Published:Updated:

`தேவையான காய்கறிகளை வீட்டிலே உற்பத்தி பண்ணுங்க!’- நெல்லையில் `வீட்டுக்குள் விவசாயம்’ கருத்தரங்கு

உணவில் காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட காய்கறிகள், கீரைகளை இயற்கை முறையில் வீட்டில் உற்பத்தி செய்ய வேண்டும்.

வீட்டுக்குள் விவசாயம்
வீட்டுக்குள் விவசாயம்

நெல்லையில் பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி, தூத்துக்குடி ஸ்காட் வேளாண் அறிவியல் மையம் மற்றும் பசுமை விகடன் இணைந்து வழங்கிய "வீட்டுக்குள் விவசாயம்" இலவச கருத்தரங்கு நடைபெற்றது. மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்யானந்த், நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பூச்சியியல்துறை வல்லுநர் செல்வம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.

வீட்டுக்குள் விவசாயம்
வீட்டுக்குள் விவசாயம்

கருத்தரங்கின் நோக்கம் குறித்துப் பேசிய ஸ்காட் வேளாண் அறிவியல் மையத்தின் தொழில் நுட்ப வல்லுநர் வேல்முருகன், ``ரசாயன விவசாயத்தின் வரவால் இயற்கை விவசாயம், செயற்கை விவசாயமாகிவிட்டது. ஒரு காலத்தில் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை வீட்டுக்குப் பின்னால் இருந்த தோட்டங்களில் வளர்த்து சமையலுக்குப் பயன்படுத்தி வந்தோம். இன்று வீட்டுத்தோட்டம் என்ற பெயரில் உற்பத்தி செய்கிறோம். அதையே நவீனமாக அழகுபட வளர்ப்பவர்களும் உண்டு. எப்படி வளர்த்தாலும் தங்கள் வீடுகளுக்குத் தேவையான காய்கறிகளை தாங்களே உற்பத்தி செய்ய வேண்டும் என்பதுதான் இக்கருத்தரங்கின் நோக்கம்" என்றார்.

அடுத்ததாகப் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்யானந்த், ``இன்று பரவலாக வீடுகளில் பெண்களே தோட்டம் அமைத்து காய்கறிகள், கீரைகளை சாகுபடி செய்து உணவில் பயன்படுத்தி வருகிறார்கள். பிளாஸ்டிக் பாத்திரங்கள், பிளாஸ்டிக் பைகளைத்தான் காய்கறி வளர்ப்பிற்குப் பயன்படுத்தி வருகிறார்கள். கோவை மாவட்டம் சூலூர் அருகிலுள்ள ஒரு ஊராட்சி மன்ற அலுவலகத்தின் மேற்கூரைப் பகுதியில் மூங்கில் கூடைகளைப் பயன்படுத்தி காய்கறிகள், கீரைகளை வளர்க்கிறார்கள். இதனால், செடிகளின் பயன்பாட்டிற்குப் போக மீதமுள்ள தண்ணீர் தேங்காமல், வடிந்தோடிவிடும். செடிகளும் காற்றோட்டமாக வளரும்.

விஜிலா சத்யானந்த் எம்.பி. - 'பூச்சி' செல்வம்
விஜிலா சத்யானந்த் எம்.பி. - 'பூச்சி' செல்வம்

இக்கூடைகளை தரையில் வைக்காமல் சவுக்குக் குச்சிகள் அடுக்கி அதன் மீது வைக்கலாம். இதனால், கூடைகளின் அடிப்பகுதி சேதாரமாகாது. வீட்டில் எல்லா வகைக் காய்கறிகளையும் உற்பத்தி செய்யாவிட்டாலும் கத்தரி, வெண்டை, தக்காளி, மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, அவரை, புடலை ஆகிய அத்தியாவசியமான காய்கறிகளுடன் கீரை வகைகளையும் வளர்க்கலாம். இதன் பராமரிப்பில் பெண்கள், தங்கள் குழந்தைகளையும் ஈடுபடுத்த வேண்டும்" என்றார்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், ``குழந்தைகள் சத்துள்ள தானியங்கள், உணவு வகைகளை விட நொறுக்குத் தீனிகளையே அதிகம் சாப்பிடுகிறார்கள். இதனால், வயதுக்கு ஏற்ற எடை, உயரம் இல்லாமல் காணப்படுகிறார்கள். இதன் விளைவு பெண் குழந்தைகள் பிரசவத்தின் போது அவதிப்படுகிறார்கள். தற்போதைய சூழலில் சுகப் பிரசவம் என்பதே 100 பேரில், 10 முதல் 20 பேருக்குதான் சுகப் பிரசவம் ஆகிறது. அப்படியே குழந்தை பெற்றாலும் அதிகபட்சமாக குழந்தையின் எடை 2 முதல் 2.5 கிலோ வரைதான் உள்ளது. இதற்கெல்லாம் காரணம் சத்துள்ள உணவுப் பொருள்களை எடுத்துக் கொள்ளாததுதான்.

அரங்குகளைப் பார்வைவிடும் மாணவர்கள்
அரங்குகளைப் பார்வைவிடும் மாணவர்கள்

உணவில் காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட காய்கறிகள், கீரைகளை இயற்கை முறையில் வீட்டில் உற்பத்தி செய்ய வேண்டும். தன் கையால் தண்ணீர் ஊற்றி வளர்த்த ஒரு ரோஜா செடியில் பூ பூக்கும் போது நம் மனதில் ஏற்படும் சந்தோஷம் எவ்வளவோ, அதைவிட பல மடங்கு சந்தோஷம், நம் வீட்டுத்தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைப் பார்க்கும் போதும் பறித்து சமைக்கும் போதும் இருக்கும். எனவே, வீடுகளில் வீட்டுத்தோட்டம் ஏற்படுத்த வேண்டும். நெல்லை மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களில் தாமாகவே பப்பாளி, முருங்கை, காய்கறிகள் ஆகியவற்றுடன் கீரைகளையும் உற்பத்தி செய்து குழந்தைகளின் மதிய உணவுடன் கலந்து கொடுக்கப்பட்டு வருகிறது.

சில பள்ளிகளிலும்கூட இதுபோன்ற தோட்டம் அமைக்கப்பட்டு காய்கறிகள் சத்துணவில் பயன்படுத்தி வருகிறார்கள். இதுபோன்ற தோட்டப் பராமரிப்பில் மாணவர்களே ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள். வீட்டுத்தோட்டம் அமைப்பது குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் மாணவர்கள் தங்களின் பெற்றோர், உறவினர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்" என்றார்.

நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்
நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்

இறுதியாகப் பேசிய பூச்சியியல் வல்லுநர் செல்வம், ``வீட்டுத் தோட்டம், மாடித்தோட்டம் அமைக்க பெண்கள் ஆர்வமுடன் இருந்தாலும், காய்கறி, கீரைச் செடிகளில் தாக்குதலை ஏற்படுத்தும் பூச்சிகளைக் கண்டு பயந்து தோட்டம் அமைக்க தயங்குபவர்கள் அதிகம். பூச்சித் தாக்குதல் என்பது வேறு. நோய்த்தாக்குதல் என்பது வேறு. பலரும் இரண்டும் ஒன்றுதான் என நினைக்கிறார்கள்.

பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தவும், நோய்த்தாக்குதலைக் கட்டுப்படுத்தவும் வேப்பங்கொட்டைக் கரைசல், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசல், மூலிகைப் பூச்சிவிரட்டி என இயற்கை முறையில் தீர்வுகள் உள்ளன. இவற்றை வீடுகளிலேயே எளிதாகத் தயாரித்துப் பயன்படுத்தலாம்" என்றார். சில மாணவர்களும் வீட்டுத்தோட்டத்தின் நன்மைகள் குறித்துப் பேசினார்கள்.

வீட்டுக்குள் விவசாயம்
வீட்டுக்குள் விவசாயம்

நிறைவாக, வீட்டுத்தோட்டம், மாடித் தோட்டம் அமைப்பது குறித்து காணொலி திரையிடப்பட்டது. கோவில்பட்டி, வித்யா மந்தீர் சி.பி.எஸ்.சி பள்ளி மாணவர்கள் தாங்களாகவே தயாரித்துக்கொண்டு வந்த 150-க்கும் மேற்பட்ட விதைப்பந்துகளை நெல்லை, தாமிரபரணி ஆற்றங்கரையோறம் வீசிச் சென்றனர். இக்கருத்தரங்கில் நெல்லை மட்டுமல்லாமல் தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், சென்னை ஆகிய மாவட்டங்களிலிருந்தும் விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என 800-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.