நாட்டு நடப்பு
மகசூல்
Published:Updated:

ஆண்டுக்கு ரூ.10 லட்சம்... அன்று, வறண்ட நிலம்... இன்று, பசுஞ்சோலை

பண்ணைக்குள் ஒய்யாரமாக இருக்கும் நாட்டு மாடுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
பண்ணைக்குள் ஒய்யாரமாக இருக்கும் நாட்டு மாடுகள்

நாட்டு மாடுகளால் செழித்தோங்கும் பிரமாண்ட பண்ணை...

பண்ணை

கால்நடை வளர்ப்பும் வேளாண்மையும் தமிழர்களின் வாழ்வில் ஓர் அங்கம். முன்னோர்களின் உணர்வோடும் உயிரோடும் இரண்டறக் கலந்தது. ஆனால், நவீன யுக மாற்றமும் பசுமைப் புரட்சியின் வருகையும் இவற்றைப் பணம் சம்பாதிக்கும் ஒரு தொழிலாக மட்டுமே மாற்றியது. இதனால் நிகழ்ந்த பாதிப்புகள் ஏராளம். இதைப் பற்றி விழிப்புணர்வு அடைந்தவர்கள், நாட்டு மாடுகள் வளர்ப்பிலும் இயற்கை விவசாயத்திலும் ஈடுபட்டுக் கவனம் ஈர்க்கிறார்கள்.

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகேயுள்ளது ஆயிப்பட்டி கிராமம். இங்கு 100 ஏக்கரில் பரந்து விரிந்து செழிப்பாகக் காட்சி அளிக்கிறது, முத்துபாப்பா இயற்கை வேளாண் பண்ணை. சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு வெப்பம் தகிக்கும் வறண்ட மண். முட்புதர்கள் மண்டி, கரடுமுரடான காடாகத் திகழ்ந்த நிலம். இன்று, தென்னை, நெல்லி, சப்போட்டா, மா, வாழை, பலா, கொய்யா, நாவல், தேக்கு, பூவரசு, வேங்கை, குமிழ் தேக்கு, வேம்பு, ஈட்டி, நீர் மருது, பிள்ளை மருது, சந்தனம், வாகை, கொய்யா உள்ளிட்ட பலவகையான மரங்கள் ஆயிரக்கணக்கில் செழிப்பாக வளர்ந்து, பசுஞ்சோலையாக விளங்குகிறது.

ஜீவானந்தம்
ஜீவானந்தம்

எப்படி நிகழ்ந்தது இந்த மாற்றம்?

‘இத்தனைக்கும் அடிப்படை காரணம் நம்முடைய நாட்டு மாடுகள்தான்’ என நெகிழ்கிறார் பண்ணையின் உரிமையாளர் ஜீவானந்தம்.

பொங்கல் சிறப்பிதழுக்காக, ஒரு பகல் பொழுதில் அந்தப் பண்ணைக்குச் சென்றோம். திரண்டெழுந்த திமில், திடகாத்திரமான உடல்வாகுடன் கம்பீரமாகக் காட்சி அளித்த உம்பளச்சேரி மாடுகளைக் கவனித்துக்கொண்டிருந்த ஜீவானந்தம், நம்மை மகிழ்ச்சியோடு வரவேற்று உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.

‘‘இங்க 50 நாட்டுமாடுங்க இருக்கு. இதுல பெரும்பாலானவை உம்பளச்சேரி மாடுகள். இதோட தஞ்சாவூர் குட்டை, தார்பார்க்கர் மாடுகளும் இருக்கு. இங்க இருக்கப் பசு மாடுகள்ல இருந்து கொஞ்சம் கூடப் பால் கறக்க மாட்டோம். இதை நான் ஒரு கொள்கையாகவே கடைப்பிடிச்சுக்கிட்டு இருக்கேன். மாடுகளுக்குப் பால் சுரக்குறது மனுஷங்க குடிக்குறதுக்காக இல்ல. அதுங்களோட கன்னுக்குட்டிக குடிச்சு ஆரோக்கியமா வளர்றதுக்காகத்தான். இது, என்னோட நம்பிக்கை’’ என்றவர், தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.

பண்ணைக்குள் ஒய்யாரமாக இருக்கும் நாட்டு மாடுகள்
பண்ணைக்குள் ஒய்யாரமாக இருக்கும் நாட்டு மாடுகள்

“என்னோட பூர்வீகம், தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை பக்கத்துல இருக்கக் கரம்பயம். விவசாயம்தான் எங்க குடும்பத்தோட வாழ்வாதாரம். எனக்குச் சின்ன வயசா இருக்குறப்பவே, விவசாய வேலைகளைப் பார்ப்பேன். இதுல எங்கம்மா ரொம்பவே கண்டிப்பா இருப்பாங்க. வயல்ல இறங்கி வேலை பார்த்தாதான், பள்ளிக்கூடம் போகவே அனுமதிப்பாங்க. விவசாயத்துல எனக்கு ஈடுபாடு இருந்தாலும்கூட, பி.இ படிச்சிட்டு ஜெர்மனியில ஒரு நிறுவனத்துல பல வருஷம் வேலைபார்த்தேன். ஒரு கட்டத்துல அதுல சலிப்பு ஏற்பட்டு, தமிழ் நாட்டுக்கே திரும்பி வந்துட்டேன்.

சென்னையில தங்கி இருந்து, சினிமா, சீரியல் தயாரிப்புகள்ல ஈடுபட்டுக்கிட்டு இருந்தேன். அந்த வாழ்க்கையும் என் மனசுக்கு ஆத்மார்த்தமா இல்ல. இயற்கையோடு இணைந்து வாழணும். பாரம்பர்ய மாடுகள் வளர்க்கணும். நம் முன்னோர்கள் காட்டிய வழிகளைப் பின்பற்றணும்ங்கற எண்ணம் என் மனசுல அதிகமாக ஆரம்பிச்சது. ஏற்கெனவே விவசாயம் செஞ்சுகிட்டு இருக்குற நிலத்தை வாங்கக் கூடாது. ரசாயன உரங்கள் பயன்படுத்தின நிலத்தைத் தவிர்க்கணுங்கறது என்னோட முதன்மையான நோக்கம். அதோட விவசாயத்துக்குச் சவாலா இருக்க வறண்ட நிலத்தை வாங்கி, அதைப் பசுமையா மாத்தணுங்கறதும் என்னோட விருப்பமா இருந்துச்சு’’ என்றவர், தான் விவசாயியான கதையைச் சொல்லத் தொடங்கினார்.

பண்ணைக்குள் ஒய்யாரமாக இருக்கும் நாட்டு மாடுகள்
பண்ணைக்குள் ஒய்யாரமாக இருக்கும் நாட்டு மாடுகள்

‘‘பல இடங்கள்ல தேடி அலைஞ்சு, இந்த நிலத்தை வாங்கினேன். இந்தப் பகுதி முழுக்கவே வானம் பார்த்த பூமி. செம்மண் நிலம். வறட்சியான மண்வாகு. குறிப்பா, இந்த நிலத்தை நான் வாங்கினப்ப, காட்டுக்கருவை மண்டி, முட்புதர்களா இருந்துச்சு. மண்ணுல வெப்பம் தகிக்கும். அதையெல்லாம் சுத்தப் படுத்தி, 2003-ம் வருஷத்துல இருந்து இயற்கை வேளாண் பண்ணையா உயிர்ப்பிக்க ஆரம்பிச்சேன்.

மண்ணை வளப்படுத்த நாட்டு மாடுகள் அவசியம். ஆனா, அதுக்கு முன்னாடி, மாடுகள் வசிக்குறதுக்கான, சூழலை உருவாக்கணும்னு முடிவெடுத்தேன். முதல் கட்டமா, 100 ஏக்கர்லயும் நிலம் முழுக்கப் பரவலா, அங்கங்க நிறைய கிளரிசீடியாவை வச்சோம். எவ்வளவு வறட்சியான மண்ணுல யும் கிளிரிசீடியா ரொம்பச் சீக்கிரமா, செழிப்பாக வளரக்கூடியது. குளிர்ச்சியான சூழலையும் ஏற்படுத்தக்கூடியது. மற்ற தாவரங்கள் வளர்றதுக்கான சூழலையும் அது உருவாக்கும். தானாகவே பல்கி பெருகக் கூடியது. கிளிரிசீடியா நிறைய வளர ஆரம்பிச்சது. அடுத்தகட்டமா, 6 உம்பளச் சேரி நாட்டு மாடுகள், 20 ஆடுகளை வாங்கி வளர்க்க ஆரம்பிச்சோம்’’ என்றவர், தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

தென்னை விவசாயம்
தென்னை விவசாயம்

‘‘கால்நடைக் கழிவுகளால, மண்ணு நல்லா வளமாகி, விதவிதமான களை தாவரங்கள் வளர ஆரம்பிச்சது. மாடுகளுக்குத் தேவையான தீவனம் இங்கயே தாராளமா கிடைக்க ஆரம்பிச்சது. இங்க வேளாண் காடு உருவாக்கணுங்கறதுதான் என்னோட நோக்கம். 25 ஏக்கர் பரப்பை இதுக்காக ஒதுக்கி, தேக்கு, பூவரசு, வேங்கை, குமிழ்தேக்கு, வேம்பு, ரோஸ்வுட், நீர் மருது, பிள்ளை மருது, சந்தனம் உட்பட இன்னுல பல வகையான கன்றுகளை நடவு செஞ்சோம். காடுகள்ல இருக்க மரங்கள் எதுவுமே, வரிசை முறையிலயோ, தனித்தனி தொகுப்பாகவோ இருக்காது. அதே மாதிரி என்னோட வேளாண் காட்டை உருவாக்கணும்னு முடிவெடுத்து, பல வகையான மரங்களையும் கலந்து நடவு செஞ்சோம். அதிக இடைவெளி இல்லாம, நெருக்கமா இருக்கணும்ங்கறதுக் காக, 6 அடி இடைவெளியில கன்றுகளை நட்டோம். வேளாண் காடு அமைஞ்சிருக்குற இந்த 25 ஏக்கர் பரப்புல மட்டுமே 30,000 மரங்கள் இருக்கு. இதோட இலைகள் உதிர்ந்து மண்ணோட வளம் கூடிக்கிட்டே இருக்கு. 15 ஏக்கர்ல தென்னைச் சாகுபடி செஞ்சிருக் கோம். தலா 28 அடி இடைவெளியில, ஏக்கருக்கு 55 தென்னை மரங்க இருக்கு’’ என்றவர், வருமான கணக்கைச் சொன்னார்.

தென்னை விவசாயம்
தென்னை விவசாயம்


‘‘15 ஏக்கர் தென்னையில இருந்தும் ஒரு வெட்டுக்கு 20,000 காய்கள் வீதம், வருஷத்துக்கு 1 லட்சம் காய்கள் கிடைக்குது. ஒரு காய்க்கு 10 ரூபாய் வீதம் வருஷத்துக்கு 10 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்குது. இந்த வருமானத்தை மட்டும்தான் நான் பெருசா நம்பியிருக்கேன். மற்ற பயிர்கள்ல இருந்து வருமானம் பார்க்குறது என்னோட நோக்கமில்ல.

இங்க பசுமையான சூழல் நிலவணும். பலவிதமான மரஞ்செடி, கொடிகள் இருக்கணுங்கறதுதான் என்னோட ஆசை. 14 ஏக்கர்ல நெல்லி, 10 ஏக்கர்ல மா, 7 ஏக்கர்ல சப்போட்டா, 3 ஏக்கர்ல எலுமிச்சை, 2 ஏக்கர்ல வாழைச் சாகுபடி செஞ்சிருக்கோம். அது மூலமாகவும் ஓரளவுக்கு வருமானம் கிடைக்குது. நெல்லிக்காய், சப்போட்டா, வாழைப் பழங்களை எங்களோட மாடுகள் நல்லா விரும்பிச் சாப்பிடும். தீக்குச்சி மரங்க தானாகவே நிறைய வளர்ந்துகிட்டு இருக்கும். தொழிற்சாலைகள்ல எரிபொருளாகப் பயன்படுத்துறனால அதை விரும்பி வாங்குறாங்க. சவுக்கும் நிறைய இருக்கு. அதையும் வெட்டி விற்பனை செஞ்சுகிட்டு இருக்கேன்.

மரம் வளர்ப்பு
மரம் வளர்ப்பு

பண்ணையோட பராமரிப்பு செலவு களுக்கும், குடும்பத் தேவைகளுக்கும் போது மான வருமானம் இங்க கிடைச்சிடுது. இதைத் தவிர மீதியுள்ள நிலத்துல, பாரம்பர்ய நெல் ரகங்கள், எள்ளு, கடலைச் சாகுபடி செஞ்சு வீட்டுத் தேவைக்குப் பயன்படுத்திக்குறோம். இதுக்கெல்லாம் மாட்டு எருவை மட்டும்தான் அடியுரமா பயன்படுத்துறோம். வேற எந்தப் பராமரிப்பும் கிடையாது. இங்க நிறைய மூலிகைச் செடிகளும் மண்டிக்கிடக்குது’’ என்றவர், மாடுகளைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

மாடுகளுக்கு இதுவரைக்கும் தடுப்பூசிகள் எதுவும் போட்டதில்ல. ஆனாலும் கூட எந்த ஒரு நோய்ப் பாதிப்புகளும் வந்ததில்ல.


மாடுகளை நாம் வளர்க்க வேண்டியதில்லை

‘‘நாட்டு மாடுகளைப் பொறுத்தவரைக்கும், அதை நாம வளர்க்க வேண்டியதில்ல. வளர்க்குறோம்னு சொல்ற வார்த்தையிலயே எனக்கு உடன்பாடு இல்ல. அது வாழ்றதுக்கான சூழலை உருவாக்கிக் கொடுத்துட்டாலே போதும். அது தானாகவே வளர்ந்துக்கும். இப்ப எங்க பண்ணையில 50 மாடுகள் இருக்கு. இதுக்கு கொட்டகை எல்லாம் கிடையாது. நாட்டு மாடுகளைக் கொட்டகை யில கட்டிப்போட்டு, தீனிபோட்டு வளர்த்தா, மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் அதுங்க ஆரோக்கியா இருக்காது. அடிமைத்தனமும் மன உளைச்சலும் உருவாகும். காலையில 9 மணியில இருந்து, சாயந்தரம் 5 மணி வரைக்கும் எங்க பண்ணைக்குள்ளார மேய்ச்சல்லயேதான் இருந்துக்கிட்டு இருக்கும். இதனால நல்லா ஆரோக்கியமாவும் திடகாத்திரமாவும் இருக்கு. மன மகிழ்சியோடு, ஒண்ணுக்கு ஒண்ணு துள்ளிக் குதிச்சு, உற்சாகமா விளையாடுதுங்க. மனுஷங்க மாதிரிதான் இந்த ஜீவன்களும். இங்கவுள்ள பசுக்களும் காளைகளும் நினைச்ச நேரத்துல இனச் சேர்க்கையில ஈடுபடுதுங்க. இதனாலயே சினைப்பிடிக்குறதும், ஆரோக்கியமான கன்றுக்குட்டிகள் பிறக்குதும் இயல்பாக நடந்துகிட்டு இருக்கு.

மரம் வளர்ப்பு
மரம் வளர்ப்பு

இந்த மாடுகளுக்கு இதுவரைக்கும் தடுப்பூசிகள் எதுவும் போட்டதில்ல. ஆனாலும்கூட, எந்த ஒரு நோய்ப் பாதிப்புகளும் வந்ததில்ல. மேய்ச்சல்ல இருக்குறப்ப, தாய்ப் பசுக்கள், கன்றுக் குட்டிகளை ரொம்ப எச்சரிக்கையா பார்த்துக்கும். சாயந்தரம் 5 மணிக்கு மேல, ஒவ்வொரு தென்னை மரத்துக்குக் கீழ மாடுகளைக் கட்டிப்போட்டுடுவோம். அப்பவும் கூட நினைச்ச நேரந்துல எழுந்திரிச்சு, தாராளமா சுத்தி வர வசதியா, ரொம்ப நீளமான கயிறுகள்லதான் கட்டிப் போடுவோம். உம்பளச்சேரி மாடுகளோட சாணம், சிறுநீர்ல வீரியம் அதிகம். அதனால நுண்ணுயிரிகள் பெருகி, ஒட்டுமொத்த பண்ணையும் வளமடைஞ்சிருக்கு. எந்த ஒரு பயிரை வச்சாலுமே ரொம்பச் சீக்கிரமா செழிப்பா வளர்ந்துடுது. இங்க நிறைய கறையான்கள் உருவாகி இருக்கு. தேனீக்களும் அதிகமா வருது’’ என்றவர் நிறைவாக,

மரம் வளர்ப்பு
மரம் வளர்ப்பு


‘‘நாட்டு மாடுகளோட கழிவுகளாலும், இலைதழைகளாலும் மண்ணுல நுண்ணுயிரிகள் பெருகி, நிலம் வளமடைஞ் சிருக்கு. இப்ப இந்தப் பண்ணை பசுமையாக மாறி இருக்கு. கால்நடைகளோடும் மரம் செடி, கொடிகளோடும் இயற்கையோடு வாழணுங்கற என்னோட கனவு நிறை வேறிக்கிட்டு இருக்கு. இதுதான் எனக்கு ஆத்மார்த்தமான மன நிம்மதியைக் கொடுத்துக்கிட்டு இருக்கு. நம் முன்னோர்கள் இப்படித்தான் வாழ்ந்தாங்க. அவங்களோட அன்றாட வாழ்க்கையில கால்நடைகளும் விவசாயமும் இணைஞ்சே இருந்துச்சு. வெளியில இருந்து எந்த ஒரு இடுபொருள் களையும் காசு கொடுத்து வாங்கி வந்து போடாம செய்றதுதான் உண்மையான விவசாயம். ரசாயன உரங்கள் போட்டுச் செய்றது விவசாயமே இல்ல. நான் இப்ப விவசாயத்தோட வாழ்ந்துகிட்டு இருக்கேன்’’ என உணர்வுபூர்வமாகப் பேசியவரிடம் பொங்கல் வாழ்த்து தெரிவித்து விடைபெற்றோம்.


தொடர்புக்கு, ஜீவானந்தம்,

செல்போன்: 94440 39499.

உம்பளச்சேரி மாடுகளுக்கு மோப்ப சக்தி அதிகம்

‘‘உம்பளச்சேரி மாடுகளுக்கு மோப்ப சக்தி அதிகம்னு சொல்வாங்க. அதை நான் கண்கூடா உணர்ந்தேன். இங்க இருக்கப் பசு மாடுகள்ல ஒண்ணு, திடீர்னு உடம்பை உலுக்கி திமிறிக்கிட்டே இருந்துச்சு. என்ன காரணம்னு புரியலை. கயித்தை அவிழ்த்து விட்டோம். வேகமாக ஓடி, பண்ணைக்கு வெளியில போயி நின்னுச்சு. அங்க வேற ஒரு மாடு பண்ணைக்கு வர முயற்சி செஞ்சுகிட்டு இருந்தது, அதை விரட்டி அடிச்ச பிறகுதான் இது அமைதியாச்சு. இதுங்களுக்கு நாயைப் போலவே மோப்ப சக்தி உண்டு.

நாட்டு மாடு
நாட்டு மாடு


ஜல்லிக்கட்டு

இங்க இருக்கக்கூடிய உம்பளச்சேரி மாடுகள்ல நாலு காளை மாடுகளை மட்டும் ஜல்லிக்கட்டுக்கு அனுப்பிக்கிட்டு இருக்கேன். நல்லா சீறிப்பாயும். பிடிச்சு அடக்குறது ரொம்பச் சிரமம்’’ என்கிறார் ஜீவானந்தம்.

மழைநீர் சேகரிப்பு

“பண்ணைக்குள்ள நாலு போர்வெல் அமைச்சிருக்கோம். ஆனாலும் கூட நிலத்தடி நீர் போதுமான அளவுக்குக் கிடைக்காது. அதனால திறந்தவெளி கிணறு அமைச்சிருக்கேன். போர்வெல் தண்ணியைக் கிணத்துல சேகரிச்சி, மோட்டார் மூலமா எடுத்துப் பயன்படுத்திக்கிட்டு இருக்கேன். ஆரம்பத்துல மண்ணு ரொம்பவே காய்ஞ்சிருந்ததுனால, தண்ணியை உடனடியா உறிஞ்சிடும். மண்ணுக்குள்ள மழைநீரைச் செறிவூட்ட, பண்ணை முழுக்கப் பரவலா, பத்துக்கும் மேற்பட்ட குட்டைகளை உருவாக்கினேன். மழைநீர் சேகரிப்பு குட்டைங்க அதிக ஆழமா இருந்தா, தண்ணி பூமிக்குள்ள போயிடும். பக்கவாட்டு முறையில செறிவூட்டினாதான், மேல இருக்க மண் கண்டத்துல ஈரப்பதம் சேகரமாகும். அதனால, ஆழம் அதிகம் இல்லாம, கால் ஏக்கர் முதல் அரை ஏக்கர் பரப்புல பெரிய குட்டையா உருவாக்கி இருக்கேன். இதுல தேங்கி நிக்கக்கூடிய தண்ணியை மாடுக குடிச்சிக்குது. இந்தப் பண்ணையோட நில அமைப்புக் கொஞ்சம் சரிவா அமைஞ்சிருக்கு. மழை பெய்ஞ்சுதுனா, தண்ணி நிலத்துல நிக்காம, உடனடியா கீழே ஓடிடும். மேல் மண்ணுல மழைநீரைத் தக்க வைக்க, அங்க சின்னச் சின்னத் தடுப்புகளை உருவாக்கியிருக்கேன். இதனால மேல் மண்ணுல ஈரப்பதம் அதிகரிச்சு இருக்குறதைக் கண்கூடா பார்த்துக்கிட்டு இருக்கோம்” என்கிறார் ஜீவானந்தம்.

மழைநீர் சேகரிப்பு
மழைநீர் சேகரிப்பு

கொரோனா தருணம்

கொரோனா ஊரடங்கு சமயத்தில், இந்தப் பகுதியில் உள்ள கூலித் தொழிலாளர்கள், வருமானம் இல்லாமல், சிரமப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் பண்ணையில் வழக்கமாக வேலை செய்பவர்களோடு, கூடுதலாக, பலருக்கும் வேலை கொடுத் திருக்கிறார் ஜீவானந்தம்.

சுவையான பழங்கள்

‘‘இங்க விளையக்கூடிய சப்போட்டா, நெல்லி, வாழை, மாம்பழம், பலா உட்பட எல்லாத்துலயும் சுவை அதிகமா இருக்கு. காடுகள்ல இயற்கையா விளையக்கூடிய சூழல் இங்க இருக்குறதுனாலதான் கிட்டத்தட்ட அதே மாதிரியான சுவையோட இருக்கு’’ எனச் சிலாகிக்கிறார் ஜீவானந்தம்.