Published:Updated:

வேருக்கே சென்றடையும் நீர்! விவசாயியின் எளிய சொட்டுநீர் நுட்பம்!

தென்னைக்குச் சொட்டு நீர் அமைப்பு
பிரீமியம் ஸ்டோரி
தென்னைக்குச் சொட்டு நீர் அமைப்பு

தொழில்நுட்பம்

வேருக்கே சென்றடையும் நீர்! விவசாயியின் எளிய சொட்டுநீர் நுட்பம்!

தொழில்நுட்பம்

Published:Updated:
தென்னைக்குச் சொட்டு நீர் அமைப்பு
பிரீமியம் ஸ்டோரி
தென்னைக்குச் சொட்டு நீர் அமைப்பு

யிர்களுக்குத் தேவையான நீர் கிடைப்பதே தற்போதைய காலகட்டத்தில் பெரும் சவாலாக உள்ளது. வாய்க்கால் மடையைத் திருப்பி நீர்ப் பாசனம் செய்தது மாறி, விவசாயிகள் சொட்டுநீர்ப் பாசனத்தின் பக்கம் திரும்பிவிட்டனர். ‘கிடைக்கும் நீரைப் பொறுத்தே விவசாயம்’ என்றாகிவிட்ட நிலையில், நீரை வீணாக்காமல் பயன்படுத்தி மகசூல் பெறுவதுதான் முக்கியம். அந்த வகையில், தென்னைச் சாகுபடியில், நீர் தேவையைக் குறைக்க, தென்னை மரத்தின் தூரைச் சுற்றிலும் நீர் முழுமையாகக் கிடைக்கும்படி சொட்டுநீர்க் குழாயை அமைத்துள்ளார் தூத்துக்குடியைச் சேர்ந்த விவசாயி சிவகுமார்.

தூத்துக்குடி மாவட்டம், காயாமொழியில் உள்ளது சிவகுமாரின் தென்னந்தோப்பு. காய்ந்த தென்னை மட்டைகளைத் தென்னைக்கு மூடாக்காகப் போட்டுக் கொண்டிருந்தவரைச் சந்தித்துப் பேசினோம். “தென்னை, வாழை, முருங்கைதான் எங்கப் பகுதியில முக்கியப் பயிர்கள். நான் 10-ம் வகுப்புவரைக்கும் படிச்சிருக்கேன். எங்க அப்பாக்கூடச் சேர்ந்து தென்னை, முருங்கை விவசாயத்தைச் செய்துட்டு இருக்கேன். அப்பா காலத்துல ரசாயன உரம் பயன் படுத்திதான் விவசாயம் நடந்துச்சு. நானும் ரசாயன உரம், ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்திதான் விவசாயம் செஞ்சுட்டு இருந்தேன். இப்போ மூணு வருஷமா அடியுரமா தொழுவுரமும் மூடாக்கும் மட்டும் தான் பயன்படுத்துறேன். வேறெந்தப் பராமரிப்பும் செய்யல.

சொட்டு நீர் அமைப்புடன் சிவகுமார்
சொட்டு நீர் அமைப்புடன் சிவகுமார்


இது மொத்தம் 3 ஏக்கர் நிலம். 225 மரங்கள் இருக்கு. இதுல 170 மரங்கள் நல்ல பலன் தர்ற நிலையில இருக்கு. நாட்டு ரகங்கள்ங்கிறதுனால 30 வருஷமாகியும் கம்பீரமா நிற்குது. 25 வருஷத்துக்கு முன்னால திருச்செந்தூர் வட்டாரத்துலயே முதலில் சொட்டுநீர் அமைச்சது நான்தான். இந்த மண் கடற்கரை மணல் எப்படி இருக்குமோ அதே மாதிரி கையில ஒட்டாத, தேரிக்காட்டு செவல் மணல். ஆனா, சொட்டுநீர்ப் பாசனத்துல தண்ணீர் சிக்கனத்துனால தென்னையில நல்ல மகசூல் கிடைச்சுது. தென்னையின் தூர்ல இருந்து 6 அடி தூரத்துல அகழி போலக் குழி எடுத்து அதுக்குள்ள காய்ஞ்ச தென்னை மட்டை, இலைதழைகள், தோட்டக் கழிவுகள், மட்கிய உரம் போட்டு வச்சோம். என்னதான் சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சிருந்தாலும், தென்னை மரத்தைச் சுற்றி வேர்களுக்குத் தண்ணீர் கிடைக்காமத்தான் இருந்துச்சு’’ என்றவர் ஒரு தென்னை மரம் அருகில் நம்மை அழைத்துச் சென்று விவரிக்கத் தொடங்கினார்.

‘‘ ‘வாய்க்கால் பாசனத்துலதான் மரத்தைச் சுத்தி தண்ணி கெட்டும். சொட்டுநீர்னா சொட்டுச் சொட்டாத்தான் விழும்’னு உள்ளூர் விவசாயிங்க நக்கலாச் சொன்னாங்க. சொட்டுநீர்ப் பாசனத்துலயே வாய்க்கால் பாசனம் மாதிரி மரத்தைச் சுத்திலும் சரி சமமா விழ வைக்க என்ன செய்யலாம்னு யோசிச்சேன். சொட்டுநீர்க் குழாயை மரத்தைச் சுற்றி வளைச்சு, அதுல மைக்ரோ டியூப் போட்டுப் பார்த்தேன். நான் நினைச்ச மாதிரியே தண்ணீர் மரத்தைச் சுத்தி விழுந்துச்சு.

தென்னை மரத்தைச் சுற்றி விழும் தண்ணீர்
தென்னை மரத்தைச் சுற்றி விழும் தண்ணீர்தூர்பகுதியைச் சுத்தி வச்சப்பவே, சுத்திலும் தண்ணீர் விழுதுன்னா, சொட்டு நீர்க்குழாயை இன்னும் கொஞ்சம் உயரத்துல வச்சா எப்படித் தண்ணி விழுதுன்னு பார்த்தேன். 3 அடி உயரத்துக்கு இன்னொரு சொட்டுநீர்க் குழாயை இணைச்சா எப்படி இருக்கும்னு வச்சுப் பார்த்தேன், தூர் பகுதியில விழுந்ததை விட 3 அடி தூரத்துல மரத்தைச் சுத்தி பரவலா விழுந்துச்சு. 10 மரத்துக்கு இதே மாதிரி அமைச்சு 15 நாள்வரைக்கும் சோதனை செஞ்சு பார்த்தேன். அதுல திருப்தி கிடைச் சதுனால, எல்லா மரத்துக்கும் அதே மாதிரி அமைச்சிட்டேன்” என்றவர், அதன் நன்மைகள் குறித்துப் பேசினார்.

தூருக்கு வேண்டாம்... வேருக்குப் போதும்

“தென்னை மரத்தில் சுற்றி வளைக்கப்பட்டுள்ள சொட்டுநீர்க் குழாயில் இருந்து, அரை அடி நீளத்தில் 5 முதல் 6 மைக்ரோ டியூப்கள் விடப்பட்டிருக்கு. அதனால தண்ணீர் தூர்ப்பகுதியிலிருந்து 3 அடி தள்ளிப் போய் விழுகுது. இதனால், தென்னையின் வேர்ப் பகுதிக்கே நேரடியா தண்ணி கிடைக்குது. குழி வெட்டி உரம் வைக்காம, தொழுவுரம், மட்டைகள், தோட்டக்கழிவுகள், இலைதழைகளைத் தூரைச் சுற்றிலும் போட்டா, தண்ணீர் பட்டு மட்கி உரமாகும். அதோட, மண்ணும் எப்போதும் ஈரப்பதத் துடன் இருக்கும். வேர்கள் பரந்து விரிந்து போறதால அதன் ஸ்திரத்தன்மையும் அதிகரிக்கும். மண்ணில் பரவலாக இருக்கக் கூடிய பலவித தாது சத்துகளை வேர் உறிஞ்சி, மரத்துக்குக் கொடுக்கும். நீர் சிக்கனம் மட்டுமல்லாம, மரத்துக்குத் தேவையான சத்துகளையும் முழுமையா வேர்கள் எடுத்துக் கொடுக்குறதால மகசூலும் செழுமையா இருக்கும்.

தேங்காய் வெட்டும்போது கீழே விழுற காய்கள், மண்ணில் விழுந்து உருண்டு ஓடாம, மூடாக்கில் விழுந்து கிடக்கும். அதனால, காய்களைச் சேகரிக்குறது ரொம்பச் சுலபம். வழக்கமாக 3 மணி நேரம் தண்ணீர் பாய்ச்சுவதாக இருந்தால், இந்த முறையில் 1 மணி நேரம் போட்டால் போதும். நீர்பிடிப்புத் தன்மை கொண்ட வண்டல்மண், களிமண், கரிசல்மண் போன்ற மண் வகைளில் ஒரு மணி நேரம் பாய்ச்சிவிட்டு, பிறகு 2 முதல் 3 நாள்களுக்கு ஒருமுறை பாய்ச்சினாலே போதும். ஜீவாமிர்தம், அமுதக்கரைசல் மாதிரியான இயற்கை இடுபொருள்களைக்கூட இந்த முறையில் விட்டால் சமமாகக் கிடைக்கும். தென்னைக்குள் மேய்ச்சல் முறையில் ஆடு, மாடு, கோழி கூட வளர்க்கலாம். அதனால சொட்டுநீர்க் குழாய்க்கு எந்தப் பாதிப்புமில்ல. தண்ணீர்த் தேவையும் ரொம்பக் குறையுது.

தென்னை மரத்தைச் சுற்றி விழும் தண்ணீர்
தென்னை மரத்தைச் சுற்றி விழும் தண்ணீர்


ஒரு ஏக்கருக்கு வழக்கமா, ரூ.16,000 செலவாகுதுன்னா, இந்த முறையில சொட்டுநீர்க்குழாய்கள், மைக்ரோ டியூப்கள் வகைக்குக் கூடுதலாக ரூ.6,000 முதல் ரூ.8,000 வரை செலவாகும். கொஞ்சம் கூடுதலாகச் செலவானாலும் ஒருமுறை அமைச்சுட்டா ஆண்டுக்கணக்குல தாங்கும். தண்ணீரும் மிச்சமாகும். தென்னையோட வளர்ச்சியும் நல்லா இருக்கும். விவசாயத்துல இயற்கை முறையிலான சாகுபடி எந்த அளவுக்கு முக்கியமோ அதைவிட, நீர் மேலாண்மையும் ரொம்ப முக்கியம்” என்றார்.


தொடர்புக்கு, சிவகுமார்,

செல்போன்: 94881 66450.

எப்படி அமைப்பது?

தென்னை மரத்தின் தூர்ப்பகுதியில் நீளவாக்கில் கிடக்கும் சொட்டுநீர்க்குழாயில் இருந்து 16 மி.மீ அளவுள்ள, ஆங்கில எழுத்து T வடிவில் உள்ள இணைப்பானைச் சொருக வேண்டும். அதிலிருந்து 3 அடி உயரத்துக்கும், மற்றொரு 16 மி.மீ சொட்டுநீர்க்குழாயைச் சொருகி மரத்தின் மேல் ஏற்றி, அதிலும் ஒரு ஆங்கில எழுத்து T வடிவில் உள்ள இணைப்பானை இணைக்க வேண்டும். அதில், 16 மி.மீ சொட்டுநீர்க் குழாயை மரத்தின் சுற்றளவுக்கு வளைத்து இணைத்துவிட வேண்டும். அதிலிருந்து அரை அடி நீளமுள்ள 5 முதல் 6 மைக்ரோ டியூப்களைச் சமமான இடைவெளியில் சொருக வேண்டும். இதனால், மரத்தைச்சுற்றி சுமார் இரண்டரை அடி முதல் 3 அடி தூரத்தில் தண்ணீர் விழும். மைக்ரோ டியூப்களில் அடைப்பு ஏற்பட்டிருந்தால், தண்ணீர் மெதுவாக விழும். அதைத் தட்டிவிட்டாலே போதும். இல்லாவிட்டால், மைக்ரோடியூப்பை வெளியே எடுத்து அடைப்பை நீக்கிவிட்டு மீண்டும் பொருத்திவிடலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism