Published:Updated:

உலகின் அதிக எடைகொண்ட மாம்பழம்... 12 ஆண்டுகளுக்குப் பிறகு முறியடிக்கப்பட்ட கின்னஸ் சாதனை!

மாம்பழம்
மாம்பழம் ( Photo: Guinness World Records )

இந்த விருது எங்கள் பெற்றோர் எங்களுக்குப் போதித்த அர்ப்பணிப்பு மற்றும் இயற்கையின் மீதான அன்பு ஆகியவற்றை அங்கீகரிப்பதாக இருக்கிறது. இந்த ஒரு மாம்பழத்தை எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உண்டு மகிழும்போது அளவில்லாத மகிழ்ச்சியாக இருந்தது

கொலம்பியாவில் தற்போது மாம்பழம் அறுவடை காலம். இந்த முறை அதிக எடைக்கொண்ட மாம்பழத்தை அறுவடை செய்து சாதனை படைத்துள்ளனர் ஜெர்மன் ஆர்லாண்டோ நோவோவா பரேரா மற்றும் ரீனா மரியா மரோகுயின் தம்பதி.

''இந்த மண்ணின் மீது நாங்கள் கொண்ட காதல்தான் இவ்வளவு பெரிய மாம்பழம் கிடைப்பதற்கான காரணம். இந்த கின்னஸ் சாதனையை நாங்கள் இந்த கிராமத்தினருக்கு அர்ப்பணிக்கிறோம்” விருது பெற்ற மகிழ்ச்சியோடு அறிவித்திருக்கிறார்கள்.

பெரிய மாம்பழம்
பெரிய மாம்பழம்
Photo: Guinness World Records

இத்தம்பதி அறுவடை செய்திருக்கும் மாம்பழத்தின் எடை 4.25 கிலோ. இதற்கு முன்பு பிலிப்பைன்ஸில் 2009-ம் ஆண்டு 3.43 கிலோ எடையுள்ள ஒரு மாம்பழம் சாதனை படைத்திருந்தது. இப்போது அதை முறியடித்து, உலக மாம்பழ விவசாயிகளுக்கு ஒரு மிகப்பெரிய ஆச்சர்யத்தைக் கொடுத்துள்ளது இந்த தம்பதி.

கொலம்பியாவின் குயாட்டா பகுதியில் வசித்து வரும் ஜெர்மன் ஆர்லாண்டோ நோவா பரேரா (German Orlando Novoa Barrera) மற்றும் ரீனா மரியா மரோகுயின் (Reina Maria Marroquin) ஆகியோரால் வளர்க்கப்பட்ட பிரமாண்டமான மாம்பழம், போயாகா பகுதியில் உள்ள சான் மார்டினில், ஏப்ரல் 29-ம் தேதி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. குயாட்டா பகுதியில் காபி தயாரிப்பு சார்ந்த மூலப்பொருள்கள் பயிரிடப்படுகின்றன. மாம்பழங்கள் குறைவான பரப்பில்தான் விளைவிக்கப்படுகின்றன.

பெரிய மாம்பழம்
பெரிய மாம்பழம்
Photo: Guinness World Records

இங்கு விளைந்த மாம்பழத்தின் பெரிய அளவையும், அதிக அளவு எடையும் கண்டு ஆச்சர்யமடைந்த இத்தம்பதி இணையத்தில் முதலில் ஆராய்ச்சி செய்துள்ளனர். இணையதளத்தில் கிடைத்த தகவல்களைச் சரிபார்த்த பிறகு, தங்களின் மாம்பழத்தை எடை போட்டு பார்த்திருக்கிறார்கள். 2009-ம் வருடம் உலக சாதனை படைத்த மாம்பழத்தைவிடத் தங்களின் மாம்பழமே உலகிலேயே அதிக எடையுள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். அதன் பறகு இதைக் கின்னஸ் உலக சாதனை அமைப்பின் கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

உலக சாதனையில் வரிசையில் இடம்பெற்றது குறித்து பேசிய சாதனைத் தம்பதி, ''இந்தச் சாதனை மூலம் கொலம்பியாவில் உள்ள மக்கள் கிராமப்புறங்களை நேசிக்கும் கடின உழைப்பாளிகள் என்பதை உலகுக்குக் காண்பிப்பதே எங்களின் குறிக்கோள். நாங்கள் விளைவித்த நிலம் எங்களுக்கு நல்ல பலனைக் கொடுத்திருக்கிறது. உலகமே கொரோனா நோய்த்தொற்றின் பிடியில் சிக்கிக்கொண்டிருக்கும் இச்சூழலில் இந்தச் சாதனை எங்கள் மக்களுக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. இந்த விருது எங்கள் பெற்றோர் எங்களுக்குப் போதித்த அர்ப்பணிப்பு மற்றும் இயற்கையின் மீதான அன்பு ஆகியவற்றை அங்கீகரிப்பதாக இருக்கிறது. இந்த ஒரு மாம்பழத்தை எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உண்டு மகிழும்போது அளவில்லாத மகிழ்ச்சியாக இருந்தது" என்கிறார்கள்.

குயாட்டா பகுதியின் இரண்டாவது கின்னஸ் சாதனை இது. முன்னதாக 2014-ம் ஆண்டு 3,199 சதுர மீட்டரில் மிக நீளமான இயற்கை மலர் கம்பளத்தை உருவாக்கியதற்காக உலக சாதனையைப் பெற்றிருந்தது. விவசாயத்திற்குப் பிரபலமான குயாட்டா மக்கள், காபி, அரேபாஸ், மொகோலாஸ் மற்றும் மாம்பழங்களைத் தொடர்ந்து சாகுபடி செய்து வருகிறார்கள். கின்னஸ் உலக சாதனை அமைப்பு தனது அதிகாரபூர்வ வலைதள பக்கத்தில் இத்தம்பதியின் சாதனையை பதிவு செய்து பாராட்டியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு