Published:Updated:

50 சென்ட்... ஆண்டுக்கு ரூ. 2,80,000 அருமையான வருமானம் தரும் அத்தி!

அத்தியுடன் ராஜ்மோகன்
பிரீமியம் ஸ்டோரி
அத்தியுடன் ராஜ்மோகன்

மகசூல்

50 சென்ட்... ஆண்டுக்கு ரூ. 2,80,000 அருமையான வருமானம் தரும் அத்தி!

மகசூல்

Published:Updated:
அத்தியுடன் ராஜ்மோகன்
பிரீமியம் ஸ்டோரி
அத்தியுடன் ராஜ்மோகன்
‘‘ஒரே பயிரையே சாகுபடி செய்யாமல் சந்தையில் அதிக தேவையும், நல்ல விலையும் கிடைக்கும் பயிரைத் தேர்வு செய்து சாகுபடி செய்தால் நல்ல வருமானம் கிடைப்பது நிச்சயம்’’ என்கிறார் இயற்கை விவசாய முறையில் அத்திச் சாகுபடி செய்து வரும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்மோகன்.
அத்தி
அத்தி

தூத்துக்குடி மாவட்டம், கோவில் பட்டியிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது படர்ந்தபுளி கிராமம். இங்குதான் உள்ளது ராஜ்மோகனின் அத்தித் தோட்டம். கரிசல் நிலத்தில் செழித்து வளர்ந்து நின்ற அத்திச் செடிகளிலிருந்து அத்திப்பழங்களைப் பறித்துக் கொண்டிருந்தவரை காலை வேளையில் சந்தித்தோம். இரண்டு அத்திப்பழங்களைச் சாப்பிடக் கொடுத்தவர், நடந்தபடியே பேசத் தொடங்கினார். ‘‘நெல், கரும்பு, வாழை, காய்கறிகள்தாம் இந்தப் பகுதியின் முக்கிய விவசாயமா இருந்துச்சு. என்னோட அப்பா இதே கிராமத்துல போஸ்ட் மாஸ்டராக வேலை பார்த்துதான் ஓய்வு பெற்றார். பதவி உயர்வுடன் வேற ஊருக்கு டிரான்ஸ்பர் கிடைச்சும், போஸ்ட் ஆபீஸ் வேலையுடன், விடுமுறை நாள்ல விவசாயத்தையும் சேர்த்துப் பார்க்கணும்ங்கிறதுக்காகக் கிராமத்திலேயே இருந்துட்டாங்க. அந்த அளவுக்கு விவசாயத்து மேல ஈடுபாடு. ஆனா, தாத்தா காலத்துல வெறும் தொழுவுரத்தை மட்டும் போட்டுச் செஞ்ச விவசாயத்தை அப்பா, அதிகமான ரசாயன உரம், ரசாயனப் பூச்சிக்கொல்லி பயன்படுத்திச் செஞ்சாங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அத்தி
அத்தி

அதோட விளைவு மண்ணு மலடாகிப் போனதுதான் மிச்சம். ஆனாலும், விவசாயத்தைக் கைவிடலை. அப்பாவோடு சேர்ந்து பள்ளியில படிக்கும்போதிருந்தே நானும் விவசாய வேலைகளைப் பார்த்துட்டு வந்தேன். ஆனா, ரசாயன முறை விவசாயம் செய்யுறதுல எனக்கு விருப்பம் இல்லாமலே இருந்துச்சு. எம்.காம் முடிச்சதும், சென்னையில மென்பொருள் கம்பெனியில 6 வருஷம் வேலை பார்த்தேன். சென்னையில நண்பர் மூலமா எனக்குப் ‘பசுமை விகடன்’ அறிமுகமாச்சு. ஓய்வுநேரங்கள்ல படிக்க ஆரம்பிச்சேன். தொடர்ந்து படிக்கும்போது, இயற்கை விவசாயம் மீது ஆர்வம் அதிகமாச்சு. வீடு விட்டா கம்பெனி, கம்பெனி விட்டா வீடு. ஆபீஸ், கம்யூட்டர்னுதான் வாழ்க்கை ஓடுச்சு. ஒரு கட்டத்துல அந்த வாழ்க்கை பிடிக்கலை. ஊருக்கே திரும்ப வந்து இயற்கை முறை விவசாயத்தோடு, கால்நடை வளர்ப் பையும் செய்யலாமான்னு முடிவெடுத்தேன். வேலையை வேண்டாம்னு எழுதிக் கொடுத்துட்டு 2013-ல் இங்கேயே வந்துட்டேன்’’ என்றவர் தனது விவசாய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

மாற்றுப்பயிரா அதிலும் சந்தையில் நல்ல தேவையுள்ள பயிரைத் தேர்வு செஞ்சு, சாகுபடி செஞ்சா நல்ல வருமானம் கிடைக்கும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘2014-ம் வருஷம், மக்காச்சோளச் சாகுபடியில இறங்கினேன். தொடர்ந்து 25 சென்ட்ல ரெட்லேடி பப்பாளிச் சாகுபடி செஞ்சேன். நல்ல மகசூல் கிடைச்சுது. இயற்கை முறையில விளைய வெச்ச பழம்ங்கிறதுனால பழக்கடைகள்ல நல்ல வரவேற்பும் இருந்துச்சு. என்னோட நிலத்தில விளைஞ்ச பழங்களைப் பார்த்தப்போ எனக்கே ஆச்சர்யமா இருந்துச்சு. அந்த நேரத்துலதான், அத்திப்பழத்துக்கு நல்ல வரவேற்பும் தேவையும் இருக்கிறதைப் புரிஞ்சுக்கிட்டேன். அத்திப்பழச் சாகுபடி குறித்து இணையதளத்துல தேடினேன். ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்திலயும், கர்நாடக மாநிலம், பெல்லாரி பகுதிகள்லயும் அதிக பரப்பில அத்திச் சாகுபடி செய்யுறதா தகவல் கிடைச்சது. அந்தப் பகுதிகளுக்கு நேர்ல போனேன். அந்தப்பகுதி விவசாயிகள் கொடுத்த நம்பிக்கைதான், என்னை அத்திச் சாகுபடியில ஈடுபட வெச்சது. இப்போ ரெண்டாவது வருஷமா அத்தியில மகசூல் எடுத்துட்டு இருக்கேன். இது மொத்தம் 6 ஏக்கர் நிலம். ஒன்னேகால் ஏக்கர்ல பூனா ரக அத்தி மரங்கள் இருக்கு. இதுல 75 சென்ட் நிலத்துல அத்தி கவாத்துச் செஞ்சிருக்கேன். 50 சென்ட்ல அத்திப் பறிப்புல இருக்கு” என்றார்.

அத்தியுடன் ராஜ்மோகன்
அத்தியுடன் ராஜ்மோகன்

இறுதியாக வருமானம் குறித்துப் பேசினார். ‘‘அத்திப்பழங்களை ஏற்கெனவே பப்பாளி விற்பனை செய்த பழக்கடைகள்ல ரெண்டு மாசம் வரைக்கும் விற்பனை செய்தேன். ஒரு கிலோவுக்கு 10 சதவிகிதம் வரை கமிஷன் போச்சு. அதனால, நேரடி விற்பனையில இறங்குனேன். இதனால, கமிஷன் தொகை மிச்சமாச்சு. அதோட கூடுதல் விலையும் கிடைச்சது. தொடர்ந்து அத்திப்பழத்திற்கான வரவேற்பும், தேவையும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் அதிகமாச்சு. அத்தி மரத்துல வருஷத்துல 8 மாசங்கள் வரைக்கும் பழம் பறிக்கலாம். இப்ப, 50 சென்ட் நிலத்தில 8 மாசத்துக்கும் சேர்த்து 2,800 முதல் 3,000 கிலோ வரை பழம் கிடைச்சுட்டு இருக்கு. ஒரு கிலோ ரூ.150-க்கு விற்பனையாயிட்டு இருக்கு. குறைஞ்சபட்சம் 100 ரூபாய்னே வெச்சுக் கிட்டாலும் 2,800 கிலோவுக்கு மொத்தம் ரூ.2,80,000 வருமானமாக் கிடைச்சுடும். இதுல அடியுரம், இடுபொருள் தயாரிப்பு, தெளிப்புக் கூலி, களையெடுப்பு, அறுவடைனு ரூ.81,500 செலவானாலும் ரூ.1,98,500 லாபமாக் கிடைச்சுட்டு இருக்கு.

50 சென்ட்... ஆண்டுக்கு ரூ. 2,80,000 அருமையான வருமானம் தரும் அத்தி!

இனி ஒவ்வொரு வருஷமும் மகசூல் அதிகமாகிட்டே போகும். அத்தியைப் பொறுத்த வரையில் சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கு. அதிக நோய்த்தாக்குதல் இல்லை. பராமரிப்பும் குறைவு. உழவு, தொழுவுரம், சொட்டு நீர், கன்றுகள், நடவுனு ஆரம்பக் கட்டத்தில ஒரு ஏக்கருக்கு ரூ.60,000 வரை மட்டுமே செலவாகும். அடுத்தடுத்த வருஷத்துல பராமரிப்புச் செலவுகள் மட்டும்தான். எல்லா விவசாயி களைப்போலக் குறிப்பிட்ட ரகப் பயிர்களை மட்டும் சாகுபடி செய்றதைத் தவிர்த்துவிட்டு, மாற்றுப்பயிரா அதிலும் சந்தையில் நல்ல தேவையுள்ள பயிரைத் தேர்வு செஞ்சு, சாகுபடி செஞ்சா நல்ல வருமானம் கிடைக்கும். அதிலும் இயற்கை முறைச் சாகுபடி என்பதால் செலவும் குறையும். அந்த வகையில் அதிக வருமானத்தை அள்ளித் தரும் அத்திதான் எனக்கேற்ற பயிர்” என்றபடியே அத்திப்பழங்களைக் கைநிறைய அள்ளிக் காண்பித்தார்.

தொடர்புக்கு, ராஜ்மோகன், செல்போன்: 63805 96322

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வயிற்றுப் புண்ணைக் குணமாக்கும்!

50 சென்ட்... ஆண்டுக்கு ரூ. 2,80,000 அருமையான வருமானம் தரும் அத்தி!

த்திப்பழத்தின் மருத்துவக் குணம் குறித்து நெல்லை மாவட்டம், பாபநாசத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் மைக்கேல் செயராசுவிடம் பேசினோம். ‘‘அத்தி, மர வகையைச் சேர்ந்தது என்றாலும், இது அளவான உயரமுடைய நடுத்தர மரமாகும். இது பூப்பூக்காமலே காய்க்கும் ஓர் இனம். தாவரவியல் வகைப்பாட்டின்படி, அதன் காய்களே பூவாகக் கொள்ளப்படுகிறது. இம்மரத்தின் பிஞ்சு, காய், பழம், பட்டை, பால், கள்ளு முதலிய அனைத்துமே மருத்துவக் குணம் வாய்ந்தவை. அத்திப் பிஞ்சு, உருண்டையாகவும் வழுவழுப்பாகவும், மேல்பாகம் மினுமினுப்புடன் பட்டு போன்ற மெல்லிய சுணைகளுடன் காணப்படும். இதன் காய் முதிர்ந்து, பழுக்கத் தொடங்கியவுடன், சிவப்பு நிறமாக மாறத் தொடங்கும். அத்திப்பழங்களை இடித்துச் சாறெடுத்துச் சம அளவு வெல்லம் சேர்த்து மணப்பாகு செய்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் ஊறும். தினமும் இரவில் இரண்டு பழங்கள் சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் நீங்கும். கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது. பிரசவத்தைத் தொடர்ந்து மூலநோய் ஏற்படுவதையும் இவை தடுக்கும். அத்திப்பழங்களைத் தேனில் ஊறவைத்து, ‘அத்தித்தேன்’ஆகத் தயார் செய்து சாப்பிட்டு வந்தால், பித்தம் நீங்குவதுடன் நீண்டநாள் வயிற்றுப்புண்ணை (அல்சர்) குணமாக்கும். அத்திப்பாலை மூட்டுவலிக்குப் பூசி வந்தால் வலி குறையும். பசுவெண்ணெயில் அத்திப்பால் ஒரு தேக்கரண்டி கலந்து காலை, மாலை இருவேளை எடுத்துவர நீரிழிவு, மூலக்கடுப்பு, ரத்தபேதி, சீதபேதி முதலியவை குணமாகும்” என்றார்.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்

50 சென்ட் பரப்பளவில் இயற்கை முறையில் அத்திச் சாகுபடி குறித்து ராஜ்மோகன் கூறிய தகவல்கள் பாடமாக இங்கே.

50 சென்ட்... ஆண்டுக்கு ரூ. 2,80,000 அருமையான வருமானம் தரும் அத்தி!

அத்திச்செடிகள் நடவு செய்ய எல்லா வகை மண்ணும் ஏற்றது. இதற்குப் பட்டம் ஏதும் கிடையாது. மழைக்காலத்துக்கு முன்பாக நடவு செய்வது நல்லது. தேர்வு செய்த நிலத்தில் ஒரு வார இடைவெளியில் இரண்டு முறை உழவு செய்ய வேண்டும். பிறகு, வரிசைக்கு வரிசை 12 அடி மற்றும் செடிக்குச்செடி 10 அடி இடைவெளியில், ஒரு அடிச் சுற்றளவில் இரண்டடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். 10 நாள்கள்வரை குழிகளை ஆறவிட வேண்டும். ஒவ்வொரு குழியிலும் 5 கிலோ தொழுவுரம், 50 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, 50 கிராம் சூடோமோனஸ் கலந்து அடியுரமாக வைக்க வேண்டும்.

45 முதல் 50 நாள்கள் ஆன கன்றுகள் நடவுக்கு ஏற்றது. நடவு செய்த 10-ம் நாளிலிருந்து, 15 நாள்களுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி பஞ்சகவ்யா கலந்து கைத்தெளிப்பானால் தெளித்து வர வேண்டும். அதே நேரத்தில் வாரம் ஒருமுறை 200 லிட்டருக்கு 6 லிட்டர் பஞ்சகவ்யா கலந்து சொட்டுநீர்க் குழாய் மூலம் விட வேண்டும். குளிர்காலத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் ஏற்படும். அந்த நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இஞ்சி, பூண்டு-மிளகாய்க் கரைசல் மற்றும் மூலிகைப் பூச்சிவிரட்டியை 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி என்ற கணக்கில் கலந்து சுழற்சி முறையில் கைத்தெளிப்பானால் வாரம் ஒருமுறை தெளித்து வர வேண்டும்.

இலைத்துரு நோய் தென்பட்டால் இலைகளை உதிர்த்துவிட வேண்டும். இல்லாவிட்டால், கிளைகள் முழுவதும் பரவும். அந்தத் துரு, மழைக்காலத்தில் காய்களிலும் பரவிப் புள்ளிகளை ஏற்படுத்தும். இதனால் பழங்கள் விலை போகாது. துருநோயைக் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். தேவைப்படும் நேரத்தில் களை எடுக்கலாம். 6 மாதத்திற்கு ஒருமுறை ஒவ்வொரு கன்றின் தூரிலும் 10 கிலோ தொழுவுரத்துடன் 50 கிராம் பாஸ்போ பாக்டீரியா, 150 கிராம் மண்புழுவுரம், 25 கிராம் வேப்பம்பிண்ணாக்கு கலந்து அடியுரமாக வைக்க வேண்டும்.

கன்று நடவு செய்த 3-ம் மாதத்தில் பிஞ்சு பிடிக்கத் தொடங்கும். பிஞ்சு பிடிக்கத் தொடங்கியது முதல் 20 நாள்களுக்கு ஒருமுறை பாஸ்போ பாக்டீரியா 25 கிராம், வேப்பம்பிண்ணாக்கு 25 கிராம் மற்றும் மண்புழுவுரம் 100 கிராம் ஆகியவற்றைக் கலந்து ஒரு மரத்தின் தூரில் அடியுரமாக வைக்க வேண்டும். இதனால், காய்கள் அதிக எடையுடனும் சுவையுடனும் இருக்கும். 7-ம் மாதத்திலிருந்து அறுவடை செய்யலாம். 8-ம் மாதத்திலிருந்து மகசூல் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கும். ஆண்டுக்கு ஒருமுறை மழைக்கு முன்பாகக் கவாத்துச் செய்ய வேண்டும். கவாத்துச் செய்தால்தான் மரம் அதிக உயரம் வளராது. அதிக கிளைகள்மூலம் மகசூல் அதிகரிக்கும். அதேநேரத்தில் பறிப்பிற்கும் எளிதாக இருக்கும். இரண்டாம் ஆண்டு முதல் நாள் ஒன்றுக்கு 20 முதல் 25 கிலோ வரை பழம் பறிக்கலாம். முறையாகக் கவாத்துச் செய்து பராமரித்து வந்தால் 15 ஆண்டுகள்வரை தொடர்ந்து மகசூல் எடுக்கலாம்.

வணிக ரீதியாக ஏற்றது!

த்திச் சாகுபடி குறித்து தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் சுந்தரராஜனிடம் பேசினோம். ‘‘மரத்துக்கும் பெரிய புதர்செடிக்கும் இடைப்பட்ட வகையைச் சேர்ந்தது அத்தி. நாட்டு அத்தி, டிம்லா அத்தி, ஆப்கான் அத்தி, இஸ்ரேல் அத்தி, பூனா அத்தியெனப் பல ரகங்கள் உள்ளன. சில ரகங்களில் பழங்களைப் பறித்து அப்படியே விற்பனை செய்யலாம். சில ரகத்தின் பழங்களை, உலர் பழங்களாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்யலாம். இது அனைத்து வகை மண்ணிலும் வளரும். குறுமணல் கலந்த களிமண் நிலம் மிகவும் ஏற்றது. ஓரளவு வறட்சியைத் தாங்கும். விவசாயி ராஜ்மோகன் சாகுபடி செய்திருக்கும் பூனா ரக அத்தி, பறிக்கப்பட்ட பழங்களாக விற்பனை செய்வதற்கு ஏற்றது. இது மற்ற ரகங்களைவிடச் சற்றுப் பெரியதாக இருப்பதாலும், பழங்கள் பார்ப்பதற்கு மினுமினுப்புடன் இருப்பதாலும் வணிக ரீதியாக விற்பனைக்கு ஏற்றது.

50 சென்ட்... ஆண்டுக்கு ரூ. 2,80,000 அருமையான வருமானம் தரும் அத்தி!

கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில விவசாயிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பூனா ரக அத்திச் சாகுபடியைத் தொடங்கி, தற்போது அறுவடை செய்து வருகின்றனர். பலா மரத்தைப்போல, மரத்தண்டிலேயே அத்திக் காய்கள் காய்க்கும். மற்ற பழ மர வகைகளைவிட அத்தியில் பூச்சி மற்றும் நோய்த்தாக்குதல் குறைவு என்பதால் பராமரிப்பும் மிக எளிதானது. இதோடு சந்தையில் அதிக தேவை, அதிக விலை கிடைப்பதாலும் விவசாயிகள் மத்தியில் அத்திச் சாகுபடி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அத்திப்பழங்களைப் பறிக்கும் அளவுக்கு மரங்களை வளர்த்து, கவாத்துச் செய்து முறையாகப் பராமரித்து வந்தால் தொடர் மகசூல் பெறலாம். நடவு செய்த இரண்டாவது ஆண்டிலிருந்து ஒரு மரத்திலிருந்து சராசரியாக 35 முதல் 40 கிலோ வரை பழங்கள் பறிக்கலாம். ஆண்டுக்கு 10 கிலோ மகசூல் அதிகரிக்கும். 5 ஆண்டுக்குப் பிறகு ஆண்டுக்கு ஒரு மரத்திலிருந்து 70 கிலோ வரை மகசூல் எடுக்கலாம்’’ என்றார்.

தொடர்புக்கு, சுந்தரராஜன்,செல்போன்: 97505 49687

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism