Published:Updated:

`பண்ணைக் குட்டையில் 4 லட்சம் லிட்டர் மழைநீர் சேமிப்பு!’ - அசத்தும் கோவை ஐ.டி ஊழியர்

குருபிரசாத்

வீட்டில் பெய்யும் மழை நீரையும் சேகரித்து, நீர்நிலைகளையும் புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுபவர்களை எடுத்துக்கொண்டால், அதில் கோவையைச் சேர்ந்த சிவராம் முக்கிய இடத்தில் இருப்பார்.

பண்ணைக் குட்டை
பண்ணைக் குட்டை

சிலர், மழை பெய்யவில்லை என்றாலும் குற்றம் சொல்வார்கள், பெய்தாலும் குற்றம் சொல்வார்கள். அதே நேரத்தில், பெய்யும் மழைநீரை முறையாக சேமிப்பவர்களைப் பட்டியலிட்டால், அதில் வெகு சிலரே இடம் பெறுவார்கள். வீட்டில் பெய்யும் மழை நீரையும் சேகரித்து, நீர்நிலைகளையும் புதுப்பிக்கும் கோவையைச் சேர்ந்த சிவராம் முக்கிய இடத்தில் இருப்பார்.

சிவராம்
சிவராம்

சிவராம், கோவையில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சிவராமின் நீர் மேலாண்மையைத்தான் நாம் இங்கு வாசிக்கப்போகிறோம். ஐ.டி இளைஞர் ஒருவர் வீட்டில் பண்ணைக் குட்டை அமைத்து மழை நீரை சேமிப்பதுடன், விடுமுறை நாள்களில் நீர்நிலைகளைப் புரமைக்கும் பணியில் ஈடுபடுவதாக அறிந்து, சிவராமிடம் பேசினோம்.

“நான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். ஐ.டி துறையில் பணிபுரிந்துவந்தாலும் எனக்கு விவசாயம்தான் மிகவும் பிடிக்கும். விடுமுறை நாள்களில் விவசாயம் செய்வேன். எங்களுக்கு, சொந்தமாக நான்கு ஏக்கர் நிலம் உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கடும் வறட்சி நிலவியது. மழைக்காலங்களில் பெய்யும் மழைநீர் மூலம் நிலத்தடி நீரை சேகரிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

பண்ணைக் குட்டை
பண்ணைக் குட்டை

அப்போதுதான், பண்ணைக் குட்டை குறித்து கேள்விப்பட்டேன். முதலில் ஐந்து அடி ஆழத்துக்கு வெட்டினோம். அதற்கே நல்ல பலன் கிடைத்தது. இதனால், மேற்கொண்டு 10 அடி ஆழம்,70 அடி நீளம், 20 அடி அகலத்துக்கு குட்டை வெட்டினோம். அதற்கு நடுவே, 150 அடிக்கு ஆழ்துளைக் கிணறு அமைத்துள்ளோம்.

ஆகஸ்ட் அதிசயம்... கோவையில் கொட்டித் தீர்க்கும் மழை!

இந்தப் பணிகள் அனைத்தும் 100 நாள் வேலைத்திட்டம் மற்றும் மத்திய ஒருங்கிணைந்த நீர்வடி மேலாண்மை திட்டம்மூலம் செய்து முடித்தோம். மூன்றாண்டுகளில், இதுவரை ஐந்து முறை இந்தக் குட்டை நிரம்பியுள்ளது. ஒவ்வொரு முறை நிரம்பும்போதும், சராசரியாக நான்கரை லட்சம் தண்ணீரை சேமிக்க முடிகிறது.

பண்ணைக் குட்டை
பண்ணைக் குட்டை

தற்போது, எங்கள் கிணற்றிலும் அதிக அளவு தண்ணீர் நிற்கிறது. ஒருமுறை, கிணறு நிரம்பி, தோட்டம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடாக மாறிவிட்டது. இதனால், கிணற்றில் தண்ணீர் அதிகமாகி வழியும்போது, அருகில் உள்ள ஊர் குட்டைக்கு செல்லும் வகையில் மாற்றியமைத்துள்ளோம்.

இதுதவிர, வீட்டைச் சுற்றி பெய்யும் மழை நீர், ஒரே குழாய் மூலம் செல்லும் வகையில், 10 அடிக்கு மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைத்துள்ளோம். ஆற்றுநீர்கூட நிலத்தில் கம்மியாகத்தான் ஊறும். ஆனால், இந்த பண்ணைக் குட்டை முறையில், நிலத்தடி நீர் நன்கு ஊறுகிறது.

சிவராம் வீட்டு மழை நீர் சேகரிப்புத் தொட்டி
சிவராம் வீட்டு மழை நீர் சேகரிப்புத் தொட்டி

தண்ணீர் அதிகமாக இருப்பதால், கடந்த இரண்டு ஆண்டுகளாக தென்னை, வாழை போன்றவற்றை பிரதானமாக வைத்து விவசாயம் செய்துகொண்டிருக்கிறோம். இதன்மூலம், எப்படிப்பட்ட வறட்சி வந்தாலும் சமாளிக்க முடியும்.

“அவலாஞ்சியில் பெய்தது மழை அல்ல... மேக வெடிப்பு!”

நீர்நிலைகளைப் புனரமைக்கும் களப்பணிகளில் ஈடுபடுவதும் எனக்குப் பிடிக்கும். இதனால், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினருடன் இணைந்து, பணியாற்றிவருகிறேன். விவசாயத்தையும் முடிந்த அளவுக்கு இயற்கை வழியில் செய்ய முயன்றுவருகிறோம்” என்கிறார், சிவராம்.

மழை நின்று நான்கு நாள்களாகியும் குட்டையில் தேங்கி நிற்கும் நீர்
மழை நின்று நான்கு நாள்களாகியும் குட்டையில் தேங்கி நிற்கும் நீர்

சிவராமின் முயற்சியை நாமும் செய்து பார்ப்பதன்மூலம், மழை நீரை சேகரிக்க முடியும், விவசாயமும் செழிக்கும்.

இவரின் முயற்சிகுறித்து உங்களது கருத்துகளைப் பதிவு செய்யுங்கள்!