Published:Updated:

மணக்கும் வருமானம் தரும் மல்லித்தழை!

கவிதா
பிரீமியம் ஸ்டோரி
கவிதா

ஒரு ஏக்கர்... 45 நாள்கள்... 1,20,000 ரூபாய்...

மணக்கும் வருமானம் தரும் மல்லித்தழை!

ஒரு ஏக்கர்... 45 நாள்கள்... 1,20,000 ரூபாய்...

Published:Updated:
கவிதா
பிரீமியம் ஸ்டோரி
கவிதா

மகசூல்

குறைந்த நாள்களில் வருமானம் தரும் பயிர்களுக்கு விவசாயிகள் மத்தியில் எப்போதுமே வரவேற்பிருக்கிறது. அந்த வகையில் மல்லித்தழை குறைந்த நாள்களில் அதிக வருமானம் தரும் பயிர். தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், ஓசூர், உடுமலைப்பேட்டை, தேனி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் தனிப்பயிராகவும் ஊடுபயிராகவும் ஏக்கர் கணக்கில் மல்லிதழைச் சாகுபடி செய்யப்படுகிறது. அந்த வகையில் தனது குடும்பத்துக்குச் சொந்தமான ஆறு ஏக்கர் தென்னந்தோப்பில் ஊடுபயிராகச் சுழற்சி முறையில் மல்லித்தழைச் சாகுபடி செய்துவருகிறார் கோயம்புத்தூர் மாவட்டம், சுல்தான்பேட்டையை அடுத்துள்ள பச்சார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பெண் விவசாயி கவிதா.

தென்னந்தோட்டத்தில் ஊடுபயிராக மல்லி...
தென்னந்தோட்டத்தில் ஊடுபயிராக மல்லி...

கமகம வாசம் வீசும் கொத்தமல்லி வயலில் அறுவடை வேலையிலிருந்த கவிதாவைச் சந்தித்துப் பேசினோம். ‘‘எங்களுக்கு மொத்தம் 10 ஏக்கர் நஞ்சை நிலம் இருக்கு. முழுக்க முழுக்க கிணத்துப்பாசனம்தான். இந்த இடத்தில ஆறு ஏக்கரும் இன்னொரு இடத்தில நாலு ஏக்கரும் இருக்கு. இந்த ஆறு ஏக்கர்ல தென்னை இருக்கு. நாலு ஏக்கர் நிலத்துல காய்கறிச் சாகுபடி செய்யறோம். அதுல ஒரு ஏக்கர்ல பந்தல் காய்கறிகளை ஏத்தி விட்டிருந்தோம். இப்போ பந்தல்ல காய்கறி இல்லை. அதனால அந்த நெலத்துல உழவு நடக்குது. ரெண்டு ஏக்கர்ல மிளகாய், கத்திரி, காய்கறினு விவசாயம் செய்யறோம். இப்போ மிளகாய் காய்ப்பு முடியும் பக்குவத்துல இருக்கு. கத்திரி, வயல் நடவுக்குத் தயாரா இருக்கு. மீதமுள்ள ஒரு ஏக்கர்ல வீடு, களம், தொழுவம்னு அரை ஏக்கர் போயிடும். பாக்கியிருக்கும் அரை ஏக்கர்ல கால் நடைகளுக்குத் தேவையான பசுந்தீவனம் போட்டிருக்கோம்’’ என்று தங்கள் தோட்டத்தில் நடக்கும் விவசாயம் பற்றிப் பேசியவர், தொடர்ந்தார்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘10 ஏக்கர்லையும் முழுக்க முழுக்க இயற்கை விவசாயம்தான் பண்றோம். ஆரம்பத்துல நாலு ஏக்கர் மட்டும்தான் எங்களுக்கு இருந்திச்சு. கடந்த அஞ்சு வருஷத்துல கூடுதலா ஆறு ஏக்கர் வாங்கியிருக்கோம். அதுக்கு முழுக் காரணம் காய்கறிச் சாகுபடிதான். வெங்காயம், அவரை, தக்காளி, கத்திரி, மிளகாய், வாழை, பீர்க்கன், புடலை, பாகல், பூசணினு பலவிதமான காய்கறிகளை மாத்தி மாத்திச் சாகுபடி செஞ்சிட்டே இருப்போம். அதுதான் எங்களுக்குக் கைகொடுத்துட்டு வருது. ஒரு போகத்துல நட்டம் வருதுனு காய்கறி விவசாயத்தைக் கைவிட்டுடக் கூடாது. தொடர்ந்து செஞ்சா நிச்சயம் பெரிய லாபத்தைக் கொடுக்கும். 10 ஏக்கர்லயும் காய்கறி போட விருப்பம் இருந்தாலும் ஆள் பற்றாக்குறையை மனசுல வெச்சு, ஆறு ஏக்கர்ல தென்னை நடவு செஞ்சிருக்கோம். அதுவும் காய்ப்புக்கு வந்திடுச்சு. போதுமான தண்ணி கிணத்துல இருக்கு. அதனால தென்னையில ஊடுபயிரா ரெண்டு ஏக்கர்ல வாழையும், ஒரு ஏக்கர்ல மல்லியும் போட்டிருக்கோம். வாழை இன்னும் அறுவடைக்கு வரலை. மல்லி அறுவடைக்குத் தயார்நிலையில இருக்கு. முழுக்க முழுக்க இயற்கை விவசாயம்தான் செய்யறோம். நாட்டு மாடுகள் வெச்சிருக்கோம். அதுக மூலமா பஞ்சகவ்யா, அமுதக்கரைசல்னு தயாரிச்சு பயிர்களுக்குக் கொடுக்கிறோம். தொழுவுரத்துல உயிர் உரங்கள் கலந்து, செறிவூட்டம் செய்யப்பட்ட உரமா மாத்தி பயிர்களுக்கு அடியுரமா கொடுப்பதை வழக்கமாவெச்சிருக்கோம்’’ என்ற கவிதா மல்லிச் சாகுபடி குறித்து விரிவாகப் பேசினார்.

கவிதா
கவிதா

‘‘தென்னையில ஊடுபயிரா ரெண்டு ஏக்கர்ல மல்லி போடுறது வழக்கம், 45 நாள்கள்ல அறுவடைக்கு வந்திடும் குறுகியகாலப் பயிரான அதைச் சுழற்சி முறையிலதான் விதைப்போம். ரெண்டு ஏக்கர் நிலத்தை நான்கு பகுதியாகப் பிரிச்சு விதைப்போம். அதனால வருஷம் முழுசும் எங்க தோட்டத்துல மல்லி இருக்கும். இப்போ ஒரு ஏக்கர்ல மல்லி இருக்கு. அரை ஏக்கர்ல அறுவடை செஞ்சிட்டோம்.

அது கிலோ 40 ரூபாய்க்குப் போச்சு. நாங்க கேரள வியாபாரிகளுக்கு மொத்தமாக விலை பேசி வித்திடுவோம். அறுவடை, வேன் வாடகை எல்லாம் வியாபாரி கணக்குல வந்துடும். சரியாகப் பராமரிப்பு செஞ்சா, தனிப்பயிராக ஏக்கருக்குக் குறைந்தபட்சம் எட்டு டன் வரைக்கும் மகசூல் கிடைக்கும். ஊடுபயிராகச் செய்யும்போது மூணு டன் எடுக்கலாம். இப்போ ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனையாகுது. தழை நல்லா இருக்குது. மூணு டன் மகசூல் எதிர்பார்க்கிறோம்.

‘‘தொழுவுரத்துல உயிர் உரங்கள் கலந்து, செறிவூட்டம் செய்யப்பட்ட உரமா மாத்தி பயிர்களுக்கு அடியுரமா கொடுப்பதை வழக்கமா வெச்சிருக்கோம்.’’

சராசரியா 40 ரூபாய் விலை போனாலும் அது மூலமா 1,20,000 ரூபாய் வருமானமாக் கிடைக்க வாய்ப்பிருக்குது. உழவுல இருந்து அறுவடை வரைக்கும் ஏக்கருக்கு 10,000 ரூபாய் செலவு பிடிக்கும். அதுபோக, 1,10,000 ரூபாய் லாபமாகக் கிடைக்கும். வேற எந்தப் பயிர்லயும் இவ்வளவு குறைஞ்ச நாள்கள்ல இந்த அளவுக்கு லாபம் கிடைக்காது’’ என்றவர் நிறைவாக,

‘‘மல்லியைத் திரும்பத் திரும்ப ஒரே நிலத்தில விதைக்கக் கூடாது. அதேபோல விதைத் தேர்வும் முக்கியம். விதைகளின் முளைப்புத்திறன் என்ன என்பதையும் பார்த்து வாங்கணும். அரை ஏக்கர், ஒரு ஏக்கர்னு நம்ம வசதிக்குத் தகுந்த மாதிரி பிரிச்சு சுழற்சி முறையில விதைக்கணும். இலை வகைப் பயிரான மல்லித்தழை அப்போதான் சிறப்பாக வளர்ந்து லாபம் கொடுக்கும்” என்று முடித்தார்.

தொடர்புக்கு, கவிதா, செல்போன்: 98421 19652.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்படித்தான் செய்யணும் சாகுபடி!

ல்லிச் சாகுபடி செய்யும் முறைகள் குறித்து கவிதா சொன்ன தகவல்கள் இங்கே பாடமாக…

‘‘மல்லி விதைக்கும் நிலத்தில் கொள்ளுப் பயற்றை விதைக்க வேண்டும். 90 நாள்களில் வளர்ந்து, பசுந்தாள் உரமாக மாறி மண்ணை வளப்படுத்தும். கொள்ளுவை அறுவடை செய்யாமல் அப்படியே மடக்கி உழவு செய்துவிட வேண்டும். அதன் பிறகு ஆறு மாதங்களுக்கு அந்த நிலத்தில் எந்தப் பயிரையும் சாகுபடி செய்யக் கூடாது. அதன் பிறகு மண்ணைப் பொலபொலப்பாக மூன்று உழவு செய்ய வேண்டும்.

மணக்கும் வருமானம் தரும் மல்லித்தழை!

கடைசி உழவுக்கு முன்பாக ஒரு ஏக்கருக்கு ஐந்து டன் தொழுஉரத்தைக் கொட்டி இறைத்து, உழவுசெய்ய வேண்டும். அதிக மழையும் அதிக வெயிலும் மல்லி விவசாயத்துக்கு எதிரிகள். அதை மனதில்வைத்து வடிகால் வசதிகொண்ட பார் முறை பாத்திகளை அமைத்து, அதில் நேரடி நடவு செய்ய வேண்டும். பொதுவாக, பாத்திகளில் விதைகளை விதைத்து, குச்சியைக்கொண்டு கீறிவிட்டு விதைகளை மண்மூடும்படி செய்வது வழக்கம்.

மற்றொரு முறையும் இருக்கிறது. பார் வாய்க்கால் வரப்புகளில் 4 இஞ்ச் இடைவெளியில் இரண்டு இரண்டு விதைகளை ஊன்ற வேண்டும். மழை பெய்யும்போது, தண்ணீர் வாய்க்காலில் வடிந்து ஓடிவிடும்.இப்படிச் செய்வதால் மழைக்காலங்களில் நல்ல மகசூல் எடுக்க முடியும்.

நேரடி விதைப்பு செய்தால் ஏக்கருக்கு எட்டு கிலோ விதை தேவைப்படும். வாய்க்காலில் ஊன்றும் முறையில் நான்கு கிலோ விதை போதுமானது. நடவு செய்த ஒன்பதாம் நாளுக்குள் முளைவிடத் தொடங்கும். 20 முதல் 25-ம் நாள் பரவலாகக் களைச்செடிகள் தென்படும். அவற்றைக் கைக்களையாக எடுக்க வேண்டும். களை எடுத்தவுடன் 100 லிட்டர் தண்ணீரில் மூன்று லிட்டர் பஞ்சகவ்யா கலந்து பாசன நீரில் கலந்துவிட வேண்டும். ஏற்கெனவே மண்ணிலுள்ள சத்துகளுடன் வளர்ச்சி ஊக்கியான பஞ்சகவ்யாக் கரைசலும் சேர்ந்து பயிருக்குத் தொடர் ஊட்டம் தருவதால், 30 முதல் 35-ம் நாளில் பயிர் தளதளவென ஒரே சீராக வளர்ந்து நிற்கும். அத்துடன் மல்லித்தழைக்கு உண்டான மணமும் வீசும். ரசாயன விவசாயத்தில் வளரும் மல்லித்தழையில் இயல்பான வாசனை இருக்காது.

குறுகியகாலப் பயிர் என்பதால் ஒரு முறை மட்டும் பஞ்சகவ்யா கொடுத்தால் போதுமானது. தேவைப்பட்டால் 20 முதல் 30-ம் நாளுக்குள் 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி பஞ்சகவ்யா கலந்து கைத்தெளிப்பான் மூலம் இலைவழி உரமாக ஒருமுறை தெளிக்கலாம். அது, பூச்சிவிரட்டியாகவும் செயல்பட்டு பயிரைப் பாதுகாக்கும்.

40 முதல் 45-வது நாளில் தழை வளர்ந்து மண் மறைத்து நிற்கும். அப்போது லேசாகப் பாசனம் செய்து பாத்திகளிலுள்ள செடிகளை வேர்கள் அறுந்து போகாதபடி பக்குவமாகப் பறித்துக் கட்டுகள் கட்ட வேண்டும்.

மல்லி ஜாக்பாட் பயிர்!

ல்லி மொத்த வியாபாரி சுரேஷ்குமாரிடம் சந்தை விவரங்கள் குறித்துப் பேசினோம். ‘‘குறுகிய நாள்கள்ல பலன் தரும் மல்லித்தழை எல்லா மாவட்டங்கள்லயும் சிறப்பா வளராது. குளிர்ந்த காற்று வீசும் கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், ஓசூர், உடுமலைப்பேட்டை, செஞ்சேரிமலை, தென்காசி பகுதிகளில் சிறப்பாக வளருது. மழைக்காலத்துல வடிகால் வசதியுள்ள செம்மண், சல்லிமண் நிலங்களில் விதைக்கலாம். வெயில் காலங்கள்ல ஈரத்தன்மைகொண்ட களிமண், கரிசல் மண் நிலங்கள்ல கூடுதல் மகசூல் கொடுக்கும்.

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்

தமிழ்நாட்டுல விளையும் 60 சதவிகித மல்லித்தழை கேரளா சந்தைக்குத்தான் போகுது. பொள்ளாச்சியில இருந்து மட்டும் தினமும் 40 டன் மல்லித்தழை கேரள மாநிலத்துக்குப் போகுது. மத்த காய்கறிகளைப்போல மல்லித்தழைக்கும் விலை ஏற்ற இறக்கம் இருக்கும். கிலோ 50 ரூபாய்க்கும் போகும். சில நேரம் கிலோ 5 ரூபாய்க்கும் போகும். அதை ஈடுகட்ட சந்தைப் புலனாய்வு முக்கியம். எந்த மாவட்டங்கள்ல விதைப்புல இருக்கு... அது எத்தனை ஏக்கர்... எந்த ஊர்ல அறுவடைக்குத் தயாரா இருக்கு என்பதையெல்லாம் ஆய்வுசெய்து, அதனடிப்படையில் நடவுசெய்தால் பெரிய இழப்பிலிருந்து தப்பிக்கலாம்.

அதே நேரம் அதிக லாபமும் பார்க்கலாம். விலை இறங்கிப்போச்சு என்பதால் மல்லித்தழை விவசாயத்தைக் கைவிட்டுடக் கூடாது. தொடர்ந்து சாகுபடி செய்துவந்தால் கண்டிப்பாக ஜாக்பாட் அடிக்கும். அதுதான் 45 நாள் பயிரான மல்லித்தழையின் மாயாஜாலம்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism