Published:Updated:

இதுவரை இல்லாத அளவுக்கு விலைபோன பருத்தி; மகிழ்ச்சியில் விவசாயிகள்; விலையேற என்ன காரணம்?

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடந்த ஏலத்துக்கு ஏராளமான விவசாயிகள் தங்களது பருத்தி பஞ்சுகளை கொண்டு வந்திருந்தார்கள். பருத்தியைப் பார்வையிட்டு தாங்கள் வாங்கிக்கொள்ள தயாராக உள்ள விலையை, ஏலச்சீட்டில் எழுதி ஏலப்பெட்டியில் போட்டனர்.

தற்போது அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு வந்து கொண்டிருக்கும் பருத்திக்கு, தனியார் வியாபாரிகளிடமும், அரசு ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களிலும் அதிக விலை கிடைத்து வருகிறது. இதனால் பருத்தி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். தமிழ்நாட்டில் அதிக அளவில் பருத்தி சாகுபடி செய்யப்படும் மாவட்டங்களில் முதன்மை இடம் வகிக்கும் திருவாரூர் மாவட்டத்தின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. அதில் ஒரு குவிண்டாலுக்கு அதிகபட்சமாக 8,219 ரூபாய் விலை கிடைத்துள்ளது. இதற்கு முன்பு இந்தளவுக்கு அதிக விலை கிடைத்ததில்லை என்கிறார்கள் விவசாயிகள்.

பருத்தி
பருத்தி
பருத்திக்கு நல்ல விலை கிடைக்கும்! - பல்கலைக்கழகம் அறிவிப்பு!

திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், குடவாசல் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்படுவது வழக்கம். இப்பகுதிகளில் தற்போது அறுவடைக்கு வந்துள்ள பருத்திச் செடிகளில் இருந்து பஞ்சுகளை எடுத்து விவசாயிகள் விற்பனை செய்து வருகிறார்கள். இவை தனியார் வியாபாரிகளிடம் நேரடியாகவும், ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் மறைமுக ஏலத்தின் மூலமாகவும் விற்பனை செய்து வருகிறார்கள்.

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடந்த ஏலத்திற்கு ஏராளமான விவசாயிகள் தங்களது பருத்தி பஞ்சுகளை கொண்டு வந்திருந்தார்கள். இந்த ஏலத்தில் திருப்பூர், தேனி, விழுப்புரம், பண்ருட்டி, கும்பகோணம், செம்பனார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் கலந்து கொண்டார்கள்.

விவசாயிகள் கொண்டு வந்திருந்த பருத்தியைப் பார்வையிட்டு தாங்கள் வாங்கிக்கொள்ள தயாராக உள்ள விலையை, ஏலச்சீட்டில் எழுதி ஏலப்பெட்டியில் போட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, திருவாரூர் மாவட்ட வேளாண் விற்பனைக்குழு அதிகாரிகள், ஏலப்பெட்டியைத் திறந்து, வியாபாரிகள் கேட்ட விலையைப் படித்தனர். இதில் ஒரு குவிண்டால் பருத்தி, அதிகபட்சமாக, 8,219 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 6,666 ரூபாய்க்கும் விலைபோனது. சராசரி விலையாக, ஒரு குவிண்டால் பருத்திக்கு 7,256 ரூபாய் விலை கிடைத்தது.

விவசாயி சசிகுமார்
விவசாயி சசிகுமார்

இந்த ஏலத்தின் மூலமாக 413 குவிண்டால் பருத்தி 29 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் பருத்தி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். இதுவரை இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு பருத்திக்கு அமோக விலை கிடைத்ததற்கான காரணத்தை பருத்தி சாகுபடியில் நீண்ட அனுபவம் பெற்ற திருவாரூர் மாவட்டம் அரித்துவார் மங்கலத்தைச் சேர்ந்த விவசாயி சசிக்குமாரிடம் கேட்டோம். ``திருவாரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும் வலங்கைமான், குடவாசல், நன்னிலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர், கொரடாச்சேரி உள்ளிட்ட பல பகுதிகள்ல பருத்தி சாகுபடி செய்றது வழக்கமாக இருந்துச்சு. மயிலாடுதுறை, தர்மபுரி, பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகள்லயும் நிறைய விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்வாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், இந்த வருஷம் பருத்தி சாகுபடி பெருமளவு குறைஞ்சிடுச்சு. குறிப்பாக, திருவாரூர் மாவட்டத்துல நன்னிலம், குடவாசல் பகுதி விவசாயிகளைத் தவிர மற்ற பகுதி விவசாயிகள் பெருமளவு பருத்தி சாகுபடியைக் கைவிட்டுட்டாங்க. மயிலாடுதுறை, தர்மபுரி பகுதிகள்லயும் பருத்தி சாகுபடி குறைஞ்சிடுச்சு. காரணம், கடந்த வருஷம் கடுமையான விலை வீழ்ச்சி.

பருத்தி
பருத்தி
`மாங்கொட்டையில் இருக்கு அவ்ளோ விற்பனை வாய்ப்புகள்!' - விவசாயிகளை வெற்றிபெற வைக்கும் களப்பயிற்சி

தனியார் வியாபாரிகளிடம் ஒரு குவிண்டாலுக்கு 3,000 ரூபாய்தான் விலை கிடைச்சது. ஒருங்குமுறை விற்பனை கூடத்துல கூட, அதிகபட்சம் 5,000 ரூபாய்தான் விலை கிடைச்சது. அதுமட்டுமல்லாமல். பருத்தி அறுவடை செய்ய நிறைய வேலையாள்கள் தேவைப்படுவாங்க. நூறுநாள் வேலைத்திட்டத்துனால, பருத்தி அறுவடைக்கு ஆள்களே கிடைக்குறதில்லை. பருத்தி செடிகள்ல அறுவடை சமயத்துல பூச்சிகள், பாம்புகள் தொல்லை அதிகமாக இருக்கும், அந்தத் தொந்தரவுக்கு பயந்தும் கூட வேலையாள்கள் வரமாட்டேங்குறாங்க.

இதுமாதிரியான காரணங்களாலும், இந்த வருஷம் பாசனத்துக்கு தண்ணீர் வசதி தாரளமாகக் கிடைச்சதுனாலயும் நிறைய விவசாயிகளை பருத்தியை கைவிட்டு நெல்லுக்கு மாறிட்டாங்க. ஆந்திராவிலயும் இந்த வருசம் பருத்தி சாகுபடி குறைஞ்சிருக்கு. இதுமாதிரியான காரணங்களால் பருத்திக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கு. இதனால்தான் இந்த வருஷம் பருத்திக்கு அதிக விலை கிடைச்சிருக்கு’’ எனத் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு