Published:Updated:

`கொரோனா பரவுது; 144 தடை உத்தரவு..!' - தஞ்சை விவசாயிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த அதிகாரிகள்

கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள்
கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள்

நெல்லைக் குவித்து வைத்துவிட்டு வீட்டில் இருக்க எப்படி விவசாயிக்கு மனசு வரும். அதனால் விவசாயிகள் பலர் கொள்முதல் நிலையத்திலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் கொரோனா பரவுவதற்கும் வாய்ப்புள்ளது.

தஞ்சாவூர் அருகே அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகள் நேரடி கொள்முதல் நிலையத்துக்குக் கொண்டுவந்த நிலையில் கொரோனாவைக் காரணம் காட்டி அதிகாரிகள் நெல்லை கொள்முதல் செய்ய மறுத்துள்ளனர்.

குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்
குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே உள்ள வெண்டையம்பட்டி கிராமம் விவசாயிகள் நிறைந்த பகுதி. இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் உய்யக்கொண்டான், கட்டளைக்கால்வாய் ஆகிய இரண்டு பாசன வாய்க்கால்கள் மூலம் விவசாயம் செய்து வருகிறார்கள். அப்பகுதியில் நெல் அறுவடைப் பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது.

அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் நிலையத்தில் கொண்டுவந்து வைத்துக்கொண்டு, கொள்முதல் செய்வார்களா என ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள் விவசாயிகள். கொரோனா அச்சம் காரணமாக கொள்முதல் நிலையத்துக்குப் பணியாளர்கள் யாரும் வருவதில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் முறையான பதில் சொல்லாமல் மெத்தனம் காட்டுகிறார்கள். இதனால் கொள்முதல் நிலையங்களில் குவியல் குவியலாக நெல் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. மேலும், உடனே கொள்முதல் செய்யப்படவில்லை என்றால் 200 விவசாயிகள் வரை பாதிக்கப்படுகின்ற சூழ்நிலை உருவாகும் எனவும் குற்றம் சாட்டுகிறார்கள்.

 நெல்
நெல்

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் கூறுகையில், ``கடுமையான சிரமத்திற்கிடையே விவசாயிகள் தங்கள் வயலில் விவசாயம் செய்து விளைவித்த நெல்லை கொள்முதல் நிலையத்துக்குக் கொண்டு சேர்க்கின்றனர். இந்தப் பணத்தை வாங்கித்தான் வாங்கிய கடனை அடைப்பது உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும்.

ஆனால், பாடுபட்டு விளைவித்த நெல்லை கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டுவந்து கடந்த நான்கு நாள்களுக்கு மேலாகக் காத்துக் கிடக்கிறோம். எங்கு பார்த்தாலும் நெல் குவியல் குவியலாகக் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அதைக் காப்பதற்காகப் பெரும் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.

நெல்
நெல்

இந்த மோசமான நிலை தொடர்பாக மாவட்ட நிர்வாக அளவிலான அதிகாரிகள் எஸ்.ஆர்.எம், டி.எம், பி.எம் உள்ளிட்ட அலுவலர்களிடம் கேட்டதற்கு, தினசரி கொள்முதல் நடைபெறும் என்று நம்பிக்கை வார்த்தைகளை மட்டும் சொல்கிறார்களே தவிர, நெல் கொள்முதல் செய்யப்படவே இல்லை.

கொரோனா வைரஸ் பரவுதல் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் அத்தியாவசியப் பணிகள் நடைபெறும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். ஆனால், வெண்டையம்பட்டி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் நடைபெறாமல் இருப்பதற்கு கொரோனாவை காரணம் காட்டுகின்றனர்.

விவசாயிகள்
விவசாயிகள்

ஆனால், நெல்லைக் குவித்து வைத்துவிட்டு வீட்டில் இருக்க எப்படி விவசாயிக்கு மனசு வரும். அதனால் விவசாயிகள் பலர் கொள்முதல் நிலையத்திலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் கொரோனா பரவுவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே, உடனடியாக நெல்லை கொள்முதல் செய்வதற்கு கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விவசாயிகளைக் கொரோனாவிலிருந்து காப்பதுடன் அவர்கள் வயிற்றில் பால் வார்க்க வேண்டும்" என்றார் ஆதங்கத்துடன்.

அடுத்த கட்டுரைக்கு