பிரீமியம் ஸ்டோரி

தென்னையை மட்டும் சாகுபடி செய்து வரும் விவசாயிகள் மத்தியில், தென்னையில் ஊடுபயிராகச் செவ்வாழை, நேந்திரன் ரக வாழைகளை இயற்கை முறையில் சாகுபடி செய்து நல்ல வருமானம் பார்த்து வருகிறார் தென்காசியைச் சேர்ந்த ஈஸ்வரன்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் இருக்கிறது ஈஸ்வரனின் தென்னந்தோட்டம். ஊரின் தொடக்கத்திலேயே உள்ள தோட்டத்தில் சாரல் காற்று சிலுசிலுவென வீசிய ஒரு காலைவேளையில் அவரைச் சந்தித்தோம். நம்மை வரவேற்றுப் பேசத் தொடங்கினார்.

‘‘எங்க தாத்தா காலத்துல இருந்து வியாபாரம்தான் எங்க குடும்பத் தொழில். அதோட சேர்த்து விவசாயமும் நடந்துச்சு. அப்பா ‘எலக்ட்ரிக்கல்’ தொடர்பான வியாபாரம் நடத்திட்டு வந்தார். 1969-ல் பி.இ, ‘மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்’ முடிச்சேன். பிளாஸ்டிக் சாக்குப்பை மற்றும் உரப்பைகள் தயாரிக்கும் கம்பெனியை ஆரம்பிச்சு 8 வருஷம் நடத்திட்டு வந்தேன்.

எங்க தாத்தாவோட நிலங்கள்ல நெல், வாழை, தென்னை, மா விவசாயத்தை எங்க பெரியப்பாதான் கவனிச்சுட்டு வந்தார். பெரியப்பாவுக்கு வயசானதால, எங்க அப்பாவிற்கான பங்கினை ஒப்படைச்சார். எனக்கும் விவசாயத்து மேல அதிக ஆர்வம். அதனால, சாக்குப்பை தயாரிக்கிற கம்பெனியை என்னோட சகோதரரை நடத்தச் சொல்லிட்டு, விவசாயத்தை நானே கவனிச்சுக்க ஆரம்பிச்சேன்’’ என்றவர் வரப்பில் நடந்துகொண்டே பேசினார்.

ஈஸ்வரன்
ஈஸ்வரன்


‘‘ ‘அம்பை-16’ தான் எங்கப் பகுதிகள்ல பரவலா சாகுபடி செய்யப்படுற நெல் ரகம். நெல்லை மட்டும் சாகுபடி செய்யாம, பழ மரங்களையும் சாகுபடி செய்யலாம்னு நினைச்சேன். 10 ஏக்கர்ல இமாம்பசந்த், பங்கனப்பள்ளி, நீலம், செந்தூரா உத்தரப்பிரதேச ரகம், குஜராத் ரகமான ‘கேசர்’ உள்ளிட்ட 10 வகையான மா ரகங்களை நட்டேன். இதுதவிர, 2 ஏக்கர்ல கிருஷ்ணா, காஞ்சன், சக்கையா ரக நெல்லியும், 5 ஏக்கர்ல தென்னை, 3 ஏக்கர்ல நெல், வாழையும் சாகுபடி செய்தேன். ஆரம்பத்துல ரசாயன உரத்தைப் பயன்படுத்திதான் விவசாயம் செய்துட்டு வந்தேன்.

ஆச்சர்யப்படுத்திய அந்தோணிசாமி

அதிக மகசூல் எடுக்கணும்ங்கிற எண்ணத்துல ரசாயன உரம், பூச்சிக்கொல்லிக்காக நிறைய பணம் செலவு செஞ்சிருக்கேன். தொடர்ந்து ஏழெட்டு வருஷம் மகசூல் கிடைச்சிகிட்டே இருந்தது. அதுக்கப்புறம் குறைய ஆரம்பிச்சுது. இன்னொரு பக்கம் பூச்சி, நோய்த்தாக்குதல் அதிகரிச்சுகிட்டே வந்துச்சு. அதையும் கட்டுப்படுத்த முடியல. மகசூலைக் கூட்டுறதுக்கு அடுத்து என்ன வழின்னு யோசிச்சேன். எங்க ஊருக்குப் பக்கத்துல இருக்குற புளியங்குடி அந்தோணிசாமி பத்திச் சொன்னாங்க. அவரோட தோட்டத்துக்கு ஒருநாள் போயிருந்தேன். என்னைப்பத்தியும், நான் செய்யுற விவசாயத்தைப் பத்தியும் விசாரிச்சார். அவரோட நெல் வயல், கரும்புத்தோட்டம், எலுமிச்சைத் தோட்டத்தைச் சுத்திக் காண்பிச்சார். நிலத்து மண்ணைக் கை நிறைய அள்ளிக் காட்டினார். பத்துப் பதினைஞ்சு மண்புழுக்கள் நெளிஞ்சுச்சு. அப்படியொரு மண் வளத்தை நான் பார்த்ததில்ல. அவர் தயாரிச்சு பயன்படுத்துற இயற்கை இடுபொருள்களைக் காட்டி விளக்கினார். ‘முதல்ல ஒண்ணு, ரெண்டு ஏக்கர்ல இயற்கை விவசாயத்தைச் செஞ்சுப்பாருங்க. அதுல நம்பிக்கை இருந்துச்சுன்னா தொடர்ந்து செய்யுங்க’ன்னு சொன்னார்.

ஊடுபயிர் சாகுபடியால தென்னைக்குப் பராமரிப்பு எதுவுமில்லாம தனி வருமானம் கொடுத்திட்டு இருக்கு.


வேலிப்பயிராகத் தேக்கு

சொன்னது மட்டுமில்லாம என்னோட தோட்டத்தையும் வந்து பார்த்துச் சில அறிவுரைகளைச் சொன்னார். அப்படியே எங்க வீட்டுக்குப் பின்னால ஒரு தேக்குக் கன்றை நட்டார். பல தானிய விதைப்பு விதைச்சு மடக்கி உழுதும், செறிவூட்டப்பட்ட மட்கிய தொழுவுரம், மண்புழு உரத்தைப் போட்டும் மண்ணை வளப்படுத்தினேன். அவர் சொல்லிக்கொடுத்த இடுபொருள்களை நானே தயாரிச்சு பயன்படுத்தினேன். நெல், வாழை மகசூலில் நல்ல மாற்றம் தெரிஞ்சுச்சு. அந்தோணிசாமி நட்டு வெச்ச தேக்கு, ரெண்டு வருஷத்துல நெடுநெடுன்னு வளர்ந்துச்சு. அதோட வளர்ச்சியைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். பிறகு வாழை, மாந்தோட்டங்கள்ல வேலிப்பயிரா தேக்கை நட்டேன். அதுபோக 5 ஏக்கரில் தனியாகத் தேக்கு நடவு செஞ்சிருக்கோம்’’ என்றவர் தென்னந்தோப்புக்குள் நம்மை அழைத்துச் சென்றார்.

தென்னையில் ஊடுபயிராக வாழை நடவு
தென்னையில் ஊடுபயிராக வாழை நடவு‘‘குடும்பத்துக்குச் சொந்தமான மொத்த இடத்துலயும் விவசாயம் செஞ்சாலும் 5 ஏக்கர் தென்னை, ஒரு ஏக்கர் மா மட்டும்தான் எனக்கான பங்கு. அதுல வர்ற வருமானம்தான் முழுமையா எனக்குச் சொந்தம். இந்த 5 ஏக்கர் தென்னைக்கு ஊடுபயிரா நடவு செய்த செவ்வாழையும், நேந்திரனும் அறுவடைக்கு வந்திருக்கு. ஒரு ஏக்கர் மாந்தோட்டத்துல ஊடுபயிரா சோதனை அடிப்படையில் ஒரே குழியில், ரெண்டு செவ்வாழை நட்டு அதுவும் அறுவடை நிலையில இருக்கு” என்றவர் நிறைவாக, வருமானம் மற்றும் விற்பனைபற்றிப் பேசினார்.

2,000 நேந்திரன்... 2,000 செவ்வாழை

‘‘போன தடவை 5 ஏக்கர் தென்னையில ஊடுபயிராக 2,000 செவ்வாழையும், 2,000 நேந்திரன் வாழையும் சாகுபடி செஞ்சேன். குற்றாலத்துக்குப் பக்கத்துல இருக்குறதுனால காத்தடியில இருந்து வாழையைக் காப்பாத்துறதே சவால்தான். 2,000 செவ்வாழையில காத்தடிச்சதுல 188 வாழையும், விளைச்சல் இல்லாத வாழைகள்ல 150-ம் கழிச்சது போக 1,662 குலைகள் கிடைச்சது. அதேபோல, 2,000 நேந்திரன் வாழையில 315 வாழை சாய்ஞ்சு போச்சு. திரட்சியில்லாத குலைகள் 200-ம் கழிச்சது போக 1,485 குலைகள் கிடைச்சது.

செலவு, வரவு கணக்கு
செலவு, வரவு கணக்கு


செவ்வாழையைச் சீப்புகளா வெட்டிச் சென்னையிலுள்ள இயற்கை அங்காடிகளுக்கு அனுப்புறேன். நேந்திரன் வாழையை அப்படியே குலையோடு எடைபோட்டு கேரளாவுக்கு அனுப்பிடுறேன். 1,662 வாழைக்குலைகளைச் சீப்பா வெட்டி விற்பனை செஞ்சதுல 11,634 கிலோ பழங்கள் கிடைச்சது. ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செஞ்சதுல ரூ.4,65,360 வருமானமாக் கிடைச்சது. 1,485 கிலோ நேந்திரன் குலைகள், 8,910 கிலோ எடை இருந்துச்சு. ஒரு கிலோ ரூ.30-க்கு விற்பனை செஞ்சதுல ரூ.2,67,300 வருமானமாக் கிடைச்சுது. செவ்வாழை, நேந்திரன் குலைகள் விற்பனை மூலமா மொத்தம் ரூ.7,32,660 வருமானமாக் கிடைச்சுது.

செலவு இல்லா தென்னை

5 ஏக்கர்ல உள்ள 400 தென்னை மரங்கள்ல 350 மரங்கள் நல்ல காய்க்கும் நிலையில இருக்குது. இந்த மரங்கள் எல்லாம் 20 வருஷத்துக்கு மேற்பட்டவை. உயரமா வளர்ந்துட்டதுனால மரம் ஏறிக் காய் பறிக்கிறதில்ல. கீழே விழுந்த காய்களைச் சேகரிச்சுத்தான் வித்துட்டு இருக்கேன். அந்த வகையில வருஷத்துக்கு ரூ.1,75,000 வருமானம். தென்னைக்குப் பராமரிப்பு எதுவுமில்லாம வருமானம் கொடுத்திட்டு இருக்கு. தென்னையை மட்டும் பராமரிச்சு 45 நாளுக்கு ஒரு முறை காய் வெட்டினாலும் எனக்கு இந்த வருமானம் கிடைக்காது. தென்னைக்குள்ள செவ்வாழை, நேந்திரன் வாழைகளை முறையா சாகுபடி செஞ்சதுனால 5 ஏக்கர்ல இருந்து வருஷத்துக்கு ரூ.9,07,660 வருமானம் கிடைக்குது. அதுல செலவு போக ரூ.6,41,160 லாபமாகக் கிடைச்சிருக்கு” என்றார் மகிழ்ச்சியுடன்.


தொடர்புக்கு, ஈஸ்வரன்,

செல்போன்: 94437 49150

வாழை
வாழை

ஒரே குழியில் இரண்டு செவ்வாழை

ஒரே குழியில் இரண்டு செவ்வாழை நடவு குறித்துப் பேசிய ஈஸ்வரன், “மகாராஷ்டிராவில் ஒரே குழியில் 4 வாழைகள் வரை நடவு செய்து நல்ல மகசூல் எடுத்து வருவதாகக் கேள்விப்பட்டேன். நாமும் அப்படிச் செய்து பார்த்தால் என்னன்னு தோணுச்சு. அதனால, சோதனை அடிப்படையில் ஒரு ஏக்கர்ல வரிசைக்கு வரிசை 12 அடி, செடிக்குச் செடி 12 அடி இடைவெளியில் மாங்கன்றுகளை நடவு செய்தேன். அதுல ஊடுபயிரா செடிக்குச் செடி 6 அடி, வரிசைக்கு வரிசை 6 அடி இடைவெளியில் குழி எடுத்து, ஒரு குழிக்கு இரண்டு செவ்வாழை விதைக்கிழங்குகள் வீதம் 1,600 கிழங்குகள் நடவு செய்தேன். இதில், 1,200 வாழைகள் நல்ல காய்ப்புடன் இருக்கு. ஒரு குலையில அதிகபட்சமாக 4 சீப்புகள் இருக்குது. இதனால, அதிக காற்று, அதிக வெயிலிலிருந்து மாங்கன்றுகள் காப்பாற்றபட்டுவிடும். வாழை மூலம் தனி வருமானமும் கிடைக்கும்” என்றார்.

களைகளைக்
கட்டுப்படுத்தும் மூடாக்கு

விதைக்கிழங்கு நடும்போதே சணப்பை, கொழிஞ்சி, தக்கைப்பூண்டு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை 10 கிலோ (ஒரு ஏக்கருக்கான அளவு) எடுத்து அதை நிலம் முழுவதும் விதைக்க வேண்டும். 60 முதல் 70-ம் நாளில் பூப்பூத்த நிலையில் தரையிலிருந்து 6 இன்ச் உயரம் வரை விட்டுவிட்டு அறுவடை செய்து நிலம் முழுவதும் அப்படியே பரப்பி விட வேண்டும். இதேபோல அடுத்த 60-ம் நாளில் முழுமையாக அறுவடை செய்து மீண்டும் நிலம் முழுவதும் பரப்பி விட வேண்டும். இதனால், களைகள் கட்டுப்படுத்தப்படும். நிலத்திற்கு மூடாக்காகவும் அமையும். மண்ணும் ஈரப்பதத்துடன் இருக்கும். களை எடுக்கும் செலவும் ஓரளவு குறையும்.

இப்படித்தான் வாழைச் சாகுபடி!

5 ஏக்கர் தென்னந்தோப்பில் ஊடுபயிராகச் செவ்வாழை, நேந்திரன் வாழை நடவு செய்வது குறித்து ஈஸ்வரன் கூறிய தகவல்கள் பாடமாக இங்கே:

வாழைச் சாகுபடி செய்ய எல்லா வகை மண்ணும் ஏற்றது. வண்டல், கரிசல் மண்ணில் வாழையின் வளர்ச்சி நன்றாக இருக்கும். அதிகமாகக் காற்று வீசும் ஆடி, ஆவணி மாதங்களைத் தவிர மற்ற மாதங்களில் நடவு செய்யலாம். நடவு செய்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக 10 நாள்கள் இடைவெளியில் 3 முறை உழவு செய்ய வேண்டும். மூன்றாவது உழவிற்குப் பிறகு, வரிசைக்கு வரிசை 7 அடி, கன்றுக்குக்கன்று 7 அடி இடைவெளியில் ஓர் அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். இந்த இடைவெளியில் 5 ஏக்கரில் 4,000 முதல் 4,400 குழிகள்வரை எடுக்கலாம் (ஏக்கருக்கு 800 முதல் 880 குழிகள்). குழியை 3 முதல் 5 நாள்கள்வரை ஆற விட வேண்டும்.

தென்னைக்குள் வாழை
தென்னைக்குள் வாழைகுழியின் மேற்பரப்பு மண்ணைத் தனியாகவும், குழி தோண்டி எடுத்த மண்ணைத் தனியாகவும் வைக்க வேண்டும். குழிக்குள் விதைக்கிழங்கு நட்ட பிறகு, மேல் மண், குழி தோண்டிய மண் இரண்டையும் கலந்து குழியை மூட வேண்டும். நடவுக்காகத் தேர்வு செய்யப்படும் கிழங்குகள் ஒவ்வொன்றும் ஒன்று முதல் ஒன்றரை கிலோ வரை எடை உள்ளதாக இருக்க வேண்டும். நடவுக்கு முன்பாகப் பஞ்சகவ்யாவில் கிழங்குகளை முக்கி எடுத்துச் சிறிது நேரம் நிழலில் காய வைத்து நடவு செய்ய வேண்டும்.

இதனால், வேர் அழுகல், தண்டு அழுகல், பூஞ்சண நோய்கள் கட்டுப்படும். கிழங்கு நட்ட அன்று உயிர் நீர் விட வேண்டும். மூன்றாவது நாள் குழிக்குள் காற்றுப் போகாமல் இருப்பதற்காகக் கிழங்கைச் சுற்றிலும் மண் அணைத்து, இறுக்கமாக மிதித்து விட வேண்டும். இதனால், வேரின் வளர்ச்சி நன்றாக இருக்கும். பிறகு, மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து 3 மாதங்கள் வரை தண்ணீர் மட்டுமே பாய்ச்சி வந்தால் போதும். 3-ம் மாதத்தில் ஒரு கன்றுக்கு அரைக்கிலோ அளவு மண்புழு உரத்தைத் தூரில் வைத்து மண் அணைக்க வேண்டும்.

பிறகு, 45 நாள்களுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி பஞ்சகவ்யா கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். மாதம் ஒருமுறை 200 லிட்டர் (ஒரு ஏக்கர்) ஜீவாமிர்தத்தைப் பாசன நீருடன் கலந்து விட வேண்டும். 5 மற்றும் 7-ம் மாதத்தில் ஒரு கன்றுக்கு ஒரு கிலோ வீதம் தூர்ப்பகுதியில் மண்புழு உரம் வைக்க வேண்டும். இயற்கை முறையில் சாகுபடி செய்வதால் பூச்சி, நோய்த்தாக்குதல் ஏதுமில்லை. மேலும் சில இடுபொருள்களைக் கொடுக்கலாம் என்றாலும், எனக்கு வயதாகிவிட்டதால் இதற்கு மேல் எந்தப் பராமரிப்பும் என்னால் செய்ய முடியவில்லை.

ஆனால், இயற்கை இடுபொருள்களைச் சரியான இடைவெளியில் தொடர்ச்சியாகக் கொடுத்து வந்தால் நல்ல மகசூல் எடுக்கலாம். அதாவது, விதைக்கிழங்கு நடவு செய்த 2-ம் மாதத்திலிருந்து 20 நாள்கள் இடைவெளியில் 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசன நீருடன் கலந்து விட வேண்டும். 3-ம் மாதம் ஒரு கன்றுக்கு அரைக்கிலோ மண்புழுவுரம், 2 கிலோ தொழுவுரம் கலந்து தூர்ப்பகுதியில் வைக்க வேண்டும். பிறகு, மாதம் ஒருமுறை 200 லிட்டர் தண்ணீரில் 4 லிட்டர் மீன் அமிலம் கலந்து பாசன நீருடன் விட வேண்டும்.

இயற்கை முறையில் சாகுபடி செய்வதால் தூர்வெடிப்பு, இலைப்புள்ளி, வேர் அழுகல், தண்டுத்துளைப்பான் போன்ற நோய்களின் பாதிப்புகள் இருக்காது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டாவது மாதத்திலிருந்து 20 நாள்களுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி இஞ்சி-பூண்டு-மிளகாய்க் கரைசல் கலந்து தெளிப்பது நல்லது. இப்படிச் செய்தால் குலையில் காய்கள் கூடுதல் திரட்சியுடனும் நல்ல எடையுடனும் இருக்கும். வாழையின் பக்கக்கன்றுகளை அவ்வப்போது வெட்டியும் மூடாக்காகப் போடலாம். செவ்வாழை 12-ம் மாதத்திலும், நேந்திரன் ரக வாழை 10-ம் மாதத்திலும் அறுவடைக்கு வரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு