Published:Updated:

தேங்காய் மதிப்புக்கூட்டல்... உருக்கு எண்ணெயில் உன்னத வருமானம்!

எண்ணெயை பாட்டிலில் நிரப்பும் பணியில் மீனாட்சி சுந்தரம்
பிரீமியம் ஸ்டோரி
News
எண்ணெயை பாட்டிலில் நிரப்பும் பணியில் மீனாட்சி சுந்தரம்

மதிப்புக்கூட்டல்

ற்பத்திச் செய்த விளைபொருள்களை அப்படியே விற்காமல் மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால் அதிக லாபம் பார்க்கலாம் என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த எறும்புக்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி மீனாட்சி சுந்தரம்.
தேங்காய்த் துருவுதல், தேங்காய்த் துருவலை தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்தல்
தேங்காய்த் துருவுதல், தேங்காய்த் துருவலை தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்தல்

எம்.ஏ. ஆங்கிலப் பட்டதாரியான மீனாட்சி சுந்தரத்திற்குத் தென்னை விவசாயம்தான் பிரதானம். தேங்காயை அப்படியே விற்காமல், உலர்த்திக் கொப்பரையாகவும், மரச்செக்கு எண்ணெயாகவும் விற்பனை செய்து வந்தவர், இப்போது பாரம்பர்ய உருக்கு எண்ணெய் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இதுபற்றித் தெரிந்துகொள்ள அவரது வீட்டில் ஒரு நாள் காலை வேளையில் ஆஜரானோம். உருக்கு எண்ணெய் தயாரிப்பதற்காகத் தேங்காயை உடைத்துத் துருவும் பணியில் மும்முரமாக இருந்தார் மீனாட்சி சுந்தரம். நம்மை வரவேற்றவர், தேங்காயைத் துருவியபடியே பேசினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆறவைத்தல், எடை போடுதல்
ஆறவைத்தல், எடை போடுதல்

“என் அப்பா சிவனணைந்த பெருமாள் வக்கீலுக்குப் படிச்சிருந்தாலும் விவசாயத்தைப் பிரதானமா செய்தார். எங்க அப்பாதான் குமரி மாவட்ட உழவர் பெருமன்றம்ங்கிற சங்கத்தைத் தொடங்கி விவசாயிகளுக்கு வழிகாட்டினார். 1992-ம் வருஷம் அப்பா இறந்த பிறகு நான் முழுமையா விவசாயத்தில இறங்கிட்டேன். வேளாண்மையில லாபம் இல்லைங்கிறது மக்கள் மத்தியில பரவலான கருத்தா இருக்கு. அதைமாத்தி விவசாயியும் பெரும் முதலாளியாக ஆகணும்ங்கிறது என்னோட ஆசை’’ என்றவர், தேங்காய் விவசாயம் பற்றிச் சொல்லத்தொடங்கினார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கூலி உயர்ந்த அளவுக்குத் தேங்காய் விலை ஏறலை...

“எங்க பாரம்பர்ய விவசாயம் தென்னைதாங்க. எனக்கு எட்டு ஏக்கர் தென்னந்தோப்பு இருக்கு. அதுல ஆரம்பத்துல ஊடுபயிரா வாழை போட்டிருந்தேன். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ரெட்லேடி பப்பாளி போட்டேன். பப்பாளியை வடசேரி உழவர் சந்தையில நானே நேரடியா விற்பனை செய்யுறதுனால வாழையை விட ஒரு மடங்கு கூடுதல் லாபம் கிடைக்குது. தேங்காயை பொறுத்தமட்டில பெரிய விலை கிடைக்காது. நான் விவசாயத்தில இறங்குன 1992-ம் வருஷம் வேலையாளுக்கான கூலி ஒரு நாளைக்கு 17 ரூபாய். அப்போது ஒரு தேங்காய் விலை 4 ரூபாய். 1998-ம் வருஷம் 150 ரூபாய், ஒரு தேங்காய் 6 ரூபாய். 2010-க்கு மேல ஒரு தேங்காய் 9 ரூபாய். ஆனால் ஒரு நாள் கூலி 450 ரூபாய் ஆகிடுச்சு. வேலையாளுக்கான கூலி பல மடங்கு அதிகரிச்சாலும் விவசாய விளை பொருளுக்கான விலை அதிகரிக்கிறதில்லை. அதனாலதான் தேங்காயை அப்படியே விற்பனை செய்யாம மதிப்புக்கூட்டி விக்கிறதுன்னு முடிவெடுத்தேன். தேங்காயை உலர வெச்சு கொப்பரையாகவும், மரச்செக்கில ஆட்டித் தேங்காய் எண்ணெயாகவும் விற்பனை செய்தேன்.

எண்ணெயை பாட்டிலில் நிரப்பும் பணியில் மீனாட்சி சுந்தரம்
எண்ணெயை பாட்டிலில் நிரப்பும் பணியில் மீனாட்சி சுந்தரம்

இந்தச் சமயத்துலதான் வேளாண்மைத் துணை இயக்குநராக இருக்கிற ஓளவை மீனாட்சி, ‘பாரம்பர்ய உருக்கு எண்ணெய் தயாரிச்சா நல்ல மார்க்கெட் இருக்கும்’னு எனக்கு வழிகாட்டுனாங்க. ஆரம்பத்துல 18 விவசாயிகள் சேர்ந்து குழுத் தொடங்கி, ஆளுக்கு ரெண்டு தேங்காய்வீதம் போட்டுப் பாரம்பர்ய உருக்கு எண்ணெய் தயாரிச்சோம். முதன்முதலா நாங்க தயாரிச்ச மூணு லிட்டர் எண்ணெயை, ஒரு லிட்டர் 600 ரூபாய் வீதம் வேளாண் அதிகாரிகளே வாங்கிகிட்டாங்க. அதுல லாபம் கிடைச்சதுனால அப்புறம் நான் உருக்கு எண்ணெய் தயாரிக்கிறதைத் தொடர்ந்தேன். இப்போ ஒரு லிட்டர் உருக்கு எண்ணெய் 700 ரூபாய்க்கு விற்பனை செய்யுறேன்’’ என்றவர், உருக்கு எண்ணெய் தயாரிக்கும் விதத்தை விவரித்தார்.

தேங்காய் துருவலிலிருந்து பாலைப் பிரித்தெடுத்தல்
தேங்காய் துருவலிலிருந்து பாலைப் பிரித்தெடுத்தல்

தேங்காய்ப் பூ... சம அளவு தண்ணீர்

“25 தேங்காயை உடைச்சுத் துருவினால் 12 கிலோ தேங்காய்த் துருவல் (தேங்காய்ப் பூ) கிடைக்கும். 12 கிலோ தேங்காய்த் துருவலைப் பெரிய கடாயிலப் போட்டு, 12 லிட்டர் தண்ணீர் விட்டு வேகவைப்போம். எவ்வளவு கிலோ துருவல் கிடைக்குதோ அவ்வளவு லிட்டர் தண்ணீர் சேர்க்கணும்கிறது முக்கியம். தேங்காய்த் துருவல் நல்லா கொதிச்சு வரும்போது நறுமணம் வரும். அந்தச் சமயத்துல கடாயை இறக்கி வெச்சு ஆற விடுவோம். ஆறிய பிறகு துருவலைக் கையால் பிழிஞ்சுப் பால் எடுப்போம். துருவலை ஒரு முறை பிழிஞ்சா மட்டும் பால் முழுசா வந்துராது. அதனால, அடுத்ததா துருவல்ல ரெண்டு லிட்டர் தண்ணீர் சேர்த்துத் துணியில வெச்சு மறுபடியும் பிழிவோம். பிழிஞ்சு எடுத்த தேங்காய்ப்பாலை அடிப்பகுதி கனமான கடாயில் மூணு மணி நேரம் காய்ச்சுவோம். காய்ச்சுறப்ப ஒரு பதத்துக்கு மேல அடி பிடிக்காம கிண்டிகிட்டே இருக்கணும். சுத்தமான உருக்கு எண்ணெய்க்கு அடிப்பகுதியில மாவுபோலத் தங்குறதை ‘கக்கன்’னு சொல்லுவோம். காய்ச்சி முடிச்சதும் ரெண்டு முதல் ரெண்டரை லிட்டர் பாரம்பர்ய உருக்கு எண்ணெய் கிடைக்கும். ஒரு கிலோ கக்கனும் கிடைக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கக்கன் சாப்பிட அவ்வளவு டேஸ்ட்டா இருக்கும். ஒரு கிலோ கக்கன் 450 ரூபாய் வரை விற்கும். எண்ணெயை நூறு மி.லி அளவு பாட்டிலில அடைச்சு, ஒரு பாட்டில் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யுறோம். கோவா போன்ற இடங்கள்ல தேங்காயில இருந்து பால் பிழியுறதுக்கும், உருக்கு எண்ணெய் காய்ச்சுறதுக்கும் மிஷின்கள் வந்திருக்கு. அவங்க உருக்கு எண்ணெயை 1,000 ரூபாய்க்கு மேல விற்பனை செய்யுறாங்க’’ என்றவர், உருக்கு எண்ணெயின் மகத்துவத்தை விவரித்தார்.

பாலை காய்ச்சுதல், அடியில் தங்கும் கக்கன்
பாலை காய்ச்சுதல், அடியில் தங்கும் கக்கன்

கொழுப்பைக் குறைக்கும்

‘‘உருக்கு எண்ணெய்ச் சமையலுக்கு நல்லது, மருத்துவக் குணம் மிகுந்தது. இந்த எண்ணெயைப் பிறந்த குழந்தை தொடங்கி எல்லா வயசு குழந்தைகளுக்கும் உடம்பில் தேய்ச்சு மசாஜ் பண்ணினா நல்ல கலர் கிடைக்கும். தலைக்குத் தேய்ச்சுக் குளிச்சா முடி அடர்த்தியா வளரும். ஒடம்பும் தணுப்பா (குளிர்ச்சியாக) இருக்கும். குழந்தைங்க முதல் பெரியவங்க வரை கொஞ்சமா உள்ளுக்குக் குடிக்கக் கொடுத்தால் கழிவுகள் நன்றாக வெளியே போகும். அதுமட்டுமில்லாம பிரசவத்துக்கு அப்புறமா அடி வயிறு உப்பி இருக்கிற பெண்கள், உருக்கு எண்ணெய் குடிச்சா கொழுப்பு குறைஞ்சு அழகாயிடுவாங்க. கொழுப்பைக் குறைக்கிற தேங்காய் எண்ணெயைக் கொழுப்புன்னு சொல்லி நம்ம பாரம்பர்யத்தை மறைச்சுட்டாங்க’’ என்றவர், விற்பனை வாய்ப்பு பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

கக்கனும் எண்ணெயும்
கக்கனும் எண்ணெயும்

“கன்னியாகுமரி மாவட்டத்துல பொதுவா வீடுகளிலேயே உருக்கு எண்ணெய் தயாரிச்சு பயன்படுத்துறதுனால சுமாரா விற்பனை ஆகுது. குமரி மாவட்டத்துக்கு வெளியேதான் விற்பனை வாய்ப்பு அதிகம். சென்னை ஐ.டி.யில வேலை செய்யுறவங்ககிட்ட உருக்கு எண்ணெயைச் சந்தைபடுத்தினோம். அவங்க, ‘எண்ணைய் வெச்சிருக்கிற பாட்டில் அழகா இல்ல, ஸ்பிரே பாட்டிலில போட்டு விற்பனை செய்யுங்க’ன்னு சொன்னாங்க. அதுக்கான முயற்சியிலயும் இறங்கியிருக்கேன். அதுமட்டுமில்லாம உருக்கு எண்ணெயைப் பெரிய அளவுல மார்க்கெட் செய்யுறதுக்காக எஃப்.எஸ்.எஸ்.ஐயிலயும் விண்ணப்பிச்சிருக்கிறேன்’’ என்றபடியே தேங்காய்த் துருவலை கடாயில் மாற்றித் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வேகவைக்கும் பணியில் ஈடுபட்டார். அடுப்புக்குத் தீமூட்டி விட்டுட்டுப் பேசத் தொடங்கினார்.

‘‘ஒரு தேங்காய் சராசரியா 500 கிராம் இருக்கும். ரெண்டு தேங்காய் சேர்ந்தா ஒரு கிலோ வரும். நூறு தேங்காய் சேர்ந்தால் 50 கிலோ வரும். ஒரு கிலோ தேங்காய் 26 ரூபாய் வீதம் கணக்கிட்டால் 50 கிலோவுக்கு 1,300 ரூபாய் கிடைக்கும். அதே 50 கிலோ தேங்காயை உடைச்சு, உலர வெச்சா 18 கிலோ கொப்பரை கிடைக்கும். ஒரு கிலோ கொப்பரை 120 ரூபாய்க்கு விற்றால் சுமாரா 2,160 ரூபாய் கிடைக்கும். கொப்பரையைச் செக்கில ஆட்டி எடுத்தா 13.5 லிட்டர் தேங்காய் எண்ணெய்க் கிடைக்கும். ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் 280 ரூபாய்க்கு விற்றால் 3,780 ரூபாய் கிடைக்கும். கூடவே பிண்ணாக்கும் கிடைக்கும்.

50 கிலோ தேங்காய்... 8 லிட்டர் எண்ணெய்

50 கிலோ தேங்காயைப் பால் பிழிஞ்சு காய்ச்சினா 8 லிட்டர் உருக்கு எண்ணெய் கிடைக்கும். ஒரு லிட்டர் 700 ரூபாய் வீதம் விற்பனை செஞ்சா 5,600 ரூபாய் கிடைக்கும். கூடவே கக்கனும் கிடைக்கும். இதுபோக நூறு தேங்காயில உபரி வருமானமா 9 கிலோ சிரட்டை கிடைக்குது. ஒரு கிலோ சிரட்டை 7 ரூபாய்க்கு விற்பனை ஆகுது. தேங்காய் கதம்பை (மட்டை) ஒன்று, ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். அதுமட்டுமில்லாம தேங்காய்த் தண்ணீரில் உடனடி பானம் தயாரிச்சு, ஒரு லிட்டர் 75 ரூபாய்க்கு விற்கலாம். தேங்காயை மதிப்புக்கூட்டக் கூட்ட வருமானமும் அதிகரிக்கும்.

எண்ணெயை வடிகட்டுதல்
எண்ணெயை வடிகட்டுதல்

தென்னை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமா சத்துணவுல பாமாயிலுக்குப் பதிலா, கேரளத்தைப்போலத் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தணும்னு தமிழக அரசுக்குக் கோரிக்கை வெச்சிருக்கிறோம்’’ என்றவர், விவசாயத்துக்காகக் கிடைத்த விருதுகள்பற்றி விவரித்தார்.

பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்தமான எண்ணெய்
பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்தமான எண்ணெய்

விருது வாங்கிக்கொடுத்த விவசாயம்

“2003-ம் வருஷம் சிறந்த விவசாயிக்கான விருதை அப்போதிருந்த கலெக்டர் ககன்தீப் சிங் பேடி கொடுத்தார். 2009-ம் வருஷம் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில இருந்து சிறந்த விவசாயி விருது கொடுத்தாங்க. 2010-ம் வருஷம் அன்றைய வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், ‘வேளாண்மைச் செம்மல்’ விருது கொடுத்தார். 2013-ம் வருஷம், குஜராத் முதல்வராக மோடி இருந்த சமயத்தில ‘சிறந்த விஞ்ஞானி’ என்ற நிகழ்ச்சி நடத்தினார். அதில் தமிழ்நாட்டுல இருந்துபோன விவசாயிகள் குழுவில நானும் இருந்தேன். அந்த நிகழ்ச்சியில 51,000 ரூபாயும், சிறந்த விவசாயி விருதும் கொடுத்தாங்க. 2018-ம் வருஷம் நடந்த சுதந்திர தின விழாவுல, இப்ப இருக்கிற கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, சிறந்த விவசாயி விருது கொடுத்தார். பொருள்களை மதிப்புக்கூட்டி மார்க்கெட் செய்யத் தெரிஞ்சால் விவசாயத்தில பெரிய அளவுல சாதிக்கலாம்’’ என்று நம்பிக்கையுடன் கூறினார்.

தொடர்புக்கு, மீனாட்சி சுந்தரம், செல்போன்: 94438 44752.