Published:Updated:

`தென்னை மரம் ஏறுபவர்களுக்கு ₹5 லட்சம் காப்பீடு!' - தென்னை வளர்ச்சி வாரியம் அறிவிப்பு

தென்னை
News
தென்னை ( coconut )

தென்னை மரம் ஏறுபவர்கள் அரசின் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தைப் பயன்படுத்தி பயன்பெறலாம். இதன்மூலம் தென்னை மரம் ஏறும்போது ஏற்படும் விபத்து, மரணம் உள்ளிட்டவற்றுக்கான இழப்பீட்டை பெற முடியும்.

தென்னை மரம் ஏறுபவர்கள், பதநீர் இறக்குபவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு ரூ.5 லட்சம் மதிப்பிலான காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் அறிவித்துள்ளது.

இளநீர், பதநீர், நீரா பானம் உள்ளிட்ட பல தென்னை சார்ந்த பொருள்களுக்கான தேவையும், வரவேற்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறிக்க, பதநீர் இறக்க ஆட்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள்.

ஆனால், இது கொஞ்சம் ஆபத்தான வேலை என்பதால் பெரும்பாலானோர் முன்வருவதில்லை. இதனால் ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே, அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், பாதுகாப்பு அளிக்கும் விதமாகவும் `கேரா சுரக்ஷா' என்ற விபத்து காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த தென்னை வளர்ச்சி வாரியம் முன்வந்துள்ளது.

தென்னை
தென்னை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதுதொடர்பாகத் தென்னை வளர்ச்சி வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ``தென்னை மரம் ஏறுபவர்களுக்கும் மற்றும் பதநீர் இறக்கும் கலைஞர்களுக்கும் கூடுதல் `கேரா சுரக்ஷா' காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் மதிப்பு ரூ.5 லட்சம். இது ஒரு விபத்துக் காப்பீடு பாலிசி ஆகும். பாலிசிதாரர் இதில் ரூ.1 லட்சம் வரை மருத்துவமனைக் கட்டணம் செலுத்திக் கொள்ளலாம். ஓரியன்டல் காப்பீட்டு நிறுவனம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தென்னை மர நண்பர்கள் பயிற்சித் திட்டம், பதநீர் இறக்கும் கலைஞர்கள் பயிற்சித் திட்டம் ஆகியவற்றின் கீழ் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் முதலாண்டு பிரீமியம் தொகை ரூ.398.65-ஐ தென்னை வளர்ச்சி வாரியமே ஏற்றுக்கொள்ளும்.

ஓராண்டு முடிந்ததும் பிரீமியம் தொகையில் 25 சதவிகிதம் ரூ.99-ஐ மட்டும் செலுத்தி பாலிசியைப் பயனாளிகள் புதுப்பித்துக்கொள்ளலாம். 18 வயது முதல் 65 வயது வரையுள்ள தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் பயன்களைப் பெறலாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தென்னை மரங்கள்
தென்னை மரங்கள்

இதற்கான விண்ணப்பத்தை வேளாண் அதிகாரி, பஞ்சாயத்துத் தலைவர், சிபிஃஎப் அலுவலக அதிகாரிகள், சிபிசி இயக்குநர்கள் ஆகியோர் கையெழுத்தைப் பெற்று ரூ.99 மதிப்புள்ள டிடி-யை எர்ணாகுளத்தில் மாற்றும் வகையில் தென்னை வளர்ச்சி வாரியத்துக்கு அனுப்பி இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். இதற்கான விண்ணப்பம் மற்றும் விவரங்கள் www.coconutboard.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது.

தென்னை மரம் ஏறுபவர்கள் அரசின் இந்தக் காப்பீடு திட்டத்தைப் பயன்படுத்தி பயன்பெறலாம். இதன்மூலம் தென்னை மரம் ஏறும்போது ஏற்படும் விபத்து, மரணம் உள்ளிட்டவற்றுக்கான இழப்பீட்டை பெற முடியும்.