவிரியும், அரிசிலாறும் சோழமண்டலத்தைச் செழிப்பித்தன என்பது சங்கத்துச் சான்றோர் பாடல்களால் நன்கறியக் கிடக்கின்றது. மண்ணியாறு, கொள்ளிடம், கடுவையாறு, வெண்ணாறு ஆகிய ஆறுகளனைத்தும், கரிகாற்சோழன் காலத்தே சோழ நாட்டை வளப்படுத்த வெட்டப்பட்ட, காவிரியின் கிளை ஆறுகளாகும். அதுபோல் பத்தாம் நூற்றாண்டு முதல் ஆட்சி புரிந்த சோழமன்னர்கள் பல ஆறுகளையும், ஏரிகளையும் சோழ மண்டலத்தில் வெட்டியுள்ளனர்.

டி.வி. சதாசிவ பண்டாரத்தார், கல்கி
டி.வி. சதாசிவ பண்டாரத்தார், கல்கி

அந்த வகையில், தஞ்சாவூருக்கு வடபுறத்தில் ஒடும் வடவாறு, வீரசோழ வடவாறு எனவும், திருப்பனந்தாளுக்கு வடக்கேயுள்ள கொள்ளிடத்திலிருந்துபிரிந்து வடக்கே ஒடும் வடவாறு, மதுராந்தக வடவாறு எனவும் கல்வெட்டுக்களில் குறிக்கப் பெற்றிருத்தலால், இந்த இரண்டாறுகளும், வீர சோழன், மதுராந்தகசோழன் என்ற சிறப்புப் பெயர் பெற்ற முதற் பராந்தக சோழனால் வெட்டப்பட்டிருத்தல் வேண்டும் என்பது தெரியலாகிறது.

திருவை்காவூர், திருப்புறம்பியம், திருவைப்பாடி, திருப்பனந்தாள், பந்தணைநல்லூர்(பந்தநல்லூர்) ஆகிய ஊர்களின் வழியாக ஒடும் மண்ணியாற்றிற்குக், குஞ்சரமல்லனாறு என்ற பெயர் வழங்கியிருத்தலால், அப்பேராறும், குஞ்சரமல்லன் என்ற சிறப்புப்பெயருடைய முதற்பராந்தகசோழனால் திருத்தி அமைக்கப்பெற்றிருககலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த உய்யக்கொண்டான் ஆறு, கோனேரிராசபுரத்திற்கு அண்மையில் ஒடும் கீர்த்திமான் ஆறு ஆகிய ஆறுகள் முதல் இராசராச சோழனாலும், குடமுருட்டி என வழங்கும் கடுவாயிலிருந்து, சுந்தரப்பெருமாள் கோயில் பக்கத்தில் பிரியும் முடிகொண்டான் என்னும் ஆறு, முடிகொண்டசோழன் என்ற சிறப்புப்பெயர் பெற்ற கங்கைகொண்ட சோழனாலும், கும்பகோணத்திற்குக் கிழக்கே மணஞ்சேரிக்கு அண்மையில் காவிரியின்று பிரியும், வீரசோழன் ஆறு என்ற ஆறு, வீரராசேந்திர சோழனாலும், காவிரியிலிருந்து குத்தாலத்திற்கு வடபால் பிரிந்துசெல்லும், விக்கிரமானாறு விக்கிரமசோழனாலும் அன்னோர் ஆட்சிக் காலங்களில் சோழநாட்டை வளப்படுத்த வெட்டப் பெற்றுள்ளன.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு

புதிய ஆறுகள் வெட்ட முடியா இடத்தில் ஏரிகளை வெட்டுவித்துள்ளனர். அதன்படி அன்றைய வடவாற்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள, சோழவாரிதி என்ற ஏரியும், சிதம்பரத்திற்கு மேற்கே பன்னிரண்டு மைல் தூரத்திலுள்ள, வீரநாராயணன்ஏரி (வீராணம்) குறிப்பிடத்தக்கவை. முதற் பராந்தகசோழனுடைய அரசியல் அதிகாரிகளுள் ஒருவனும், சோழநாட்டுப் புறங்கரம்பை நாட்டு மருதூருடையானும் ஆகிய அருள்நிதி கலியன் என்பான் மதுரை மாவட்டம் ஆனைமலைப் பக்கத்திலுள்ள நரசிங்கமங்கலத்தில், கலியனேரி என்னும் ஏரியொன்றையமைத்து அதிலிருந்து நிலங்களுக்கு நீர் பாய்ந்து ஆண்டுதோறும் நெல் விளையுமாறு செய்தான் என்று அவ்வூர்க் கோயிலில், வட்டெழுத்தில் வரையப்பெற்றுள்ள கல்வெட்டொன்று கூறுகிறது.

அன்றைய தென்னார்காடு ஜில்லா உலகபுரத்திலுள்ள கண்டராதித்த பேரேரியும், திருச்சிராப்பள்ளி ஜில்லா திருமழபாடிக்கண்மையிலுள்ள, செம்பியன் மாதேவிப் பேரேரியும், முதற்பராந்தகன் புதல்வனாகிய கண்டராதித்தசோழனாலும், இவ்வேந்தன் மனைவியார் செம்பியன் மாதேவியராலும் அமைக்கப் பட்டவையாகும். செங்கற்பட்டு ஜில்லா மதுராந்தகத்திலுள்ள, மதுராந்தகப் பேரேரியும், புதுச்சேரி, திருபுவனையிலுள்ள, மதுராந்தகப் பேரேரியும், வெட்டுவித்தவன் கண்டராதித்தசோழன் புதல்வனாகிய உத்தமசோழன் (முதலாம் இராசராசனது சிறிய தந்தையார்) ஆவான். இவனுக்கு மதுராந்தகன் என்ற பெயருமுண்டு. வட ஆர்க்காடு ஜில்லா, பிரம்மதேசம் என்ற ஊரிலுள்ள, சுந்தரசோழப் பேரேரி மற்றும் குந்தவைப் பேரேரி என்ற இருபெரும் ஏரிகள் இரண்டாம் பராந்தகனாகிய சுந்தரசோழனாலும், இம்மன்னர் பிரானுடைய அருமைப் புதல்வியார் குந்தவையாராலும் வெட்டுவிக்கப் பெற்றதாகும்.

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்

முதல் இராசேந்திரசோழனது தலைநகரமாகிய கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மேற்கே, சோழகங்கம் என்ற பேரேரி இம்மாமன்னனால் வெட்டுவிக்கப் பெற்றது. சித்தூர் ஜில்லா புங்கனூரில், இராஜேந்திர சோழப் பெரியேரி என்ற ஏரியொன்று முதற்குலோத்துங்க சோழனது ஆட்சியில் வெட்டப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம், முனியூரில், குலோத்துங்கச் சோழப் பேரேரி என்றதோர் ஏரியும் இம்மன்னன் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது. திருவரங்கத்திற்குக் (ரங்கம்) கிழக்கே பத்துமைல் தூரத்தில் கோவிலடிக்கு அண்மையிலுள்ள பேரணை (முக்கொம்பு), கி.பி 1063-முதல் 1070 வரையில் ஆட்சிபுரிந்த வீரராசேந்திர சோழனால் அமைக்கப்பட்டதேயாகும்.

அப்பேரணையின் வலிமையைத் தெளிவாக உணர்ந்து கொண்ட ஆங்கிலேயர் பெரிதும் வியந்து, அதனை அப்படியே வைத்துக்கொண்டு அதன்மேல் புதிய பாலத்தைக் கட்டிவிட்டமை ஒன்றே நமது சோழரது பொறியியல் துறைக்கும், அவர்தம் நீர்மேலாண்மைக்கும் தக்கச் சான்றாகும்’’ என்றெல்லாம் ஆதாரங்களுடன் சோழர்களின் நீர் மேலாண்மையைக் குறிப்பிட்டுள்ளார் டி.வி. சதாசிவ பண்டாரத்தார். இருவரும்கூட பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் போலவே, ராஜராஜசோழனை அதிகமாகவே கொண்டாடுகிறார்.

வீராணம் ஏரி
வீராணம் ஏரி

அதற்குக் காரணமும் உண்டு. ‘‘இவ்வேந்தன் ஆட்சியில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளுள் சோழ இராச்சியம் முழுவதையும் அளந்தமை ஒன்றாகும். ஓர் அரசன் தன் ஆட்சிக்குட்பட்ட நாடுகள் எல்லாவற்றையும் அளந்து நிலங்களின் பரப்பை உள்ளவாறு உணர்ந்தாலன்றி நிலவரியை ஒழுங்குபடுத்திக் குடிகளிடமிருந்து வாங்குவது இயலாததாகும். ஆதலால், இவன் தன் ஆட்சியின் 16-ம் ஆண்டாகிய கி.பி. 1001-ல் சோழ இராச்சியம் முழுவதையும் அளக்குமாறு ஆணையிட்டான். அவ்வேலையும், குரவன் உலகளந்தான் இராசராச மாராயன் தலைமையில் தொடங்கப்பெற்று, இரண்டு ஆண்டுகளில் நிறைவேறியது.

அவ்வதிகாரி இராச்சியம் முழுமையும் அளந்த காரணத்தால் ‘உலகளந்தான்’ என்னுஞ் சிறப்புப் பெயர் பெற்றனன். அன்றியும், ‘இராசராச மாராயன்’ என்னும் பட்டமும் அவனுக்கு இராச ராச சோழனால் வழங்கப்பெற்றிருப்பது அறியத்தக்கது. நிலம் அளந்த கோல் பதினாறு சாண் நீளமுடையது. அதனை உலகளந்த கோல் என்றும் அந்நாளில் வழங்கினர்’’ எனச் சுவையான தகவல்களையும் பதிவு செய்திருக்கிறார் டி.வி. சதாசிவ பண்டாரத்தார்.

‘‘இவ்வேந்தன் ஆட்சியில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளுள் சோழ இராச்சியம் முழுவதையும் அளந்தமை ஒன்றாகும்.’’

நீர் வளத்தையும் நிலவளத்தையும் பெருக்கச் சோழர்கள் வழி வழியாகப் பல பணிகளைச் செய்துள்ளார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், எங்கு ஆறு வெட்ட முடியுமோ, அங்கு ஆறும் முடியாத இடங்களில் ஏரிகளையும் வெட்டினார்கள். இதற்கு ஏரிகள் நிறைய ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டமும் சேலம், ஈரோடு, கோவை மாவட்டங்களுமே இதற்குச் சிறந்த உதாரணம். ஏராளமான நீர் நிலைகளை இந்தப் பகுதிகளில் சோழர்கள் உருவாக்கியுள்ளார்கள். ஒரு ஏரி நிறைந்து அடுத்த ஏரிக்குச் செல்லும் வழியில் கால்வாய்களையும் வெட்டியதுதான் இவர்களின் சிறப்பு.

காவிரி பாயும் கடைமடை பகுதியில் ஏரிகள் சாத்தியமில்லை. காவிரி பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து பாசனப்பகுதிக்குச் செல்வதால் ஏரிகள் அவசியமில்லை. மேலும், ஏரி வெட்டினாலும், வெள்ளம் காரணமாக உடைந்து போனால் ஒட்டுமொத்த டெல்டா பகுதிகளும் வெள்ளத்தில் மிதந்துவிடும் அபாயம் ஏற்படும் என்பதையும் அறிந்து வைத்திருந்தார்கள்.

நீர் நிலைகளை உருவாக்கிய சோழ மன்னர்கள் அதற்குத் தங்கள் பெயரையே சூட்டினார்கள். காரணம், மன்னன் பெயரிலிருந்தால், அந்த நீர் நிலைகளைச் சேதப்படுத்தமாட்டார்கள் என்பதால்தான். ஆனால், இன்றைய அரசியல்வாதிகள் சோழர்கள் வெட்டிய ஏரி, குளங்களை ஆக்கிரமித்து, தங்களின் தலைவர் பெயரில் நகர்களை உருவாக்கி வருகிறார்கள். காரணம் தலைவர் பெயர் என்றால், அரசு அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றமாட்டார்கள்தானே!

‘‘சோழர்களின் கல்வெட்டுகளில் திரும்பத் திரும்ப இடம் பெறும் வாசகங்கள் ஒன்று ‘நீர் கலப்பு’. அதாவது, பாசனப் பகுதிகளுக்குச் செல்லும் நீரை, தவறான முறையில் பிற பகுதிகளுக்கு மடைமாற்றும் செயலைத்தான் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்கள். நீர் கலப்பு செய்யும் நபர்களுக்குத் தரப்படவேண்டிய தண்டனையைச் சோழர்களின் கல்வெட்டுகளில் விரிவாக உள்ளன’’ என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

கல்லணை
கல்லணை

காவிரி என்ற பொன்னி நதியைப் பெருமைப்படுத்தவும் நினைவுகூரவும் ஏரிக்கரைகளில் பொன்னியம்மன் கோயில்களை அமைத்துள்ளார்கள் சோழ மன்னர்கள். ஆகையால், ஒட்டுமொத்த சோழர்களையும் பொன்னியின் செல்வர்கள் என அழைப்பது பொருத்தமாக இருக்கும். சோழர்களைப் பற்றிப் பேசுவதும் தமிழர்களின் நீர் மேலாண்மை பற்றிப் பேசுவதும் வேறு, வேறு அல்ல. இதன் தாக்கத்தால்தான் புனைகதையாக எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் நூலில் கூட முதலாவது பாகம், ‘புதுவெள்ளம்’ என்று நீர் நிலையிருந்துதான் தொடங்கும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழர்கள் வெட்டிய வீராணம் உள்ளிட்ட ஏரிகள், பாசனத்துக்குப் பயன்பட்டதோடு மட்டுமல்லாமல், தற்போது சென்னை மாநகர் மக்களின் தாகத்தையும் தணித்து வருகின்றது. இது போல மேற்கு நாடுகளில் ஏதாவது நீர் நிலைகள் இருந்தால், அதை உலகின் எட்டாவது அதிசயமாகக் கொண்டாடித் தீர்த்திருப்பார்கள். இன்றைய ஆட்சியாளர்கள் சோழர்களை போல ஏரிகளை வெட்டாவிட்டாலும், அவற்றை அக்கறையாக பாது்காக்கவாது வேண்டும். பொன்னியின் செல்வன் கதைப்படி படகில் செல்லும்போது அருள்மொழி வர்மன்(ராஜாராஜசோழன்) குழந்தையாக இருந்த போது தவறி ஆற்றிற்குள் விழுந்துவிட்டார். அப்போது ஒரு பெண் தெய்வம் போல வந்து குழந்தையை மீட்டுப் படகிலிருந்தவர்களிடம் கொடுத்தாள். அந்தப் பெண், பொன்னி (காவிரி) தான் என்று படகிலிருந்த அனைவரும் நம்பியதால், அன்றிலிருந்து அருள்மொழி சோழனுக்கு ‘பொன்னியின் செல்வன்’ என்று பெயரிட்டதாகக் கல்கி பெயருக்கான காரணமாகக் குறிப்பிட்டிருப்பார். இது ஊர் அறிந்த கதைதான். அதிகம் அறியாத உண்மைக் கதை ஒன்றும் உள்ளது.

பொன்னியினையும் அதன் செல்வனையும் நாம் அறிந்து கொள்ளக் கதை எழுதிய கல்கி, கடைசி நேரத்தில் அருந்த நினைத்தது, காவிரி நீர் அல்ல; பாலாறு நீரைத்தான். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த கல்கி, தனக்குப் பாலாறு நீர் வேண்டும் என்று கேட்டுள்ளார். பாலாறுக்கு சென்று நீர் எடுத்து வர நள்ளிரவு நேரமாகிவிட்டது. காலையில் அவருக்கு அந்த நீரைக் கொடுக்க நினைத்திருந்தார்கள். ஆனால், அதிகாலையில் இவ்வுலக வாழ்விலிருந்து விடைபெற்றுச் சென்றிருந்தார் கல்கி கிருஷ்ணமூர்த்தி. கடைசியில் பாலாற்று நீரை அவர் உடலை நீராட்ட பயன்படுத்தினார்கள்.