Published:Updated:

``தொடர் மழை குவிந்து கிடக்கும் நெல்” கண்ணீரில் தஞ்சை விவசாயிகள்..!

தேங்கி கிடக்கும் நெல்  மணிகள்
News
தேங்கி கிடக்கும் நெல் மணிகள்

வெயில் அடித்தால் நெல்லை காய வைத்து போட்டு விட வேண்டும் என சாலையோரத்தில் நெல் மணியுடன் காத்து கிடக்கும் விவசாயிகளின் தவிப்பு வார்த்தைகளில் விவரிக்க முடியாது. தீபாவளி நெருங்கும் நேரத்தில் கொள்முதல் நிலையங்களில் காத்திருக்க கூடிய துயர நிலை ஏற்பட்டுள்ளது.

Published:Updated:

``தொடர் மழை குவிந்து கிடக்கும் நெல்” கண்ணீரில் தஞ்சை விவசாயிகள்..!

வெயில் அடித்தால் நெல்லை காய வைத்து போட்டு விட வேண்டும் என சாலையோரத்தில் நெல் மணியுடன் காத்து கிடக்கும் விவசாயிகளின் தவிப்பு வார்த்தைகளில் விவரிக்க முடியாது. தீபாவளி நெருங்கும் நேரத்தில் கொள்முதல் நிலையங்களில் காத்திருக்க கூடிய துயர நிலை ஏற்பட்டுள்ளது.

தேங்கி கிடக்கும் நெல்  மணிகள்
News
தேங்கி கிடக்கும் நெல் மணிகள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக விவசாயிகள் அறுவடை செய்த நெல் மழையில் நனைந்து பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. ஈரப்பதம் அதிகமான நெல்லை அறுவடை செய்ய நெல் கொள்முதல் நிலையங்கள் முன் வராததால் சாலை யோரங்களில் மழை போல் நெல் மணிகள் குவித்து கிடக்கிறது. விளைவித்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் கண்ணீர் மல்க காத்திருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மழையில் நனைந்த நெல்
மழையில் நனைந்த நெல்

டெல்டா மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையில் அறுவடை செய்த நெல் மழையில் நனைந்ததால் நெல்லின் ஈரப்பதம் அதிகரித்து விட்டது. இதனால் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யபடாததால் நெல் தேங்கியுள்ளது. இதனை தொடர்ந்து விவசாயிகள் கொள்முதல் நிலையங்கள் முன்பும், சாலை யோரங்களிலும் நெல்லை குவியல் குவியலாக குவித்து வைத்து கொள்முதல் நிலையங்களில் போடுவதற்காக காத்திருக்கின்றனர்.

அத்துடன் நெல் மழையில் நனையாமல் இருக்க இரவு, பகலாக படாதபடு பட்டு வருகின்றனர். மேலும் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருப்பதும் விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த நிலையில் தஞ்சாவூர் மற்றும் டெல்டா மாவட்ட விவசாயிகள் ஈரப்பதம் அதிகரித்த நெல்லை விவசாயிகளிடமிருந்து அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைத்துள்ளனர்.

சாலையோரத்தில் தேங்கியுள்ள நெல் மணிகள்
சாலையோரத்தில் தேங்கியுள்ள நெல் மணிகள்

நெல் கொள்முதல் செய்யப்படாததால் மாரியம்மன் கோயில், குடிக்காடு, கோயிலூர், ஆலக்குடி, பூதலூர், சோழபுரம் உள்ளிட்ட தஞ்சை மாவட்டம் முழுவதும் சாலையோரத்தில் நெல் மலை மலையாக குவித்து வைக்கப்பட்டுள்ளது. விளைந்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் துயரம் சூழ்ந்த நிலையில் விவசாயிகள் தவித்து நிற்கின்றனர்.

விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் பக்கிரிசாமி, ''தஞ்சாவூர் மாவட்டத்தில் இரண்டு லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில் அதன் அறுவடை பணிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது. ஏற்கெனவே பாதியளவிற்கான அறுவடை பணிகள் முடிந்த நிலையில் மீதமுள்ளவற்றை அறுவடை செய்வதில் விவசாயிகள் தீவிரம் காட்டி வந்தனர். இந்த நிலையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் சில வாரங்களுக்கு முன்பு கன மழை பெய்தது.

சாலையில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்
சாலையில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்

இதில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கி பாதிப்புக்குள்ளானது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் உரிய நிவாரணம் தர வேண்டும் என அப்போது போராட்டம் நடத்தினோம். மழை நின்ற பிறகு அறுவடை பணிகளை தொடர்ந்தனர் விவசாயிகள். பாசனத்திற்காக மேட்டூரில் மே மாதமே தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் நடவு பணிகளை வழக்கத்திற்கு மாறாக முன்னதாகவே தொடங்கினர் விவசாயிகள்.

அதே போல் அறுவடையும் முன்கூட்டியே தொடங்கினர். குறிப்பிட்ட மாதத்தில் குறிப்பிட்ட தேதியில் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்பதால் நெல் கொள்முதல் நடைபெறவில்லை. அப்போதும் கொள்முதல் நிலையத்தை திறக்க போராட்டம் நடத்தினோம். அறுவடை செய்த நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் டெல்டாவில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.

பக்கிரிசாமி
பக்கிரிசாமி

குறிப்பாக தஞ்சாவூரில் பெய்த கன மழையில் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டது ஒரு புறம் இருந்தாலும் அறுவடை செய்து கொள்முதல் நிலையங்களில் போடுவதற்காக வைத்திருந்த நெல் மூட்டைகளும் மழையில் நனைந்தது. கொள் முதல் நிலையங்களிலும், சாலைகளிலும் குவித்து வைத்திருந்த நெல் மணிகளை மழையில் நனையாமல் காக்க விவசாயிகள் தார்பாய் கொண்டு மூடினர்.

சேற்றில் இறங்கி பாடுப்பட்டு விளைவித்த நெல்லை விற்று நாலு காசு பார்ப்பதற்குள் வந்த மழை விவசாயிகளை துயரத்தில் தள்ளியது. பெரும் பாடுப்பட்டு பாதுகாத்தை நெல்லை ஈரப்பதம் அதிகமாக இருப்பதாக கூறி கொள்முதல் நிலையங்களில் வாங்க மறுக்கின்றனர். இதனால் கொள்முதல் நிலையங்களின் முன் பகுதி மட்டுமின்றி சாலைகளும் களத்து மேடாகி நெல் மணிகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

மழையில் நனைந்த நெல் குவியலுடன் விவசாயிகள்
மழையில் நனைந்த நெல் குவியலுடன் விவசாயிகள்

17 சதவீத ஈரப்பதம் கொண்ட நெல் கொள் முதல் செய்யப்படும் நிலையில் ஈரப்பதத்தின் அளவை அதிகரிக்க வேண்டும் என விவசாயிகள் கூறி வருகின்றனர். 22 சதவீதம் வரையிலான ஈரப்பதம் கொண்ட நெல்லை கொள்முதல் செய்ய வலியுறுத்தி தமிழக அரசு உடனடியாக மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். வழக்கமாக பெய்யும் மழையை விட டெல்டாவில் 45 சதவீதம் வரை மழை அதிகமாக பெய்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

வெயில் அடித்தால் நெல்லை காய வைத்து போட்டு விட வேண்டும் என சாலையோரத்தில் காத்து கிடக்கும் விவசாயிகளின் தவிப்பு வார்த்தைகளில் விவரிக்க முடியாது. தீபாவளி பண்டிகை நெருங்கும் இந்த நேரத்தில் கொள்முதல் நிலையங்களில் காத்திருக்க கூடிய துயர நிலை விவசாயிகளுக்கு ஏற்ப்பட்டுள்ளது. அரசு மெத்தனம் காட்டாமல் உடனடியாக நெல் ஈரப்பதத்தின் அளவை உயர்த்தி கொள் முதல் செய்து விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்க்க வேண்டும்.

மழையில்  நனைந்த  நெல்
மழையில் நனைந்த நெல்

நெல்லை போடுவதற்குள் இன்னும் சில தினங்கள் மழை பெய்தால் நெல் நனைந்து வீணாகி விடும் அபாயமும் விவசாயிகளை சூழ்ந்துள்ளதையும் அரசு கவனத்தில் எடுக்க கொள்ள வேண்டும். கண்ணீரில் இருக்கும் விவசாயிகளை வெயில் அடித்து கரை சேர்க்குமா அரசு காட்டும் அக்கறையில் அவர்களுடைய கண்ணீர் துடைக்கப்படுமா என்பது எங்கள் முன்னே இருக்கும் பெரும் கேள்வி. அரசு காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் அறுவடை செய்த நெல்லை குழந்தையாக கவனித்து விவசாயிகள் காத்து நிற்பதாக தெரிவித்தார்.

இது குறித்து தமிழ்நாடு வாணிப கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளர் உமா மகேஷ்வரியிடம் பேசினோம்,'' 361 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டதில் தற்போது 289 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. 40 நாட்களில் 115 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அரசு விவசாயிகளின் கஷ்டத்தை உணர்ந்து செயல்ப்பட்டு வருகிறது.

கொள்முதல் செய்யப்படாத நெல்
கொள்முதல் செய்யப்படாத நெல்

மழையில் நனைந்த நெல்லை வெயிலில் காய வைத்து போட சொல்லியிருக்கிறோம். ஈரப்பதத்தில் அளவை உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. ஈரப்பதமான நெல்லை கொள்முதல் செய்வதற்காக மத்திய அரசின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம்'' என்றார்.