Published:Updated:

ஊடுபயிர்கள் உணவுக்காடு - தென்னையில் 80 வகைப் பயிர்கள்!

காதர் மீரான்
பிரீமியம் ஸ்டோரி
News
காதர் மீரான்

மகசூல்

நாம் செய்யும் வேலையை எப்படிச் செய்கிறோம் என்பதைப் பொறுத்துதான் வெற்றி அமையும். பல இடங்களில் தென்னை விவசாயிகள் போதுமான வருமானம் இல்லை என வேதனையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில்… தென்னைக்கு இடையில் பல பயிர்களை ஊடுபயிராகச் சாகுபடி செய்வதோடு, விளை பொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்து நல்ல லாபம் எடுத்து வருகிறார்கள், பல விவசாயிகள். அத்தகையோரில் குறிப்பிடத்தக்கவர், திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த காதர் மீரான். இவர் தென்னந் தோப்புக்குள் வாழை, மா, எலுமிச்சை, பலா, ரம்புட்டான், மங்குஸ்தான் உள்ளிட்ட பல வகையான பயிர்களைச் சாகுபடி செய்து தென்னந்தோப்பை ஓர் உணவுக்காடாக உருவாக்கி வைத்திருக்கிறார்.

மாற்றத்தை ஏற்படுத்திய பசுமை விகடன்!

ஒரு மதிய வேளையில், அந்த உணவுக்காட்டுக்குள் சென்று, தேங்காய் அறுவடை பணியிலிருந்த காதர் மீரானைச் சந்தித்தோம். “விவசாயம் எங்க குடும்பத்தொழில். பரம்பரையா விவசாயம் செய்றோம். நான் எம்.எஸ்ஸி பிசிக்ஸ் படிப்பு முடித்துவிட்டு வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குப் போனேன். ஒரு கட்டத்தில் வேலைக்குக் கும்பிடு போட்டுவிட்டு ஊர் திரும்பிட்டேன். இங்கே வந்து பரம்பரைத் தொழிலான விவசாயத்தைக் கையிலெடுத்தேன்.

உணவுக்காட்டில் காதர் மீரான்...
உணவுக்காட்டில் காதர் மீரான்...

இது 16 ஏக்கர் தோப்பு. என் கைக்கு இந்தத் தோப்பு கிடைச்சப்போ தென்னை மரங்கள் மட்டும்தான் இருந்துச்சு. நான் பராமரிக்க ஆரம்பிச்சு பத்து வருஷம் ஆயிடுச்சு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
‘‘விவசாயத்தில் நான் கத்துக்கிட்ட விஷயம் விளைபொருளை அப்படியே விற்பனை செய்வதைவிட, மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும்போது, கூடுதல் விலை கிடைக்கும் என்பதைத்தான்.’

விவசாயத்துக்கு வந்த புதுசுல… களை எடுக்க, உழவு செய்ய, பார் எடுக்கனு எக்கச்சக்கமா செலவு பண்ணிருக்கேன். எப்படி இந்தச் செலவுகளைக் குறைக்கலாம்னு யோசனை செய்திட்டு இருந்த சமயத்தில்தான் ‘பசுமை விகடன்’ எனக்கு அறிமுகமாச்சு.

பலா...
பலா...

அதைத் தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சப்போ எனக்குள்ள பெரிய மாற்றம் உண்டாச்சு. பசுமை விகடன் மூலமாகத்தான் சுபாஷ் பாலேக்கர் பத்தித் தெரிஞ்சிக்கிட்டேன். தொடர்ந்து நம்மாழ்வார், பாலேக்கர் வீடியோக்களைப் பார்த்தேன். அவங்க எழுதின புத்தகங்களையும் படித்தேன். அதன் பிறகு, கலப்புப்பயிர் சாகுபடிதான் செலவைக் குறைக்க ஒரே வழினு புரிஞ்சது. அதுவும் முழுமையான இயற்கைவழி வேளாண்மைதான் செலவைக் குறைக்குமென்று உணர்ந்தேன். இதன்படி உருவாக்கினதுதான் இந்த உணவுக்காடு” என்ற காதர் மீரான் உணவுக்காட்டைச் சுற்றிக்காட்டியபடியே பேச ஆரம்பித்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தென்னை, பாக்கு, வாழை, எலுமிச்சை, பலா, மிளகு எனப் பலவிதச் செடி கொடிகள், மரங்களோடு வனம் போலத்தான் காட்சியளித்தது.

தேங்காய் அறுவடை...
தேங்காய் அறுவடை...

“தென்னை மரங்கள் மட்டுமே இருந்த இந்தத் தோப்பில் பல்வேறு மரங்களைத் தற்போது நடவு செய்திருக்கேன். வேலியோரத்திலும் பாதை ஓரத்திலும்கூட நிறைய மரங்கள் இருக்கு. குமிழ், மலைவேம்பு, தேக்கு, தோதகத்தி, வேம்பு, சந்தன வேம்பு மரங்கள் நடவு செய்திருக்கேன்.

தேங்காய் தரம் பிரிக்கும் பணியில்...
தேங்காய் தரம் பிரிக்கும் பணியில்...

25 அடி இடைவெளியில் மொத்தம் 1,200 தென்னை மரங்கள் இருக்கு. அதில் 400 மரங்கள் காய்ப்பில் இருக்கு. மீதி 800 மரங்கள் இன்னும் காய்ப்புக்கு வரலை. தென்னைக்கு இடையில் 1,900 பாக்கு மரங்கள் இருக்கு. அதில் 400 பாக்கு மரங்கள் மகசூல் கொடுத்திட்டிருக்கு. மீதியெல்லாம் இளம் மரங்கள். இதற்கிடையில் முப்பட்டை, பூவன், ரஸ்தாலி, கற்பூரவள்ளி, செவ்வாழைனு 5 ரக வாழை இருக்கு. நாட்டு ரகங்களான பூவனும், முப்பட்டையும்தான் அதிகம் இருக்கு.

ஊடுபயிராக வாழை உள்ளிட்ட பயிர்கள்...
ஊடுபயிராக வாழை உள்ளிட்ட பயிர்கள்...

500 கிலோ விதை 4,000 கிலோ மகசூல்!

ஊடுபயிரா சேனைக்கிழங்கு இருக்கு. அது 1 வருஷப் பயிர். நடவு செஞ்சது மட்டும்தான். வேற எந்தப் பராமரிப்பும் செய்யலை. மரங்களுக்குப் பாய்ச்சுகிற தண்ணியில வளந்துடுச்சு. 500 கிலோ விதைக்கிழங்கை நட்டோம். இதுவரைக்கும் 4 டன் மகசூல் எடுத்திருக்கேன். இன்னும் மகசூல் கிடைக்கும். போன போகத்தில் மஞ்சள் போட்டு அறுவடை முடிச்சாச்சு. கொஞ்சம் எலுமிச்சை மரங்கள் இருக்கு. ஆனா, நிழல் அதிகம் இருக்கிறதால, காய்கள் மார்க்கெட்டுக்குக் கொண்டு போற அளவுக்குத் தரமா இல்லை. அதனால, கிடைக்கிற எலுமிச்சம்பழங்களை ஊறுகாயா மதிப்புக்கூட்டி விற்பனை செய்றேன். இன்னும் மஞ்சள் நாவல், மா, பலா, காபி, மிளகு, ஜாதிக்காய், ரம்பூட்டான், மங்குஸ்தான், லவங்கம், ஆலிவ், சீதா, வேம்பு, புளி, சந்தன வேம்பு, குட்டி வேலானு மொத்தம் 80 வகையான மரப்பயிர்கள் இந்த இடத்துல இருக்கு.

மஞ்சள்...
மஞ்சள்...

இந்தப் பத்து வருஷத்தில் பல சோதனை முயற்சிகள் பண்ணி, அதுல தோல்வியையும் சந்திச்சிருக்கேன். செய்த தவறுகள்ல இருந்து பல பாடங்களைக் கத்துக்கிட்டு கவனமா இருக்கேன். இப்போ மூணு வருஷமாதான் ஒரு நிலையை அடைஞ்சி லாபகரமா விவசாயம் செய்திட்டிருக்கேன்.

தென்னைக்கிடையில் ஊடுபயிர்கள்...
தென்னைக்கிடையில் ஊடுபயிர்கள்...

பண்ணையில் ஆட்கள் தலையீட்டைக் குறைச்சிக்கிட்டிருக்கேன். பயிர்களைத் தொந்தரவு பண்றதே இல்லை. அதனால், 70 சதவிகித செலவு குறைஞ்சிருக்கு. தென்னையில் மகசூல் குறைவா இருந்தாலும் ஊடுபயிர்கள் மூலமாகக் கிடைக்கிற வருமானம் ஈடுகட்டிடுது” என்ற காதர் மீரான், வருமானம் பற்றிப் பேசத் தொடங்கினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வருமானம் கூட்டும் மதிப்புக்கூட்டல்!

“விவசாயத்தில் நான் கத்துக்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் விளைபொருளை அப்படியே விற்பனை செய்வதைவிட, மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும்போது, கூடுதல் விலை கிடைக்கும் என்பதைத்தான். நான் தேங்காய், வாழை, எலுமிச்சை, மஞ்சள் எல்லாத்தையும் மதிப்புக்கூட்டி விற்பனை செய்றேன். தினமும் ஒரு வாழைத்தார் கிடைக்கும். வாழையை மதிப்புக்கூட்டி வாழைக்காய்ப் பொடி தயார் செய்றேன். சின்னக் குழந்தைகளுக்கு இதைச் சாப்பிடக்கொடுத்தா நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும். இதுக்கு நல்ல வரவேற்பு இருக்கு.

ஊடுபயிர்கள் உணவுக்காடு - தென்னையில் 80 வகைப் பயிர்கள்!

எழுமிச்சையில ஊறுகாய், தேங்காய்ல சிப்ஸ், எண்ணெய் தயார் செய்றேன். தானாகக் கீழே விழுற முற்றின தேங்காயை உரிச்சா உள்ளே கொப்பரை இருக்கும். அதை உருட்டுக் கொப்பரைனு சொல்வாங்க. அதிலிருந்து சிப்ஸ் தயார் செய்றேன். தேங்காய் எண்ணெய் ஆட்டி விற்பனை செய்றேன். தோப்பில் நூற்றுக்கணக்கான மூலிகைகள் இருக்கு. எல்லாமே தானா விளைஞ்ச மூலிகைகள். அதுல தேர்ந்தெடுத்த மூலிகைகளை வெச்சு, மூலிகை எண்ணெய் காய்ச்சுறேன். எதையுமே அதிக விலைக்கு விற்பனை செய்றதில்லை. மூலப்பொருள், எங்களுக்கான கூலியை மட்டும் கணக்குப் போட்டு, விலை சொல்வேன்.

பசுமை விகடன் மூலமாகத்தான் சுபாஷ் பாலேக்கர் பத்தித் தெரிஞ்சிக்கிட்டேன். இந்தப் பத்து வருஷத்தில் பல சோதனை முயற்சிகள் பண்ணி அதுல தோல்வியையும் சந்திச்சிருக்கேன்.

மஞ்சள் அறுவடை செஞ்சு, அடுத்த நடவுக்கு விதை மஞ்சள் எடுத்து வைத்திருக்கிறேன். மீதி மஞ்சளை வேக வைக்காம நேரடியா சூரிய ஒளியில் காய வெச்சு, அரைச்சுப் பொடியாக்கிருக்கேன். அதனால, தரம் குறையாம நல்லா இருக்கு. இதுக்கும் நல்ல வரவேற்பு இருக்கு. எங்க விளைபொருள்கள், மதிப்புக்கூட்டிய பொருள்களைத் திண்டுக்கல்ல ஞாயிற்றுக்கிழமைகள்ல நடக்கிற இயற்கை விவசாயிகள் சந்தையில் விற்பனை செய்றேன். இப்போ எல்லாச் செலவும் போக, வருஷத்துக்கு 5,00,000 ரூபாய் லாபமா நிக்கிது” என்ற காதர் மீரான் நிறைவாக,

ஊடுபயிர்கள் உணவுக்காடு - தென்னையில் 80 வகைப் பயிர்கள்!

“இப்போ, எனக்குப் பெரிய மனநிறைவு கிடைச்சிருக்கு. பொருளாதார ரீதியாகவும் நிறைவடைஞ்சிருக்கேன். இதுல வர்ற வருமானத்தை வெச்சு, பக்கத்துல இன்னொரு தோட்டத்தை உருவாக்கிட்டிருக்கேன். அதுல ஒன்றரை ஏக்கர்ல சம்பங்கி நடவு செய்திருக்கேன். அதுவும் முழுமையான இயற்கை விவசாயம்தான். அது மூலமா, நல்ல வருமானம் எடுக்க முடியும்னு நம்பிக்கை இருக்கு. எங்க அப்பா காலத்துல இந்தப் பக்கம் மேகம் போறப்ப எங்க பகுதியில் இரண்டு தூறல் தூறும். இப்போ மழையே இல்லை. தாவரங்கள், மரங்கள் பெருகணும். திரும்பவும் அந்த மாதிரியான ஒரு நிலைமை வரணுங்கிறது என்னோட ஆசை” என்று சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு: காதர் மீரான், செல்போன்: 99949 80250.

ஊடுபயிர்கள் உணவுக்காடு - தென்னையில் 80 வகைப் பயிர்கள்!

காதர் மீரான் உணவுக்காட்டைப் பற்றி விளக்கும் காணொளியைப் பார்க்க இந்த QR Code-யை ஸ்கேன் செய்யவும்.

குறைந்துவரும் இடுபொருள் பயன்பாடு

“பாசனம் செய்றப்போ ஜீவாமிர்தத்தைக் கலந்துவிடுவேன். மரங்களுக்குத் தொழுவுரம் கொடுக்கிறேன். முன்னாடி அதிகம் கொடுத்தேன். இப்போ குறைவான அளவுதான் கொடுக்கிறேன். நிறைய பயிர்கள் இருக்கிறதால, அதிக இலைதழைகள் விழுது. அதெல்லாம் மட்கி உரமாகிடுது. இன்னும் கொஞ்ச நாள்ல, தொழுவுரத்தையும் நிறுத்திடுவேன். நடவு, பாசனம், அறுவடை மட்டும்தான் வேலையா இருக்கும். அந்த நிலையைச் சீக்கிரம் அடைஞ்சிடுவோம்னு நம்பிக்கை இருக்கு” என்கிறார் காதர் மீரான்.