Published:Updated:

2.5 ஏக்கர்... வாழை + மிளகு + காபி + பீன்ஸ் ரூ. 5,50,000 வருமானம்!

பசுமைக் கொஞ்சும் பண்ணையில் முத்துக்குமார் தம்பதி
பிரீமியம் ஸ்டோரி
News
பசுமைக் கொஞ்சும் பண்ணையில் முத்துக்குமார் தம்பதி

மகசூல்

எனக்கு இயற்கை விவசாயம் சொல்லிக் கொடுத்த குருன்னு பசுமை விகடனைச் சொல்வேன். பலாவும், தேன் பெட்டிகள் மூலமா கிடைக்கிற தேனும் உபரி வருமானமா நிக்குது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தனிப்பயிர்ச் சாகுபடியில் கிடைக்கும் வருமானத்தைவிட ஊடுபயிர் சாகுபடியில் கிடைக்கும் வருமானம் அதிகம். இது நமது முன்னோர்கள் கடைப்பிடித்த வேளாண்மை முறை. தற்போது ஊடுபயிர் சாகுபடி விவசாயிகளிடையே பிரசித்தி பெற்று வருகிறது. அந்த வகையில் ஊடுபயிர் சாகுபடியில் அசத்தி வருகிறார், இயற்கை விவசாயி முத்துக்குமார். திண்டுக்கல் மாவட்டம், பன்றிமலையை அடுத்த ஆடலூரில் இருக்கிறது, இவரது நிலம். கொளுத்தும் கோடை வெயிலிலும், குளுகுளுவென இருந்தது முத்துக்குமாரின் தோட்டம். பயிர்களுக்குத் தண்ணீர்ப் பாய்ச்சிக் கொண்டிருந்தவரைச் சந்தித்தோம்.

பசுமைக் கொஞ்சும் பண்ணையில் முத்துக்குமார் தம்பதி
பசுமைக் கொஞ்சும் பண்ணையில் முத்துக்குமார் தம்பதி

“நாங்க பரம்பரையா விவசாய குடும்பம்தான். எங்க அப்பா இங்க விவசாயம் பார்த்துக்கிட்டிருந்தார். நானும் பத்தாம் வகுப்பு முடிச்ச உடனே விவசாயத்துக்கு வந்துட்டேன். விவசாயத்துக்கு வந்து கிட்டத்தட்ட 20 வருஷமாகிடுச்சு. முதல்ல ரசாயன உரத்தைத் தான் பயன்படுத்திட்டு இருந்தோம். நாளாக நாளாக மகசூல் குறைய ஆரம்பிச்சது, செலவும் கொஞ்சம் அதிகமாக ஆரம்பிச்சது. அந்த நேரத்துலதான் என் தங்கச்சி ஊருக்குப் போயிருந்தப்போ ஊர்புற நூலகம் போனேன். அங்கே விவசாயத்துக்குனு தனியா வந்திருந்த ‘பசுமை விகடன்’ புத்தகத்தைப் பார்த்தேன். அப்போ ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம்னு தூரன்நம்பி எழுதிக்கிட்டிருந்தார். அது புத்தகமா வந்தபிறகு முழுசா படிச்சு முடிச்சேன். அப்போ எனக்கு எதுவுமே தெரியலை, எல்லாமே புதுசா இருந்துச்சு. ஆனா, இயற்கை விவசாயத்துல ஏதோ ஒண்ணு இருக்குனு தோணுச்சு. அப்புறம் கடைகள்ல பசுமை விகடன் வாங்கி படிச்சிகிட்டிருந்தேன். ஒரு சமயம் கோவை கொடீசியா கண்காட்சிக்குப் போனப்ப அங்க பசுமை விகடன் ஸ்டால் இருந்துச்சு. அங்கே சந்தா கட்டி பசுமை விகடன் புத்தகத்தை வாங்கிட்டேன். கிட்டத்தட்ட ஒரு வருஷம் புத்தகத்தைப் படிச்சு, நானா கத்துகிட்டுத்தான் இயற்கை விவசாயத்தை செய்ய ஆரம்பிச்சேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இயற்கை விவசாயம் ஆரம்பிச்சு இப்போ 3 வருஷம் ஆகுது. எனக்கு இயற்கை விவசாயம் சொல்லிக்கொடுத்த குருனு பசுமை விகடனைச் சொல்வேன். நான் யார்கிட்டேயும் தனியா போய் இயற்கை விவசாயம் கத்துக்கலை. பசுமை விகடனைப் படிச்சுப் படிச்சு கத்துக்கிட்டதுதான். என் தோட்டம் மொத்தம் ரெண்டரை ஏக்கர். அதுல மிளகு, மலை வாழை, செளசெள, பீன்ஸ், பலா, காபி, காய்கறிகள்னு பல பயிர்களையும் கலந்து நடவு செய்திருக்கேன். இதுபோக பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், அரப்புமோர் கரைசல், வேஸ்ட் டீகம்போஸர்னு இடுபொருள்களை நானே தயார் செஞ்சு பயிர்களுக்குக் கொடுத்துக்கிட்டிருக்கேன். சில நாள்களுக்கு முன்னால வரைக்கும் நாட்டுக் கோழிகளும் இருந்துச்சு. ஆனா, உடும்புத் தொல்லை தாங்க முடியாததால அதை விற்பனை செஞ்சுட்டேன்” என்றவர் தொடர்ந்தார்.

களையெடுக்கும் பணியில்
களையெடுக்கும் பணியில்

“மிளகுல கரிமுண்டா, கலுவாலி, கொத்தநாடன், நாராயக்கொடி, பாலன்கோட்டா, குதிரைவாலி, அரக்குலமுண்டா, உத்தகரெ, நிலமுண்டி, கனிதக்கடன், மல்லிகைச்சரம், வேலுத்தம்பன்னு நாட்டு மிளகு ரகங்கள் இருக்கு. நான் வெச்சிருக்கிறது கரிமுண்டாவும், பட்டாணிங்குற ரகமும்தான்.

களிமண் பாங்கான நிலத்துல மிளகு நல்லா வளரும். பூப்பூக்கும் பருவத்துல மழை அவசியம் தேவைப்படும்.

அதனால நல்ல மழைப்பொழிவு உள்ள பகுதிகள் மிளகுச் சாகுபடிக்குச் சரியானதாக இருக்கும். மழை பெய்யாத சமயங்கள்ல தெளிப்பான் மூலம் நீரைத் தெளிச்சும் சாகுபடி செய்யலாம்.

தென்னை, பாக்கு, காபி, மா, தேக்கு, புளி மாதிரியான பயிர்களுக்கிடையில ஊடுபயிரா மிளகுச் சாகுபடி செய்யலாம். கல்யாணமுருங்கை, சில்வர் ஓக் மாதிரியான மரங்கள் மேலேயும் மிளகைப் படரவிடலாம். என் தோட்டம் அதிக நிழல் விழும் இடமாக இருக்குறதால ‘கரிமுண்டா மிளகு’ ரகத்தை ஊடுபயிராக வளர்க்குறேன். மிளகை ஒரு முறை நடவு செஞ்சா 15 வருஷங்கள் வரைக்கும் பலன் கொடுக்கும். பிறகு செடிகளை அழிச்சு புதுசா நடவு பண்ணனும்.

வாழை, மிளகு, காபி கூட்டணி
வாழை, மிளகு, காபி கூட்டணி

என் தோட்டத்துல இருக்குற பலா, சவுக்கு, மலைவேம்பு மாதிரியான உயரமான மரங்கள் மேலே மிளகுக் கொடியை ஏத்திவிட்டிருக்கேன். மலை வாழையைப் பொறுத்தவரை மலைப் பாங்கான பகுதிகளில் மட்டுமே நல்ல மகசூலைக் கொடுக்கும். ஊடுபயிரா மொத்தம் 400 வாழை மரங்கள் இருக்கு. இது இப்போ அறுவடைக்குத் தயாரா இருக்கு. மீன் அமிலம், நுண்ணுயிர் உரங்கள்னு முழு இயற்கை முறையிலதான் விவசாயம் செஞ்சுட்டு இருக்கோம். பூச்சிகளைக் கட்டுப்படுத்துறதுக்காக விளக்குப் பொறி, மஞ்சள் அட்டைகளைப் பயிர்களுக்குள்ள வெச்சிருக்கேன். மரங்கள்ல இருந்து விழுகுற சருகுகள் தானாவே மூடாக்கா அமைஞ்சுக்குது. இயற்கையில விளையுற மலை வாழை அவ்வளவு ருசியா இருக்கு. இதுபோக காபி, பீன்ஸ், செளசெள பயிரையும் பயிர் செஞ்சுருக்கேன். அதுல பீன்ஸ் அறுவடை முடிஞ்சிடுச்சு” என்றவர் சிறிது இடைவெளி விட்டுத் தொடர்ந்து பேசினார்.

“இயற்கைக்கு மாறிய பிறகுதான் இந்த மலைப்பகுதியிலும் திருப்தியா விவசாயம் செய்றோம். விளைச்சலும் நல்லா இருக்குது. பழம் தரமா இருக்குறதால திண்டுக்கல்ல இருக்குற மண்வாசனை அமைப்பைச் சேர்ந்த வேல்முருகன் மூலமாவும், பக்கத்துல இருக்குற ஆர்கானிக் கடைகள் மூலமாவும் விற்பனை செய்துகிட்டிருக்கேன்” என்ற முத்துக்குமார் வருமானம் குறித்து பேசினார்.

இயற்கை இடுபொருள், தோட்டத்தில் மஞ்சள் ஓட்டுண்ணி அட்டை
இயற்கை இடுபொருள், தோட்டத்தில் மஞ்சள் ஓட்டுண்ணி அட்டை

“மொத்தம் 400 வாழை மரங்கள் இருக்கு. இதுல 300 குலைகள் அளவுக்குத்தான் தரமா கிடைக்கும். ஒரு குலை 500 ரூபாய் வரைக்கும் விலை போகுது. மொத்தம் 300 குலைகளுக்கு 500 ரூபாய் வீதம் 1,50,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். மிளகுல மொத்தமா இருக்குற 300 கொடிகள்ல இருந்து 1 டன் மிளகு பழம் கிடைக்கும். அதைக் காயவெச்சு எடுத்தா, 300 கிலோ கிடைக்கும். கிலோ 400 ரூபாய்க்கு விற்பனை செய்யுறது மூலமா 1,20,000 ரூபாய் வருமானமா கிடைக்கும். காபி மொத்தம் ரெண்டரை ஏக்கருக்கு 1,000 கிலோ மகசூல் கிடைக்கும். கிலோ 180 ரூபாய்க்கு விற்பனை செய்றேன். அதுமூலமா 1,80,000 ரூபாய் வருமானமா கிடைக்கும். பீன்ஸ் அரை ஏக்கர்ல அறுவடை முடிஞ்சு 1,000 கிலோ கிடைச்சது. கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையாச்சு. அதுமூலமா 1,00,000 ரூபாய் வருமானம் கிடைச்சது. இந்த வருஷம் வாழை, மிளகு, காபி, பீன்ஸ் மூலமா மொத்தமா 5,50,000 ரூபாய் வருமானமா கிடைக்கும். இதுல காபி பராமரிப்பு, அறுவடைக்குத்தான் அதிகமா செலவாகும். மொத்தமா எல்லா பயிர்களுக்கும் சேர்த்து 2,00,000 வரைக்கும் செலவாயிடும். மீதம் 3,50,000 ரூபாய் லாபமா நிற்கும். இதுபோக, பலாவும், தேன் பெட்டிகள் மூலமா கிடைக்கிற தேனும் உபரி வருமானமா நிக்குது” என்றபடி விடை கொடுத்தார்.

தொடர்புக்கு, முத்துக்குமார், செல்போன்: 82482 55978.

காபிக்கு 10 மணி நேரத்தில் பக்குவம்!

காபியில் ஏதேனும் பூச்சி, நோய் தாக்கினால், தேவைக்கேற்ப நீம் அஸ்திரம், பிரம்மாஸ்திரம் ஆகியவற்றைத் தெளிக்க வேண்டும். நடவு செய்த இரண்டாம் ஆண்டிலிருந்து மகசூல் கிடைக்க ஆரம்பிக்கும். அறுவடை செய்த 10 மணி நேரத்துக்குள் பழத்தில் உள்ள சதையை இயந்திரத்தின் மூலம் நீக்கிவிட வேண்டும். இல்லாவிடில், காபியின் தரம் குறைந்துவிடும்.

மிளகு படர்வதற்கு மூங்கில் கொம்பு!

மிளகு பற்றி முத்துக்குமார் பகிர்ந்துகொண்ட தகவல்கள் பாடமாக இங்கே...

மிளகு மலைப்பிரதேசங்களுக்கு ஏற்றது. ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மிளகை விதைக்கலாம். முதிர்ந்த மிளகுப்பழக் கொத்தை அறுத்து 3 நாள்கள் காய வைத்து, தேர்வு செய்த இடத்தில் விதைக்க வேண்டும். மிளகுச்செடியிலிருந்து இரண்டரை அடி இடைவெளியில் பலா அல்லது மலைவேம்பு என ஏதாவது ஒரு மரம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த மரங்களுக்கிடையில் 9 அடி இடைவெளி இருக்க வேண்டும். பெரிய மரங்கள் இல்லாதபட்சத்தில், ஆரம்பக் காலங்களில் மிளகு படருவதற்காக மூங்கில் கொம்புகளையும் மிளகுச்செடிக்கு அருகில் ஊன்றலாம்.

2.5 ஏக்கர்... வாழை + மிளகு + காபி + பீன்ஸ் ரூ. 5,50,000 வருமானம்!

2 முதல் 3 வேர் விட்ட மிளகு விதைக் கொத்துக்களை 1 கன அடி அளவுக்குக் குழி எடுத்து நடவு செய்து, மண்ணை அழுத்திவிட வேண்டும். பிறகு, ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைப் பாய்ச்ச வேண்டும். காய்ந்த இலைகள் மூலம் உலர் மூடாக்கு செய்ய வேண்டும். கொடி முளைத்து வந்தபிறகு, நேரடியாகச் சூரியஒளி படாமல் பாதுகாக்க வேண்டும். 15 நாள் இடைவெளியில் 100 லிட்டர் தண்ணீருக்கு 5 லிட்டர் என்கிற அளவில் ஜீவாமிர்தத்தைக் கலந்து தெளிக்க வேண்டும். கொடி படர ஆரம்பிக்கும்போது, மூங்கில் கொம்பிலோ, ஏற்கெனவே இருக்கும் மரங்களிலோ எடுத்து விட்டுப் படரவிட வேண்டும். மே, ஜூன் மாதத்தில் பூப்பூக்கும். நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம்வரை மிளகு அறுவடை செய்யலாம். மிளகுக் கொத்தில் ஒன்று அல்லது இரண்டு பழம் சிவப்பாக மாறியவுடன் அறுவடை செய்து விட வேண்டும். மிளகுக் கொத்துகளைக் கைகளால்தான் கிள்ளி எடுக்க வேண்டும். ஒரு கொடியிலிருந்து 1 முதல் 2 கிலோ உலர்ந்த மிளகு கிடைக்கும். அறுவடை செய்த கொத்துகளைக் கைகளால் தேய்த்து பழங்களை உதிர்க்கலாம். உதிர்ந்த பழங்களை, மூங்கில் கூடையில் போட்டுச் சூடான வெந்நீரில் 1 அல்லது 2 நிமிடங்கள் வைத்து ஒரு சுத்தமான துணியில் நிழலில் உலர்த்த வேண்டும். நன்றாக உலர்ந்த மிளகு, கறுப்பு நிறத்தில் பளபளவென இருக்கும். பச்சை மிளகை, அதன் மேல் தோல் கழன்று வரும் வரை, நீரில் கொதிக்க வைத்து எடுத்துத் தோலை நீக்கி, உலர வைத்தால், வெள்ளை மிளகு கிடைக்கும். மிளகுத் தோலிலிருந்து எண்ணெய்கூட எடுக்க முடியும்.